“ காற்றடைத்த பை “ – தமிழ்த்தேனி

Image result for picture of an educated old man in chennai

இரவு மணி 12 அடித்தது, நிமிர்ந்து பார்த்த கார்த்திகேயன் கணினியில் அவர் எழுதிக்கொண்டிருந்த “ஒரு வினாடி உயிர்” என்று அவர் எழுதிய வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துப்பார்த்தார். தலைப்பு திருப்தியாக இருந்தது.

ஒவ்வொரு வினாடியும் உயிர் பிறக்கிறது. ஒவ்வொரு வினாடியும் உயிர் பிரிகிறது , ஒவ்வொரு வினாடியும் உயிர் பயணிக்கிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் தேங்குகிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் ஓங்குகிறது , ஒரு வினாடிக்குள் உயிரே போய் உயிர் வந்தது என்று உவமானமாய்க் கூறினாலும் உயிர் ஒவ்வொரு வினாடியும் போய்ப் போய்தான் வருகிறது.

உயிருக்கு விலையுமில்லை உயிருக்கு நிலையுமில்லை,ஒரு உடலிலே ஒரு உயிர்தான் என்றால் , உயிரில்லாத உடலிலேதான் வேறுயிர் கூடு விட்டுக் கூடு பாய முடியுமென்றால், கர்ப்பிணியின் உள்ளே இரு உயிர் வாழ்வதெங்கனம்? ஒரு உடலில் இரு உயிர் வாழ்வதெப்படி, உயிரில்லா உடலில் கூடு பாய்ந்தால் அது கூடுவிட்டுக் கூடு பாய்தல். உயிருள்ள உடலின் உள்ளே இரு உயிராய்க் கலந்து இணைந்து உள்ளேயே உருவாகி கருவாகி உயிரானால் அதன் பெயர் என்ன பாய்தல் உயிர் பாய்தலா…?
ஆமாம் எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மனதில் ஓடிய எண்ணங்களை வார்த்தையாய் வடித்திருக்கிறோமே இதற்கு என்ன பெயர் கொடுப்பதென்று தெரியவில்லையே .

இது கவிதையா கட்டுரையா சந்தேகத்தின் வித்தா அல்லது இந்த தேகத்தின் விதையா..? அது தெரியவில்லை. ஆனால் த்ருப்தியாக இருந்தது

தூங்கினாலும் விழித்திருந்தாலும் மனதில் ஓடும் எண்ணங்களைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியவில்லை, தறிகெட்டு ஓடும் மனதை ஒரு கட்டுக்குள் வேண்டுமானால் கொண்டு வர முடிகிறது, கட்டுக்குள் கொண்டு வந்து, ஒரு குறிப்பிட்ட சக்தியை நினைத்து அதன் நினைவாகவே எண்ணங்களைச் சுழலவிட்டு,

அந்தப்புரம் இந்தப்புரம் அலையவிடாமல் அப்படியே ஒருவழிப் பாதையில் அந்த எண்ணங்களை ஒருமித்த மனதோடு அந்த எண்ணக் குதிரையின் லகானை சரியாகப் பிடித்து அந்த குதிரையைச் சரியாக வழி நடத்திச்சென்று, தாம் அடைய நினைத்த குறிக்கோளை, பொருளை, பரம்பொருளை அடையமுடிகிறது. அது சிலருக்கு மட்டுமே சித்திக்கிறது. அவர்களைத்தான் சித்தர்கள் ஞானிகள் தவஸ்ரேஷ்டர்கள் என்கிறோம்.
மனம் ஓடிக்கொண்டே இருந்தது . அட இது சரிப்பட்டு வராது, இந்த எண்ண ஓட்டங்களுக்கு முடிவே கிடையாது. எப்படியாவது இந்த எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு தூங்க ஆரம்பிக்க வேண்டும்.

இப்போதே மணி இரவு 12 ஐத் தாண்டி விட்டது, கணினிக் கூட்டில் இருந்த மின்சார உயிரை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கணினியை மூடினார். ஆமாம்  ஏன் இந்தக் கணினியை மூடுகிறோம் ? திறந்து வைத்தால் கணினிக்கு உயிர் போய்விடுமா என்னும் எண்ணம் எழவே அந்த எண்ணத்தை மூடிவிட்டுப் படுக்கைக்குப் போனார் சத்தியமூர்த்தி படுக்கையில் படுத்தபடியே மனதை அமைதியாக வைத்துக்கொண்டு தூங்க முயன்றார் . எண்ண அலைகள் அவ்வளவு விரைவாக விட்டுவிடுமா என்ன… அவ்வளவு பெரிய வீட்டில் அன்று அவர் மட்டும் தனியே இருக்கிறார் என்னும் எண்ணம் தோன்றியது

ஒரு வினாடி சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு அந்த அமானுஷ்ய அமைதி பயத்தை ஊட்டியது. இதென்ன இப்படி இன்று எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கிறதே தூங்கவிடாமல் என்று எண்ணியவர், கண்களை மூடித் தூங்க முயன்றார்.

கண்ணின் உள்ளே காட்சி விரிந்தது. அந்தக் காட்சிகளுக்கேற்றவாறு ஒலியும் ஒளியும் வினாடிக்கு வினாடி உயிரூட்டிக்கொண்டிருந்தது அவருடைய எண்ணங்கள். வாழ்க்கையில் முதன் முறையாகத் தனியாக இருக்கிறோம் என்னும் எண்ணம், அதை உணர்ந்ததும், இன்னும் அதிகமாக எண்ண அலைகள் தாக்கத் தொடங்கின.

ஒரு பெரிய குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்த காலத்திலிருந்தே தனிமையை அனுபவித்தறியாத செல்லக் குழந்தை. உற்றார் உறவினர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே வீட்டில் இருக்கும் . சிறுவயது முதல் யாராவது ஒருவர் மடியிலோ, அல்லது யாரையாவது கட்டிக்கொண்டோ படுத்துத் தூங்கித்தான் பழக்கம் . அப்படிப்பட்ட அவர் இன்று தனியாக யாருமே இல்லாத வீட்டில் ஒற்றை ஆளாகப் படுத்துக்கொண்டிருப்பது ஒரு வினோதமான அனுபவமாக உணர்ந்தார் அவர்.

“என்னங்க நாளைக்குக் காலையிலே ப்ரும்ம முஹுர்த்தத்தில் கல்யாணம், நீங்க இன்னிக்கே அங்கே வந்தால் உங்களாலே அந்த சத்திரத்துச் சந்தடிலே தூங்க முடியாது, நானும் எனக்குத் துணையா ரமேஷும் இன்னிக்கே சத்திரத்துக்குப் போயிடறோம்.  நீங்க நாளைக்குக் காலையிலெ வந்தா போதும்” இல்லத்தரசி சாவித்ரி சொல்லிவிட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது .

ஒரு வேளை யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டோமோ, அங்கே போயிருந்தால் எல்லோரையும் பார்த்திருக்கலாம், இப்படித் தனிமையில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டிருக்க வேண்டாமே என்று தோன்றியது. சரி ஆனது ஆகிவிட்டது இப்போது வேறு வழியில்லை, தூங்கித்தான் ஆகவேண்டும்.  கடிகாரத்தை எடுத்துக் காலை 4 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு மீண்டும் தூங்க யத்தனித்தார் சத்தியமூர்த்தி. அவருக்குத் தோன்றியது, இந்தப் பெண்களே மிகவும்முன்யோசனைக்காரர்கள்.

நாம் எத்தனையோமுறை அலுவல் நிமித்தமாக வெளியூர் செல்லும்போதெல்லாம் எப்படி சாவித்திரியால் தனியே இருக்க முடிந்தது, மனக்கட்டுப்பாடு பெண்களுக்குக் கைவந்த கலையோ, அதெல்லாம் இருக்கட்டும், தன்னைத் தனியே விட்டுவிட்டு இவளால் எப்படிப் போக முடிகிறது, அவருக்கு சிரிப்பாய் வந்தது, அவர் என்ன குழந்தையா..? எவ்வளவு பெரிய ஆண்மகன்.

தன்னைத்தனியே விட்டுவிட்டு அதுவும் ஒரே ஒரு நாள் போயிருக்கிறாள். அதற்குள்ளே மொத்தப் பெண்களுக்கும் இரக்கமே கிடையாது என்று எண்ணும் அளவுக்கு என்ன ஆகிவிட்டது இப்போது..? ஆனால் இது போல் அவரைத் தனியே விட்டுவிட்டுச் செல்லும் நிலை இதுவரை ஏற்படவே இல்லை. இதுதான் முதல்முறை.

