டாக்டர் அழைப்பில் சுமதியைப் பார்க்க வந்தேன். இளம் வயதானவள். ஒரு அமைதியற்ற நிலை, தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தாள். சாயம் போன ஜீன்ஸ், கச்சிதமான சட்டை, அடர்த்தியான கூந்தல் பாதி முகத்தை மறைத்திருந்தது.
அவளுடன் வந்தவள், “நான் இவள் அம்மா” என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, “எப்படி இருக்கா, பாருங்க” என்று விசும்பினாள். சுமதி அவள் பக்கம் திரும்ப, கூந்தல் விலகியது. வீங்கிய கன்னம், சிவந்த கண்கள், நெற்றியில் காயமும் தெரிந்தது. நான் பார்த்துவிட்டதைக் கவனித்ததும், சுமதி அழத் தொடங்கினாள். அம்மா கன்றிப் போயிருந்த காயங்களைக் காட்டி, “காதலித்துக் கல்யாணம் ஆச்சு. இப்போ, மாப்பிள்ளையின் சந்தேகத்தால் அடிபட்டு எங்க வீட்டுக்கு வந்திருக்கா.” என்றாள்.
சுமதிக்கு MNC வங்கியில் டீம் லீடராக வேலை. 27 வயது. நவீன தோற்றம், உடல்சாரக் கொடுமையின் (Physical Abuse) பல அடையாளங்கள். அவளுடைய முகத்தில் துயரம், சஞ்சலம். டாக்டர், மருத்துவ ரீதியாக பார்த்துக் கொள்ள, அவளின் ஆபத்து காரணிகளின் (ரிஸ்க்) மதிப்பீட்டை ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்ற முறையில் தொடங்கினேன்.
சுமதி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அம்மா இல்லத்தரசி, அப்பா ஸேல்ஸ் மேனேஜர், தம்பி நவீனுடன் சொந்த வீட்டில் வாழ்ந்தாள். பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்தார்கள். பொட்டு வைத்து, பாவாடை தாவணி அணிய வேண்டும். காலை-மாலை சாமி கும்பிடுவது, இதற்காகவே ஆறு மணிக்குள் இருவரும் வீடு திரும்ப வேண்டும். தாமதித்தால், வீட்டிற்கு வெளியே அரைமணி நேரம் நின்று, இரவு அரை சாப்பாடு, பாத்திரம் தேய்க்க வேண்டும். இருவரும் படிப்பில் கெட்டி. தெருவில் எடுத்துக்காட்டாக இருந்தார்கள், எல்லோரும் புகழ்ந்தார்கள்!
படிப்புதான் பெற்றோரின் கவனம். பாட்டு சொல்லித் தந்தார்கள், ஆனால் வெளியே எங்கும் பாடக்கூடாது. ஸ்கூலில் இருக்கும்வரை இவை பெரிதாகத் தெரியவில்லை. காலேஜ் சேர்ந்ததும் வித்தியாசங்களை சுமதி கவனிக்க ஆரம்பித்துத் தத்தளித்தாள். தன் ஆதங்கத்தைப் படிப்பின்மீது காட்டினாள். பெற்றோருக்கு மார்க் முக்கியம் என்பதால், படிக்காமல் மார்க்கைத் தவறவிட்டாள். அவள் பீ.ஈ. முடித்தவுடன் வேலையில் சேரச்சொன்னார்கள், அதை நிராகரித்து விட்டு, எம்.பீ.ஏ. சேர்ந்தாள். மற்ற விஷயத்தில் பெற்றோர் கண்டிப்பாக இருந்தாலும் படிப்பு என்பதால் சுமதியின் விருப்பத்திற்கு விட்டுக்கொடுத்தார்கள்.
எம்.பீ.ஏ. இரண்டாம் ஆண்டில் எதேச்சையாக அவளுடைய சீனியர், சுரேஷை சந்தித்தாள். கால் பந்து வீரர், இப்பொழுது மேனேஜர் வேலை. நாளடைவில் பழகத் தொடங்கினாள். கருணை உள்ளவனாக, சுதந்திர மனப்பான்மை உடையவனாகத் தோன்றினான். கட்டுடல் கொண்ட அழகன். பல பெண்கள் பேச்சுக் கொடுக்கப் பார்த்தாலும், அவர்களை தட்டிக் கழிப்பதைக் கவனித்தாள். காதல் வளர, சுமதி பூரித்துப் போனாள். நான்கு மாதங்கள் இந்த உல்லாசத்தில் போனது.
