“எப்பொழுது வேண்டுமானாலும் நான் கடந்து வந்த இந்தப் பாதையின் அனுபவத்தைத் தாராளமாகப் பலருடன் பகிர்ந்து கொள்ளலாம். என்னவென்று புரியாமல் குழம்பி, என் நிலைமைக்கு அளித்த பெயரையும் சுமந்து அவதிப்பட்டேன். இங்கு வந்த பின்புதான், இதிலிருந்து விடுபட்டு, நான் “நார்மல்” என்பதை ஏற்றுக் கொள்ள முடிந்தது”.
இப்படி வாழ்த்து மடல் கொடுத்த கிருஷ்ணா, பத்து வருடத்திற்கு முன் எங்களிடம் ஆலோசித்தவர். முகபாவங்கள் குறைந்து, பல்வேறு சிரமங்களுடன், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும் பத்தொன்பது வயதுடையவர் எங்களிடம் வந்தார்.
கிருஷ்ணாவின் ஹாஸ்டலை ஒட்டியபடி நடக்கும் பாதை இருந்தது. வாக்கிங் செல்லும் ஒரு பெரியவர் ஆறு மாதமாக இவரைப் பார்த்து வந்தார்; யாரிடமும் அதிகம் பேசாததைக் கவனித்தார். சமீபத்தில், கிருஷ்ணாவும் தன்னைப்போலவே தத்தித்தத்தி கை வீசாமல் நடப்பதைக் கவனித்தார். இதனால் பற்று ஏற்பட்டு விசாரித்தார். கிருஷ்ணா “ஒன்றும் இல்லை” என்றார்.
நாட்கள் ஓடின, கிருஷ்ணா அப்படியே இருந்ததைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், பெரியவர் “உடம்புக்கு ஏதாவதா?” என்று மறுபடியும் கேட்டார். மாத்திரை எடுத்துக் கொண்டிருப்பதாக கிருஷ்ணா தெரிவித்தார். பெரியவர், அந்த வாரம் தனக்கு ஏற்பட்டுள்ள பார்க்கிஸன்சுக்காகத் (Parkinson’s) தான் பார்க்கும் நரம்பு டாக்டரிடம் கிருஷ்ணாவைப்பற்றி விவரித்தார்.
டாக்டர், பெரியவர் சொன்னதைக் கேட்ட பின்பு, கிருஷ்ணா உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டுமென்று பரிந்துரைத்தார். பெரியவர் கிருஷ்ணாவிடம் விஷயத்தைச் சொல்லி, “என்னை மாதிரியே இருக்கிறாய், ஒரு நல்ல நரம்பு டாக்டரைப் பார்” என்றார். கிருஷ்ணா வியந்து, “யாரைப் பார்ப்பது? தெரியவில்லையே” என்று சொல்ல, தான் பார்க்கும் டாக்டரிடமே அழைத்துச் சென்றார்.
அப்படித்தான் எங்களுக்குக் கிருஷ்ணா அறிமுகமானார். கிருஷ்ணாவின் விவரத்தைப் பல்வேறு கோணங்களிலிருந்து முழுதாகக் கேட்டுப் பரிசோதித்த பின், இந்த நிலை மருந்தினால் ஏற்பட்டது என்று எங்கள் டாக்டருக்குத் தோன்றியது. மாத்திரை கொடுத்தது ஒரு மனநல மருத்துவர். “ஸ்கீஜோப்ஃரீனீயா” (Schizophrenia) என்று முடிவெடுத்து, அதற்கான மருந்தைக் கொடுத்திருந்தார். அதன் பக்க விளைவே கிருஷ்ணாவின் இப்போதைய நிலைக்குக் காரணமானது.
கிருஷ்ணாவிற்கு இந்த நிலை எப்படி வந்தது என்பதை விவரிக்கிறேன்.
சிறு வயதிலிருந்தே கிருஷ்ணா கூச்ச சுபாவம் உள்ளவர். ஸ்கூலில் மிகவும் வெட்கப்படுவதால் சுவரை ஒட்டிய இடமாக உட்காரும் பழக்கம். வகுப்பில், குழுவாகப் படிக்கவோ, விளையாடவோ சொன்னால், உலகமே இருண்டு விட்டதுபோல் தோன்றும். அதேபோல், ட்ராயிங், கணக்கு க்ளாஸ் என்றால் கால் நடுக்கம். இரண்டு வாத்தியார்களும் பதில்களைப் போர்டில் எழுத, வரையச் சொல்வார்கள். வகுப்பில் இரண்டாவது ரேங்க் வாங்குவது கிருஷ்ணாதான். கணக்கிலும், வரைவதிலும் நிறைய மதிப்பெண் வரும். ஆனாலும், வகுப்பு முன்னால் நின்று செய்யும்பொழுது தப்பாகவே போகும். மற்றவர்கள் சிரிப்பதும் கேட்கும்.