“முதல் இரவு” முதல் இரவா அதுவும் ஐம்பது வயதைத் தாண்டிய அவருக்கா..? களுக்கென்று அவரே சிரித்துக்கொண்டார். இந்த மனம் இருக்கிறதே என்ன பாடு படுத்துகிறது, எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த விடாமல் கற்பனைச் சாட்டை கொண்டு விரட்டி விரட்டி ஓட வைக்கிறது.

எப்படித்தான் இந்த சித்தர்களும் முனிவர்களும் யோகிகளும் ஞானிகளும் இந்த எண்ணக் குதிரையை கட்டுப்படுத்தினரோ.? எண்ணிப்பார்த்தலே சுவாரஸ்யமாய் இருந்தது. சரி எண்ணித்தான் பார்ப்போமே என்ன குறைந்துவிடும்.? எதற்காக இந்த எண்ன ஓட்டத்தை நிறுத்தவேண்டும்.? அப்படீ எண்ணத்தை ஓடவிட்டார்,

எப்போது தூங்கினார் என்றே தெரியாமல் அவரை அறியாமல் தூங்கிப்போனார். நல்ல தூக்கத்தில் திடீரென்று படார்படார் என்று ஒரு சத்தம், மீண்டும் பட ப்-பட,பட் படார் என்று ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தார். மின்சாரம் போய்விட்டது.

அப்படியே சற்று நேரம் எங்கிருந்து அந்த சத்தம் வருகிறது என்றே தெரியாமல் அசைவற்றுக் கிடந்தார்.  மீண்டும் ஒருமுறை தலைக்கு மேலே அந்தச் சத்தம். என்ன இது ஏதோ ஒரு பொருள் வெளிர் நீலத்தில் அறையின் இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு நகர்ந்து சென்றது, உற்றுப்பார்த்தார் அது என்னவென்று தெரியவில்லை,. ஆனால் அந்தப் பொருள் மிதந்துகொண்டே இருந்தது.

பயமாகவும் இருந்தது, அது என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலும் வந்தது, தனியாக இருக்கிறோம் என்னும் உணர்வு அவரின் ஜாக்கிரதை உணர்வைத் தூண்டியது! மிகவும் மெதுவாக எழுந்து இருட்டில் தட்டுத் தடுமாறிச் சமையலறைக்குச் சென்று அங்கே தீப்பெட்டியைத் தேடினார்.
மின்சாரம் வந்துவிட்டது. வேகமாகப் படுக்கை அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மீண்டும் அதே பட் பட்டார்பட-ப்ட்ட்படா என்று சத்தம் கேட்டது படுக்கை அறையை வெளியிலிருந்தே நோட்டமிட்டார். ஒன்றும் தெரியவில்லை. கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு வந்து நிதானமாக மிக ஜாக்கிரதையுடன் படுக்கை அறையினுள் கம்பை ஓங்கியபடி அடிப்பதற்குத்   தயாராக நுழைந்தார். அந்தப் பொருள் கண்ணில் பட்டது, அதைப் பார்த்துவிட்டுத் திகைத்து நின்றார், ஓ இதுதான் அந்தச் சத்தத்துக்குக் காரணமா?

காலையில் அவருடைய பேரன் கண்ணன் தாத்தா வாசல்ல கியாஸ் பலூன் வந்திருக்கு, எனக்கு ஒரு கியாஸ் பலூன் வாங்கித் தரயா,என்று கேட்டதும், அவர் வாங்கித் தந்ததும் நினைவுக்கு வந்தன. கண்ணன் அந்தக் கியாஸ் பலூனை அப்படியே விட்டிருக்கிறான்.

அந்த நீல நிறப் பலூன் மேலே போய் முட்டிக்கொண்டு நின்றிருக்கிறது. அந்தப் பலூன் மின்சார விசிறியின் வேகத்துக்கு நகர்ந்து மின்சார விசிறியின் இறக்கைகளில்பட்டுச் சத்தம் அளித்திருக்கிறது. இருட்டில் நீலமாக அந்தப் பலூன் காற்றில் உலா வந்திருக்கிறது, அதைப் பார்த்து பயந்து போனோம், அந்தச் சத்தம் கேட்டுத்தான் பயந்து விழித்திருக்கிறோம் என்பதை உணர்ந்தார்.

முதலில் அந்தப் பலூனை எடுத்துக் காற்றை வெளியேற்றி விடலாம் என்று அதை ஒரு ஊசியால் குத்தக் கையை வைத்தார் . மனதில் மீண்டும் நினைவுகளின் ஊர்வலம். ஏனோ ஒரு இரக்கம் அவர் மனதில், வேண்டாம் என்று நினைத்துக் கையிலிருந்த ஊசியை அந்தப் பலூன் அருகிலிருந்து தொலைவாகக் கொண்டு சென்றார்.

இப்படித்தானே இறைவன், இந்தக் காற்றை ஊசி கொண்டு நாம் வெளியேற்றுவது  போல நம் உயிரை இந்தக் கூட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறான் என்று உணர்ந்து ஊசியால் குத்தாமல் கையை எடுத்தார்.

படார் என்று ஒரு சத்தம் கேட்டது, பலூன் தானாக உடைந்தது, ஏதோ ஒன்று புரிந்தது அவருக்கு.

 

Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP
Blogspot Link: http://thamizthenee.blogspot.com
YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos
Contact:
Email: rkc1947@gmail.com
Mobile: +91-9840686463

குவிகம் புத்தக பரிமாற்றம் BookXchange

புத்தகக் கண்காட்சியில் பலரின் பாராட்டைப்பெற்ற குவிகம் புத்தகப் பரிமாற்றம் (BookXchange )

இதன் தாரக மந்திரம்: 

“படித்ததைப் போடுங்கள் … பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்!”

இனிவரும் நமது நிகழ்வுக்ள் எல்லாவற்றிலும் இந்தப் பரிமாற்றம் தொடரும்! 

தினமலரில் இதற்கென்று ஒரு பத்தி!

பாலிமர் டிவியில் இது பற்றிய செய்தி!

மகிழ்ச்சி!   

No automatic alt text available.

முருகா 25

Image may contain: sky, mountain, outdoor and nature

 

புராதன தராதலம் உலாவிடும் தீநெறிகள் போயழிக்க சேவல்வருமே
இராதினி தகாதவை , பளீரென வேயுருவும் ஏறுமயில் வீரன்படையால்
மராமரம் எலாமவை ஒரேயொரு கூர்கணையால் மாய்த்தவனின் சீர்கொள்மருகா !
தராதவை , வராதவை , பெறாதவை ஏதுமிலை தாளிணையைச் சேருமவர்க்கே .

குறிப்பு:

இச்சந்த விருத்தத்தின் ஒவ்வொரு அடியிலும் மெய்யெழுத்து நீங்கலாக 25 எழுத்துக்கள் உள்ளன.

 

 

 

ழகரம் (எஸ் எஸ்)

Related image

 

விழியில் வழியும் அமிழ்தே ழகரம்
வழியில்பொழியும் மழையே ழகரம்
மகிழ்ச்சியில் பழுக்கும் பழமே ழகரம்
நெகிழ்ச்சியில் தழைக்கும் நிழலே ழகரம்

உழவும் தொழிலும் கமழ்ந்திடும் ழகரம்
மழுவும் கழிவும் கழிந்திடும் ழகரம்
வாழ்வும் தாழ்வும் பிறழும் ழகரம்
பழுதும் விழுதும் ஒழியும் ழகரம்

தொழுகையும் அழுகையும்  வாழ்வின் வழக்கம்
எழுகையும் முழுகையும்  முழவின் முழக்கம்
வாழையும் தாழையும் செழிப்பின் பழக்கம்
கோழையும்  மோழையும் அழிவின் புழுக்கம்

வாழ்வென்னும் வழியில்  குழிகள் பழிகள்
காழ்ப்பென்னும்   சுழியில் பழுதுகள் விழுதுகள்
தாழ்வென்னும் தகழியில் தழைகள் பிழைகள்
வீழ்கென  எழும்பும்  வேழமும் சூழுமும்

