கோவிலில் ஒரு சம்பவம்
‘அதெப்படி மேற்கண்ட வரலாற்றை ராஜநட்பு மூலம் உலகிற்கு நேரிலேயே பார்த்ததுபோல் எழுதியிருக்கிறிர்கள்?’ என்ற வினா உங்கள் மனதில் எழும்பலாம். அதற்கான விளக்கத்தைக் கொடுப்பது என் கடமையாகிறது.
நான் பிறந்து, வளர்ந்து, படித்து, பெரிய குடும்பத்தில் வசித்து வேலைக்காக மும்பாய் செல்லும்வரை இருந்தது தஞ்சையில்தான். உறவினர்களும் மற்றோரும் எங்கள் வீட்டிற்கு ஒவ்வொரு முறை வரும்போதும் தஞ்சை பெரியகோவிலுக்கும், அரண்மனைக்கும் கொண்டுபோய் காண்பிக்கும் பொறுப்பை நான்தான் ஏற்றிருந்தேன். கோவிலை சுற்றும் சமயம் அந்த விவரமில்லா தொப்பி அணிந்தவரின் மர்மத்தைப்பற்றி சுமார் ஆயிரம் தடவையாவது அவர்களிடம் விவரித்திருப்பேன். இப்படியாகத் தொப்பி அணிந்தவர் என் ஆழ் மனதில் நிரந்தரமாகத் தங்கி விட்டார்.
வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை வெளிநாட்டில் கழித்துவிட்டுத் தாய்நாட்டிற்கே திரும்பி வந்துவிட்டேன். வந்தபின் அடிக்கடி நான் பிறந்து வளர்ந்த தஞ்சைக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். முக்கியமாகப் பெரியகோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் நேரம் தெரியாமல் அமர்ந்து என் மனதில் ஆழமாய் பதிந்திருந்த அந்த மர்மநபரை உற்றுப்பார்த்தபடியே அதன் உண்மையை மனதில் ஆராய முயலுவேன். நாளுக்கு நாள் அந்த ஆர்வம் தீவிரமடைந்தது.
அன்றொருநாள், கோவிலின் முன் இருக்கும் சாலையின் கிழக்குப்பக்கத்திலிருந்து மேற்குபக்கத்திற்குக் கடந்து கோவிலைச் சென்றடையக் காத்திருந்தேன். அன்றோ வழக்கத்தைவிட எக்கச்சக்கமான ட்ராபிஃக். வெகுநேரம் காத்திருக்க நேர்ந்துவிட்டது. பக்கத்தில் ஒரு பெண்மணி கையில் ஒரு கைக்குழந்தையுடனும் ஒரு துறுதுறுப்பான சுமார் 3 வயதான பையயுடனும் என்னைப்போலவே காத்திருந்தாள். ஒரு கை பையனுடைய கரத்தைப் பற்றியிருந்தது. அழும் கைக்குழந்தையைக் கவனிக்கப் பையனின் கரத்தை ஒரு கணம் விடுவித்தாள்.
அய்யோ! இது என்ன? பையன் விர்ரென்று ரோடில் இறங்கி ரோட்டின் மறுபக்கத்திற்குப் போகத்தொடங்கிவிட்டானே! முக்கால்வாசி கடந்து விட்டான். ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். மின்னல் வேகத்தில் பறந்து சென்று பையனைக் கைப்பற்றி அணைத்தவாறே சாலையின் மறுபக்கத்தில் மல்லாக்க சாய்ந்தேன். லாரி பயங்கரமாய் லாக்கான டயரின் கிரீச் சத்தத்தோடு சிறிது தள்ளிப்போய் நின்றது. ட்ரைவர் கீழே குதித்து ஓடிவந்தான். ஒரு கூட்டமே கூடிவிட்டது. பையனின் தாய் அலறிக்கொண்டே ஓடிவந்தாள். படுத்தவாறே பையனை அவளிடம் நீட்டினேன். பையனைப்பற்றிய தாய் அவன் முழுமையாகக் காப்பாற்றப்பட்டதை அறிந்தாள். ‘அய்யா, உங்கள் உயிரைப் பணயம் வைத்து என் மகனைக் காப்பாற்றினீர்களே, உங்களுக்கு எவ்வாறு கைமாறு செய்யப்போகிறேன்?’ என்று உணர்ச்சிவசப்பட்டு மிகவும் பணிவுடன் என்னை நோக்கியவாறே கூறினாள். எல்லோரும் என் துணிச்சலைப் பாராட்டினர்.
எனக்கோ எவ்வாறு இதை சாதித்தோம் என்று புரியவில்லை. ட்ரைவர், “ஸார் உங்களுக்கு ஏதேனும் அடி பட்டிருக்கிறதா?” என்று கேட்டார். எழுந்து உட்கார்ந்து கையிலும் முதுகிலும் ஏற்பட்ட சிராய்ப்புகளைக் காண்பித்தேன். அவர் ஓடிச்சென்று லாரியிலிருந்து ஃபர்ஸ்ட் ஐட் பாக்ஸை எடுத்துவந்து போரிக் பௌடரில் தண்ணீர்விட்டு க்ளீன் செய்து டிங்க்சர் போட்டு இரு இடத்திலும் ப்ளாஸ்டர் போட்டார். கூட்டம் லாரி ட்ரைவர் உள்பட கலைந்தது. தாயும் குழந்தைகளுடன் கோவிலுள் சென்றாள்.
(அடுத்த இதழில் முடியும்)