இப்படித் தத்தளிப்பதால், ஒரு தாழ்வு மனப்பாங்குடன் வளர்ந்தார். அப்பா, துபாயில் வேலை பார்த்திருந்தார். அம்மா, வங்கி மேனேஜர். எந்தத் தப்பும் வந்து விடக்கூடாது என்று கண்டிப்புடன் வளர்த்தாள். மற்ற பிள்ளைகளுடன் பேசினால், வெளியே விளையாடினால், கெட்ட பழக்கங்கள் வருமோ என்று அஞ்சி கிருஷ்ணாவையும், அவர் தங்கையையும் வீட்டிலேயே இருக்கச் சொன்னாள்.
வளர வளரத் தன் கூச்ச சுபாவம் இடையூறாக இருப்பதைக் கிருஷ்ணா உணர ஆரம்பித்தார். உதவி கேட்க/செய்ய, சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளக் கடினமாக இருந்தது. தன் வகுப்பு மாணவர்கள் அப்படி இல்லை என்பதைப் பார்த்தது இன்னும் சங்கடப்படுத்தியது. தனக்கு வரும் பாராட்டு, புகழ், திட்டு, எல்லாமே நடுக்கம் தந்தது.
எப்படியோ தைரியத்தை வரவழைத்து, அம்மாவிடம் இதைப்பற்றிப் பேசினார். அம்மா, எல்லாம் சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்தினாள். விடுமுறைக்கு வந்தபோது அப்பாவும் அதையே சொன்னார். ஆனால் சரியாகவில்லை.
அவன் வகுப்பாசிரியர்கள் அவன் கீழே பார்த்துக்கொண்டு பதில் சொல்வதை அவனுடைய கவனத்திற்குக் கொண்டு வரும்போது கூச்சம் அதிகரித்தது. மரியாதை கொடுத்துப் பேச, இப்படித்தான் பேச வேண்டும் என்று வீட்டில் பழக்கம். அப்படியே பழகி விட்டதால், கண்களைப் பார்த்துப் பேச வரவில்லை.
கிருஷ்ணாவிடம் தைரியம் இருந்தது. தன் வகுப்பு மாணவர், வரும் வழியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டதும், ஒரு வினாடிகூடத் தாமதிக்காமல், அவனை வெளியே ஏற்றிவிட்டார். மற்றவர்கள் இதைப் பாராட்டும்போது, என்ன செய்வதென்று தெரியவில்லை கிருஷ்ணாவிற்கு.
நல்ல மதிப்பெண்கள், டேலன்ட் ஸர்ச் (Talent search) ஸ்காலர்ஷிப்பில் படிப்பு, தொடர்ந்து அதே ஸ்கூல். இருந்தாலும் கிருஷ்ணாவிற்குச் சமாளிக்கக் கஷ்டமாக இருந்தது. எங்கோ தன் மதிப்பு, தன்னம்பிக்கை தொலைந்து போய்விட்டது!
ஸ்கூல் முடித்து, மெரிட்டில் ஒரு பிரபலமான பொறியியல் கல்லுரியில் இடம் கிடைத்தது. ஹாஸ்டலில் சேர்ந்தார். அதுவரை ஹைதராபாத்வாசி, இப்பொழுது வெளியூர். உயர் கல்விப் படிப்பு ஆரம்பமானது. ஹாஸ்டலில் சிலரும், அறைத் தோழர்களும் கிருஷ்ணா முகம் கொடுத்துப் பேசாததையும், சதா பயத்துடன் இருப்பதையும் கவனித்து, மன நல மருத்துவரைப் பார்க்கச் சொன்னார்கள். இதிலாவது ஏதோ வழி பிறக்கும் என்று எண்ணி கிருஷ்ணா சென்றார்.
அங்கு டாக்டர் கிருஷ்ணாவை தன்னைப்பற்றிப் பேசச் சொன்னார். தான், மற்றவரிடம் பயப்படுவதாகவும், பதில் சொல்லச் சொன்னால் எல்லோரும் தன்னைக் கணக்கிடுவதைப்போல் தோன்றுகிறது என்றும், கண்களைக் கீழே பார்த்தபடி விவரித்தார்.
இதைக் கேட்டு, டாக்டர் இது “ஸ்கீஜோப்ஃரீனீயா” என்று எடுத்துச் சொல்லி மாத்திரைகள் கொடுத்தார். அம்மாவை அழைத்து, அவர்களுக்கும் டையக்னோஸிஸ்ஸை விவரித்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு வரச் சொன்னார்.