தாழ்ப்பாழ் அழுந்திட நழுவிடும் பொழுதினில்
கொழுந்தென எழுந்திடும் விழியின்பொழில்கள்
தழுவிடத் தழுவிட அவிழ்ந்திடும் எழில்கள்
வழிந்திடும் விழியில் அமிழ்ந்திடும் அமிழ்து

நிகழும் பொழுதெல்லாம் உழைப்பின் இழையன்றோ
திகழும் செழுப்பெல்லாம் மழையின் பொழிவன்றோ
மழலைச் சிமிழ்எல்லாம்   மகிழ்வின் விழையன்றோ
தமிழின் புகழ்எல்லாம் ழகரம்  வழியன்றோ

எது கோளாறு? இது நார்மல்!” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்

Related image
“எப்பொழுது வேண்டுமானாலும் நான் கடந்து வந்த இந்தப் பாதையின் அனுபவத்தைத் தாராளமாகப் பலருடன் பகிர்ந்து கொள்ளலாம். என்னவென்று புரியாமல் குழம்பி, என் நிலைமைக்கு அளித்த பெயரையும் சுமந்து அவதிப்பட்டேன். இங்கு வந்த பின்புதான், இதிலிருந்து விடுபட்டு, நான் “நார்மல்” என்பதை ஏற்றுக் கொள்ள முடிந்தது”.

இப்படி வாழ்த்து மடல் கொடுத்த கிருஷ்ணா, பத்து வருடத்திற்கு முன் எங்களிடம் ஆலோசித்தவர். முகபாவங்கள் குறைந்து, பல்வேறு சிரமங்களுடன், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும் பத்தொன்பது வயதுடையவர் எங்களிடம் வந்தார்.

கிருஷ்ணாவின் ஹாஸ்டலை ஒட்டியபடி நடக்கும் பாதை இருந்தது. வாக்கிங் செல்லும் ஒரு பெரியவர் ஆறு மாதமாக இவரைப் பார்த்து வந்தார்; யாரிடமும் அதிகம் பேசாததைக் கவனித்தார். சமீபத்தில், கிருஷ்ணாவும் தன்னைப்போலவே தத்தித்தத்தி கை வீசாமல் நடப்பதைக் கவனித்தார். இதனால் பற்று ஏற்பட்டு விசாரித்தார். கிருஷ்ணா “ஒன்றும் இல்லை” என்றார்.

நாட்கள் ஓடின, கிருஷ்ணா அப்படியே இருந்ததைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், பெரியவர் “உடம்புக்கு ஏதாவதா?” என்று மறுபடியும் கேட்டார். மாத்திரை எடுத்துக் கொண்டிருப்பதாக கிருஷ்ணா தெரிவித்தார். பெரியவர், அந்த வாரம் தனக்கு ஏற்பட்டுள்ள பார்க்கிஸன்சுக்காகத் (Parkinson’s) தான் பார்க்கும் நரம்பு டாக்டரிடம் கிருஷ்ணாவைப்பற்றி விவரித்தார்.

டாக்டர், பெரியவர் சொன்னதைக் கேட்ட பின்பு, கிருஷ்ணா உடனடியாக டாக்டரைப்  பார்க்க வேண்டுமென்று  பரிந்துரைத்தார். பெரியவர் கிருஷ்ணாவிடம் விஷயத்தைச் சொல்லி, “என்னை மாதிரியே இருக்கிறாய், ஒரு நல்ல நரம்பு டாக்டரைப் பார்” என்றார். கிருஷ்ணா வியந்து, “யாரைப் பார்ப்பது? தெரியவில்லையே” என்று சொல்ல, தான் பார்க்கும் டாக்டரிடமே அழைத்துச் சென்றார்.

அப்படித்தான் எங்களுக்குக் கிருஷ்ணா அறிமுகமானார். கிருஷ்ணாவின் விவரத்தைப் பல்வேறு கோணங்களிலிருந்து முழுதாகக் கேட்டுப் பரிசோதித்த பின், இந்த நிலை மருந்தினால் ஏற்பட்டது என்று எங்கள் டாக்டருக்குத் தோன்றியது. மாத்திரை கொடுத்தது ஒரு மனநல மருத்துவர். “ஸ்கீஜோப்ஃரீனீயா” (Schizophrenia) என்று முடிவெடுத்து, அதற்கான மருந்தைக் கொடுத்திருந்தார். அதன் பக்க விளைவே கிருஷ்ணாவின் இப்போதைய நிலைக்குக் காரணமானது.

கிருஷ்ணாவிற்கு இந்த நிலை எப்படி வந்தது என்பதை விவரிக்கிறேன்.

சிறு வயதிலிருந்தே கிருஷ்ணா கூச்ச சுபாவம் உள்ளவர். ஸ்கூலில் மிகவும் வெட்கப்படுவதால் சுவரை ஒட்டிய இடமாக உட்காரும் பழக்கம். வகுப்பில், குழுவாகப் படிக்கவோ, விளையாடவோ சொன்னால், உலகமே இருண்டு விட்டதுபோல் தோன்றும். அதேபோல், ட்ராயிங், கணக்கு க்ளாஸ் என்றால் கால் நடுக்கம். இரண்டு வாத்தியார்களும் பதில்களைப் போர்டில் எழுத, வரையச் சொல்வார்கள். வகுப்பில் இரண்டாவது ரேங்க் வாங்குவது கிருஷ்ணாதான். கணக்கிலும், வரைவதிலும் நிறைய மதிப்பெண் வரும். ஆனாலும், வகுப்பு முன்னால் நின்று செய்யும்பொழுது தப்பாகவே போகும். மற்றவர்கள் சிரிப்பதும் கேட்கும்.

இப்படித் தத்தளிப்பதால், ஒரு தாழ்வு மனப்பாங்குடன் வளர்ந்தார். அப்பா, துபாயில் வேலை பார்த்திருந்தார். அம்மா, வங்கி மேனேஜர். எந்தத் தப்பும் வந்து விடக்கூடாது என்று கண்டிப்புடன் வளர்த்தாள். மற்ற பிள்ளைகளுடன் பேசினால், வெளியே விளையாடினால், கெட்ட பழக்கங்கள் வருமோ என்று அஞ்சி கிருஷ்ணாவையும், அவர் தங்கையையும் வீட்டிலேயே இருக்கச் சொன்னாள்.

வளர வளரத் தன் கூச்ச சுபாவம் இடையூறாக இருப்பதைக் கிருஷ்ணா உணர ஆரம்பித்தார். உதவி கேட்க/செய்ய, சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளக் கடினமாக இருந்தது. தன் வகுப்பு மாணவர்கள் அப்படி இல்லை என்பதைப் பார்த்தது இன்னும் சங்கடப்படுத்தியது. தனக்கு வரும் பாராட்டு, புகழ், திட்டு, எல்லாமே நடுக்கம் தந்தது.

எப்படியோ தைரியத்தை வரவழைத்து, அம்மாவிடம் இதைப்பற்றிப் பேசினார். அம்மா, எல்லாம் சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்தினாள். விடுமுறைக்கு வந்தபோது அப்பாவும் அதையே சொன்னார். ஆனால் சரியாகவில்லை.

அவன் வகுப்பாசிரியர்கள் அவன் கீழே பார்த்துக்கொண்டு பதில் சொல்வதை அவனுடைய கவனத்திற்குக் கொண்டு வரும்போது கூச்சம் அதிகரித்தது. மரியாதை கொடுத்துப் பேச, இப்படித்தான் பேச வேண்டும் என்று வீட்டில் பழக்கம். அப்படியே பழகி விட்டதால், கண்களைப் பார்த்துப் பேச வரவில்லை.

கிருஷ்ணாவிடம் தைரியம் இருந்தது. தன் வகுப்பு மாணவர், வரும் வழியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டதும், ஒரு வினாடிகூடத் தாமதிக்காமல், அவனை வெளியே ஏற்றிவிட்டார். மற்றவர்கள் இதைப் பாராட்டும்போது, என்ன செய்வதென்று தெரியவில்லை கிருஷ்ணாவிற்கு.

நல்ல மதிப்பெண்கள், டேலன்ட் ஸர்ச் (Talent search) ஸ்காலர்ஷிப்பில் படிப்பு, தொடர்ந்து அதே ஸ்கூல். இருந்தாலும் கிருஷ்ணாவிற்குச் சமாளிக்கக் கஷ்டமாக இருந்தது. எங்கோ தன் மதிப்பு, தன்னம்பிக்கை தொலைந்து போய்விட்டது!

