
தென்றலென நடைபோடும் காற்றே, மூங்கில்
சிறுதுளையின் உள்நுழைந்து வெளியே வந்து
நன்றிசையாய் மாறுகின்ற வியப்பே வாழி
நானிலத்தில் உயிரினத்தின் உயிரே வாழி
கன்றுகுரல், இடியோசை, கிளியின் பேச்சு,
காதலிள மடவாரின் பாடல் எல்லாம்
ஒன்றுகலந் துன்மீது வருமே ஏறி
ஓசைகளைச் சுமந்துவரும் தேரே வாழி !
இறப்புக்கும் துயிலுக்கும் வேறு பாடாய்
இருப்பதுன்றன் இயக்கமன்றோ காற்றே வாழி
சிறப்புற்ற ஆற்றலதன் இறையே வாழி
செடிகொடிகள் அசைவுமுன்றன் இசைவே அன்றோ.
பிறப்புற்ற உயிரெல்லாம் உன்றன் மக்கள்
பிணைப்பதுவும் பிரிப்பதுவும் நீயே அன்றோ
அறப்பணிகள், மறச்செயல்கள் ,அழிவு, தோற்றம்
அத்தனையும் நீயன்றோ காற்றே வாழி !