எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Related image

ராகுதேவனின் முகத்தில் ஆனந்தமும் ஆக்ரோஷமும் ஒன்று சேர்ந்து கொப்பளித்துக் கொண்டிருந்தன.சூரியதேவன் தனக்குச் செய்த கொடுமைகள் எல்லாம் அவன் மனதில் நிழற்படம்போல் ஓடின. தான் அமுதம் குடிக்க இயலாமல் தடுத்தவன் சூரியன். தன்  அழகு குலைவதற்குக் காரணாமாயிருந்தவன் சூரியன். முடிவில் விஷ்ணுவின் சக்கராயுதத்தால் தன் உடல் இரண்டுபடக் காரணமும் அவனே.

சூரியனை விழுங்கினால்தான் ராகுவிற்கு  மனதில் சாந்தி கிடைக்கும். அவனுக்குத் தேவையான சக்தியும் கிட்டும். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உண்டு. மூன்றே முக்கால் நாழிகைக்குள் அவனை விழுங்கிய வாயாலே திரும்ப வெளியே கொண்டுவந்துவிடவேண்டும். இது பிரும்மா சூரியனுக்குக்  கொடுத்த வரம். தனக்கு வழங்கிய இன்னொரு சாபம். பிரும்மாவின் வார்த்தகளைத் தட்டும் தைரியம் ராகுவிற்கு  இல்லை.

அந்தச் சில நாழிகைப் பொழுதாகிலும் சூரியனைத் தன் பிடிக்குள் வைத்து அவன் அணு அணுவாகத் துடிப்பதைப் பார்ப்பதில் அவனுக்கு அளவில்லாத சந்தோஷம் வரும். இன்று இப்போது அவனுக்கு அந்தப்  பொழுது கூடிவந்துள்ளது. சந்திரனும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் மயங்கிக் கிடக்கிறார்கள்.

தன் கைகளால் சூரியதேவனுடைய உடலைப்பற்றி வட்டவடிவில் வைத்தான். கால்களைக்  கைகளுடன்  இறுக்கக் கட்டினான். வளையம்போல வளைந்து கிடந்தான் சூரியன். ராகு தன் வாயை அகலத்திறந்தான். சூரியன் அருகேவந்து அவனை அப்படியே விழுங்கத் தொடங்கினான்.

சூரியதேவனுக்கு அவன் வாயில் நுழையும்போது மயக்கம் தெளிந்து உணர்ச்சிகள்   மெல்ல வரத்தொடங்கின. ஆனால் காந்த சிகித்சை சற்று முன்னர்தான் முடிவுற்றதால் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

Image result for solar eclipse

பிரும்மர் தன்னிடம் தனியாகக்கூறியது ஞாபகம் வந்தது. ராகு வருடாவருடம் சூரியனை விழுங்கியாக வேண்டும். இது இயற்கையின் சித்து விளையாட்டு. அதைத் தடுக்கமுடியாது.

Related image

ஆனால் அந்தச் சமயம் சூரியனுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள்ளச் சோர்வைப் போக்குவதற்கு அகத்தியமுனிவரை மனதில் வணங்கினால் அவர் ஆதித்யஹ்ருதயத்தை அவன் காது கேட்கும்படி உரைப்பார். அந்த ஸ்லோகங்கள் சூரியனின் அருமை பெருமைகளைக் கூறும் உன்னதமான பாடல்கள். பின்னாளில் இராவணனைப் போரில் வெல்லும் மார்க்கம் தேடித் தவித்த ராமருக்கும்  இந்த ஆதித்யஹ்ருதயமே பலத்தைத் தந்தது.

அதுமட்டுமல்லாமல் பிற்காலத்தில் துன்பத்தில் உழலும் மக்கள் தங்கள்  துயரைப்  போக்கிக்கொள்ள  காலையில் சூரிய தேவனை வணங்கி இந்த ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்களைக் கூறினால்  அவர்கள் துன்பமெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும்.