ஸ்கூல் முடித்து, மெரிட்டில் ஒரு பிரபலமான பொறியியல் கல்லுரியில் இடம் கிடைத்தது.  ஹாஸ்டலில் சேர்ந்தார். அதுவரை ஹைதராபாத்வாசி, இப்பொழுது வெளியூர். உயர் கல்விப் படிப்பு ஆரம்பமானது. ஹாஸ்டலில் சிலரும், அறைத் தோழர்களும் கிருஷ்ணா முகம் கொடுத்துப் பேசாததையும், சதா பயத்துடன் இருப்பதையும் கவனித்து, மன நல மருத்துவரைப் பார்க்கச் சொன்னார்கள். இதிலாவது ஏதோ வழி பிறக்கும் என்று எண்ணி கிருஷ்ணா சென்றார்.

அங்கு டாக்டர் கிருஷ்ணாவை தன்னைப்பற்றிப் பேசச் சொன்னார். தான், மற்றவரிடம் பயப்படுவதாகவும், பதில் சொல்லச் சொன்னால் எல்லோரும் தன்னைக் கணக்கிடுவதைப்போல் தோன்றுகிறது என்றும், கண்களைக் கீழே பார்த்தபடி விவரித்தார்.

இதைக் கேட்டு, டாக்டர் இது “ஸ்கீஜோப்ஃரீனீயா” என்று எடுத்துச் சொல்லி மாத்திரைகள் கொடுத்தார். அம்மாவை அழைத்து, அவர்களுக்கும் டையக்னோஸிஸ்ஸை விவரித்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு வரச் சொன்னார்.

மாத்திரைகள் ஆரம்பித்து சில நாட்களிலேயே கிருஷ்ணா கை வீச முடியாததை உணர்ந்தார். அந்த டாக்டரிடம் போக பயந்து, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இப்படி விழித்தபொழுதுதான் பெரியவர் கிருஷ்ணாவைச் சந்தித்து, எங்கள் டாக்டரிடம் அழைத்து வர நேர்ந்தது.

என் துறை, மனநலப் பிரிவைச் சேர்ந்த ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் என்பதால், டாக்டர் என்னை அந்தக் கோணத்திலிருந்து கிருஷ்ணாவை முழுமையாக பரிசோதிக்கச் சொன்னார். சாய்வு ஏதும் ஏற்படாமல் இருக்க, டாக்டர், மேற்கொண்ட தகவல், டயக்னோஸிஸ் எதையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.

நான் கிருஷ்ணாவிடம் பேசி, பரிசோதித்து, கணித்து, டாக்டரிடம் பகிர்ந்தேன். ஸ்கிசோஃப்ரினியா உள்ளவர்களுக்கு இருக்கும் ஹாலுஸுநேஷன் (ஒலிப் பிரமைகள்), சந்தேகத்தின் உச்சக்கட்டமான டெல்யூஷன்ஸ் (delusions), ஒழுங்கற்ற சிந்தனை, இதுவெல்லாம் கிருஷ்ணாவிடம் இல்லை. சிந்திக்க, செயல்பட, தினசரி வேலை செய்யக் கஷ்டப்படுவார்கள். கிருஷ்ணாவுக்கோ, தானாகச் சிந்திக்க, செயல்பட முடிந்தது. இவற்றை வைத்து அவர் “நார்மல்” என்பதை ஊர்ஜிதப்படுத்தினேன். டாக்டரும் ஆமோதித்தார்.

முதல் கட்டமாக, கிருஷ்ணா பார்த்த மனநல டாக்டரையும், அவரின் சீனியரையும் சந்தித்து, எங்களைப் பொறுத்தவரை கிருஷ்ணாவிற்கு ஸ்கிசோஃப்ரினியா இல்லை என்றும், அவருடைய கூச்ச சுபாவத்தால் அப்படித் தோன்றியது என்பதையும் விவரித்தேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு, கிருஷ்ணா எங்களிடமே சிகிச்சையை செய்துகொள்ளப் பரிந்துரைத்தார்கள். (கிருஷ்ணா தன் தாழ்வு மனப்பான்மையைப்பற்றி அவர்களிடம் சொல்லவில்லை, சொல்வது முக்கியம் என்று நினைக்கவில்லை).

இதுவரையில் கிருஷ்ணா எடுத்துக் கொண்டிருந்த மாத்திரைகளை எங்கள் டாக்டர் குறைக்க ஆரம்பித்தார். அதனுடன் ஸைக்கலாஜிகல் இன்டர்வென்ஷனுக்காக என்னைப் பார்க்கச் சொன்னார்.

அவருக்கு மனநோய் இல்லை என்பதை அவரும், அவர் அம்மாவும் ஏற்றுக் கொள்வதே என் முதல் குறிக்கோள். அம்மா லீவு எடுத்துக்கொண்டு வந்தார். சேர்ந்தே “ஸைகோ எடுகேஷன்”(psycho education) தொடங்கினேன். ஸைகோ எடுகேஷனில் நோயைப்பற்றி விவரிப்போம். இங்கு வித்தியாசமாக, கிருஷ்ணாவிற்கு வந்திருப்பது ஏன் ஸ்கிசோஃப்ரினியா இல்லை என்பதை படிப்படியாகப் புரிய வைத்தேன். பல செஷன்களுக்குப் பிறகே “நார்மல்” என்பதை ஏற்றுக் கொள்ள, அம்மா தெளிவடைந்து ஊர் திரும்பினாள்.

அடுத்தது, இதற்கெல்லாம் மூல காரணமாக நிலவி வருவது தாழ்வு மனப்பான்மையே என்பதைக் கிருஷ்ணா உணரவேண்டும். அதற்காக, அவர் தன்னைப்பற்றிய விதவிதமான விவரங்களைப் பகிர்வதற்கு வழி செய்தேன். தன்னுடைய ஐந்து நல்ல குணாதிசயங்களை எடுத்துச் சொல்லச் சொன்னேன். புகை பிடிப்பதில்லை என்பதைச் சொல்லிவிட்டு மேற் கொண்டு சொல்ல எதுவும் இல்லை என்றார். ஐந்து குறைகளை சொல்லச் சொன்னேன். கடகடவென பத்து சொல்லிவிட்டுக் கண் கீழே சென்றுவிட்டது.

மற்றவருக்கு உதவி செய்ததை விவரிக்கச் சொன்னேன். பல வர்ணனைகள் குவிந்தது. கூடவே, மிச்சம் வைத்த நல்ல குணங்களை விவரிக்கச் சொன்னேன், எட்டு வந்தது!

இதை ஒட்டி, தினம் தன்னைப்பற்றி ஒரு நல்ல தகவல் தனக்குத்தானே கொடுத்து, அதைக் குறித்துக் கொள்ள வேண்டும் என்ற ஹோம் வர்க் ஆரம்பமானது. இது வரையில் பயம், தயக்கம், என்ற வட்டத்திற்குள் தன்னைப்பற்றிய தாழ்வான கருத்துடன் கிருஷ்ணாவின் வாழ்க்கை நிலவியது. நாமே, நம்மை தாழ்த்திப் பேசி, உதாசீனப்படுத்திக்கொண்டு இருந்தால், மற்றவரும் அதையே செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதற்கும், நாமே நம்மைப்பற்றிக் கணிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. கிருஷ்ணா மாற்றி யோசித்து, செயல்படவே இதைச் செய்தேன்.

சில வாரங்களுக்குப் பிறகு, தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ளப் பலவிதமான ரிலாக்ஸேஷன் முறைகளைப் பயிலச் செய்தேன். முதலில் வரும்போது, கிருஷ்ணா, கைகளைப் பிசைந்து, தொள தொளவென்று உடைகள் அணிந்து வருவார். இப்பொழுது, தலையை வாரி, நன்றாக இஸ்திரி  பண்ணிய உடைகளாக மாறத்தொடங்கின.

தனிமை கிருஷ்ணாவின் நண்பனும், எதிரியும். தனிமையில் நன்றாகக் கவனம் செலுத்திப் பழக்கிக் கொள்ள முடிந்தது. ஆனால், மற்றவருடன் பேசுவதோ, சிரிப்பதோ தவறு என்ற கருத்து மனதில் பதிந்திருந்தது.

