கோகிலத்துக்கு அந்த ஐ சி யு சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. மார்பில் ஒரு வண்டி சரளைக்கல்லைக் கொட்டியது மாதிரி தொடர்வலி. உடம்பின் மற்ற பாகங்களிலெல்லாம் ரணமயம். தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு கணுக்களிலும் அணுஅணுவாக மரணவேதனை தெறித்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த வலியெல்லாம்மீறி, சிரிப்புமட்டும் குபுக்குபுக் என்று தண்ணீரில் எழும்பும் காற்றுக் குமிழிபோல வந்துகொண்டிருந்தது. அது தொண்டைக்குழியில் ஆரம்பித்து வாய்க்குள்ளேயே முடிந்துவிடுகிறது. வாயைவிட்டு வெளியே வரவில்லை. சிரிப்பும் சரி, துக்கமும் சரி அவள் வாயைவிட்டு வெளியேவந்ததில்லை. அதுதான் அவளது 92 வயதின் சாதனையா? அதில்தான் இருக்கிறதா அவள் வாழ்க்கையின் ரகசியம்?
கோகிலா மெல்லக் கண்ணை விழித்துப் பார்த்தாள். வெளிச்சம் கண்ணைக் கூசியது. கண்ணை இடுக்கிப் பார்த்தாள். சில மாதங்களாகக் கையைப் புருவத்துக்கிட்டேவைத்து இடுக்கிப் பார்த்தால்தான் மனிதர்கள் வருவது தெரிகிறது. அதுவும் மங்கலாகத்தான் தெரியும். வாய் கொஞ்சம் கோணலாகப்போய் ஏழெட்டு வருஷம் இருக்குமா? மேலேயே இருக்கும். பேச்சு பரவாயில்லை . பேசமுடிகிறது. அது மற்றவர்களுக்கும் புரிகிறது. சாப்பிடுவதற்கு அவள்படும் கஷ்டம் அவளுக்குத்தான் தெரியும். நாக்கு மட்டும் இப்படி அப்படி அலையும். மூக்குக்குக் காற்றை லேசாக இழுத்துவிடுவதே கஷ்டமாக இருக்கிறது. வாசனையையும், நாற்றத்தையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிற சக்தியெல்லாம் அதற்கு எப்பொழுதோ போய்விட்டது.
எது எப்படி இருந்தாலும் கோகிலத்துக்குக் காதுமட்டும் சரியான பாம்புக்காது. சுத்தமாகக் கேட்கும். மெல்லப் பேசினாலும் கேட்கும். சின்ன வயதில் தெருமுனையில் இருக்கிற பைப்பில் புஸ்ஸுன்னு காத்துச் சத்தத்தோடு தண்ணி வருகிற சத்தம் முதலில் அவளுக்குத்தான் கேட்கும். தோட்டத்தில் மல்லிகைப் பூ கொடிகிட்டே நல்லபாம்பு மூச்சுவிடும் சத்தம்கூடக் கோகிலத்துக்கு மட்டும்தான் கேட்கும்.
தான் ஆஸ்பத்திரியில் இருக்கிறோம் என்பது ஒருமாதிரிப் புரிந்தது. அது இரவா பகலா என்பது தெரியவில்லை. என்னவாக இருந்தால் என்ன? யாரையும் பக்கத்தில் காணோம். எங்கோ சற்றுத்தள்ளி நர்ஸ் விடும் குறட்டைச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மூக்குக்குள்ளே ஒரு குழாய். அதன் வழியே ஏதோ ஒன்றை ஊற்றுகிறார்கள். அவள் மூச்சுவிடும் சத்தம் அவள் காதுக்கே கேட்கிறது.
