காளிதாசன்-ரகுவம்சம்
காளிதாசன் எழுதிய தேன் கவிதைகளைக் கண்டு நமது மனமென்ற தேனீ ரீங்காரமிடுகிறது.
அட..அங்கிருந்து நகர மறுக்கிறதே!
மனதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு நாம் சரித்திரப் பயணத்தைத் தொடர முடியுமா?
இருந்து இலை போட்டு விருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போவோமே!
சரி… கதைக்குப் போவோம்..
ஒரு முன்னுரை:
ரகுவம்சம் – இது ரகுவின் பேரால் அமைந்தாலும், அவனுக்கு முன் சென்று திலீபன் என்ற அவன் முன்னோன் கதையினின்று தொட்டு, இராமனது கதையை நடுவாக அமைத்து, அக்கினி வருணன்வரை சென்று, அந்நூல் நிறைவடைகிறது. பல கதாநாயகர்களைக் கொண்ட இக்காவியம் – திலீபன் முதலாக அக்னிவர்ணன் வரை இருபத்தி ஒன்பது அரசர்களைப் பற்றிய கதைகளைக் கூறுகிறது. இதில் முக்கியமாக திலீபன், ரகு, அயன்(அஜன்), தசரதன், ராமன் ஆகியோரின் கதையைப் பதினைந்து சர்க்கங்களில் கவி இயற்றி உள்ளார். மீதமுள்ள நான்கு சர்க்கங்களில் ஒரு சர்க்கம் ராமனுடைய மகன் குசனைப் பற்றியும், ராமனுடைய பேரன் அதிதி பற்றியும், ஒரே சர்க்கத்தில் இருபத்தியொரு மன்னர்களைப் பற்றியும் கடைசி சர்க்கம் அக்னிவர்ணனைப் பற்றியும் அமைந்துள்ளது.
இப்பொழுது முன்கதை:
விஷ்ணு புராணத்தின்படி இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரும்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தக்ஷபிரஜாபதி. அவருடைய மகள் அதிதி என்பவளின் மகனே சூரிய பகவான் ஆவார்.
சூரியன் கதையை குவிகம் வாசகர்கள் ‘எமபுரிப்பட்டணம்’ மூலம் அறிந்திருப்பீர்கள்!
சூரியனாருக்குப் பிறந்த மகன் மனு எனும் அரசன். அவர் தழைத்த வம்சம் சூரியவம்சம் என அழைக்கப்பட்டது. சூரிய வம்சத்தின் பிரபலமானவர்கள்
- கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த பகீரதன்
- வசிஷ்ட முனிவர்
- ஹரிச்சந்திரன்,
- சிபி மன்னன்.
சூரியனின் மகன் மனுவின் மகன்களில் ஒருவரே இஷ்வாகு என்பவர் – கோசல நாட்டை ஸ்தாபனம் செய்து அயோத்தியாவை அதன் தலைநகராகக் கொண்டு ஆண்டார்.
சூரிய வம்சத்தின் முதல் மன்னன் இஷ்வாகு!
ராமபிரான் தோன்றுவதற்கு முன்னர் ஆட்சி செய்த இஷ்வாகு வம்சத்தை சார்ந்த மன்னர்கள் 118 பேர் ஆவர். அந்த 118 மன்னர்களுக்கு இடையில் ராமனுக்கு முன்னர் ஆண்டு வந்திருந்த, இஷ்வாகு வம்சத்தின் 58 ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்ட திலீபன் என்ற மன்னனின் காலத்துக்குப் பின்னரே ரகுவம்சம் என்ற புது வம்சம் துவங்கியது.
திலீபன்
காளிதாசர் தனது 30 ஆம் பாடலில் கூறுகிறார் :
மனு வம்சத்தில், திடீரெனப் பாற்கடலில் இருந்து எழும் பூரண சந்திரனைப்போல திலீபன் என்றொரு மன்னன் பிறந்து ஆட்சிக்கு வந்தார்
திலீபனின் மனைவியின் பெயர் சுடாக்ஷிணா.