அதற்குப்பின், சுமதி ஏதேனும் ஆணுடன் பேசுகையில் சுரேஷ் அங்கு இருந்தால், முறைத்துப் பார்ப்பான். தன்னை எந்த அளவிற்கு நேசித்தால் இப்படிச் செய்கிறான் என்று எடுத்துக்கொண்டாள். இதன் தொடர்ச்சியாக, தோழிகளுடன் அவள் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. தோழிகள் அவளை எச்சரிக்கை செய்ய முயன்றார்கள். சுமதியைப் பொறுத்தவரை, ‘காதலிப்பவருக்காக இதைக் கூட செய்யா விட்டால் எப்படி?’ என்றே தோன்றியது. சுரேஷுடன் நேரம் கழிக்க வீட்டில் விதவிதமான பொய்களைச் சொன்னாள், வருத்தமும்படவில்லை.
இப்படி உறவுகளைச் சுருக்கி விடுவதே உடல்சார் கொடுமையின் ஆரம்பமாகும். பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் இதைப் புரிந்து கொள்ளப் பல மாதங்கள் ஆகலாம்.
சுமதி தன்னுடன் இல்லாத நேரங்களில், சுரேஷுக்கு அவள் தன்னை விட்டுச் சென்று விடுவாளோ என்ற எண்ணம் ஆட்கொள்ளும். தன்னை ஆசுவாசப்படுத்தவே குறுஞ்செய்தியில் அவள் எங்கே, யாருடன், என்ன பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று கேட்பான். இவளும் பதில் அனுப்புவாள். கொஞ்சம் தாமதித்தால் சுமதியை அழைத்துப் பேசுவான். சுமதி இதைத் தன்னை அரவணைப்பதாக எடுத்துக்கொண்டு தன் காதலன்மேல் கர்வம் கொண்டாள்!
தன் பிடியில் எப்போதும் இருக்கச் செய்வது, துரத்துவது, எமோஷனல் (உணர்ச்சிகளின்) கொடுமை சார்ந்ததாகும். இவர்கள், தன்னுடைய பதட்டத்தையும், அவநம்பிக்கையும் கையாளத் தெரியாததால் வருவதே. சுமதி போன்றவர்கள் இதைச் சுமந்து கொள்வார்கள்.
ஒரு நாள், சுமதி தன் கைப்பேசியை வீட்டில் மறந்துவிட்டு கடைக்குச் சென்றுவிட்டாள். திரும்பி வந்ததும் பார்த்தாள், சுரேஷ் 50 குறுஞ்செய்தி, 20 முறை அழைத்திருந்தான். அவள் அம்மா, சுரேஷ் பதட்டப்பட்டு தன்னை அழைத்ததைச் சொல்லி, அவனுக்குப் பரிந்து சுமதியைத் திட்டினாள். சுமதி உடனே சுரேஷை கூப்பிட்டு மன்னிப்புக் கேட்டாள். அவன் தாங்க முடியவில்லை என்றான். ஒரு வாரத்திற்கு அவளிடம் பேசவோ, பார்க்கவோ மறுத்தான்.
ஆதரவை மறுப்பது, அன்பைக் காட்டாமல் இருப்பது எல்லாம் ஸைக்கலாஜிகல் கொடுமையே. இவை, தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் விதம். வெளிப்படையாகத் தெரியாது.
ஒரு வாரத்திற்குப் பின், சுரேஷை நேரடியாகச் சந்தித்து சுமதி மன்னிப்புக் கேட்டாள். சுரேஷ் மிகச் சோகமாக இருந்தான். திரும்பத் திரும்ப “எப்படி ஈடு கட்ட போகிற? எப்படித் தவித்தேன்!” என்று சொல்லி, பளாரென்று கன்னத்தில் அறைந்தான். அவள் தோளை குலுக்கி “சாரீ” என்றான். “எந்த அளவுக்கு நான் காயப்படுத்தியிருக்கேன்? ” என்று நினைத்து சுமதி ஏற்றுக் கொண்டாள்.