எல்லோருக்கும் கிருஷ்ணா நன்றாகப் படிப்பவர் என்று தெரியும். தன்னம்பிக்கை வளர இதையே பயன்படுத்தினேன். கிருஷ்ணா தன் வகுப்பிலோ, ஹாஸ்டலிலோ படிப்பில் திண்டாடிக்கொண்டு இருப்பவருக்குப் பாடம் விளக்குவது என்று ஆரம்பித்தார். அது தீப்பொறிபோல் பரவி, பலர் சந்தேகங்களைக் கேட்க வந்தார்கள்.

மற்றவர்களைப் பார்த்துப் பேச, கிருஷ்ணா பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவில் சனிக்கிழமைகளில் சில மணி நேரம் வாலன்டியராக உதவி செய்ய ஆரம்பித்தார். ஈடுபாட்டுடன் உதவி செய்ய, கண்களைப் பார்க்க, தானாகப் பார்த்துப் பேசும் பழக்கம் ஏற்பட்டது. பார்ப்பதால் நன்மை கூடுவதை உணர்ந்தார். புதிதாகச் செய்ய ஆரம்பிப்பது, ஒன்று முன்பின் தெரியாதவர்களுடனோ, அல்லது மிக நெருங்கியவர்களுடனோ, கொஞ்சம் ஈஸி.

சில வாரங்கள் போக, கிருஷ்ணாவிடம் புது மலர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. அவர் அம்மாவை அழைத்தேன். வேலையில் கிடைத்த பத்து நாட்கள் லீவில் அவர்களுடன் ஸெஷன் தொடங்கினேன். புதுப் பொலிவுடன் ஊர் திரும்பினார்.

மனோ பலம் வளர, கிருஷ்ணாவை விளையாடப் பரிந்துரைத்தேன். அவர்கள் ஹாஸ்டலில் செஸ் (Chess), பேட்மின்டன் (Badminton) பிரபலம். இரண்டும் விளையாடத் தொடங்கினார்.

படிப்பு முடித்துவிட்டு அம்மா, தங்கையுடன் இருக்கப் பிரியப்பட்டு வேலையில் சேர்ந்தார். குடும்பத்தைப்பற்றிய அக்கறை என்றும் கிருஷ்ணாவிடம் இருந்தது.

இரண்டு வருடத்திற்குப் பின், கிருஷ்ணா ஒரு பிரசித்திபெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழத்தில் சேர்ந்து, ஸ்காலர்ஷிப்பில் படித்து, நல்ல பெயர் எடுத்து அங்கேயே பொறுப்புள்ள பெரிய பதவியில் அமர்ந்தார். தாய்நாடு வரும்பொழுதெல்லாம் எங்களைப் பார்ப்பது வழக்கமானது.

ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் –   (8) – புலியூர் அனந்து

Image result for veterinary hospital in tamilnadu village buffalo

ஏழை மனதை மாளிகையாக்கி

இரவும் பகலும் காவியம் பாடு

நாளை பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

 

வரதராஜன் சார்தான் அறிவிக்கப்படாத தலைவர் என்றாலும் மகேந்திரன் சாரும் எங்களுக்கு ஒரு உந்துதல் என்றுதான் சொல்லவேண்டும். எப்போதும் ஒரு புன்னகையுடன்தான் இருப்பார். யாரையும் கோபித்தோ கடிந்துகொண்டோ நான் பார்த்ததில்லை. பொதுவாக தமாஷ், கிண்டல் கேலி என்று வரும்போது ஒரு புன்னகைதான் அவர் பங்களிப்பாக இருக்கும். ஒவ்வொரு விவாதத்திலும் அவரது கருத்து மற்றவர்களிடமிருந்து சற்று விலகியே இருக்கும். ஒரு அரசியல் கட்சி இவ்வளவு செலவு செய்து பந்தலும் மற்ற அலங்காரங்களும் செய்வது வேஸ்ட் என்று ஒருமுறை பேச்சு வந்தது. மகேந்திரன் மட்டும் “போகட்டும் சார், பந்தல்காரரும் அவரது தொழிலாளர்களும் பிழைச்சுட்டுப் போகட்டுமே…” என்றார்.

“கலப்பற்ற வரம் என்று ஏதும் இல்லை என்பார்கள். அப்படியானால் கலப்பற்ற சாபம் எப்படி இருக்கமுடியும்?” என்பதுதான் அவரது அடிப்படை வாதம். மற்றவர்களிடமிருந்து தான் எப்போதும் வித்தியாசமாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ என்றும் தோன்றும்.

அதற்காக எல்லா விஷயங்களிலும் மாற்றாகத்தான் பேசுவார் என்றில்லை. மௌனமாக இருந்துவிடுவார். அவர் மௌனமாக இருக்கிறார் என்றால் அவர் கருத்தை ஆதரிக்கிறார் என்று கொள்ளவேண்டும். ‘மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி’ என்பதன் மொத்த உருவம் என்று வரதராஜன் சார் கிண்டல் செய்வார்.

முதல் முறை அவ்வாறு சொன்னபோது ஏகாம்பரம், “பாருங்க பாருங்க… இதற்குப் புன்னைகையோட மௌனம் சாதிக்கிறார் மகேந்திரன் சார். அப்படின்னா,  அவர் இத ஒப்புக்கொள்கிறார் எனத்தானே அர்த்தம்” என்றார். அதற்கும் ஒரு புன்னகையும் மௌனமும்தான் பதில்.

மகேந்திரன் சார் பெரும்பாலும் தனியாகத்தான் வசித்து வந்தார். அவர் குழந்தைகளும் மனைவியும் இவர் பெற்றோருடன் சுமார் 120 கி.மி தூரத்தில் ஒரு ஊரில் வசித்து வந்தார்கள். விடுமுறை சமயங்களில் குழந்தைகளும் மனைவியும் இங்கு வருவார்கள். பண்டிகை சமயங்களில் இவர் ஊருக்குப் போவார். எங்கள் குழுவிலேயே அதிகம் மட்டம் போடுவது இவர்தான். நியாயம்தானே?

இது தவிர அடிக்கடி வேறு உறவினர்களைப் பார்க்க பல்வேறு ஊர்களுக்கும் போகவேண்டி நேரிடும். மெல்ல மெல்ல ஒரு சங்கதி புரிந்தது. அவரது உறவினர் வட்டாரத்தில் இவர் சொல்லும் முடிவுகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது. அடிக்கடி போவது பஞ்யசாத்திற்காகவாம். இவர் முடித்து வைத்த பிரச்சினைகளைப்பற்றிக் கூட்டத்தில் விவரமாகச் சொல்வதெல்லாம் கிடையாது. பொதுவாக ஒரு திருமணப் பிரச்சினை என்றோ சொத்து விவகாரம் என்றோ சொல்லிவிடுவார். குழுவில் எவரும் மேற்கொண்டு கேள்வி கேட்டு “வம்பன்” என்று பெயர் வாங்கிக்கொள்ள விரும்புவதில்லை. வேறு ஏதேனும் பேச்சு வரும்போது   ‘இப்படித்தான் போனவருஷம் தூரத்து சொந்தத்தில ஒரு பிரச்சனை…’ என்று விஷயம் வெளியில் வரும்

கால்நடை உதவியாளர் என்பதால் இவரைத்தேடி சங்கத்திற்குக்கூட ஆட்கள் வருவார்கள். அருகில் உள்ள ஊர்களிலும், ஏன் எங்கள் ஊரில்கூட, இவரைப் போன்ற சில வைத்தியர்கள் இருந்தாலும் இவர் சற்றுத் திறமைசாலி என்று பெயர் பெற்றிருந்தார். வருபவர்கள் இவரை மாடு டாக்டர் என்றுதான் குறிப்பிடுவார்கள். உண்மையில் இவர் டிப்ளமா படித்த உதவியாளரேதவிர, டிகிரி வாங்கிய டாக்டர் இல்லை. இதனைச் சொல்லிச்சொல்லி அலுத்துப்போய் எப்படியோ சொல்லிக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார் மகேந்திரன்.

12 கி.மி தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இவரது கால்நடை மையம். ஒரு டாக்டர் பொறுப்பில் உள்ள மையங்களை ஆஸ்பத்திரி என்றும் இவர் போன்ற உதவியாளர் பொறுப்பில் இருந்தால் அதனை மையம் என்றும் சொல்வார்களாம். ஆனால் ஊர்க்காரர்களுக்கு இரண்டுமே ‘மாட்டாஸ்பத்திரி’தான்.