மீண்டும் மீண்டும் சிரிப்பு அலைமாதிரி வந்துகொண்டே இருந்தது. அந்த சிரிப்பு அலைகளின் ஊடே அவள் வாழ்க்கைக்கதை நிழற்படமாக, திரைப்படம்போல விரிந்தது. சிரிப்பில் ஒரு வலி இருக்க முடியுமா? இருக்கிறதே! ஒவ்வொருமுறை அளவில்லாத சந்தோஷத்தில் சிரிக்கும்போது அவளுக்குத் தாங்கமுடியாத வலி வரும். மாதவிடாய் காலத்தில் வரும் வலியைப்போல. பிரசவ காலங்களில் ஏற்படும் இடுப்பு வலியைப்போல. இது பெண்களுக்குமட்டும் வரும் வலி என்று முதலில் எண்ணிக்கொண்டாள். ஆனால் மற்ற பெண்களுக்கு அந்தமாதிரி வலி வராததால் இந்த வலி தனக்குமட்டும் இறைவன் தனியாகக் கொடுத்த வரம் என்று நினைத்துக்கொண்டாள்.
முதல்முறையாக அவளுக்கு அந்த வலி வந்ததை அவளால் ஆயுசுக்கும் மறக்கமுடியாது. அவளுக்குத் திருமணமாகி ஐந்து வருஷம் கழித்து சாந்திக் கல்யாணம் செய்துவைத்தார்கள். கல்யாணமாகியும் பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டிருந்த கோகிலத்துக்கு அந்த சாந்திக் கல்யாணம் முதலில் பெரியதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அவள் கணவன் புது மாதிரி விளையாடியபோதுதான் அவளுக்குத் தாங்கமுடியாத சிரிப்பும் சொல்லத்தெரியாத வலியும் ஒரேசமயத்தில் வந்தன.
அதன்பின் பல வித்தியாசமான வலிகள் – இந்தியா சுதந்திரம் அடைந்த அதே இரவில் முதல் பிள்ளை பிறந்தபோது, அடுத்து அடுத்து இரண்டு பெண்கள் பிறந்தஉடனே இறந்தபோது, கணவன் அவளைவிட்டு ஓடிப்போனபோது, தனி ஒருத்தியாக இட்டிலிக்கடை வைத்துப் பையனைப் படிக்க வைத்தபோது, அவள் தனிமையைப் பயன்படுத்திக்கொள்ளச் சில தெருநாய்கள் அவளைப் பார்த்தபோது, சோற்றுக்கு வழியில்லாமல் பல நாட்கள் தண்ணியையே குடித்துவிட்டுப் படுத்தபோது, வெள்ளத்தில் குடிசை இடிந்து விழுந்தபோது, பத்துவயதுப் பையனை ‘ஸ்வீகாரமாகத் தா’ என்று ஊர்ப் பெரியமனிதர் கட்டாயப்படுத்தியபோது, பையன் வேலைக்குப் போகிறேன் என்று அவளுக்குத் தெரியாமலேயே மலேயா போனபோது, தான் தனிமரமாகி விட்டோமோ என்று நாற்பது வயதில் தவித்து, அந்தத் தவிப்பின் உச்சியில் அரளிவிதையைத் தின்று தற்கொலைக்கு முயன்றபோது வலிகளின் எல்லாப் பரிணாமத்தையும் அனுபவித்தாள். ஆனால் ஒவ்வொரு வலியும் சிரிப்பில்தான் முடியும். கடவுளிடம் தனி வரம்பெற்றவளாயிற்றே!
அதுவரை வலிகளின் அடிச்சுவட்டிலேயே நடந்துவந்திருந்த அவள் கால்கள், அவளுடைய நாற்பத்திரண்டாவது வயதில்தான் முதன் முறையாக ஒரு இடத்தில் நின்றது. அது அவள் வாழ்க்கைக்குப் புதிய பாதையைக் காட்டியது.