இது எல்லை மீறுவதின் அடையாளமாகும். உடல் + உணர்ச்சி வசப்பட்ட கொடுமை: மற்றவர் முன் தாழ்த்துவது, தகாத முறையில் கோபம் காட்டுவது, பிறகு பாசமாக பேசுவது.
சுமதியின் வீட்டில் கல்யாணப் பேச்சு ஆரம்பமானது. வந்து தேடுவது, கைப்பேசியில் அவள் நலனைக் கேட்பதிலிருந்து சுரேஷைபற்றி அவள் பெற்றோருக்கு நல்ல அபிப்ராயம். தங்களுக்கும் மேலான பாசம் என்று எண்ணி ஒப்புக் கொண்டார்கள். சுரேஷ், “பணத்தைப்பற்றி பேசி ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்?” என்று சொல்லி வரதட்சிணை வாங்கவில்லை.
சுமதி சந்தோஷமாகக் கணவன் வீட்டிற்குச் சென்றாள். வீ.ஆர்.எஸ் பெற்ற மாமனார், இல்லத்தரசியான மாமியார், காலேஜ் படிக்கும் தங்கை. ஆரம்பத்தில் மிக இதமாகப் பொழுது போனது. பல சுதந்திரங்கள். ஸ்கர்ட், பான்ட்-ஷர்ட் அணிந்தாள். பாடவும் அனுமதித்தான்.
கல்யாணமாகி முதல் மாசச் சம்பளத்தில் தன் பெற்றோருக்கு இனிப்பு வாங்கி சுரேஷுடன் போய் கொடுக்க விரும்பினாள். சுரேஷை அழைத்தாள். சுரேஷ் “யாரைக் கேட்ட?”என்றான். மாமனார், “பிச்சைக்காரி போல வந்தே, இப்ப எங்க துட்டுல..” சொல்லி வாங்கினதைத் தூக்கி எறிந்தார். எல்லோரும் வெளியே சாப்பிடச் சென்றார்கள், சுமதியை வீட்டில் விட்டுவிட்டு. கேட்காமல் செய்ததின் விளைவு என்று சுமதி தன்னைத் தேற்றிக்கொண்டாள்.
அவள் அம்மா வீட்டிற்கு சுரேஷ் வாரம் ஒரு முறை போவதால் (வேலை இடம் பக்கம்) சுமதியைப் போகவேண்டாம் என்றான். அவன் மாப்பிள்ளை உபசாரம் வேண்டாம் என்றதால் அவர்களும் அப்படியே விட்டார்கள். திரும்பி வந்து சுமதியிடம் அவர்கள் கவனிக்காததைச் சொல்வான். நாளடைவில் சுமதிக்குத் தன் பெற்றோர் மீதான மரியாதை, பாசம் குறைந்தது. அவர்களைப் பார்க்க நேராததால் எதையும் யாரிடமும் கேட்கவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியவில்லை.
ஒரு நாள், சுமதி ஆடை அணியும்பொழுது, அவள் மாமனார் உள்ளே வந்தார். சுரேஷிடம் சொன்னதும், அவரை அடித்து விட்டான்.
சுமதி ஒரு முறை தாமதமாக வீடு திரும்பியபோது சுரேஷ் அவளைக் கொச்சையாகப் பேசி, அடிக்கப் போவதற்குக் கையை ஓங்கினான், அவன் அம்மா “டேய் அப்பா மாதிரி மிருகமாகாதே” என்று கூச்சல் இட்டதும், சுமதியைத் தன் பிடியிலிருந்து விட்டான். அவளை ஆறு மணிக்குள் வீடு வரச் சொன்னான். அம்மா வீட்டுக் கண்டிப்பை நினைத்து, சலித்துக் கொண்டாள்.