அந்த ஸ்லோகங்கள்தான் தற்சமயம் சூரியதேவனுக்கு அருமருந்து. மனதளவில் அகத்தியரை எண்ணிக் கொண்டதும் அவர் குரல் ஒலிக்கத் தொடங்கியது.  தன்னைப்பற்றி – தன் பராக்கிரமத்தைப்பற்றிய ஸ்லோகங்களைக் கேட்கும்போது  அவனுக்குத் தன்மேல் அதிக நம்பிக்கையும் பலமும் கிடைத்தது. அந்த பலம்  ராகுவின் மூலம் ஏற்படும் துன்பத்தைத் தாங்கும் சக்தியையும் அவனுக்குக் கொடுத்தது.

சூரியதேவனின் காதுகளில் ஆதித்யஹ்ருதயம் கேட்கத் தொடங்கின.

Image result for ஆதித்யா ஹிருதயம்

பாதி மயக்கத்திலிருந்த  அவனுக்கு முழுப் பாடல்கள்  காதில் விழாவிட்டாலும் அவற்றின் சாராம்சம் மட்டும் செவி வழியாகப் புகுந்து மனதைக் குளிரவைத்து இதயத்தில் தங்கிவிட்டன.

அதிதியின் புத்திரனே!

நீயே உலகிற்குப் பலத்தைக்  கொடுக்கிறாய்!

ஒளி கொடுக்கிறாய்!

ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய்

தங்க நிறமானவனே! நீ அபரிமிதமான பலன்களைக் கொடுக்கிறாய்.

கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! நீயே இருட்டை நாசம் செய்கிறாய்!

உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் நீயே அழிக்கிறாய்.

ராகு என்னும் இருளைப் பிளந்துகொண்டு வெளியில் வரும்படியான சக்தியைக் கொண்டவன் நீ ! .

உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.

*வட்ட வடிவத்தை உடையவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே!

மகத்தான ஒளியை உடையவனே!

நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே!

பிரபஞ்சத்தை நிறைபெறச் செய்கிறவனே!.

உருகியோடும் தங்க ஆறு போன்ற பிரகாசம் கொண்டவனே!

அக்னியின் வடிவே!

சகல உலகமும் தோன்றக் காரணமானவனே!

அஞ்ஞானம் என்ற இருளைப் போக்குபவனே!

கருணாமூர்த்தியே!

உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே! .

உலகம் அழியும் காலத்தில் இந்த ஜகத்தை நீயே அழிக்கிறாய்.

மீண்டும் நீயே அதை சிருஷ்டிக்கிறாய்.

ஜலத்தை வற்றச் செய்கிறாய்.

உலகையே எரிக்கிறாய்.

மழை பெய்யச் செய்கிறாய்.

எல்லா உயிர்களும் அழித்து அடங்கியிருக்கும்போது நீ மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறாய்.

சர்வாத்மாவே!

சர்வேஸ்வரனே!

ஆதித்யனே!

வேத விற்பன்னர்கள் செய்யும் யாகமாகவும், அதன் பலனாகவும் இருப்பவனே!

உனக்கு நமஸ்காரம்.

ஆதித்யன் என்கிற சூரியதேவனின் ஹிருதயத்தில் போய்ச்சேரும் இந்த ஆதித்ய  ஹ்ருதயம் ராகு விழுங்கும்போது அவனுக்கு ஏற்படும் துன்பத்தைத் தடுக்கும்  கவச மந்திரமாக இருந்தது.

“ராகு என்னும் இருளைப் பிளந்துகொண்டு வெளியில் வரும்படியான சக்தியைக் கொண்டவன் நீ !”   

இந்த வரி மட்டும் திரும்பத்திரும்ப அவன் மனதில் ஒலித்துக் கொண்டிருப்பதால் முன்னூறு யுகம்போலத் தோன்றும் அந்த மூன்றே முக்கால் நாழிகையையும்  அவனால் பொறுத்துக்கொள்ள முடிந்தது.

தன்னைக் கடித்துத் துப்பும் ராகுவிற்குச் சரியான பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சூரியதேவனுக்குத் தோன்றும்.

ஆனால் இது பிரும்மர் படைத்த பிரபஞ்சத்தில் நடைபெறவேண்டிய ஒரு முக்கியமான நியதி. அதை மாற்றுவது கூடாது! மாற்றவும் முடியாது !

