
என் அரக்கு நிறப் பட்டின்
” மரமர” ஓசையின் நடுவே
மௌனமானதோர்
அரற்றல் ஒலி கேட்டீர்களா?
அல்லது ,
பளபளக்கும் வைரங்களின்
பகட்டின் பின்னே
பரிதவிக்கும் மனதையாவது
கண்டதுண்டோ யாரும்?
இல்லையா?!!!!
பன்மாட வீட்டின் சாளரத்தினூடோ,
மகிழுந்து ஒலியெழுப்பியின் ஓசையினூடோ
கேட்கிறதா மனதின் ஓலம்?
இருக்கவே முடியாதுதான்…..
கவனமாகத் தேர்ந்தெடுத்து
தினம் தவறாமல் அணிகின்றனே….
வகைவகையாய் முகமூடிகள்!
அவை கண்டிப்பாக மறைத்திருக்கும்.
ஏனெனில் ,
என் அணிகலன்களில்
அவையே சிறந்தவை….
அத்தியாவசியமானவையும் கூட.