அவர்களுக்குக் குழந்தை பேறு இல்லாமல் இருந்தது.
மனைவி அருந்ததியுடன் ஆசிரமத்தில் இருந்தார் வசிஷ்ட மாமுனி.
ரகு வம்சத்தில்..அரசர்கள் வருவர்… அரசர்கள் மறைவர்… ஆனால் அனைவருக்கும் ஒரே ராஜ குரு வசிஷ்ட மாமுனி!
அவரை திலீபன் வணங்கி :
“ஸ்வாமி, எனக்குப் புத்திர பாக்கியம் இல்லை. நீங்கள்தான் தக்க உபாயம் கொடுத்து எம் சந்ததியினர் வளர உதவ வேண்டும்.
வசிஷ்டருக்கு இப்படிப்பட்ட கட்சிக்காரர்கள் அடிக்கடி வருவார்கள் போலும்!
வசிஷ்ட முனிவர்: திலீபா, உனக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் உனக்கு முன் ஒரு காலத்தில் காமதேனுப் பசுவினால் கிடைத்த சாபம்தான். காமதேனு ஒரு சாபம் கொடுத்திருந்தது. அந்த சாபம் விலக வேண்டும் . நீ தேவலோகத்துக்குக் கிளம்பிச்சென்று காமதேனுப் பசு திரும்பி வரும்வரை அதன் கன்றான நந்தினிக்கு சேவை செய்துகொண்டு அதற்குப் பாதுகாப்பாக இருந்து வரவேண்டும். அப்போது காமதேனு மனமகிழ்ந்து உனக்குக் குழந்தை பாக்கியத்திற்கு அருள் தரக்கூடும்.
சாபங்கள் என்று ஒன்று இருந்ததால் அதற்கு விமோசனம் என்று இல்லாமலா போய்விடும்!
கதையை சற்று சுருக்குவோம்..
நந்தினி கூறியது :
நீ கேட்ட வரத்தை உனக்கு தருகிறேன் மன்னா, உனக்கு நல்லதொரு மகன் பிறப்பான். அதை அடைய என் மடியில் இருந்து சுரக்கும் பாலை நீயும் உன் மனைவியும் குடிக்கவேண்டும்’
நந்தினி கூறியதுபோல திலீபனும் செய்தான்.
அடுத்த சில நாட்களிலேயே சுடாக்ஷிணா கர்ப்பமுற்றாள்.
இங்கு காளிதாசனுடைய வர்ணனை சிலவற்றைக் காண்போம்.
திலீபனின் மனைவி சுதட்சிணை கருவுற்று மகனைப் பெறுதல்:
- மங்கிய நிலவில், ஒரு சில நட்சத்திரங்களே சிதறிக் கிடக்கும் விடியும் தறுவாயிலுள்ள இரவுபோல, உடல் மெலிவால் குறைந்த அணிகளை அணிந்து, லோத்ர மலர்போன்று வெளுத்த முகத்துடன் அவள் இருந்தாள்.
- அவ்வேந்தன் தனிமையில் மண்மணம் கமழும் அவளது முகத்தை மீண்டும் மீண்டும் முகர்ந்து மகிழ்ந்தான்; வேனிற்கால முடிவில், மேகம் சிந்திய சிறுதுளிகளால் நனைந்த காட்டு நீர்த் தடாகத்தில் திருப்தியடையாத யானை போல.
- வானாளும் இந்திரன்போல, அவள் மகன் திசைகளின் எல்லைவரை செல்லும் தேர்கொண்டு, மண்முழுதும் ஆண்டு களிப்பான். அது கருதியோ அவள் மற்ற சுவைகள் அனைத்தையும் உதறி மண்மீது ஆசை வைத்தாள்?