மெல்ல மெல்ல ராகுவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருந்தான் சூரியதேவன்.

ராகு அவனைப் பீடிக்கும் நேரமும் முடிந்தது.

அதிர்ச்சியும் ஆச்சரியமும்  நிறைந்த சம்பவங்கள் தொடர்ந்தன.

(தொடரும்)

 

இரண்டாம் கதை ( எம கதை)

Related image

 

 

 

 

 

 

 

 

நாரதர் திட்டமிட்டுக் காரியத்தை நகர்த்துவதில்  கில்லாடி. 

தேவ உலகத்தைச் சேர்ந்த முக்கியமானவர்களைச் சேர்த்து  மீட்டிங் போட்டதில் அவருக்கு முதல் வெற்றி கிடைத்தது. அதிலும்  பிரும்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், முருகன், பார்வதி, சரஸ்வதி, லக்ஷ்மி, எமன், சித்ரகுப்தன் ஆகியோர் கலந்துகொண்டது அவருக்கு மிகவும் சாதகமாகப் போயிற்று.

ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களை மேலே யோசிக்க விடாமல் அப்படியே அமுக்கிப் போட்டுவிட்டார்.

எப்படியாவது  பூலோகத்தில் இருக்கும் சிவா கன்சல்டிங்க்  சர்வீசுக்கும், ராம் டெக்கிற்கும் சேர்த்து இந்த பிராஜக்டை வழங்கும்படி செய்யவேண்டும் என்பது அவருடைய திட்டம். சொல்லப்போனால் இது பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் சேர்ந்து நடத்தும் திருவிளையாடல். நாரதர் ஆடுகின்ற பம்பரம். அதை ஆட்டுகின்ற கயிறு அந்த மூவரிடமே இருக்கிறது. ஆனால் அவர்கள் மூவரும் வெகு சமர்த்தர்கள். ஏதோ எல்லாம் நாரதர் திட்டப்படியே நடக்கிறது என்ற மாயையை ஏற்படுத்தி, தங்களுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததுபோல நடிக்கவும் செய்கிறார்கள்.

எல்லாம் அறிந்த நாரதருக்குத் தான் ஒரு கருவி என்பதும் தெரியும். இருந்தாலும் எமபுரிப்பட்டணம் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்பது சர்வேஸ்வரர்களின் விருப்பம் மட்டுமல்ல. நாரதருக்கும் சித்ரகுப்தனுக்கும் அதில் அதிக  ஈடுபாடு உண்டு. எமனுக்கு மட்டும்தான் இந்தத்திட்டத்தின் பின்னணி  அவ்வளவாகத் தெரியவில்லை. அதுவும் அவன் சகோதரி  எமி  வந்தபிறகு   அவள் பூலோகத்தைப் பற்றிக் கூறிய தகவல்களால் அவன் மிகவும் குழப்பமடைந்திருந்தான்.   அதனால் இந்தத் திட்டதைப்பற்றி முழு விவரமும் அவனுக்கு ஏற்கனவே சித்ரகுப்தனால் சொல்லப்பட்டிருந்தாலும் எமன்  அதை முற்றிலும் மறந்துவிட்டான்.

அதுமட்டுமல்ல. தன் உதவியாளர்கள், பணியாளர்கள் இவர்கள் விவரத்தில் அவன் எப்பொழுதும்  தலையிடுவதில்லை.  ஒவ்வொருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை தவறின்றி செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன்.

கிங்கரர்களின் பணி ஆயுள் முடிந்த உயிர்களை எமபுரிக்குக் கொண்டுவரவேண்டியது. சித்ரகுப்தன்  பணி யார் யாருக்கு எப்போது ஆயுள் முடிகிறது என்பதைக் கணக்கிட்டுச் சரியான நேரத்தில் கிங்கரர் மூலமாக அந்த உயிர்களைக் கொண்டுவரச் செய்வது. அதன்பின்  அவர்கள் செய்த நல்லது கெட்டது என்ன  என்று அவ்வப்போது குறித்துக்கொண்டு வந்த கணக்குப் புத்தகத்திலிருந்து மொத்தமாக  எமனிடம் எடுத்துச் சொல்லவேண்டியது. அதற்குத் தகுந்தபடி எமன் தீர்ப்பு சொல்லவேண்டியது.