“நாங்களும் குழந்தை மருத்துவர்களும் பல சமாசாரங்களில் ஒன்றுதான். நோயாளிக்கு என்ன என்பதைக் கூடவந்தவங்கதான் சொல்லணும். சீக்கிரம் சரியாகுதோ இல்லையோ, கூடவந்தவருக்கு நம்பிக்கை ஏற்பட்டால்தான் நமக்கு நல்ல பிராக்டீஸ்”

மகேந்திரன் சார் தனது ஊர்ப்பக்கம் மாற்றலுக்கு விண்ணப்பம் கொடுத்தபடியே இருப்பார். என்ன காரணமோ, அது தாமதமாகிக்கொண்டே வந்தது. வரதராஜன் ஒருமுறை தனக்குத் தெரிந்த யார் மூலமாகவாவது முயற்சி செய்யட்டுமா என்று கேட்டபோது, மகேந்திரன் ‘வரும்போது வரட்டும்’ என்று சொல்லிவிட்டார்.

ஒரு தூரத்து உறவினர் வீட்டில் ஒரு விசேஷம். பெரியவர்கள் கலந்துகொள்தற்கு ஏதோ இடைஞ்சல். என்னைப் போய்வருமாறு சொல்லிவிட்டார்கள். முதல்நாள் மதியம் சென்று மறுநாள் மதியம்தான் திரும்ப முடியும் அந்த ஊர் மகேந்திரன் சார் மையம் இருக்கும் ஊரின் பக்கத்தில்தான். சரி, காலாற நடப்போமே என்று வயல் வெளி என்று சுற்றினேன். யாரோ ‘சார், சார்’ என்று கூப்பிட்டது காதில் விழுந்தாலும் நம்மை யார் ‘சார்’ என்று கூப்பிடப்போகிறார்கள் என்று நான் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். தொடர்ந்து என் பெயருடன் சார் என்று கூப்பிட்டதும் சற்று சுதாரித்துத் திரும்பினால் … மகேந்திரன் சார்.

எங்கோ ஒரு எருமை மாட்டிற்கு வைத்தியம் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். இரண்டு மூன்று நாட்களாக அவர் வேலை பார்க்கும் ஊர் கோவில் விசேஷம் என்பதால் அந்த ஊரிலேயே தங்கியிருந்தார். மேலும் நான் இங்கு வருவது முதல்நாள்தான் தீர்மானமாயிற்று. எனவே நான் அங்கு வருவேன் என்று அவருக்குத் தெரியாது. மறுநாள்தான் கிளம்பவேண்டும் என்பதால் இன்று அவருடனேயே தங்கிவிட்டுக் காலையில் விசேஷத்திற்குப் போகலாமே என்று சொன்னார்.

அவர் தங்குவதற்காகத் தற்காலிகமாக ஒரு வீடு இருந்தது. ஒரு சிறு ஹோட்டலில் இரவு உணவு முடித்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். என் குடும்பம்பற்றியெல்லாம் விசாரித்தார். பேச்சு எப்படியோ அவரது சொந்த சமாச்சாரங்களுக்குத் திரும்பியது.

மகேந்திரன் குடும்பம் சில தலைமுறைகளுக்குமுன் அவர் ஊரிலேயே பணமும் செல்வாக்கும் உள்ள குடும்பமாக இருந்ததாம்.  இவர் தாத்தா காலத்தில் ஏதோ உடல்நலக் குறைவு காரணமாக வியாபாரம் கவனிக்க ஆளின்றியும், மருத்துவச் செலவுகளாலும் குடும்பத்திற்குச் சிரமதசை தொடங்கியது. மற்ற பங்காளிக் குடும்பங்களைவிடப் பொருளாதார ரீதியில் பின்தங்கிவிட்டர்கள்.

மரியாதை மிகுந்த குடும்பப் பின்னணி என்பதால் இவர்களுக்குக் கொடுத்துவந்த மரியாதை மதிப்புகளில் எந்தக் குறையும் வைக்கவில்லை மற்றவர்கள். ஆனால், அவர்கள் காட்டும் அதிகப்படி சலுகைகள் இவருக்குப் பெரும் மனச் சங்கடம் விளைவித்ததாம்.

உழைத்துப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவமோ, கால்நடை மருத்துவ பட்டப்படிப்போ படிக்க இயலாமல், டிப்ளமா கோர்ஸ் படித்து இந்த வேலையில் சேர்ந்திருக்கிறார்.

பெரிய குடும்பம் என்பதால், பெரும்பாலும் உறவுகளுக்குள் திருமண பந்தம் ஏற்படுவதுதான் அதிகம். அப்படி நேராமல்  ஏதேனும் திருமணம் நடந்தால், அசலில் சம்பந்தம் செய்வதாகப் பேசிக்கொள்வார்கள்.

இவரது முறைப்பெண்களில் பலருக்குச் சொந்தத்தில் முடிவாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் இவருக்கு மாமன் முறையுள்ள ஒருவர் சில பெரியவர்களுடன் வந்து இவருக்குத் தன் பெண்ணை நிச்சயம் செய்யலாமா என்று கேட்க வந்திருந்தார்.

பொருளாதார ரீதியில் பலபடிகள் மேலிருக்கும் அவர், தன்னொத்த பணக்காரார்களை விட்டுவிட்டு இவர்கள் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தது எப்படி என்று அம்மா அப்பா இருவருக்கும் முதலில் ஆச்சரியம்.

தங்களுக்கு விருப்பம்தான் என்றும் மகனைக் கேட்டுவிட்டுச் சொல்லி அனுப்புவதாகச் சொன்னார்கள். எல்லாம் நன்றாக முடிந்து திருமணமும் நடந்த பிறகுதான் ஒரு ரகசியம் வெளிப்பட்டது.

பல நாட்களாகப் பல சந்தர்ப்பங்களில் மகேந்திரனைக் கவனித்துவந்த மகேந்திரனின் மனைவிதான் தன் தோழி மூலமாகப் பெற்றோருக்குச் சொல்லிச் சம்பந்தம் பேசவைத்தார்களாம்.

இது மகேந்திரனைப் பலவாறு யோசிக்க வைத்தது. பணம் என்பதே அந்தஸ்திற்கும் மரியாதைக்கும் அடிப்படை என்று கருதுகிற லௌகீக உலகில் நாம் பணமும் சேர்க்கவேண்டும், மரியாதையும் சம்பாதிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறார். தெளிவான நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள இது முக்கிய படியாக இருந்திருக்கிறது.

வரதராஜன் சாருடன் ஒருநாள் அவர் வீட்டில் உடனிருந்து அவர் வேதனைகள் வருத்தங்களைக் காதில் போட்டுக்கொண்டது நினைவிற்கு வந்தது. அவர் சொன்னது சோகக் கதை. இவர் சொல்வது தத்துவக் கதை.  இருவரும் மனம் திறந்து பேசியதற்கு ஒரே காரணம் … நான் ஒரு ஒன்வே டிராபிக்.

நாளடைவில்,  திருடன் தனது கத்தி, கடப்பாறை ஆகியவற்றைச் சாத்திவைக்கத் தேடும் மூலையாக நான் ஆகிவிடுவேனோ என்று தோன்றியது

 

கொஞ்சு தமிழ்க் குறவஞ்சி            – தில்லை வேந்தன்                

 
 
வள்ளுவருடைய ‘ சொல்வன்மை’ அதிகாரத்தைப் படிக்காமலேயே அதற்கு இலக்கணமாகத் திகழ்பவர்கள் உண்டு.
இவர்களில் பலர் அடிப்படைக் கல்வியறிவு  இல்லாதவர்கள் என்ற உண்மை வியப்பினை அளிக்கலாம் .
உள்ளக் கருத்தைப் பிறர் உணரும் வண்ணம் உரைப்பதும் ,வாய்த்த வாய்த்திறமையால் மற்றவரை வசப்படுத்திக்  கொள்வதும் நம் நாட்டுப் பாமர மக்களுக்கு வழிவழியாக வந்த வரப்பிரசாதமாகும்
 
.
ஆரூடம் சொல்பவர்கள், கிளி ஜோசியம் பார்ப்பவர்கள், குறி கூறுபவர்கள் போன்றவர்களின் நாவன்மையை நாம்
நாள்தோறும் காண்பதில்லையா ?
 
