ராகுவாக மாறிய ஸ்வர்ண பானு மெல்லக் கண்விழித்துப்பார்த்தான். சூரியன் கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவன் கண்களில் சூரியதேவனை விழுங்கும் வெறி தாண்டவமாடியது. வருடத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ கிடைக்கும் அபூர்வமான சந்தர்ப்பம். அந்த நாளுக்காகத்தான் அவன் காத்துக் கொண்டிருந்தான். அடுத்த ஆறு மாதத்திற்குத் தேவையான சக்தியை சூரியனிடமிருந்து கிரகித்துக் கொண்டுவிடுவான். மற்ற நாட்களில் அவனால் சூரியனை நெருங்கக்கூட முடியாது.
சூரியனை சில சமயங்களில்தான் அவனால் முழுவதும் விழுங்க இயலும். அப்போது அவனுக்குக் கிடைக்கும் சக்தி மிகவும் அபரிதமாக இருக்கும். சந்திரன் சூரியதேவனின் அருகாமையில் இருக்கும்போது அவனும் சூரியதேவனைப்போல பெரியவனாகக் காட்சி அளிப்பான். அப்போது பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் சூரியதேவனுக்குக் கொடுக்கும் சக்தியின் வீரியம் குறைந்து போகும். சந்திரனுக்கு எதிர்த் திசையில் இருக்கும் மற்ற தேவர்களுக்கு சூரியதேவனைக் காணவே முடியாது. ராகு கொண்டாட்டத்துடன் சூரியனை விழுங்குவான். மூன்றே முக்கால் நாழிகைக்குள் சூரியனை விழுங்கி அவன் சக்தியைக் கிரகித்துக்கொண்டு அவனை வெளியே விட்டுவிட வேண்டும். இல்லையென்றால் சூரியதேவன் விஸ்வரூபம் எடுத்து ராகுவை சுடு நெருப்பில் போட்டு வதைத்து விடுவான்.
பல சமயம் ராகுவிற்கு சூரியனை முழுவதும் விழுங்க முடியாது. அப்போதெல்லாம் சந்திரன் சற்று தூரத்தில் இருப்பான். அப்போது சூரியதேவனின் கைகளில் உள்ள கங்கணம் வரைதான் எட்டும். சில சமயங்களில் கால் வளையம் மட்டும்தான் கிடைக்கும். எப்படிக் கிடைத்தாலும் ராகு தனக்கு வேண்டிய சக்தியை முடிந்த அளவு எடுத்துக் கொள்வான்.
இன்று சந்திரன் சூரியதேவனுக்கு மிக அருகாமையில் இருக்கிறான். ராகு சூரிய தேவனை முழுவதாக விழுங்கலாம் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தான். ஆனால் சந்திரனுக்குப் பின்னால் ஒரு உருவம் நிற்பதை உணர்ந்தான். அது ஒரு பெண் என்றும் அவள்தான் சந்திரனைப் பிடித்துக்கொண்டு நிற்கிறாள் என்பதும் ராகுவிற்குப் புலனாயிற்று. ஆனால் அவள் முகத்தையோ உடம்பையோ பார்க்க முடியாத அளவிற்கு சூரியனின் கிரணங்கள் சந்திரனின் மீது பட்டுப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அந்த எதிரொளி மட்டும் இல்லாதிருந்தால் ஆடையில்லாமல் இருக்கும் ஸந்த்யாவை ராகு பார்த்துவிட்டான் என்றால் அவன் சூரியனை மறந்துவிட்டு அவளை விழுங்கச் சென்றிருப்பான்.
கண்ணைக் கூசும் அந்த ஒளி சற்று நேரத்தில் மறைந்துவிடும் என்பது ராகுவிற்குத் தெரியும்.அந்த நேரம் வரும்வரை தான் மறைவிடத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து சூரிய கிரணம் வராத ஒரு பொந்தின் உள்ளே சென்று தன்னை மறைத்துக் கொண்டான்.
ஸந்த்யா தன் கையில் உள்ள சந்திரக் கல்லை சூரியதேவனுக்கு நேராகப் பிடித்து அவன் தலையிலிருந்து கால்வரை சந்திரகாந்தச் சிகித்சை செய்யத்தொடங்கினாள். முதலில் ஒருவித வாசனைக் குழம்பை எடுத்து அவன் முகத்திலிருந்து கால்வரை மெதுவாக ஒத்திவிடுவது போலப் பூசினாள் . அவனுடைய அழகிய உடம்பைக் கைகளினால் தடவும்போது அவள் அடைந்த இன்ப வேதனைக்கு அளவே இல்லை. கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் சூரிய தேவனுக்கும் ஸந்த்யாவின் ஸ்பரிசம் ஆசை அலைகளை எழுப்பியது. காதல் வெள்ளம் பிரவாகமாகப் பொங்கி வரும்போல் இருந்தது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் தவித்தனர்.