சித்திரகுப்தனின் பணி முகவும் கடினமானது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு உதவியாக யாரையும் நியமிக்க முடியாத சூழ்நிலை. சித்திரகுப்தனின் கணக்குப்புத்தகம் என்பது  உலகத்தின் மாபெரும் ரகசியம். அதில் இருக்கும் தகவல்கள் கொஞ்சம் கசிந்தால்  போதும். அதனால் ஏற்படும் விளைவுகள் அதி பயங்கரமாக இருக்கும். அதனால் சித்ரகுப்தன் தன்னுடைய புத்தகத்தை ‘குறியாக்க முறையில்’ எழுதியிருப்பான்.  இன்றைய என்கிரிப்ஷனுக்கு அதுதான் முன்னோடி.. அந்தக் கணக்குப் புத்தகம் திறந்திருந்தாலும் அவனுக்குக் கவலையில்லை. சித்திரகுப்தனையும் எமனையும்  தவிர யாராலும் அதைப் படிக்க முடியாது. படித்தாலும் புரிந்து கொள்ளமுடியாது.

இப்போது இந்தத் தகவல்களை மின்னணு மயமாக்க முயலும்போது ஏற்படும் தகவல் கசிவைப்பற்றி எமனுக்குக் கவலை வந்தது.  அதுவும் வெளி மனிதர்களிடம்,  குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் தகவல்நுட்ப வல்லுனர்களிடம் இந்தத் தகவல்கள் பரிமாறப்பட்டால் அதனால் விளையும் அனர்த்தங்களுக்கு அளவே இருக்காது என்ற எண்ணம் எமனின் பயத்தை அதிகரித்தது. 

முதலில் சித்திரகுப்தன் விருப்பப்படி  இந்த வேலையை வெளியே அவுட் சோர்ஸ் முறைப்படி கொடுப்பதற்கு சிவபெருமானிடம்  அனுமதி பெற்றவன்தான் எமன். ஆனால் இப்போது இதற்கென்று அமைத்த குழுவில் ஒவ்வொருவர் கடமைகளைப்பற்றிப் பேச்சு எழுந்தபோது  எமனுக்குச் சற்று திக்கென்றிருந்தது.  எமபுரிப்பட்டணத் திட்டத்தில் இருக்கும்   குறைகளைச் சொல்லி அவர்களை எச்சரிக்காவிட்டால்  நாளைக்கு ஏதாவது தவறு ஏற்பட்டால் தன் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதை உணர்ந்தான்.  

எமன் பேச எழுந்தான்.

நான் முதலில் கூறியபடி இந்தத் திட்டத்திற்கு என் முழு ஆதரவு உண்டு. ஆனால் நேற்று என் சகோதரி எமியிடம் பேசியபோது பூலோகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டதும் என் கவலை அதிகமாயிற்று.

பூலோகத்தில் முகநூல் என்ற சமூக வளைத்தளத்தில் சேர்ந்துள்ள மனிதர்களின் முழுத் தகவல்களைத் தவறாகத்  திரட்டித் தேர்தல் போன்ற  சமயங்களில்  அதை உபயோகப்படுத்தி, வேண்டிய நபர்களுக்கு வெற்றிபெற உதவுகிறார்கள் என்ற பீதி பரவியுள்ளதாம். அதுபோல நம் தகவல்கள் கசிந்தால்  அது எமபுரிப்பட்டணம் மட்டுமல்ல தேவ  உலகத்தையே பாதித்துவிடும்.

தகவல்களுக்கு எப்படிப் பாதுகாப்பு அளிக்கமுடியும் என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே இந்தத் திட்டத்தை வெளியாருக்கு அவுட் சோர்ஸ் செய்வதைப்பற்றி முடிவு எடுக்கமுடியும்

எமன் இப்படிக் கூறியதும் அனைவரும் சற்று கலகலத்துப் போயினர். ஒரே ஒருவரைத் தவிர.

இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்த நாரதர் சிரித்துக்கொண்டே அதற்குப் பதில் கூற  எழுந்தார்.   

(தொடரும்)

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.