(கடைசிப்பக்கம் எழுதிவரும் டாக்டர் ஜெ பாஸ்கரன் அவர்களுக்குக் கலைமகள் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. – வாழ்த்துக்கள் – குவிகம் )
ஸ்ட்ரெஸ் – தவிர்க்கப்பட வேண்டிய மனநிலை!
அவர் உள்ளே வரும்போதே நடையில் ஓர் அவசரம் தெரிந்தது – அங்கும் இங்கும் பார்த்தபடி வந்தார். கண்களில் ஒரு வித எதிர்பார்ப்பு. எதிரில் அமர்ந்து கையைப் பிசைந்தபடி இருந்தார். மேலோட்டமாக மூச்சு – இடையிடையே ஆழ்ந்த சுவாசம் என ”ரெஸ்ட்லெஸ்” ஆக இருந்தார்.
‘என்ன பிராப்ளம்?”
பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஏ4 தாளை எடுத்தார். வரிசையாக, இடமில்லாமல் நெருக்கி இரண்டு பக்கங்களிலும் கேள்விகளால் நிரப்பியிருந்தார்!
“மறந்து விடக் கூடாதே என்றுதான் . . .. .” – என்றவாறே, நெற்றியைக் கைக்குட்டையால் துடைத்தபடி கேட்கத் தொடங்கினார்.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால் வரக்கூடியவையே!
இப்போதெல்லாம் சின்னக் குழந்தை முதல் முதியோர் வரை அடிக்கடி பிரயோகிக்கும் சொல் “டென்ஷனா இருக்கு!” ’ஸ்ட்ரெஸ்’ அல்லது ’மன அழுத்தம்’ என்பது ஒருவித மனநிலையே – அமைதியாய் சிந்திக்கும் அல்லது இலேசான மனநிலைக்கு எதிரானது.
ஹான்ஸ் செல்யே என்னும் அறிஞர், இப்படிப்பட்ட மனநிலை உடலின் ‘சமநிலை’யை (HOMEOSTASIS) பாதிக்கிறது என்கிறார்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனிதர்களைப் பாதிக்க கூடியவை மன அழுத்தம் தரக்கூடிய சூழல்களே (STRESSFUL SITUATIONS)!
நம் உடல் ஸ்ட்ரெஸுக்கு எதிர்வினை ஆற்றுவது, நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
“கேனன்” எனும் அறிஞர், ஸ்ட்ரெஸ் வரும்போது நாம் மூன்று வழிகளில் நம்மையறியாமலேயே எதிர்வினையாற்றுகிறோம் என்கிறார். ஃபைட் (சண்டையிடுதல்), ஃப்ளைட் (ஓடிவிடுதல்) அல்லது ஃப்ரீஸ் (உறைந்து விடுதல்). – ஏதாவது ஒரு வழியில் நாம் இந்த அழுத்தத்தை எதிர்கொள்ளுகிறோம்!
இந்த எதிர்வினைக்குக் காரணம், நமது மூளைக்குள்ளிருக்கும் ஹைப்போதலாமஸ் – பிட்யூட்டரி –அட்ரினல் தொடர்பினால் சுரக்கும் ‘அட்ரினலின்’,’கார்டிசால்’ போன்ற ஹார்மோன்கள்தான்! இவற்றால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது (பால்பிடேஷன்), இரத்தக் கொதிப்பு (BP) எகிறுகிறது – அதிக வியர்வை மற்றும் கை,கால்களில் நடுக்கம் ஆகியவை ஏற்படுகின்றன!
ஸ்ட்ரெஸில் இருப்பவரது மனநிலை “ஆங்சைடி நியுரோசிஸ்” எனப்படுகிறது. எப்போதும் ஒரு பரபரப்பு, ‘என்ன’ ‘என்ன’ என்பதுபோன்ற ஒரு படபடப்பு, அதிகமான சந்தேகங்கள், சலிப்புகள், கவனக்குறைவு, மறதி, அவசரம் என ஒட்டுமொத்தமான ஒரு ‘திறமைக் குறைவு’ ஏற்படுகின்றது. மனோநிலையில் ஏற்படும் மாற்றங்கள், நமது எண்ணங்களையும், நடத்தைகளையும் மாற்றிவிடுகின்றன!
உள்ளிருந்து வரும் ஸ்ட்ரெஸ் பெரும்பாலும் மனோ ரீதியானது – வெளியிலிருந்து வரும் ஸ்ட்ரெஸ் பெரும்பாலும் உடல் ரீதியானது!
வாழ்க்கையில் ஏற்படும் இழப்பு, இறப்பு, பிரிவு, புதிய முயற்சிகள், இயலாமை, ஏழ்மை போன்றவை பெரும்பாலும் ஸ்ட்ரெஸுக்கு வழிவகுக்கின்றன.
அன்றாட அலுவல்களில் சலிப்பு, தினசரி ஏற்படும் வெறுப்பு, விரோதங்கள், மாற்றங்கள், மன அழுத்தம் இவற்றின் ஒன்றுசேர்ந்த பாதிப்பு – எப்போதும் வெறுப்பேற்றும் நட்பு, அண்டை வீட்டார், உடன் வேலை செய்பவர், போக்குவரத்து நெரிசல், எதிர்பாரா விருந்தினர் – இப்படிப் பல வழிகளில் ஒருவருக்கு அழுத்தம் வரலாம்!
ஸ்ட்ரெஸினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
சோர்வு (மனம், உடல் இரண்டும்!), வலிகள் (கை,கால் குடைச்சல்), தசைகளில் இறுக்கம், அஜீரணம், வாந்தி, பேதி, மலச்சிக்கல், தூக்கமின்மை, குறையும் நோய் எதிர்ப்பு சக்தி (அடிக்கடி ஜலதோஷம், நோய்த் தொற்று), பாலியல் வெறுப்பு, ஆண்மை குறைவு!
நெஞ்சு வலி, படபடப்பு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குழாய்கள் தடிப்பு போன்றவை இதயம் சம்பந்தப் பட்டவை!
மயக்கம், அதிக வியர்வை, தலைவலி (டென்ஷன்), உடல் வலி போன்றவை நரம்பு சம்பந்தப் பட்டவை!
தசை இறுக்கத்தினால், கழுத்து, முதுகு வலி, ‘நரம்பு’ இழுத்தல் ஆகியவையும் ஏற்படும்.
நீண்ட நாளைய ஸ்ட்ரெஸ், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.
இவ்வளவு கெடுதல்களை விளைவிக்கக்கூடிய ஸ்ட்ரெஸ் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் – அதிலிருந்து வெளியே வரும் வழியை அறிந்து, காரணத்தைத் தவிர்த்துவிட்டால், நிவாரணம் நிச்சயம்!
மேலே குறிப்பிட்ட நபரின் நேர நிர்வாகம், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நட்பு, பணியில் அணுகுமுறை போன்றவற்றால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தது!
மன நல ஆலோசகர் மூலம் அவருக்குக் கவுன்சலிங் கொடுக்கப்பட்டது! யோகா, மெடிடேஷன் ஆகியவையும் உதவின.
மருந்துகளை விட, பிராணாயாமம், யோகா, மெடிடேஷன், உடற்பயிற்சி, உணர்வுகளை மனதில் தேக்கி வைக்காமல், பகிர்ந்து கொள்ளுதல், சரிவிகித உணவு, முறையான நல்ல தூக்கம், நேர நிர்வாகம், நல்ல நட்பு, இசை, போன்றவை அதிக அளவில் உதவக் கூடும்!
மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது ஒரு கலை – அதை அனைவரும் பின் பற்றுவது, தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்க உதவும்!