மாத்திரைகள் ஆரம்பித்து சில நாட்களிலேயே கிருஷ்ணா கை வீச முடியாததை உணர்ந்தார். அந்த டாக்டரிடம் போக பயந்து, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இப்படி விழித்தபொழுதுதான் பெரியவர் கிருஷ்ணாவைச் சந்தித்து, எங்கள் டாக்டரிடம் அழைத்து வர நேர்ந்தது.
என் துறை, மனநலப் பிரிவைச் சேர்ந்த ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் என்பதால், டாக்டர் என்னை அந்தக் கோணத்திலிருந்து கிருஷ்ணாவை முழுமையாக பரிசோதிக்கச் சொன்னார். சாய்வு ஏதும் ஏற்படாமல் இருக்க, டாக்டர், மேற்கொண்ட தகவல், டயக்னோஸிஸ் எதையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
நான் கிருஷ்ணாவிடம் பேசி, பரிசோதித்து, கணித்து, டாக்டரிடம் பகிர்ந்தேன். ஸ்கிசோஃப்ரினியா உள்ளவர்களுக்கு இருக்கும் ஹாலுஸுநேஷன் (ஒலிப் பிரமைகள்), சந்தேகத்தின் உச்சக்கட்டமான டெல்யூஷன்ஸ் (delusions), ஒழுங்கற்ற சிந்தனை, இதுவெல்லாம் கிருஷ்ணாவிடம் இல்லை. சிந்திக்க, செயல்பட, தினசரி வேலை செய்யக் கஷ்டப்படுவார்கள். கிருஷ்ணாவுக்கோ, தானாகச் சிந்திக்க, செயல்பட முடிந்தது. இவற்றை வைத்து அவர் “நார்மல்” என்பதை ஊர்ஜிதப்படுத்தினேன். டாக்டரும் ஆமோதித்தார்.
முதல் கட்டமாக, கிருஷ்ணா பார்த்த மனநல டாக்டரையும், அவரின் சீனியரையும் சந்தித்து, எங்களைப் பொறுத்தவரை கிருஷ்ணாவிற்கு ஸ்கிசோஃப்ரினியா இல்லை என்றும், அவருடைய கூச்ச சுபாவத்தால் அப்படித் தோன்றியது என்பதையும் விவரித்தேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு, கிருஷ்ணா எங்களிடமே சிகிச்சையை செய்துகொள்ளப் பரிந்துரைத்தார்கள். (கிருஷ்ணா தன் தாழ்வு மனப்பான்மையைப்பற்றி அவர்களிடம் சொல்லவில்லை, சொல்வது முக்கியம் என்று நினைக்கவில்லை).
இதுவரையில் கிருஷ்ணா எடுத்துக் கொண்டிருந்த மாத்திரைகளை எங்கள் டாக்டர் குறைக்க ஆரம்பித்தார். அதனுடன் ஸைக்கலாஜிகல் இன்டர்வென்ஷனுக்காக என்னைப் பார்க்கச் சொன்னார்.
அவருக்கு மனநோய் இல்லை என்பதை அவரும், அவர் அம்மாவும் ஏற்றுக் கொள்வதே என் முதல் குறிக்கோள். அம்மா லீவு எடுத்துக்கொண்டு வந்தார். சேர்ந்தே “ஸைகோ எடுகேஷன்”(psycho education) தொடங்கினேன். ஸைகோ எடுகேஷனில் நோயைப்பற்றி விவரிப்போம். இங்கு வித்தியாசமாக, கிருஷ்ணாவிற்கு வந்திருப்பது ஏன் ஸ்கிசோஃப்ரினியா இல்லை என்பதை படிப்படியாகப் புரிய வைத்தேன். பல செஷன்களுக்குப் பிறகே “நார்மல்” என்பதை ஏற்றுக் கொள்ள, அம்மா தெளிவடைந்து ஊர் திரும்பினாள்.
அடுத்தது, இதற்கெல்லாம் மூல காரணமாக நிலவி வருவது தாழ்வு மனப்பான்மையே என்பதைக் கிருஷ்ணா உணரவேண்டும். அதற்காக, அவர் தன்னைப்பற்றிய விதவிதமான விவரங்களைப் பகிர்வதற்கு வழி செய்தேன். தன்னுடைய ஐந்து நல்ல குணாதிசயங்களை எடுத்துச் சொல்லச் சொன்னேன். புகை பிடிப்பதில்லை என்பதைச் சொல்லிவிட்டு மேற் கொண்டு சொல்ல எதுவும் இல்லை என்றார். ஐந்து குறைகளை சொல்லச் சொன்னேன். கடகடவென பத்து சொல்லிவிட்டுக் கண் கீழே சென்றுவிட்டது.