மற்றொரு நாள் 6 மணிக்குள் சுமதியால் வர முடியாதபோது சுரேஷ் அவளைச் சந்தேகித்து பல கேள்விகள் கேட்டான். வீட்டில் வேறு யாரும் இல்லை. அவன் நம்புவதாக இல்லை என்று அவளுக்குத் தோன்றியதும் பயந்தாள், மௌனமானாள் (அப்படியாவது அமைதி ஆவான் என்று நினைத்தாள்). சுரேஷ் கோபம் அதிகரிக்க, அவளைக் கீழே தள்ளி, பெல்ட்டால் அடித்தான், காலால் உதைத்தான். தாங்க முடியாமல் அம்மா வீட்டிற்கு வந்தாள். அங்கு அவள் அப்பா அவளைத் திட்டி, அடித்துவிட்டார். இதன் பிறகே எங்களைப் பார்க்க நேர்ந்தது.
இந்த மாதிரியான சூழ்நிலைகளில், காயம் அடைந்தவரின் கண்ணோட்டத்திலிருந்து அவர்களின் பிரச்சினைகள், சிக்கல்கள், சம்பவங்கள், இதற்கு முன் பட்ட காயம், குடும்பத்தினரைப்பற்றி விசாரிப்போம். இதிலிருந்து அவர்கள் தாக்குதலுக்கு ஆளானதை, அவர்களுடைய அச்சம், கோபம், சமாளிக்கும் திறன்கள், திக்கற்ற நிலை, குடும்பத்தினரின் பங்கேற்பு, ஒத்துழைப்பு, என்ற பல நுணுக்கங்களைப் புரிந்துகொள்வோம்.
இது, உடல்-உணர்ச்சி கொடுமைகள் சார்ந்ததே என்பதை அவளுக்குப் புரிய வைக்கவே அவள் கைகளின் ஒவ்வொரு வடுக்களை வைத்து, நிகழ்ந்ததை விவரிக்கச் சொன்னேன். நிகழ்வுகளை நினைவூட்ட, “ஏன் பொறுத்துக் கொள்ளவில்லை” என்று அவள் மனத்தில் இருந்த சஞ்சலம் நீங்கித் தெளிவு பெற, மெதுவாக தன் சுதந்திரம் சுருங்கியதை, உறவுகள் முறிந்ததைப் பார்க்க தைரியம் வந்தது.
ஆதங்கங்ளைக் கையாளும் முறைகளை ஆலோசித்தோம். சுமதிக்குத் தெளிவாயிற்று, அவள் சுரேஷை தேரந்தேடுத்ததே பெற்றோரின் கண்டிப்பு, வீட்டில் விதித்திருந்த சட்டங்களிலிருந்து விடுபடுவதற்கே என்று. சுரேஷ், கொடுத்த சுதந்திரத்தில் தன்னுடைய விருப்பப்படி ஆடை, அலங்காரம், பாட்டு் வாழ்வில் வந்ததால், சுரேஷ் மீது ஈர்ப்பு என்றாள்.
அம்மா வீட்டிற்கு வந்தபின், முதலில், கணவர் வீட்டிற்குப் போக பயம் என்றாள். அவன் அழைப்பிற்குப் பதில் பேசாமல் இருந்தாள். சுரேஷ் அவளை வீட்டில் சந்தித்து, கெஞ்சி மன்னிப்பு கேட்டுக் கொண்டான். அம்மா வீட்டில் அதே சட்டங்கள், கண்டிப்பு, உடைத் தடைகள் இருந்ததால் சுரேஷுடன் சென்றாள். எங்களை ஆலோசிக்கவில்லை, தானாகச் சிந்திக்கவில்லை. மூன்றாவது நாள் அடி வாங்கியதும், திரும்பி வந்தாள்.
தன் நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ளாததால் இப்படி இயங்க நேரிடும்.
சுமதி, சுரேஷுக்கு எடுத்துச் சொன்னதால், அவனும் எங்களைப் பார்க்க ஒப்புக் கொண்டான். தன்னுடைய மனநிலையைப்பற்றி விவரித்தான். தன் அப்பா அம்மாவை அடிப்பதைப் பார்த்து, இப்படிச் செய்தால்தான் மரியாதை, பேச்சைக் கேட்பார்கள் என்ற எண்ணம். சுமதி தன்னை விட்டுப் பிரிந்துவிடுவாளோ என்ற அச்சம். தன் வளர்ப்பு, அச்சத்தைப்பற்றிச் சொல்ல அவனுடைய நிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
சுரேஷ் போன்ற நடத்தை, அவர்களின் குறைந்த சுய மதிப்பிடு / சமாளிக்கும் திறன்களினால் நேரலாம்.
