“என்னுடைய தவிப்புகள்” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்

Related image

நான் ஸ்கூல் கவுன்சிலர் பொறுப்பில், மாதாமாதம் வொர்க் ஷாப்  செய்வது வழக்கம். ஒருமுறை அது முடிந்தவுடன், அதில் கலந்துகொண்ட ஒருவர் தன் பக்கத்து வீட்டுக் குழந்தையைப் பற்றி விவரித்தார். அவருக்கு, வொர்க் ஷாப்பில் சொல்லப் பட்ட அனைத்தும் மார்டீன் பற்றியே நினைவூட்டியது என்றார். குறிப்பாக நான் ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்பதாலும், அவனை என்னிடம் அழைத்து வரலாமா என்று கேட்டார். மகிழ்வுடன் ஒப்புக் கொண்டேன்.

அவரே மார்டீனை அழைத்து வந்தார். மார்டீன் ஏழாவது படித்துக்கொண்டிருந்தான். அவன் அப்பா மைக்கேலுக்கு வெளி நாட்டுத் துறையில் வேலை. கடந்த மூன்று வருடமாக, முனைவர் படிப்பில் மும்முரமாக இருந்தார். பெரும்பாலும் வெளிநாடு சென்று விடுவதால், மாதத்தில் ஒரு வாரம் வீட்டில் இருப்பார். பல விதமான வேலைகள் அவருக்காகக் காத்திருக்கும். அவற்றை முடிப்பதற்குள் நேரம் ஓடியே போய்விடும். மார்டீன் அப்பாவுடன் இதைச் செய்யவேண்டும், அதைச் சொல்ல வேண்டும் என்ற பட்டியல் இட்டிImage result for a d h dருப்பான். பெரும்பாலும் அப்படியே நின்று விடும், ஏமாற்றமாகத் தோன்றும்.

அவன் அம்மா ரோஸ், மொழிபெயர்ப்பு செய்பவர். எப்பொழுது வீட்டில் இருப்பாள் என்று சொல்ல முடியாது. அதனால் தன் தேவைகளைத் தானே பார்த்துக் கொள்வான்.

அக்கா ஜாய்க்கு, சிறு வயதிலிருந்தே அவர்கள் தாத்தா-பாட்டி வீட்டில் தங்குவது பிடித்திருந்தது. இரண்டு தாத்தாக்களும் பக்கத்து ஊரில், மும்பாய்-பூனேயில் இருப்பதும் ஒரு தூண்டலாயிற்று. அவள் ஆறாவது வகுப்பிற்கு மாறும்பொழுது, அவர்களுடன் இருக்க ஆசைப்பட்டாள், அனுமதித்தார்கள். வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு வருவாள். மார்டீன் அவளை விருந்தாளியாகப் பார்த்தான்.

வீட்டில், அம்மாவும் பிள்ளையும்தான். கடந்த 3-4 வருடமாக ரோஸ் தன் சுக-துக்கங்களை மார்ட்டீனிடமே பகிர்ந்து கொண்டாள். அதிகமாகக் கோபப்படுவாள், அழவும் செய்வாளாம்.

கடந்த நான்கு வருடமாக மார்டீனுக்கு படிப்பில் கவனம் சிதற ஆரம்பித்தது. கை விரல்களை அசைக்க வேண்டும்போல் தோன்றி, தாளம் போட்டுக்கொண்டு, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பானாம். இப்படி, கை-கால் நடனமாடிக்கொண்டு இருப்பதால், பக்கத்தில் உட்காரும் மாணவர்களின் மேஜை, நாற்காலியும் சேர்ந்து அசைவதால், அவர்களின் கவனமும் பாதிக்கப்பட்டது. எங்கோ பார்வை ஒடுவதை ஆசிரியர்கள் கவனிக்கக் கண்டிப்பு அதிகரித்தது. ஆனால், புதிதாக ஒன்றைப் பார்த்தாலோ, கேட்டாலோ கவனம் செலுத்த முடிகிறது என்றும் உணர்ந்தான்.