நம்மை அறியாமலேயே நம்மைப் பற்றிய தகவல்களை நம்மிடமிருந்தே கறக்கும் திறமை கல்வியினால் வருவதல்ல.
 
 
“ஐயாவுக்கு இப்போது கொஞ்ச நாளாக நேரம் சரியில்லை” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி ஆரம்பித்து நம்
முகத்தைப் பார்ப்பார்கள். ( நேரம் சரியாக இருந்தால் நாம் ஏன் அவர்களிடம் போக வேண்டும் ? ) நாம் வேறு வழியல்லாமல்
தலையை ஆட்ட , அவர்கள் தங்கள் ஆட்டத்தைத் தொடர்வார்கள். இது, சாலை ஓரங்களிலும் , மரங்களின் நிழல்களிலும்
நித்தம் நடைபெறும் நிகழ்ச்சியாகும்  .பாரதியும், பாலத்து ஜோசியனைப்பற்றிப் பாடியதைப் படித்திருப்பீர்கள்.
 
இந்த நாவன்மையையும், சொல்லாடும் வல்லமையையும் வைத்துத் தமிழில் ஒரு சிற்றிலக்கியமே செழித்துள்ளது.
‘குறவஞ்சி’ என்றும், ‘குறத்திப் பாட்டு’ என்றும், ‘குறம்’ என்றும் இதனைக் கூறுவதுண்டு.
 
பெரும் புலவரான குமரகுருபரர் இயற்றியுள்ள “மதுரை மீனாட்சியம்மை குறம் “மிக மிக இனிமை பயப்பதாகும்
.அங்கையற்கண்ணி அம்மை,மதுரையின் சொக்கேசரைச் சேர்வாள் என்பதைக் குறத்தி குறி கூறுவதே இச்சிறிய
நூலின் மையக் கருத்து .‘அட இவ்வளவுதானா ?” என்று நினைக்க வேண்டாம் . ஒரு முறை படித்தால் மீண்டும்
மீண்டும் படிக்கத் தூண்டும் மிக அருமையான நூல்..சொல்லழகு, பொருளழகு,சந்த இனிமை.
கற்பனை வளம் ஆகியவை விரவிக் கிடக்கும் வெல்லத் தமிழ் நூல் இது.
 
 
குறத்தி, தான் பொதிய மலையைச் சேர்ந்தவள் என்ற பூர்விகப் பெருமையுடன் ஆரம்பிப்பாள்.
அம்மலை, வானத்து நிலவைத் தன் தலையில் சூடிக் கொள்ளும் அளவுக்கு உயரமானது. அங்குத் தென்றல் தவழ்ந்து
விளையாடும்; மழை மேகங்கள் அம்மலையைச் சூழ்ந்து தழுவிக் கொண்டிருக்கும் .தமிழ் முனிவன் அகத்தியன் வாழும்
மலை அது. .மலை அருவி மீனாட்சி அம்மையின் திருவருள் போன்று பாய்ந்து ,பெருகும் .அம்மலையின் மற்றொரு
சிறப்பு என்ன தெரியுமா ? நாவன்மை மிக்க நம் குறத்தியின் பூர்விகம் என்பதே அது !
இதைக் குறத்தி கூறும் அழகைப் பாருங்கள்:
 
“திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் சூடுமலை தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மைதிரு அருள்சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்குமலை பொதியமலை என்மலையே !”
 
இதைக் குறத்தி இனிய இசையுடன் பாடுவதையும் , ,அதற்கேற்ப ஆடுவதையும் கற்பனைக் கண் கொண்டு பாருங்கள்.
பார்த்துப் பரவசம் அடையுங்கள் !
 
இந்தப் பாடலையும் படியுங்கள் குறவஞ்சியின் அழகு புரியும்!

 

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

   மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்

   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்

   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்

   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே

தலையங்கம் – பிப்ரவரி 2018

Related image

ஆண்டாள்  – வைரமுத்து

தமிழ்த்தாய் – விஜயேந்திரர்

 

வெறும் வாயை மெல்லும்  முகநூல் நண்பர்களுக்கு இதெல்லாம்

வெல்லம் போட்ட  அவல்.

யார் எப்பொழுது எங்கே இடறி விழுகிறார்கள் என்று பார்த்து அவர்மீது

சேற்றை வாரி இறைக்கத் தயாராய் இருக்கும் இன்னொரு  கூட்டம்.

 

பத்மாவத் திரைப்படம் ரஜபுத்திரர்களுக்கு மன உணர்வைத் துன்புறுத்துகிறது.

மெர்சல் படத்தில் ஜி‌ எஸ் டி யைப்பற்றிப் பேசியது ஆளும் கட்சிக்குப் பொறுக்கவில்லை.

விஸ்வரூபம் முஸ்லிம் சகோதரர்கள் உணர்வைப் பாதிக்கிறது.

கமலஹாசன் வாயைத் திறந்தாலே அது முத்தத்திலோ சர்ச்கையிலோதான் முடியும்.

இலக்கியத்தில் பெருமாள் முருகன் மதத்தை அவமதித்து விட்டார்

நாட்டுபுறப்பாடல்கள் பாடிய கோவன் கைதுசெய்யப்பட்டார்

சமீபத்தில் கண்ணடித்த நடிகை நடித்த படத்தின் பாடல் வரிகள் ஒரு இனத்தை அவமதிக்கிறது

ஜல்லிக்கட்டின் தடை தமிழ் உணர்வை அவமதிக்கிறது.

பெண்களைப்பற்றி ஒரு கருத்து சொன்னால் பெண்ணீயத்துக்கு எதிரி!

தலித் நண்பர்களைப் பற்றி தவறான கருத்து சொல்வது சட்ட விரோதம்

டாக்டர் பற்றிஜோக் எழுதினால் அவர் வியாதிக்கு மருந்தே கிடையாது

அரசியல்வாதியைப்பற்றிப் பேசினால் தேசத்துரோக  வழக்கு

நீதி மன்ற நிகழ்வுகளைப்பற்றிப் பேசவே கூடாது!

 

இவை அனைத்தும் நமக்கு மற்றவர் மீது இருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது!

 

நாம் ஏன் இவை எல்லாவற்றையும் கடந்து நிற்கக்கூடாது?

 

” நீ உன் குடைத் தடியைச் சுற்றும் உரிமை என் மூக்கு நுனியுடன்  முடிந்து விடுகிறது “

( Your liberty stops where my nose starts) என்று சொல்வார்களே அது மாதிரி இருப்போம்.

குடைத்தடியைச் சுற்றுபவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மூக்குள்ள நபர்களும்

அதற்காக  மூக்கை நீட்டவும்  வேண்டாம்.

குறிப்பாக எல்லாவற்றிற்கும் கொம்பு சீவும் பழக்கத்தைக் கைவிடவேண்டும்!

மனித நேயம் வளர அது ஒன்று போதும் !

 

 

 

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

Image result for உ வே சா

”தமிழ்த் தாத்தா” உ.வே.சா. – (1855 – 1942) சில குறிப்புக்கள் !

 

குவிகம் இலக்கிய வாசல் மற்றும் இலக்கிய சிந்தனை நடத்திய கூட்டத்தில் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்பற்றி உரையாற்றினார். ஒரு மணி நேரத்திற்குள், அழகாக, சுவாரஸ்யமான தகவல்களை தனக்கே உரிய நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார் – அவரது நினைவாற்றல் வியக்கவைத்தது!

உ.வே.சாமிநாத அய்யர், உத்தமதானபுரம் அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் வெங்கட்ராமன். (பின்னர் சாமிநாதன் என பெயர் மாற்றியவர் குருநாதர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை).

குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கும், சாமிநாத அய்யருக்கும் இடையே இருந்த குரு – சிஷ்ய உறவு மிகவும் வியக்கத்தக்கது.

19 ஆம் நூற்றாண்டின் சங்க இலக்கியப் பதிப்புகளுக்கு முக்கியக் காரணமானவர் திரு உ.வே சா அவர்கள்.- இவரது பதிப்புகள் “ஐயர் பதிப்பு” எனச் சிறப்புடன் குறிப்பிடப்படுகின்றன.

