சுடலை / இந்திரன்
———————————————-
சுடுகாட்டு வேப்ப மரத்தின் குளிர் நிழலில்
ஓய்வெடுக்கிறேன் நான்.
புதைகுழிகளுக்கு மேல்
பூத்துச் சிரிக்கும் மஞ்சள் பூக்களில்
தேன் குடித்துச் சிறகடிக்கும்
பட்டாம் பூச்சிகள்
அபத்தத்தைக் கொண்டாடுகின்றன.
உண்மை மட்டுமே பேசியதால்
சுடுகாட்டில் கோயில் கொண்ட அரிச்சந்திரன்
வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று
சவ ஊர்வலத்தோடு வரும் ஒவ்வொருவரிடமும்
விசாரித்துக் கொண்டிருக்கிறான்.
நேற்று தகனம் செய்யப்பட்ட
அழியாத கவிதைகள் எழுத முயன்ற
கவிஞனின் உடல் சாம்பல்
இன்றைக்குக் கங்கையில் கரைக்கப்படுகிறது.
சுடுகாட்டில் தவம் செய்யும் சிவனின் பெயரான
சுடலை என்பதைத்
தன் பெயராகச் சூடியிருக்கிறான்
இடுகாட்டுக் காவல்காரன்.