இதுவெல்லாம் என்ன, ஏன் மற்றவர்களுக்கு இல்லை என்று யோசித்தான். மார்டீன் வகுப்பில், “நிபுணர்” என்ற பெயர் கொண்ட மோகனிடம் கேட்டான். மோகன் கணினியில் தேடி, அவனுக்கு ஏ.டி.எச்.டி. (ADHD) என்றான். மோகன் சொன்னால், சரியாக இருக்கும் என்று அம்மாவிடம் பகிர்ந்தான்.

ரோஸ் பதறினாள். மார்ட்டீனை அவனுடைய பீடியாட்ரீஷியனிடம் அழைத்துச் சென்றாள். அவர் தனக்குத் தெரிந்த ஸைக்கியாட்ரிஸ்டிடம் அனுப்பி வைத்தார்.

மார்டீன் அச்சு அசலாக வர்ணித்ததை வைத்து, சில குறிப்புகளைக் கூறி, அவனுக்கு “மைல்ட் டு மாடரெட் (Mild to Moderate) ஏ.டி.எச்.டி” என்று அதற்கு மாத்திரை கொடுத்து மூன்று மாதத்திற்குப் பிறகு வரச்சொன்னார். என் வொர்க் ஷாப்பிற்கு வந்தவருக்கு மார்டீனிடம் அதிக மாற்றம் தெரியவில்லை என்று தோன்றியது. அதனால்தான் என்னிடம் அழைத்து வர முடிவெடுத்தார்.

மறு நாள், ரோஸுடன் மார்டீன் வந்தான். அவன் வியர்வை வாடையுடன், ஒரு ரூபிக்ஸ் க்யூபை திருகியபடி வந்தான். ரோஸ், கரும்பச்சை நூல் பட்டு சேலையில் பளிச்சென்று இருந்தாள். அவளே தன்னைப்பற்றி முதலில் பகிர்ந்தாள், தான் ஒரு புதுமைப்பெண் என்பதால் எல்லாத் தேவைகளையும் தானே பார்த்துக் கொள்வதாக. அதேபோல் தன் இரு பிள்ளைகளும் என்றாள்.

சமீபத்தில், மார்டீனை பற்றிய புகார்கள் வந்தது அவளுக்குச் சலிப்பாக இருந்தது. இருந்தும், மார்டீன் படிப்பில் கவனம் சரிவதைப் பெரிதாக எண்ணவில்லை. எங்கே அதைப் பெரிதுபடுத்தினால், மார்டீன் ஹாஸ்டலில் சேர்க்கப்படுவானோ என்ற அச்சம் என்றாள். மைக்கேல், இவனை அப்படிச் சேர்த்துவிடலாம் என்று சொன்னதனால் பயம்.

தன் வேலையின் நேரத்தாலும், தோல் நோய் வந்துவிடும் என்ற பயத்தினாலும், பசங்களை வெளியே விளையாட விட்டதில்லை. கிரிக்கெட், ஃபுட்பால் எல்லாம் கணினியில்தான். இதனாலேயே கணினிப் பழக்கம் அதிகரித்தது.

மார்டீன் (கவனித்தான்,) தான் எதைச் சொன்னாலும் ரோஸ் ஏதாவது சுருக் என்று சொல்லிவிடுவாள். அம்மாவின் கோபம், அழுகையின்போது என்ன செய்வதென்று தெரியாமல், தான் சமாளிக்கும் விதங்களை விவரித்தான். தன்னுடைய விரலால் நகத்தை அழுத்திக் கொள்வானாம். அறைக்குள் போய் சுவரிலோ, தரையிலோ கைகளால், காலால் ஓங்கி அடிப்பானாம். கண்ணீர் வந்தால், தண்ணீரைக் கண்களில் வாரி வாரி அடித்துக் கொள்வான். சிலவற்றை வகுப்பிலும் செய்வதாகச் சொன்னான். இப்படிச் செய்ததும் கை கால் நடனம் அதிகரிப்பதைக் கவனித்தான் என்றும் பகிர்ந்தான்.

