“ காற்றடைத்த பை “ – தமிழ்த்தேனி

Image result for picture of an educated old man in chennai

இரவு மணி 12 அடித்தது, நிமிர்ந்து பார்த்த கார்த்திகேயன் கணினியில் அவர் எழுதிக்கொண்டிருந்த “ஒரு வினாடி உயிர்” என்று அவர் எழுதிய வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துப்பார்த்தார். தலைப்பு திருப்தியாக இருந்தது.

ஒவ்வொரு வினாடியும் உயிர் பிறக்கிறது. ஒவ்வொரு வினாடியும் உயிர் பிரிகிறது , ஒவ்வொரு வினாடியும் உயிர் பயணிக்கிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் தேங்குகிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் ஓங்குகிறது , ஒரு வினாடிக்குள் உயிரே போய் உயிர் வந்தது என்று உவமானமாய்க் கூறினாலும் உயிர் ஒவ்வொரு வினாடியும் போய்ப் போய்தான் வருகிறது.

உயிருக்கு விலையுமில்லை உயிருக்கு நிலையுமில்லை,ஒரு உடலிலே ஒரு உயிர்தான் என்றால் , உயிரில்லாத உடலிலேதான் வேறுயிர் கூடு விட்டுக் கூடு பாய முடியுமென்றால், கர்ப்பிணியின் உள்ளே இரு உயிர் வாழ்வதெங்கனம்? ஒரு உடலில் இரு உயிர் வாழ்வதெப்படி, உயிரில்லா உடலில் கூடு பாய்ந்தால் அது கூடுவிட்டுக் கூடு பாய்தல். உயிருள்ள உடலின் உள்ளே இரு உயிராய்க் கலந்து இணைந்து உள்ளேயே உருவாகி கருவாகி உயிரானால் அதன் பெயர் என்ன பாய்தல் உயிர் பாய்தலா…?
ஆமாம் எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மனதில் ஓடிய எண்ணங்களை வார்த்தையாய் வடித்திருக்கிறோமே இதற்கு என்ன பெயர் கொடுப்பதென்று தெரியவில்லையே .

இது கவிதையா கட்டுரையா சந்தேகத்தின் வித்தா அல்லது இந்த தேகத்தின் விதையா..? அது தெரியவில்லை. ஆனால் த்ருப்தியாக இருந்தது

தூங்கினாலும் விழித்திருந்தாலும் மனதில் ஓடும் எண்ணங்களைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியவில்லை, தறிகெட்டு ஓடும் மனதை ஒரு கட்டுக்குள் வேண்டுமானால் கொண்டு வர முடிகிறது, கட்டுக்குள் கொண்டு வந்து, ஒரு குறிப்பிட்ட சக்தியை நினைத்து அதன் நினைவாகவே எண்ணங்களைச் சுழலவிட்டு,

அந்தப்புரம் இந்தப்புரம் அலையவிடாமல் அப்படியே ஒருவழிப் பாதையில் அந்த எண்ணங்களை ஒருமித்த மனதோடு அந்த எண்ணக் குதிரையின் லகானை சரியாகப் பிடித்து அந்த குதிரையைச் சரியாக வழி நடத்திச்சென்று, தாம் அடைய நினைத்த குறிக்கோளை, பொருளை, பரம்பொருளை அடையமுடிகிறது. அது சிலருக்கு மட்டுமே சித்திக்கிறது. அவர்களைத்தான் சித்தர்கள் ஞானிகள் தவஸ்ரேஷ்டர்கள் என்கிறோம்.
மனம் ஓடிக்கொண்டே இருந்தது . அட இது சரிப்பட்டு வராது, இந்த எண்ண ஓட்டங்களுக்கு முடிவே கிடையாது. எப்படியாவது இந்த எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு தூங்க ஆரம்பிக்க வேண்டும்.

இப்போதே மணி இரவு 12 ஐத் தாண்டி விட்டது, கணினிக் கூட்டில் இருந்த மின்சார உயிரை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கணினியை மூடினார். ஆமாம்  ஏன் இந்தக் கணினியை மூடுகிறோம் ? திறந்து வைத்தால் கணினிக்கு உயிர் போய்விடுமா என்னும் எண்ணம் எழவே அந்த எண்ணத்தை மூடிவிட்டுப் படுக்கைக்குப் போனார் சத்தியமூர்த்தி படுக்கையில் படுத்தபடியே மனதை அமைதியாக வைத்துக்கொண்டு தூங்க முயன்றார் . எண்ண அலைகள் அவ்வளவு விரைவாக விட்டுவிடுமா என்ன… அவ்வளவு பெரிய வீட்டில் அன்று அவர் மட்டும் தனியே இருக்கிறார் என்னும் எண்ணம் தோன்றியது

ஒரு வினாடி சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு அந்த அமானுஷ்ய அமைதி பயத்தை ஊட்டியது. இதென்ன இப்படி இன்று எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கிறதே தூங்கவிடாமல் என்று எண்ணியவர், கண்களை மூடித் தூங்க முயன்றார்.

