நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி……
வெட்டிச் சங்கத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்களான ஏகாம்பரமும் சந்துருவும் இளைஞர்கள். சிலகாலம் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பள்ளி நாட்களிலேயே ஒன்றாக ஊர் சுற்றியவர்கள். சில காரணங்களினால் ஏகாம்பரத்திற்கு ஒரு வருடம் படிப்பைத் தொடரமுடியாமல் போயிற்று. மீண்டும் சேர்த்துக்கொள்ள அந்தப் பள்ளி தயாராக இல்லை. வேறு பள்ளியில் மற்ற வருடங்கள் படித்து முடித்தார்.
சந்துரு தொடர்ந்து படித்து., பள்ளியில் நான்காவது ரேங்க். வேறு ஊரில் ஹாஸ்டலில் தங்கிக் கல்லூரியும் முடித்தவர். பி எஸ்சி முதல்வகுப்பில் தேறியவர். மேற்கொண்டு எம் எஸ்சி படிக்காத காரணம் தெரியவில்லை. வேலை தேடத் தொடங்கினார். சரியான வேலை எதுவும் மாட்டவில்லை. கிடைக்கும் ஓரிரு வேலைகளையும் நிராகரிக்க சந்துருவிற்கு ஏதேனும் காரணம் இருக்கும். இவர் வாழ்க்கையில் நிலைபெற நல்ல வேலை சீக்கிரம் கிடைத்தல் நல்லது என்று குடும்பத்தினர் அபிப்பிராயப்பட்டார்கள். பொதுவாக பிறர் சொல்வதைக் கேட்டுத் தன்னை மாற்றிக்கொள்ளும் வகையினைச் சேராதவர். வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் சௌகரியமாக இருக்கும் என்கிற நிலை இல்லை. ஆகவே இப்படியே ஓடிக்கொண்டிருந்தது.
ஏகாம்பரம் விரைவில் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம் அவர் படிப்பு முடிக்கும் தறுவாயிலேயே இருந்தது. அந்தக் காலத்து இளைஞர்களைப்போல அவரும் டைப்பிங் இன்ஸ்ட்டியூட் சேர்ந்து கற்றுக்கொண்டவர்தான். அவர் உறவினர் ஒருவர் ஒரு சின்னத் தொழிற்சாலையில். (இவரது பதினேழு வயதிலேயே) மிகக் குறைவான ஊதியத்தில் சேர்த்துவிட்டார். வங்கிக்கு சென்று பணம் கட்டுவது, வெளியூரிலிருந்து வரும் சரக்குகளை லாரி ஆபீசில் பணம்கட்டி வாங்கி வருவது, உள்ளூரிலேயே சிறிய சிறிய கொள்முதல்கள், தொழிற்சாலையின் அன்றாடச் செலவுகளை செய்வது என்று எப்போதும் இவர் கையில் முதலாளியின் காசு இருக்கும். சிறு வேலையாயிருந்தாலும், புழங்கும் பணம் குறைவுதான். ஆனாலும் இளைஞராகிக் கொண்டிருக்கும் ஒரு வளர்ந்த சிறுவனுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் கௌரவத்தையும் தந்தது. நம்பிக்கையான ‘பையன்’ என்று பெயரும் வந்தது. இப்படி அப்படி என்று வேலைகள் மாறிக்கொண்டே வந்திருக்கிறார். செய்து கொண்டிருக்கும் வேலையைவிட புதிய வேலை ஊதியம் கணிசமாகக் கூடுதல் ஆக இருக்கும். (“எல்லோரும் முதலில் சம்பளமும் பின்னர் பென்ஷனும் வாங்குவார்கள். நான் முதலில் பென்ஷன் வாங்கி பின்னர் சம்பளம் வாங்குகிறேன்” என்பார், ஏகாம்பரம்)
நான் சங்கத்தில் இருந்த நாட்களில் அவர் நல்ல நிலையில்தான் இருந்தார் என்று சொல்லவேண்டும். குடும்பமும் பணக் கஷ்டம் தெரியாத வாழ்க்கை வாழ்ந்து வந்தது. சொந்த பந்தத்தில் அவரைப்பற்றிய மதிப்பீடுகள் உயர்ந்துகொண்டே வந்தது.
சில சமயம் வேலை நிமித்தம் வெளியூர் செல்லவும் நேரிடும். அங்கே இதைப் பார்த்தேன், அதைச் சாப்பிட்டேன் என்று கொஞ்சம் அலட்டிக்கொள்வார். தன்னுடைய ‘கெத்து’ குறையாமல் இருக்கச் சிறு பொய்கள் அவருக்கு ஆயுதங்கள்..