படிப்பில் ஆர்வம் சரிய, கணினி நேரம் கூடியது. வீட்டில் எந்தவிதமான சட்ட திட்டங்களும் இல்லை. மைக்கேல், ரோஸ் எந்த விதமான கட்டுப்பாடுகளும் போடவில்லை, எதற்கும் குறிப்பிட்ட நேரம் காலம் கிடையாது. முகநூல் ஃப்ரெண்டஸ் வழிகாட்டி, ஆறுதல் சொல்லுபவரும்கூட.

இதை எல்லாம் மார்டீன் விவரித்த முழு நேரமும், ஆடாமல், அசையாமல் இருந்தான். அதை மார்டீனிடம் பகிர்ந்தேன். அவனால் நம்ப முடியவில்லை. அடுத்த முறை இதை மார்டீன் கவனத்திற்குக் கொண்டுவர, அவன் ஸ்தம்பித்துப் போனான். மார்டீன் முழு கவனிப்பை ஆட்கொள்ளும் விஷயங்கள் இருந்துவிட்டால், கை-கால் நடனம் கப்-சிப்!

இதைத் தொடர்ந்து, மார்டீன், ரோஸ், இருவரிடமும் சொன்னேன், என்னுடன் ஒத்துழைத்தால், பல வழிகளை அமைத்து, மாற்றங்களைச் செய்யலாம் என்று. என் தனிப்பட்ட அபிப்ராயம், கேள்விகளுக்கு பதில்கள் உண்டு. சவால்களைச் சந்திக்கப் பல வழிகள் உண்டு. தேடினால், கண்டிப்பாகக் கிடைக்கும்! ஸைக்கியாட்ரிஸ்டை பார்ப்பது, மாத்திரை சாப்பிடுவது அவர்களின் முடிவாக விட்டுவிட்டேன்.

மார்ட்டீன், என்னைப் பார்க்கும் முதல் நாள் தன் ஏ.டி.எச்.டி. பற்றிக் கேட்டான், “நான் ஏ.டி.எச்.டியா?” அதற்கு நான் பதிலளித்தேன், “புத்தகத்துக்கு அட்டைபோட்டு, என்ன பாடம் எனக் குறிப்பிட்டு, அதற்கு ஒரு லேபில் ஒட்டி விடுகிறோம். அதிலிருந்து, ஒவ்வொரு முறையும் அந்த லேபிலைப் பார்த்து, புத்தகத்தை உபயோகிப்போம். அதேபோல், “நான் ஏ.டி.எச்.டி” என்றால், அப்படியே நடந்துகொள்வோம். லேபில், சிகிச்சைக்கு அவசியமே தவிர, லேபிலை அணிந்துகொள்ள அவசியமே இல்லை. உன் அடையாளம், “மார்டீன் ஏ.டி.எச்.டி” அல்ல” என்றேன்.

தன் கை-கால் நடனத்தைத் கவனித்து, சொன்னபடி, குறித்துவந்தான். பாடங்கள் புரியாமல் குழம்பிய நிலையில் இருந்தால் தோன்றுகிறது என்று அறிந்தான். இதற்காக, வகுப்பில் ஒரு தனி அட்டையில் கவனம் இருப்பதை குறித்துக்கொள்ளச் சொன்னேன். ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும்  “எந்த அளவிற்கு: கவனித்தேன், எழுதினேன், புரிந்தது,” என்பதையும் குறித்துவரச் சொன்னேன். தான் எல்லாம் செய்து விட்டால், அதற்கே தனக்கு சிரித்த ஸ்மைலீ போட்டுக் கொண்டான். தன்னைக் கண்காணித்தது, பொறுப்பை வளரச் செய்தது.