கண்ணின் உள்ளே காட்சி விரிந்தது. அந்தக் காட்சிகளுக்கேற்றவாறு ஒலியும் ஒளியும் வினாடிக்கு வினாடி உயிரூட்டிக்கொண்டிருந்தது அவருடைய எண்ணங்கள். வாழ்க்கையில் முதன் முறையாகத் தனியாக இருக்கிறோம் என்னும் எண்ணம், அதை உணர்ந்ததும், இன்னும் அதிகமாக எண்ண அலைகள் தாக்கத் தொடங்கின.

ஒரு பெரிய குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்த காலத்திலிருந்தே தனிமையை அனுபவித்தறியாத செல்லக் குழந்தை. உற்றார் உறவினர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே வீட்டில் இருக்கும் . சிறுவயது முதல் யாராவது ஒருவர் மடியிலோ, அல்லது யாரையாவது கட்டிக்கொண்டோ படுத்துத் தூங்கித்தான் பழக்கம் . அப்படிப்பட்ட அவர் இன்று தனியாக யாருமே இல்லாத வீட்டில் ஒற்றை ஆளாகப் படுத்துக்கொண்டிருப்பது ஒரு வினோதமான அனுபவமாக உணர்ந்தார் அவர்.

“என்னங்க நாளைக்குக் காலையிலே ப்ரும்ம முஹுர்த்தத்தில் கல்யாணம், நீங்க இன்னிக்கே அங்கே வந்தால் உங்களாலே அந்த சத்திரத்துச் சந்தடிலே தூங்க முடியாது, நானும் எனக்குத் துணையா ரமேஷும் இன்னிக்கே சத்திரத்துக்குப் போயிடறோம்.  நீங்க நாளைக்குக் காலையிலெ வந்தா போதும்” இல்லத்தரசி சாவித்ரி சொல்லிவிட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது .

ஒரு வேளை யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டோமோ, அங்கே போயிருந்தால் எல்லோரையும் பார்த்திருக்கலாம், இப்படித் தனிமையில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டிருக்க வேண்டாமே என்று தோன்றியது. சரி ஆனது ஆகிவிட்டது இப்போது வேறு வழியில்லை, தூங்கித்தான் ஆகவேண்டும்.  கடிகாரத்தை எடுத்துக் காலை 4 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு மீண்டும் தூங்க யத்தனித்தார் சத்தியமூர்த்தி. அவருக்குத் தோன்றியது, இந்தப் பெண்களே மிகவும்முன்யோசனைக்காரர்கள்.

நாம் எத்தனையோமுறை அலுவல் நிமித்தமாக வெளியூர் செல்லும்போதெல்லாம் எப்படி சாவித்திரியால் தனியே இருக்க முடிந்தது, மனக்கட்டுப்பாடு பெண்களுக்குக் கைவந்த கலையோ, அதெல்லாம் இருக்கட்டும், தன்னைத் தனியே விட்டுவிட்டு இவளால் எப்படிப் போக முடிகிறது, அவருக்கு சிரிப்பாய் வந்தது, அவர் என்ன குழந்தையா..? எவ்வளவு பெரிய ஆண்மகன்.

தன்னைத்தனியே விட்டுவிட்டு அதுவும் ஒரே ஒரு நாள் போயிருக்கிறாள். அதற்குள்ளே மொத்தப் பெண்களுக்கும் இரக்கமே கிடையாது என்று எண்ணும் அளவுக்கு என்ன ஆகிவிட்டது இப்போது..? ஆனால் இது போல் அவரைத் தனியே விட்டுவிட்டுச் செல்லும் நிலை இதுவரை ஏற்படவே இல்லை. இதுதான் முதல்முறை.

“முதல் இரவு” முதல் இரவா அதுவும் ஐம்பது வயதைத் தாண்டிய அவருக்கா..? களுக்கென்று அவரே சிரித்துக்கொண்டார். இந்த மனம் இருக்கிறதே என்ன பாடு படுத்துகிறது, எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த விடாமல் கற்பனைச் சாட்டை கொண்டு விரட்டி விரட்டி ஓட வைக்கிறது.