சுரேஷின் பயங்கள், அவற்றைச் சந்திக்கும் முறைகளை உரையாடலுக்கு எடுத்துக் கொண்டோம். சுரேஷுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது கடினமாக இருக்கிறது என்பதை மையமாக வைத்து, அவன் உறவை உருவாக்கும் முறைகள், வெறுப்புகளைக் கையாளும் விதங்கள் என்னவென்று ஆராய்ந்தோம். பல வாரங்களுக்குப் பின் சுரேஷ் தெளிவு பெற்றான். ஆனால் மாற்றங்களை எப்படி செயல்படுத்த முடியும் என்ற அச்சம் இருந்தது.
முதல் கட்டமாக, சுமதி என்னைப் பார்க்க வரும் நேரத்தில் அவளைத் தொலைபேசியில் அழைக்கக் கூடாது. மனதை திடப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பட்டியலிட்டோம். சுரேஷ் உடற் பயிற்சியை தேர்ந்தெடுத்தான். உட்கார்ந்து இருந்தால், அந்த மனநிலையிலிருந்து விடுபட அச்சத்தைத் தாளில் எழுதிக் கொள்ளலாம். சுரேஷ் வியந்தான், இவ்வளவு வழிகள் உள்ளதே என்று!
அதேபோல், தான் என்னைப் பார்க்க வரும் நாட்களிலும் இதையே கடைப் பிடிக்க வேண்டும் என்றேன். அடுத்தது, சுமதியை வேலையில் அழைக்கவோ, பேசவோ கூடாது என்று.
சுமதியின் காயங்களைக் குறித்து உரையாட, இருவரையும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் தங்கள் உறவு, மனக்காயங்கள்பற்றிப் பேசி, வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நேரத்தில் ஒரு ஹோம் வர்க் – தங்களைப்பற்றி இல்லாமல், கைகளைக் கோர்த்துக்கொண்டு வேறு ஏதாவது பேச வேண்டும். பிரச்சினைகள் குறைந்து வருவதை கைகளின் வெப்ப நிலை மாற்றத்தில் உணர்ந்தார்கள்.
மாற்றங்கள் ஊக்கம் அளிக்க, இருவரும் தவிர்க்க வேண்டிய நடத்தைகள், சொற்களைப் பட்டியலிட்டோம். சுரேஷ், தான் மாமனார், மாமியார்பற்றி சொன்ன தவறான தகவல்களைப்பற்றியும் பகிர்ந்து கொண்டான். அவரவர் கசப்புகளை, எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
மனம்விட்டுப் பேசியதால், நெருக்கம் வளர்ந்தது. விரும்பிக் கல்யாணம் செய்துகொண்டதால், மன்னிக்க மனம் வந்தது.
குடும்பத்தினரையும் ஒவ்வொருவராகச் சந்தித்தேன். பிறகு இணைந்து பார்க்கையில், அவர்களின் பங்கேற்பையும், பொறுப்பையும் வரிசைப்படுத்தினோம்; அவர்கள் கடைப்பிடித்து வர, என் பங்கு முடிவடைந்தது.
காதல் என்பது ஒருவர் மேல். ஆனால் கல்யாணமோ இரு குடும்பத்தினருடன். கலாச்சாரங்கள், உறவுகள் இணைந்து மலர, விட்டுக் கொடுக்கும் சுபாவம் உறவை மேம்படுத்தும், ஏற்ற-தாழ்வு தெரியாது.
ஆனால், இன்னல்களை, கசப்புகளை, வெறுப்புகளை ஒருவர்மேல் மட்டும் குவித்தால் அது கொடுமையே. எப்பொழுதும், “என்ன நடந்து விடுமோ?” என்ற பதட்டத்துடன் இருப்பதும் கொடுமையின் அடையாளமாகும். அடிமை போல் கெஞ்சி, மறு நிமிடம் கையாலோ, சொல்லாலோ அடித்து, “நான் சொல்வதே சட்டம்” என்பதும் கொடுமை.
கொடுமை கலந்திருந்த உறவைப் புதுப்பித்தார்கள் சுமதி-சுரேஷ் ஜோடி! மாற வேண்டும் என்ற உறுதி இருந்தால்தான் மாற முடியும்!