காளிதாசன்
காளிதாசன் என்ற தேன் பாண்டத்தைத் தொட்டுவிட்டோம்!
அதில் – காவியங்களென்ற தேன் கொட்டிக்கிடக்கிறது.
தேனை நக்காமல் விடலாமா?
காளிதாசன் கவிதையால் தீட்டிய சித்திரத்தை நாம் வசனப்படுத்திக் குறுக்கிக் கூற உள்ளோம்.
அந்தக் கவிதை நயத்தை நாம் கூற இயலாது. கதையையாவது கூறுவோமே!
காளிதாசன் எழுதியதை சிறு குறிப்புகளாக எழுதுவதுகூட காளிதாசனுக்கு நாம் செய்யும் சிறு காணிக்கைதானே!
சரி… கதைக்குப் போவோம்..
சாகுந்தலம்:
விசுவாமித்திரர்-சக்தி வாய்ந்த முனிவர்- ஆழ் தியானத்தில் இருந்தார்.
தேவர் தலைவன் இந்திரன்!
பயந்தான்.
’இந்த முனியின் பெருந்தவம் இவருக்குப் பெரும் பலத்தைக் கொடுத்தால் … ஐயோ .. அப்புறம் நம் கதி?’.
தேவ மங்கை மேனகாவிடம் சென்றான்.
“மேனகா! நீதான் சென்று முனிவருடைய தவத்தைக் கலைக்க வேண்டும்”
அவள் பயந்தாள்! ஆனால் தலைவன் சொல்லைத் தட்டலாகாதே! ஆனால் காமன் பாணங்களின் உதவி அவளுக்குத் தேவைப்படவில்லை. அவளது அழகு மட்டுமே போதுமாகவிருந்தது. பெண்ணழகு எப்பேர்ப்பட்ட சக்தி கொண்டது! மாமுனிவனும் பெண்ணுடன் இணைந்தான்! ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தனது தவம் கலைந்தது கண்டு கோபித்த முனிவன் தாய்-சேய் இருவரையும் மறுக்களித்தான்.
எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அநீதி நடந்தவண்ணமே உள்ளது!
மேனகை குழந்தையுடன் தான் இந்திர சபை செல்ல இயலாது என்பதை உணர்ந்தாள்.
கடமையா பாசமா!
கடமை வென்றது.
குழந்தையைக் கானகத்தில் விட்டுவிட்டு வானகம் சென்றாள். கண்வ மகரிஷி அங்கு வந்தார். சாகுந்தலப் பறவைகள் அந்த அழகிய குழந்தையைச் சுற்றி அமர்ந்து-தத்தித்தத்தி- உணவு ஊட்டும் விந்தைக்காட்சியைக் கண்டு அதிசயப்பட்டார். குழந்தைக்கு சாகுந்தலா என்று பெயரிட்டு – தானே வளர்த்தார். தாயைப்போல பிள்ளை! அவள் அழகு வளர்ந்தது- மிளிர்ந்தது!
அஸ்தினாபுர மன்னன் துஷ்யந்தன் மான் வேட்டைக்கு அந்தக் காட்டுக்கு வந்தான். சாகுந்தலையைக் கண்டான்! தோழிகளுடன் கிண்டலும் கும்மாளமுமாக ஆடித்திரிந்த சாகுந்தலையைக் கண்டதும் காதல் கொண்டான்.
அவளும் அவனிடம் மனதைப் பறிகொடுத்தாள். காந்தர்வ மணம் புரிந்து கொண்டனர். இயற்கை அன்னை சாட்சியாக!
நாட்கள் இன்பகரமாகத் தொடர்ந்தது!
வசந்த காலம் அவர்கள் இன்பத்துக்குத் துணை நின்றது!
தென்றல் அவர்களுக்கிடையே புக முடியாமல் திணறி நின்றது!
சாகுந்தப் பறவைகள் பனியைச் சிறகில் தாங்கி சிலிர்த்தது.
காதலர்கள் மீது அந்தப் பனி – மலர் இதழ் போல் – பரவியது.
தேகங்கள் சிலிர்த்தன!
நாட்கள் அப்படியே உறைந்து போய்விடக்கூடாதா என்று இரு உள்ளங்கள் ஏங்கின!
(காளிதாசனை எண்ணும்போது நமக்கே இப்படி சில சில்லறைக் கற்பனைகள் தோன்றுகின்றனவே!)
காலச்சக்கரம் சுழலும்போது இன்பம் துன்பம் எல்லாமே முடிவுக்கு வருகிறது.
இன்பமும் துன்பமும் மீண்டும் தொடங்குகிறது.
அஸ்தினாபுர வீரர்கள் மன்னனைத் தேடிக் காட்டுக்கு வந்தனர். நாட்டில் அமைதி குலைந்திருப்பதைக் கூறி – மன்னன் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். வேறு வழியில்லாமல்- துஷ்யந்தன் புறப்படத் துணிந்தான். “சாகுந்தலை! விரைவில் வந்து உன்னை அழைத்துச் செல்வேன்.எனது முத்திரை மோதிரம் உனது விரல்களில் இருக்கட்டும்”.
உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருள் இருக்கும்!
கனத்த இதயங்கள் இரண்டு.. மீண்டும் ஒன்று சேரும் நாளுக்காக ஏங்கித்தவித்தது.
ஒரு நாள்..சாகுந்தலா ஆசிரம வாயிலில் பூ மேடையில் அமர்ந்திருந்தாள். மனதோ அலை மோதியது. துஷ்யந்தனுடன் ஆடிப்பாடித் திரிந்த நாட்கள் நெஞ்சில் தென்றலாக வீசியது..கண்கள் சொருகி..ஒரு மோன நிலையில் இருந்தாள். அப்போது அங்கு துர்வாசர் என்ற முனிவர் வந்திருந்தார். முன் கோபத்தில் முதல்வர்! அவளது பணிவிடை வேண்டி அவர் வந்திருந்தார். சாகுந்தலா தன்னிலை மறந்து.. துர்வாசரைக் கவனிக்கத் தவறினாள்.
முனிவர் முனிந்துவிட்டார்.
“நீ யாரை எண்ணி என்னை உதாசீனம் செய்தாயோ அவன் உன்னை மறந்து போகக் கடவது” – சபித்தார்.
சாகுந்தலா தன்னினைவு பெற்று முனிவரிடம் தன் கதையைக் கூறி மன்னிப்பு வேண்டினாள்.
கோபம் தணிந்த முனிவர் “சாகுந்தலை! அவன் உனக்குக் கொடுத்த கணையாழியைக் காணும்போது இழந்த நினைவுகளைத் திரும்பப்பெறுவான்” – என்றார்.
மாதங்கள் பல சென்றது..
வசந்தம் சென்றது… அவள் வாழ்விலிருந்தும் வசந்தம் சென்றது.
மன்னனையும் காணவில்லை.
கோடை வந்தது…
சாகுந்தலை சோகத்தில் இளைத்தாள்.
கண்வ மகரிஷி மகளைத் தேற்றினார்!
“நாளையே உன்னை நான் அஸ்தினாபுரத்து அரண்மனைக்கு அனுப்பிவைக்கிறேன்”
சாகுந்தலா அரண்மனை செல்லும் வழியில்.. தாகம் தாளாமல் .. ஓர் ஏரி ஒன்றில் நீர் எடுத்து அருந்தும் போது – முத்திரை மோதிரம் வழுக்கி விழுந்தது. அதை மீனொன்று விழுங்கியது. மோதிரம் தொலைந்ததை அறியாத சாகுந்தலா அரண்மனை சென்று துஷ்யந்தனைச் சந்திக்கிறாள்.
“யாரம்மா நீ?” – மன்னனின் இந்த சொற்கள் சாகுந்தலாவைத் தாக்கியது.
சாகுந்தலா தங்கள் இருவரது கதையைச் சொல்ல-மன்னனுக்கு ஒன்றும் நினைவு இல்லாமையால் அவளை மறுக்கிறான்.
சாகுந்தலா தன் மோதிரத்தைக் காட்டினால் மன்னனின் நினைவு திரும்பும் என்று எண்ணினாள்.
ஆனால் மோதிரத்தைக் காணவில்லை.
அவளுக்கு..மோதிரம் மட்டுமல்ல -வாழ்வின் அர்த்தத்தையே தொலைத்து விட்டது போலிருந்தது.
ஆம்.. மீண்டும் மீண்டும்…எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அநீதி நடந்தவண்ணமே உள்ளது.
வெறும் உடலுடன் காட்டிற்குத் திரும்பினாள்.
ஒரு நாள்.. ஒரு மீனவன் வலையில் சிக்கியது அந்த மீன்.
அதன் வயிற்றில் அரச மோதிரம்!
மீனவன் மோதிரத்தை மன்னனிடம் சேர்ப்பித்தான்.
துஷ்யந்தன் அந்த மோதிரத்தைக் கண்டான்.
நினைவலைகள் சூறாவளியாகத் தாக்கியது.
சாகுந்தலை… சாகுந்தலை…மனம் அனைத்தையும் அறிந்தது.
எங்கே அவள்… என்றே மனம்- ஆவலால் துடித்தது!
உடனே காட்டுக்குப் புறப்பட்டான்.
பிரிந்தவர் சேர்ந்தால் – பேசவும் வேண்டுமோ?
சாகுந்தலையுடன் இணைந்தான்.
மகன் பிறந்தான்.
பரதன் என்று பெயரிட்டான்.
வளர்ந்தபின் உலகை ஆள வந்தவன்.
அவனே பாரத நாட்டின் பெயருக்குக் காரணமானான்.
அடுத்து நாம் என்ன சித்திரங்களைக் காணப்போகிறோம்?
விரைவில் சந்திப்போம்!