எப்படித்தான் இந்த சித்தர்களும் முனிவர்களும் யோகிகளும் ஞானிகளும் இந்த எண்ணக் குதிரையை கட்டுப்படுத்தினரோ.? எண்ணிப்பார்த்தலே சுவாரஸ்யமாய் இருந்தது. சரி எண்ணித்தான் பார்ப்போமே என்ன குறைந்துவிடும்.? எதற்காக இந்த எண்ன ஓட்டத்தை நிறுத்தவேண்டும்.? அப்படீ எண்ணத்தை ஓடவிட்டார்,

எப்போது தூங்கினார் என்றே தெரியாமல் அவரை அறியாமல் தூங்கிப்போனார். நல்ல தூக்கத்தில் திடீரென்று படார்படார் என்று ஒரு சத்தம், மீண்டும் பட ப்-பட,பட் படார் என்று ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தார். மின்சாரம் போய்விட்டது.

அப்படியே சற்று நேரம் எங்கிருந்து அந்த சத்தம் வருகிறது என்றே தெரியாமல் அசைவற்றுக் கிடந்தார்.  மீண்டும் ஒருமுறை தலைக்கு மேலே அந்தச் சத்தம். என்ன இது ஏதோ ஒரு பொருள் வெளிர் நீலத்தில் அறையின் இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு நகர்ந்து சென்றது, உற்றுப்பார்த்தார் அது என்னவென்று தெரியவில்லை,. ஆனால் அந்தப் பொருள் மிதந்துகொண்டே இருந்தது.

பயமாகவும் இருந்தது, அது என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலும் வந்தது, தனியாக இருக்கிறோம் என்னும் உணர்வு அவரின் ஜாக்கிரதை உணர்வைத் தூண்டியது! மிகவும் மெதுவாக எழுந்து இருட்டில் தட்டுத் தடுமாறிச் சமையலறைக்குச் சென்று அங்கே தீப்பெட்டியைத் தேடினார்.
மின்சாரம் வந்துவிட்டது. வேகமாகப் படுக்கை அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மீண்டும் அதே பட் பட்டார்பட-ப்ட்ட்படா என்று சத்தம் கேட்டது படுக்கை அறையை வெளியிலிருந்தே நோட்டமிட்டார். ஒன்றும் தெரியவில்லை. கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு வந்து நிதானமாக மிக ஜாக்கிரதையுடன் படுக்கை அறையினுள் கம்பை ஓங்கியபடி அடிப்பதற்குத்   தயாராக நுழைந்தார். அந்தப் பொருள் கண்ணில் பட்டது, அதைப் பார்த்துவிட்டுத் திகைத்து நின்றார், ஓ இதுதான் அந்தச் சத்தத்துக்குக் காரணமா?

காலையில் அவருடைய பேரன் கண்ணன் தாத்தா வாசல்ல கியாஸ் பலூன் வந்திருக்கு, எனக்கு ஒரு கியாஸ் பலூன் வாங்கித் தரயா,என்று கேட்டதும், அவர் வாங்கித் தந்ததும் நினைவுக்கு வந்தன. கண்ணன் அந்தக் கியாஸ் பலூனை அப்படியே விட்டிருக்கிறான்.

அந்த நீல நிறப் பலூன் மேலே போய் முட்டிக்கொண்டு நின்றிருக்கிறது. அந்தப் பலூன் மின்சார விசிறியின் வேகத்துக்கு நகர்ந்து மின்சார விசிறியின் இறக்கைகளில்பட்டுச் சத்தம் அளித்திருக்கிறது. இருட்டில் நீலமாக அந்தப் பலூன் காற்றில் உலா வந்திருக்கிறது, அதைப் பார்த்து பயந்து போனோம், அந்தச் சத்தம் கேட்டுத்தான் பயந்து விழித்திருக்கிறோம் என்பதை உணர்ந்தார்.

முதலில் அந்தப் பலூனை எடுத்துக் காற்றை வெளியேற்றி விடலாம் என்று அதை ஒரு ஊசியால் குத்தக் கையை வைத்தார் . மனதில் மீண்டும் நினைவுகளின் ஊர்வலம். ஏனோ ஒரு இரக்கம் அவர் மனதில், வேண்டாம் என்று நினைத்துக் கையிலிருந்த ஊசியை அந்தப் பலூன் அருகிலிருந்து தொலைவாகக் கொண்டு சென்றார்.

இப்படித்தானே இறைவன், இந்தக் காற்றை ஊசி கொண்டு நாம் வெளியேற்றுவது  போல நம் உயிரை இந்தக் கூட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறான் என்று உணர்ந்து ஊசியால் குத்தாமல் கையை எடுத்தார்.

படார் என்று ஒரு சத்தம் கேட்டது, பலூன் தானாக உடைந்தது, ஏதோ ஒன்று புரிந்தது அவருக்கு.

 

Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP
Blogspot Link: http://thamizthenee.blogspot.com
YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos
Contact:
Email: rkc1947@gmail.com
Mobile: +91-9840686463

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.