****************
ஐ சி யுக்குள் டாக்டர்கள் நுழைவதுபோல இருந்தது. தூங்கிக்கொண்டிருந்த நர்ஸ் விழித்துக்கொண்டு அவர்களை அழைத்துக்கொண்டு கோகிலம் படுத்திருக்கும் படுக்கைக்கு வந்தாள். கோகிலத்தின் கண்கள் மூடியிருந்தாலும் காதுகளில் அவர்கள் பேசுவது விழுந்தது. பெரிய டாக்டர் மற்றவர்களுக்கு இந்தக் கேஸை விவரித்துக்கொண்டிருந்தார். மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் வெடித்திருக்கின்றன. அதனால் அவளது நினைவு பாதிக்கப்பட்டிருக்கும். அவளால் எதையும் புரிந்து கொள்ளமுடியாது என்பதை அழகான ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டிருந்தார். இன்னும் இருபத்துநான்குமணி நேரத்தில் அவள் வாழ்க்கை முடிந்துவிடக்கூடும். ஆனால் அவளை எப்படியாவது வெண்டிலேட்டரில் வைத்தாவது உயிருடன் வைத்திருக்கவேண்டியது மிகமிக முக்கியம் என்றார். அதற்குக் காரணம் நாட்டின் பிரதமமந்திரி அவரைப் பார்ப்பதற்கு மறுநாள் வருகிறார் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.
தன்னால் எதையும் புரிந்துகொள்ளமுடியாது என்று பெரிய டாக்டர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னது கோகிலத்துக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஏன் என்றால் டாக்டர் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் அவள் காதுக்குக் கேட்டன. அவற்றின் அர்த்தமும் நன்றாகப்புரிந்தது.
போனமாதம் அவளுக்குப் பிரதமமந்திரியின் செயலாளரிடமிருந்து போன் வந்தது. இன்னும் சிலநாட்களில் கோகிலத்தின் ஐம்பது ஆண்டு சேவையைப் பாராட்டி அவளுக்கு உலகின் முதன்மையான ‘மதர் தெரசா’ விருது வழங்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் அவளுக்கு மூச்சு முட்டுவதுபோல இருந்தது. தலை கிறுகிறுவென்று சுத்துவதுபோல இருந்தது. தனக்கு இந்தப் பட்டம் பதவியெல்லாம் தேவையா என்ற எண்ணம்தான் அவளுக்குப் புதிய வலியைக் கொடுத்தது. இந்தமுறை வலியுடன் இணைந்த சிரிப்பு வருவதற்குள் மயங்கி விழுந்துவிட்டாள்.
அதிலிருந்து அந்த ஆஸ்பத்திரியில் ஐ சி யூவில்தான் இருக்கிறாள். இந்தியாவில், அதுவும் டெல்லியில் மிகச் சிறந்த மருத்துவமனை அது. அவளுக்கு என்னமோ பிரதமர் வருவதற்குள் தன் வாழ்க்கை முடிந்துவிடும் என்று தோன்றியது. பிரதமருக்குப் பதிலாக ஓடிப்போன தன் கணவனோ, மகனோ, அல்லது பிறந்த உடனே செத்துப்போன மகளோ வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவர்கள் நினைவு அவளுக்குப் பழைய வலியை ஞாபகப்படுத்தியது. சிரிப்பும் இலேசாக வருவதுபோல் இருந்தது. மரணவலி என்பது அப்படித்தான் இருக்குமோ? அதைத்தான் கோகிலம் பலமுறை அனுபவித்தவள் ஆயிற்றே!
கோகிலம் சிரித்துக்கொண்டே முதன்முறையாக வலியின்றி செத்துப் போனாள்.
மறுநாள் இந்தியா மற்றும் உலகப் பத்திரிகைகள் அனைத்திலும் அவளது வாழ்க்கை வரலாறு விவரமாக நான்குபத்திகளில் வந்திருந்தது.
‘கோகிலா மா‘ என்று ஆயிரக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட கோகிலம் தனது நாற்பத்திரண்டாவது வயதில் ஆயாவாக செஷையர்ஹோமில் வேலைசெய்ய டெல்லிக்கு வந்தார்.