பள்ளித் தோழன் சந்துரு படிப்பில் ஏகாம்பரத்தைவிடக் கெட்டிக்காரர். பள்ளியில் ரேங்க் வாங்கியவர்., பட்டம் பெற்றவர், வெளியூரில் தங்கிய அனுபவசாலி, கல்லூரி நாட்களில், ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் பரிசுகள் வாங்கியவர். எல்லாம் சரி லௌகீக உலகில் அவர் வேலையில்லாப் பட்டதாரி.
பெரிய கம்பெனிகள், அரசாங்க, அல்லது அரசுத் துறை சேர்ந்த நிறுவனங்கள் என அவர் விண்ணப்பங்கள் போட்டுவந்தார். அவ்வப்போது தேர்வுகளும் நேர்முகத் தேர்வுகளும் சென்று வருவார். மூன்று வருடங்களாக இது தொடர்கிறது. யாரேனும் வேறு சில வேலைகளுக்குத் தகவல் தந்தால், போய்ப் பார்த்துவிட்டுதான் வருவார். ஏற்கனவே சொன்னதுபோல அவற்றை நிராகரிக்க அவருக்குக் காரணம் எதாவது கிடைத்துவிடும். (கடன் வாங்கிவிட்டுத் திருப்பித்தர இயலாதவர்கள் கடன் திரும்பக் கேட்பவரிடம் சாக்கு சொல்ல நல்ல கற்பனைவளம் வேண்டும் என்பார்கள். அதுபோலத் தட்டிக்கழிக்க இவருக்கும் கற்பனைக்கான தேவை இருந்தது)
எந்த நிலையில் தனது அலுவலக வாழ்வினைத் தொடங்க வேண்டும் என்று அவர் பிடிவாதமாக இருந்தாரோ, அந்த நிலைக்கு ஏகாம்பரம் எப்போதோ வந்து விட்டார். ரேங்க் ஹோல்டரும் இல்லை, பட்டதாரியும் இல்லை, கைதூக்கிவிடக் கூடிய சொந்த பந்தங்களும் இல்லை. ஆனாலும் இவரும் சொந்தக் காலில் நிற்கும் ஆளாகிவிட்டார்.
தனது நண்பன் சந்துருவிற்கு இருந்த கலை இலக்கிய ஆர்வத்திற்கு ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கலாம் என்பது ஏகாம்பரத்தின் கருத்து. சந்துரு நன்றாகப் பாடுவதைத்தவிர, படம் போடுவார், கதைகள் எழுதுவார். கொஞ்சம் நடிப்பும் வரும். ஆனால் எதிலும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றதில்லை. குழுக்களுடன் சேர்ந்து விட்டுக்கொடுத்து இயங்குவது அவருக்கு எட்டிக்காய். ஏதேனும் உருப்படியாக யோசனை யாரேனும் சொல்ல வந்தாலும், ஒரு மாதிரியாக அந்தப் பேச்சினை சந்துரு தவிர்த்து விடுவார்.
பிற்காலத்தில் ஏகாம்பரம் அடிக்கடி கண்ணில்படுவார். சந்துரு என்னவானார் என்று எனக்குத் தெரியவில்லை.
இரு நண்பர்கள் – இரு துருவங்கள்.
ஏகாம்பரம் | சந்துரு |
ஏதோ படிப்பை முடித்தாலும் ‘படிக்கிற பையன்’ என்று பெயரெடுத்ததில்லை | வகுப்பில் எப்போதும் முதல் மூன்று இடங்களுக்குள். அரசுத் தேர்வில் பள்ளியில் நான்காவது மாணவன். |
கல்லூரிக்குச் செல்லாதவர். | முதல் வகுப்புப் பட்டதாரி |
இவருக்குப் பலர் பல சமயங்களில் வழிகாட்டி இருக்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்டுக் கொள்வார். ஆனால் முடிவு இவருடையதுதான். | யாரேனும் உதவ வந்தால், அனுதாபப்படுகிறார், நான் அனுதாபத்திற்குரியவன் அல்ல என்று பேச்சினைத் தவிர்த்து விடுவார்.
|
படிப்படியாக முன்னேறியவர். | படிப் பக்கமே போகாதவர். |
நான் அறிந்த காலகட்டத்தில் இவர் நன்றாக செட்டில் ஆகிவிட்டார். இப்போது நல்ல நிலையில் இருப்பதாகக் கேள்வி | அப்போது வேலையில்லாப் பட்டதாரி. இப்போது தெரியவில்லை |
(புதியதாக அட்டவணைபோட இப்போதுதான் கற்றுக்கொண்டேன். முயற்சி செய்ய வேண்டாமா?)
இன்னும் வரும்