மற்றவருக்கு உதவி செய்ததை விவரிக்கச் சொன்னேன். பல வர்ணனைகள் குவிந்தது. கூடவே, மிச்சம் வைத்த நல்ல குணங்களை விவரிக்கச் சொன்னேன், எட்டு வந்தது!
இதை ஒட்டி, தினம் தன்னைப்பற்றி ஒரு நல்ல தகவல் தனக்குத்தானே கொடுத்து, அதைக் குறித்துக் கொள்ள வேண்டும் என்ற ஹோம் வர்க் ஆரம்பமானது. இது வரையில் பயம், தயக்கம், என்ற வட்டத்திற்குள் தன்னைப்பற்றிய தாழ்வான கருத்துடன் கிருஷ்ணாவின் வாழ்க்கை நிலவியது. நாமே, நம்மை தாழ்த்திப் பேசி, உதாசீனப்படுத்திக்கொண்டு இருந்தால், மற்றவரும் அதையே செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதற்கும், நாமே நம்மைப்பற்றிக் கணிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. கிருஷ்ணா மாற்றி யோசித்து, செயல்படவே இதைச் செய்தேன்.
சில வாரங்களுக்குப் பிறகு, தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ளப் பலவிதமான ரிலாக்ஸேஷன் முறைகளைப் பயிலச் செய்தேன். முதலில் வரும்போது, கிருஷ்ணா, கைகளைப் பிசைந்து, தொள தொளவென்று உடைகள் அணிந்து வருவார். இப்பொழுது, தலையை வாரி, நன்றாக இஸ்திரி பண்ணிய உடைகளாக மாறத்தொடங்கின.
தனிமை கிருஷ்ணாவின் நண்பனும், எதிரியும். தனிமையில் நன்றாகக் கவனம் செலுத்திப் பழக்கிக் கொள்ள முடிந்தது. ஆனால், மற்றவருடன் பேசுவதோ, சிரிப்பதோ தவறு என்ற கருத்து மனதில் பதிந்திருந்தது.
எல்லோருக்கும் கிருஷ்ணா நன்றாகப் படிப்பவர் என்று தெரியும். தன்னம்பிக்கை வளர இதையே பயன்படுத்தினேன். கிருஷ்ணா தன் வகுப்பிலோ, ஹாஸ்டலிலோ படிப்பில் திண்டாடிக்கொண்டு இருப்பவருக்குப் பாடம் விளக்குவது என்று ஆரம்பித்தார். அது தீப்பொறிபோல் பரவி, பலர் சந்தேகங்களைக் கேட்க வந்தார்கள்.
மற்றவர்களைப் பார்த்துப் பேச, கிருஷ்ணா பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவில் சனிக்கிழமைகளில் சில மணி நேரம் வாலன்டியராக உதவி செய்ய ஆரம்பித்தார். ஈடுபாட்டுடன் உதவி செய்ய, கண்களைப் பார்க்க, தானாகப் பார்த்துப் பேசும் பழக்கம் ஏற்பட்டது. பார்ப்பதால் நன்மை கூடுவதை உணர்ந்தார். புதிதாகச் செய்ய ஆரம்பிப்பது, ஒன்று முன்பின் தெரியாதவர்களுடனோ, அல்லது மிக நெருங்கியவர்களுடனோ, கொஞ்சம் ஈஸி.
சில வாரங்கள் போக, கிருஷ்ணாவிடம் புது மலர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. அவர் அம்மாவை அழைத்தேன். வேலையில் கிடைத்த பத்து நாட்கள் லீவில் அவர்களுடன் ஸெஷன் தொடங்கினேன். புதுப் பொலிவுடன் ஊர் திரும்பினார்.
மனோ பலம் வளர, கிருஷ்ணாவை விளையாடப் பரிந்துரைத்தேன். அவர்கள் ஹாஸ்டலில் செஸ் (Chess), பேட்மின்டன் (Badminton) பிரபலம். இரண்டும் விளையாடத் தொடங்கினார்.
படிப்பு முடித்துவிட்டு அம்மா, தங்கையுடன் இருக்கப் பிரியப்பட்டு வேலையில் சேர்ந்தார். குடும்பத்தைப்பற்றிய அக்கறை என்றும் கிருஷ்ணாவிடம் இருந்தது.
இரண்டு வருடத்திற்குப் பின், கிருஷ்ணா ஒரு பிரசித்திபெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழத்தில் சேர்ந்து, ஸ்காலர்ஷிப்பில் படித்து, நல்ல பெயர் எடுத்து அங்கேயே பொறுப்புள்ள பெரிய பதவியில் அமர்ந்தார். தாய்நாடு வரும்பொழுதெல்லாம் எங்களைப் பார்ப்பது வழக்கமானது.