யார் அவரை அங்கு கொண்டுவந்து சேர்த்தார்களோ தெரியாது. ஆனால் அது நாட்டுக்கே பயனுள்ள ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் சேவைசெய்வதே தன் வாழ்க்கையின் இலட்சியமாக அவர் எடுத்துக்கொண்டார்.
சில வருடங்களில், தன் வாழ்க்கையின் பலன் மற்றவர்களுக்குச் சேவைசெய்வதே என்று உணர்ந்துகொண்டார். டெல்லியிலேயே மற்றொரு பெரிய முதியோர்இல்லத்தில் சேவைசெய்ய அழைத்தார்கள். அங்கு சென்றபிறகு அவரது வாழ்வின் மாற்றங்கள் அவருக்கே ஆச்சரியத்தைக்கொடுத்தன என்று அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்தபோது பத்திரிகையாளார்களிடம் பேசும்போது ‘கோகிலா மா’ கூறினார்.
எத்தனை தொழுநோயாளிகளுக்கு அவர் அன்னையாக இருந்திருக்கிறார்! புற்றுநோயால் துவண்டுகிடக்கும் மனித உடல்களின் துயரங்களைத் துடைத்தது ‘கோகிலா மா’வின் அன்புக்கரம். ஊனமுற்ற பிள்ளைகளைத் தன் தோளிலும் மடியிலும் தூக்கிவைத்துக் கொஞ்சும் வழக்கம் அவருக்கு மிகவும் பிடித்தது.
அந்த முதியோர் இல்லத்தை நிர்வாகிகள் தொடர்ந்து நடத்த முடியாமல்போய் நிறுத்திவிடலாம் என்று நினைத்தபோது ‘கோகிலா மா’ தன்னந்தனியாக அதை நடத்தியே தீருவேன் என்று முன்வந்தபோது அனைவரும் அதிசயப்பட்டனர். சரியாக எழுதப் படிக்கத் தெரியாத, கிராமத்திலிருந்து வந்த, ஒரு பெண்ணால் முதியோர் மற்றும் ஊனமுற்றவர் இல்லத்தைத் திறம்பட நிர்வகிக்கமுடியுமா என்று எண்ணினர். ஆனால் சேவைசெய்வதில் அவருக்கு இருந்த உண்மையான ஆர்வம் அவரால் இதுவும் முடியும், இன்னமும் முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.
அதைப்போன்ற தொண்டுநிறுவனங்களை நாட்டின் பலபகுதிகளில் நிறுவினார். அவரது சேவைநிறுவனங்களில் ‘அன்பு பாசம் பரிவு ‘ இவை மூன்று மட்டும்தான் இருக்கும். பரிவைத்தேடும் எல்லா மனிதருக்கும் ‘கோகிலா மா’வின் நெஞ்சில் இடம் இருந்தது.
தனக்கே சேவைசெய்ய ஆட்களைத்தேடும் 92வது வயதிலும் மற்றவர்களுக்குச் சேவை செய்துவந்த ‘கோகிலா மா’விற்கு ‘’மதர் தெரசா’ பட்டம் என்ன ‘பாரத ரத்னாவே’ கொடுக்கலாம்.
உலகத்தின் ஒவ்வொரு கோடியிலும் இருக்கும், பிறப்பால், மனதால், உடலால், வியாதியால் ஊனமுற்றுக் காயப்பட்டுத் துன்பத்தில் துவளும் மனிதமனங்களுக்கு, ஆயாவாக, அன்னையாக, தெய்வமாக இருந்த ‘கோகிலா மா’ தனது 92 வயதில் சிரித்தமுகத்துடனே நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
அந்தச் சிரித்தமுகத்திற்குப் பின்னால் இருந்த வலிகள் யாருக்கும் தெரியாது.
அவருக்காகச் சொர்க்கத்தின் கதவுகள் திறந்தாலும் நரகத்தில் தவிக்கும் பாவிகளுக்குச் சேவைசெய்ய அவர் நரகத்தையே தேர்ந்தெடுக்கக்கூடும்.
அதுதான் ‘கோகிலா மா’ .