- பழைய இலைகள் உதிர்ந்து மனம் கவரும் புது இளந்தளிர்கள் துளிர்க்கும் கொடிபோல, கருத் தாங்கும் சிரமங்கள் கடந்து அவளது அவயவங்கள் செழிப்புற்றன.
- நாட்கள் செல்லச்செல்ல, சற்றே கருத்த முகம்கொண்ட, பருத்த, அவளது இணைமுலைகள், வண்டு வந்தமர்ந்த அழகிய தாமரை மொட்டுக்களின் அழகை வென்றன.
- பெருநிதியைக் கருவில் சுமக்கும் கடலுடுத்த நிலமகளோ? கனலைத் தன்னுள் ஒளித்திருக்கும் வன்னி மரமோ? அல்லது உள்ளே நீரோடும் சரஸ்வதி நதியோ இவள்? எனத் தன் பட்டமகிஷியைக் கண்ட மன்னன் எண்ணினான்.
- பிறகு, உரிய காலத்தில், சூரியனைச் சேராமல் உச்ச ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து நின்று அவனது பாக்கியமாகிய செல்வத்தை முன்னறிவிக்க, இந்திராணியை ஒத்த அவள் புதல்வனைப் பெற்றாள்.
- அந்தக் கணம், திசைகள் தெளிந்தன. காற்று சுகமாக வீசியது. வேள்வித் தீச் சுடர் வலம் சுழித்து அவியை ஏற்றுக் கொண்டது. இவை அனைத்தும் சுப அடையாளங்களாகவே இருந்தன. உலகம் உய்யவன்றோ அத்தகையோர் பிறக்கின்றனர்!
- அக்குழந்தையின் இயல்பான தேசுடைய ஒளி பிரசவ அறையின் படுக்கையைச் சுற்றிப் பரவியது. அங்கிருந்த நிசி தீபங்கள் ஒளியிழந்து சித்திரத்தில் எழுதப்பட்டவை போலாயின.
- காற்றில்லாத மடுவில் பூத்த தாமரைபோல அசையாத கண்களால் தன் மகனின் முக அழகைப் பருகினான் மன்னன். நிலவைக் கண்டு, தன்னுள் அடங்காமல் பொங்கும் பெருங்கடலின் நீர்த்திவலைகள் போலப் பொங்கியது அவனது மகிழ்ச்சி.
- மகவு பிறந்த மகிழ்ச்சியில் கைதிகளை விடுதலை செய்யலாமென்றால், அக்காவலனின் அரசில் கைதிகள் என்று யாருமே இல்லை.
நாட்டில் இப்படியும் ஒரு பிரச்சனையா?
- சக்ரவாகப் பட்சிகள் போன்ற அந்த தம்பதியரின் அன்பு, உணர்வில் பிணைந்தது, ஒருவரையொருவர் பற்றியது. ஒரே பிள்ளை பிறந்து, அதைப் பிரித்தது. ஆயினும் அவர்களுக்கிடையில் அது இன்னும் அதிகமாக வளர்ந்தது!
- அப்புதல்வனின் மெல்லிய சருமத்தின் தீண்டல் அமுதம் பொழிந்தது. அவனை மடியில் ஏற்றிக் கடைக்கண்களை மூடிக் கொண்டான் அரசன். வெகுநாள் கழித்து மகனின் தொடுகையின் இன்பத்தை அறியும் தன்மையை அடைந்தான்.
பிறந்த அந்தக் குழந்தை ‘ரகு’!
ரகுவம்சத்தின் காரணகர்த்தா!
இனி ரகுவின் கதைக்குச் செல்வோம்.
காளிதாசனின் …
தேன் சொட்டும் வர்ணனைகள்!
உவமைகளின் உச்சக்கட்டம்!
கற்பனையின் சிகரம்!
மயங்கித் தவிக்கிறது மனது!
மீண்டும் அந்த அனுபவம் வேண்டும் போலிருக்கிறதல்லவா?
அது விரைவில்!