இவரது ‘என் சரித்திரம்’ புத்தகம், சுயசரிதைகளில் சிறப்பானது – இவர் ஏடுகளைத் தேடுவதற்கும், பிரதிகள் எடுப்பதற்கும் எடுத்துக்கொண்ட சிரமங்கள், தமிழ் வித்வான் பட்டம் பெற்றது, மற்றும் அன்றைய கல்வி முறை, பதிப்புத் துறையில் இருந்த தடங்கல்கள்  என அந்தக்கால சூழல்களை மிகச் சிறப்பாகச் சொல்லிச் செல்கிறது அவரது சரித்திரம்! அவருக்குப் பிறகு, அவரது வாழ்க்கை வரலாற்றில் விடுபட்டவற்றை – அவர் இறக்கும் வரையிலான நிகழ்வுகளை – திரு கி.வா ஜ அவர்கள், “என் ஆசிரியப்பிரான்” என்ற நூலில் தொடர்கிறார் என்பது பலருக்குச் செய்தியாக இருக்கக்கூடும்.

உ.வே.சா. நல்ல இசை ஞானம் உடையவர். கோபாலகிருஷ்ண பாரதியிடம் சில காலம் இசை பயின்றார் – இசையிருந்தால், இலக்கிய இலக்கணத்தில் புத்தி செல்லாது என குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னதால், இசையை விட்டார். ஆனாலும், மிகவும் விருப்பமுடன் செய்யுட்களை ராகத்துடன் பாடி, மாணவர்களுக்கு வகுப்பெடுப்பார்!

மீ. சு. பிள்ளையவர்களின் மாணவர் திரு தியாகராஜச் செட்டியார் ஓய்வு பெறவே, அந்தப் பணியிடத்துக்கு சாமிநாத அய்யர் அவர்களைப் பரிந்துரைக்கிறார் – அவரது முதல் வேலைக்கான சம்பளம் மாதம் ஐந்து ரூபாய்!

சங்க நூல்கள் பதிப்பு, என் சரிதம் இவை தவிர, திரு உ வே சா அவர்கள் எழுதிய கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. அந்தக் காலத்தில் நிலவிய மனித நேயம், நேர்மை, இயற்கைச் சூழல் என மிகத் தெள்ளிய தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளக் கூடியவாறு எழுதியிருப்பார். சுதேசமித்திரன், கலைமகள், தினமணி, ஆனந்த விகடன், தாருல் இஸ்லாம், தென்னிந்திய ‘வர்தமானி’ போன்ற பத்திரிகைகளில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. காலமாற்றத்திற்கேற்ப, எளிமையான தமிழில் உள்ள கட்டுரைகளைப் படிக்கும்போது, உ.வே சா அவர்களின் தமிழ்ப் புலமை நம்மை வியக்க வைக்கிறது.

அவர் தனது குருநாதருடைய வாழ்க்கையை, ’ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்னும் உரைநடை நூலாக – இரண்டு பகுதிகளாக, மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.  இது தவிர, தியாகராஜச் செட்டியார், கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகா வைத்தியநாதய்யர் ஆகியோரது வரலாறுகளையும் எழுதியுள்ளார்.

சாஸ்திரீய சங்கீத விரிவான பதிவுகள், தல புராணங்கள், செவி வழிக் கதைகள், கட்டுரைகள் என இவரது எழுத்துலகம் பரந்துபட்டது.

சங்கராபரணம் நரசயர் கதை:

தஞ்சாவூரை ஆண்ட மஹாராஷ்டிர மன்னர் ஒருவர், மிகச் சிறப்பாக ‘சங்கராபரணம்’ பாடிய நரசயர் அவர்களை மிகவும் புகழ்ந்து, பரிசுகள் கொடுத்து ‘சங்கராபரணம் நரசயர்’ என்ற பட்டமும் கொடுத்துக் கெளரவித்தார்.

ஒரு சமயம் நரசயருக்கு எதிர்பாராத செலவு – அதனால் கடன் வாங்க கபிஸ்தலத்தில் இருந்த இராமபத்திர மூப்பனார் என்னும் செல்வந்தரை அணுகினார்., இசையில் மிகுந்த ஆர்வமும், ஞானமும் உடைய மூப்பனார், ‘கடனுக்கு அடகு வைக்க ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்க, “கண்ணால் காண முடியாது, காதால் கேட்கலாம். காலத்திற்கும் அழியாதது, இன்பத்தைத் தருவது – என் சங்கராபரணம் ராகமே – அதனை அடகு வைக்கிறேன் – தங்கள் பொன்னைத் திருப்பித் தரும் வரையில், நான் அதை எங்கும் பாடுவதில்லை என்று உறுதி கூறுகிறேன்” என்று சொல்லிக் கடன் பத்திரம் எழுதிக் கொடுக்கிறார். சொன்னவாறே எங்கும் சங்கராபரணம் ராகத்தைப் பாடாமலேயே  இருக்கிறார்.

கும்பகோணத்தின் பெரும் செல்வந்தர் அப்புராயர் வீட்டுக் கல்யாணத்தில், எல்லோரும் விரும்பும் சங்கராபரண ராகத்தைப் பாட மறுக்கிறார் நரசயர். மூப்பனாரிடம் சங்கராபரணத்தை அடகு வைத்த விபரத்தையும் கூறி, கடனைத் திருப்பித் தந்தால்தான் அந்த ராகத்தைப் பாடமுடியும் என்பதையும் விளக்குகிறார் நரசயர். உடனே ராயர், பொன்னையும், அதற்கான வட்டியையும் செலுத்தி, பத்திரத்தை மீட்டு வர, ஒருவரை அனுப்புகிறார்.

இராமபத்திர மூப்பனார் மகிழ்ந்து, அந்தத் தொகையோடு, மேலும் ஒரு தொகையையும் எடுத்துக்கொண்டு கும்பகோணம் வருகிறார். “ஐயர் அவர்கள் கடனாகக் கேட்டதால் எனக்கு வருத்தம் உண்டாயிற்று. அவர்களுக்குப் பயன்படுத்தாமல் வேறு என்ன செய்வதற்கு நான் செல்வம் படைத்தேன்? விளையாட்டாய் அடகு வைத்தவர், இன்று வரையில் அந்த ராகத்தை எங்கும் பாடவில்லை – அது அவரது உயர்ந்த குணத்தையும், உண்மையையும் காட்டுகிறது” என்று கூறி, மனம் மகிழ்ந்து, முழுத் தொகையைத் திருப்பியதோடல்லாமல், சங்கராபரணத்தை அத்தனை காலம் சிறை செய்ததற்கு அபராதமாக ஒரு தொகையையும் சேர்த்துக் கொடுக்கிறார்.

இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் உ.வே.சா அவர்களின் கட்டுரைகளும், சொல்லோவியங்களும் படிக்கப் படிக்கத் திகட்டாதவை!

மேலும் “செண்டு” என்ற சொல்லுக்குப் பொருளை ஒரு கோயில் பூசாரியிடமிருந்து தெரிந்து கொள்கிறார். ‘ஆட்டிடையன் வெட்டு’ என்பதன் பொருளை கிராமத்தில் ஆடு மேய்க்கும் கிழவனார் ஒருவரிடம் இருந்து தெரிந்து கொள்கிறார்! தமிழைக் கற்றுக் கொள்வதில் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் பார்க்கவில்லை தமிழ்த் தாத்தா அவர்கள்!

 

”அன்னியர்கள், தமிழ்ச்செவ்வி அறியாதார்

இன்று எம்மை ஆள்வோரேனும்,

பன்னியசீர் மஹாமஹோ பாத்தியா

யப்பதவி பரிவின் ஈந்து,

பொன்நிலவு குடந்தைநகர்ச் சாமிநா

தன்தனக்குப் புகழ் செய்வாரேல்,

முன்இவன் அப்பாண்டியர்நாள் இருந்திருப்பின்

இவன் பெருமை மொழியல்ஆமோ?

என்கிறார் மகாகவி பாரதி!

 

”சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்புந் தமிழ், வளர்ப்புந் தமிழ்; வாழ்வுந் தமிழ். அவர் மனமொழி மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ்; தமிழ் அவர்.”  –  திரு.வி.க.

 

(ஆதாரம்: 1.முள்ளால் எழுதிய ஓலை – செவிவழிக்கதைக் கட்டுரைகள் – உ.வே.சாமிநாதையர் – காலச்சுவடு பதிப்பகம்.

  1. நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் – டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை -90).