இருப்பினும் இப்போது ஆசைக்குப் பலியாகிவிட்டால் ஸந்த்யா முழுதும் அழிந்து விடுவாள் என்ற எண்ணம் சூரியதேவனின் உணர்ச்சி வெள்ளத்துக்கு அணைபோட்டது. கண்களை இறுக்க மூடிக்கொண்டு நிஷ்டையில் ஆழ்ந்தான். ஸந்த்யா சந்திரகாந்தத்தைக்கொண்டு அவன் உடம்பு முழுவதும் சாணை பிடிப்பதுபோலத் தேய்க்க ஆரம்பித்தாள். சூரியதேவனுக்கு உடல் எல்லாம் எரிவதுபோல் இருந்தது. சில நாழிகைகள் அந்த சிகித்சை நீடித்தது. பல யுகம் கடப்பதுபோல் இருந்தது.
ஸந்த்யா காந்தச் சாணைக்குப் பிறகு மீண்டும் அவனுக்கு உடம்பு முழுவதும் சந்தன எண்ணையைத் தடவினாள். அதன் குளிர்ச்சி சூரியதேவனுக்குப் புதிய சுகானுபவத்தைக் கொடுத்தது. இனிமேல் தன்னால் ஸந்த்யாவிற்கு சுகமான காதல் தரமுடியும் என்பதை உணர்ந்து கொண்டான். ஸந்த்யாவிற்கும் அது நன்றாகப் புரிந்தது. அந்த ஆசையில் கையில் இருந்த சந்திரனைத் தவறவிட்டாள். சந்திரன் உருண்டுபோய் ராகு ஒளிந்து கொண்டிருந்த பொந்தை மூடினான். அந்த அதிர்ச்சியில் சூரியதேவன் கண்களில் கட்டியிருந்த திரைச் சீலையை உதறிவிட்டுக் கண்விழித்துப் பார்த்தான்.
அழகுத் தேவதையாக ஸந்த்யா அவன் அருகில் நின்று கொண்டிருந்தாள். தடாகத்தில் அவளுடன் கொண்ட காந்தர்வ காதல் நினைவுக்கு வந்தது. ஸந்த்யாவை நோக்கித் தன் கைகளை நீட்டினான். பூமாலை போல அவளும் அவன்மீது விழுந்தாள். அந்த காந்தப் படுக்கையில் இருவரும் இரும்பும் காந்தமும்போல ஒட்டிக் கொண்டனர். ஆசை அணை உடைந்தது. காதல் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
ராகுவிற்கும் சூரியனை விழுங்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
எமபுரிப்பட்டணம் பிராஜக்டுக்கு ஆதாரமானவன் சித்ரகுப்தன். எப்படியாவது இதை வெற்றிகரமாக முடித்தால் தனக்கு மட்டுமல்ல எம உலகத்துக்கே நல்லது என்று எண்ணினான். சிவபெருமானிடம் உத்தவு வாங்கி பிரும்மர் அறிவுரையால் நாரதா கம்யூனிகேஷன்ஸ் மூலமாக இந்த திட்டத்தைச் செயலாற்ற முனைந்தான்.
நாரதா கம்யூனிகேஷன்ஸ் தலைவர் நாரதர். சகலமும் அறிந்தவர். அவர் செல்லாத இடமே கிடையாது. அவர் அறிவுரைப்படிதான் இந்தத் திட்டமே நிறைவேறப்போகிறது. ஆனாலும் அவர் சுபாவம் வித்தியாசமானது. அவரால் வரும் அனர்த்தங்கள் சமாளிக்க முடியாதவைகளாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க அவரைவிட்டால் வேற ஆளே கிடையாது. அவருக்கு வைகுந்தம், கைலாசம் இரண்டு இடத்திலும் செல்வாக்கு உண்டு. பிரும்மாவின் பிள்ளை என்பதால் பிரும்ம லோகத்தில் அவர் வைத்ததுதான் சட்டம்.
அவர்தான் சிவா கன்சல்டிங்க் சர்வீசுக்கும், ராம் டெக்கிற்கும் சேர்த்து இந்த பிராஜக்டை வழங்கும்படி செய்தார்.
முதலில் தேவ உலகத்தைச் சேர்ந்த முக்கியமானவர்களைச் சேர்த்து ஒரு மீட்டிங் போட்டார். அதில் பிரும்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், முருகன், பார்வதி, சரஸ்வதி, லக்ஷ்மி, எமன், சித்ரகுப்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சித்ரகுப்தன் மனது திக் திக் என்று அடித்துக் கொள்ள நாரதர் கலகத்துடன் அந்த மீட்டிங்கைத் துவக்கினார்.
“இந்தப் பிரஜாக்டை முடிக்க தேவ உலகில் யாருமே இல்லை. அதனால் பூலோகத்திலிருந்து ஆட்களைக் கொண்டுவரவேண்டும் ” என்ற அவரது முதல் சொல் சபையில் பெரும் களேபரத்தை உண்டுபண்ணியது.
பிள்ளையார் எழுந்து ” மகாபாரதத்தையே எழுதியவன் நான். என்னால் இது முடியாதா என்ன? ” என்று கேட்டார்.
உடனே முருகனும் எழுந்து ” மன்னிக்கணும், நான் சிறுவன்தான். இருந்தாலும் அப்பாவிற்கே அறிவுரை கூறியவன். நான் இதை முடித்துத் தருகிறேன்” என்றார்.
பார்வதி ‘என்னடா இது, இந்த நாரதன் மாம்பழத்துக்குப் பதிலா புதுசா பிராஜக்டை வைத்துக் கலகத்தைத் துவக்கியிருக்கானே’ என்று கையைப் பிசைந்தாள்.
( தொடரும்)