ரோஸ் தன்னிடம் பகிர்ந்து கொள்வதைத் தாங்கிக் கொள்ளவே சத்தமான பாட்டு கேட்பதாகச் சொன்னான் மார்டீன். சத்தமிட்டு, மிக வேகமாகப் பாடும் பாட்டைக் கேட்டால் கை கால் நடனம் அதிகமாகிறது என்றான்.

மார்ட்டீனுக்கு எல்லாவற்றையும் முகநூலில் தேடிப் பார்ப்பது பழக்கம். அவனிடம் இந்த வகைப் பாட்டு கேட்பதின் விளைவுகள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளைப்பற்றிச் சொன்னேன், முகநூலின் தொடர்பையும் கொடுத்தேன். அதிலிருந்து புரிந்துகொண்டான், சத்தம் அதிகரிக்க, ஆறுதலுக்குப் பதிலாக பதட்டம்போல் தோன்றுகிறது. சத்தமாய் பாட்டைக் கேட்பதே, தன் அம்மா அவனிடம் பகிர்வதில் வரும் தவிப்பினால்தான் என்றான். “ம்யூஸிக்  தெரபீ” பற்றிய விவரங்களை எடுத்துச் சொன்னேன். அவனுக்கு குடமல்லுர் ஜனார்த்தனின் ஃப்ளுட்டை அறிமுகம் செய்தேன். குறிப்பாக, வீணையைக் கேட்கப் பரிந்துரைத்தேன். அதற்கு நம்மை சாந்தப் படுத்தும் தன்மை உள்ளது என்பது பதிவானதே.

ரோஸையும் பார்ப்பதால் அவளிடம் மார்டீனிடம் பகிர்வதைப்பற்றிக் கலந்துரையாடினோம். சமீபத்தில், ரோஸுக்கு, தான் தனிமையாக இருப்பதைப்போல் தோன்ற, கோபமும், அழுகையும் வருவதாகச் சொன்னாள். சில தனிப்பட்ட விஷயங்களை, யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதது மனபாரத்தை அதிகரிக்க, கசப்பினால் கோபம் வந்தது. மாற்றிப் பகிர்ந்துகொள்வதற்குப் பல பாதையை யோசித்தோம். மைக்கேலுடன் ஈமெயிலில், டைரியில் எழுதுவது என்று ஆரம்பித்தாள். மார்டீனிடம் ரோஸ் தன் குமுறல்களைக் கொட்டுவதைக் குறைக்க, மார்டீன் கேட்கும் இசையும் இதமானதாக மாறியது.

வீட்டில் கண்டிப்பும் -சுதந்திரமும் சரி செய்யவேண்டிய அவசியத்தை ரோஸிடம் உணர்த்தினேன். கண்டிப்பே இல்லாமல் முழு சுதந்திரம் கொடுப்பதாக எண்ணிச் செய்யும்பொழுது, வளரும் குழந்தைகளுக்குக் குழம்பிய நிலை வளரும் என்று புரியவைத்து,  ரோஸுடன், பிறகு மைக்கேலுடன் கலந்து ஆலோசித்தேன். இருவரும், புரிந்து கொண்டார்கள், கட்டுப்பாடுகள் அமைத்து, எல்லைக் கோடுகள் நிர்ணயிப்பது தேவை என்று. இதிலிருந்தே நல்லது -கெட்டது தேர்வு செய்யவும் கற்றுக்கொள்வார்கள் என்பதைப் பல உதாரணம் கொடுத்துப் புரியவைத்தேன்.

தன் பங்கிற்கு மார்டீன், தன்னைக் கண்காணிப்பதைத் தொடர்ந்து செய்துவர, ஆசிரியயையின் பங்கும் ஆரம்பமானது. அவனின் கவனம் சிதறினால், குறிப்பிட்ட சிலவற்றைச் செய்ய, சில வழிமுறைகள் சொன்னேன். உதாரணத்திற்கு, யாருக்கும் தெரியாத வகையாக, வகுப்பில் தேவையானதை எடுத்து வரச் சொல்லுவது, ஆசிரியர்,கையில் உள்ள பொருளைக் கீழே போடுவது.

மார்டீன் போன்றவர்களுக்கு பாட க்குறிப்புகளை, செய்யவேண்டிய வேலைகளை, சின்னச் சின்னதாகப் பிரித்து, எளிதான வார்த்தைகளில் சொல்லவேண்டும். இப்படி, பாகங்களாகப் பிரித்துச் சொன்னால், அவர்களுக்கு உட்கொள்ள, சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டு தானாக நினைவூட்டிச் செய்ய சுலபமாகும். வீட்டிலும், வகுப்பிலும், பட்டியலிட்டு, வேலையை முடித்துவிடுவார்கள். “நம்மாலும் செய்ய முடிகிறது”, “முடிக்க முடிகிறது” என்பது ஊக்குவிக்கும்!

மார்ட்டீன் வகுப்புக்கு வரும் ஆசிரியர்களுக்கு “லர்ணிங் ஸ்டைல்” முறையை அறிமுகப்படுத்தினேன். அதாவது, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் கற்பதுண்டு. நம்மில் சிலர் கேட்டு, சிலர் பார்த்து, சிலர் தொட்டு-செய்து என்ற பல விதங்கள் உள்ளன. மார்ட்டீனின் “லர்ணிங் ஸ்டைல்” தொட்டுச் செய்வதாக இருந்தது. அவனுக்கு மட்டுமின்றி முழு வகுப்புக்கும் இந்த முறையை யோசித்தோம். இந்த வடிவத்தை அமைத்ததும், மார்ட்டீனுடன் மற்ற மாணவர்களின் பங்களிப்பு, கற்றலும் மேலோங்கியது. இதன் விளைவு, ஆசிரியர்களால் “லர்ணிங் ஸ்டைல்” முறை வரவேற்கப்பட்டது.

மைக்கேல், ரோஸ் இருவருமே, பிள்ளைகள் செய்யும் தவறுகளை, குறைந்த மதிப்பெண்களை எல்லோரிடமும் பகிரங்கமாகச் சொல்வதுண்டு. மார்ட்டீன்  வெட்கப்பட்டான். இதை, பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். மாறாக, பிள்ளைகள் சரியாகச் செய்வதைச் சொல்லச் சொன்னேன். பலர் முன் சொன்னால், ஊக்குவிக்கும்! குறைகளை, தனிமையில் எடுத்துச் சொல்லப் பரிந்துரைத்தேன். பெற்றோர் இதைப் பின்பற்ற, மார்டீனின் தன்னம்பிக்கை அதிகரித்தது.

மார்ட்டீனுக்கு, மிகக் குறைவாக நண்பர்கள் இருந்தார்கள். அதைச் சரி செய்ய, வெளியே விளையாடிப் பழக, நண்பர்களுடன் சைக்கிள்,  கிரிக்கட், நீச்சல், ஜாக்கிங், பேட்மிண்டன் என்று ஆரம்பித்தான்.

பகிர்ந்து கொள்வதை அவள் குறைக்க, தன் அம்மா மேல் பிரியம் அதிகரித்ததாகச் சொன்னான். ஜாய்யுடன் தொடர்பு கொள்ள விருப்பப்பட்டான், மின்னஞ்சல் பரிமாற்றம் தொடங்கியது.

மதிப்பெண்கள் ஐந்து-பத்தாக உயர்ந்தது. கவனம் சிதறாமல் எதை எடுத்தாலும் செய்து முடிக்க முடிந்தது. மற்றவரிடம் பழகுவது, பேசுவது, உதவி செய்வதில் பல மடங்கு முன்னேறினான்.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.