சூரியதேவன் ராகுவின் பிடியிலிருந்து முழுவதுமாகத் தன்னை விடுவித்துக்கொண்டான். தனக்குத் துணையாயிருந்த சந்திரன் மயங்கிக்கிடப்பதைப் பார்த்தான்.
அவன் மனதில் எரிமலை வெடித்துக்கொண்டிருந்தது.
ஸந்த்யாவிற்காகக் காந்த சிகிச்சைசெய்ய ஒப்புக்கொண்டதும் அதன் விளைவாகச் சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே ஸந்த்யாவின் பேரழகு தன்னைத் தாக்கியதில் இருவரும் நிலை குலைந்து உறவுகொண்டதையும் அதன் தொடர்ச்சியாக ராகு தன்னைப் பிடித்துத் தன்னுடைய சக்தியைப் பெற்றுக்கொண்டதையும் எண்ணினான். ஸந்த்யாவும் குற்ற உணர்ச்சியில் அங்கிருந்து சென்றுவிட்டாள் என்பதை உணர்ந்தான். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ராகு என்ற எண்ணம் அவன் மனத்தில் மேலோங்கி நின்றது. அவனுக்கு ராகுமீது அடக்கமுடியாத ஆத்திரம் வந்தது. அவனை அழித்துவிடவேண்டும் என்ற அளவுக்குக் கோபம் பொங்கியது.
எங்கே அந்த ராகு என்று தேடினான். சூரியனைத் தன் வயிற்றில் அடக்கிவைத்து அவனுடைய சக்தியைக் கிரகித்துக் கொண்ட ராகு அவனை விடுவித்தபிறகு அதுவும் சூரியன் விழிக்கும்போது அருகில் இருந்தால் ஆபத்து என்பதை நன்கு உணர்ந்ததால் அவன் விழிக்கும்முன்பே அங்கிருந்து பறந்து செல்ல முயன்றான்.
ஆனால் சூரியதேவன் சக்தி இழந்திருந்தாலும் புத்தி இழந்துவிடவில்லை. தனது கிரணப் பார்வையாலேயே ராகு இருக்கும் இடத்தை அறிந்து, அவன் தப்பித்துச் செல்ல இயலாதவாறு எரி வளையத்தை உண்டுபண்ணினான். எரியும் வளையத்துக்குள் மாட்டிக்கொண்ட ராகு அனலில் அகப்பட்ட பாம்புபோலத் துடித்தான். ஆனால் அமிர்தமுண்ட சொர்ணபானு அரக்கன் அல்லவா அவன். அவனை எந்தச் சக்தியும் அழித்துவிட முடியாது. அப்படிப்பட்ட வரத்தை பிரும்மாவிடம் வாங்கியிருக்கிறான். அந்த வரத்தைப் பயன்படுத்தித் தன்னை நிழலாக மாற்றிக்கொண்டான். நிழல் வடிவம் எடுத்ததால் சூரியனின் சுட்டெரிக்கும் எரிவளையம் அவனை ஒன்றும் செய்யமுடியவில்லை. நிழல் வடிவில் அவனுக்குக் கிடைத்த இன்னொரு அனுகூலம் சூரியதேவனின் கண்களுக்கும் அவன் புலப்படவில்லை . மனத்துக்குள் சூரியதேவனைப் பழிவாங்கிய குரூர திருப்தியில் அந்த மாளிகையை விட்டுப் பறந்து வானத்தில் சென்றுவிட எண்ணினான்.
சூரியதேவன் கண்களில் அவனால் இருளைப் பூசமுடிந்தது. ஆனால் விஷ்வகர்மா அமைத்த அந்த மண்டபத்திலிருந்து வெளியேற அவனுக்கு எங்கும் வழி கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் சூரியனை விழுங்கவந்த தன்னை நொந்துகொண்டான். மயக்கம் தெளிந்து சந்திரன் எழுந்துவிட்டால் தன் நிழல் வடிவு மறைந்து எல்லோர் கண்களுக்கும் தான் தென்படுவோமே , தன்னைச் சூரியதேவன் பிடித்தால் என்னாவாகும் என்ற எண்ணம் அவனுக்குப் பயத்தைக் கொடுத்தது.
அந்த மண்டபத்தை நோக்கி விஷ்வகர்மா வருவதைப் பார்த்தான். அவன் பீதி இன்னும் அதிகமாயிற்று. சூரியனிடமிருந்து தப்பினாலும் தேவசிற்பி விஷ்வகர்மாவின் பார்வையிலிருந்து தப்பமுடியாது என்பதைத் தெரிந்துகொண்ட ராகு தவித்தான். அவனுக்கு உதவுவதற்காகவோ என்னவோ விஷ்வகர்மாவின் பின்னால் ஸந்த்யாவும் வந்து கொண்டிருந்தாள். . சூரியதேவனும் ராகுவைத் தேடுவதை விட்டுவிட்டு விஷ்வகர்மா வருவதையும் லட்சியம் செய்யாமல் ஸந்த்யாவை உற்றுப் பார்த்தான். அவன் பார்வையில் ஸந்த்யாவின் அழகு ஜொலித்தது. அது மட்டுமல்லாமல் அவளின் அழகு நிழலும் தரையில் படர்ந்தது.
அந்தக் கணத்தில் தான் தப்பும் வழியைக் கண்டுகொண்டான் ராகு. எவர் கண்ணிலும்படாது தன் நிழலை ஸந்த்யாவில் நிழலில் மறைத்துக்கொண்டான். ராகு ஸந்த்யாவின் நிழல் சாயாவாக மாறிவிட்டான். இனி அவனை சூரியதேவனோ விஷ்வகர்மாவோ ஏன் பிரும்மதேவர் வந்தால்கூடக் கண்டுபிடிக்க முடியாது என்பதை அறிந்த ராகு இனி சுலபமாகத் தப்பிவிடலாம் என்று உறுதிகொண்டான்.
அவன் எண்ணப்படியே காரியங்கள் நடைபெற்றன.
ஆனால் அந்த சாயா ஏற்படுத்தப்போகிற விபரீதங்கள் எப்படி சூரியனை, ஸந்த்யாவை, விஷ்வகர்மாவை,ஏன் அகில உலகத்தையே ஆட்டுவிக்கப் போகின்றன என்பதை அந்தக் கணத்தில் யாரும் உணரவில்லை. அப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் சூரியன் ஸந்த்யாவை அந்தக் கணத்திலேயே தன் எரி வளையத்தில் சுட்டுப் பொசுக்கியிருப்பான். விதி வலியது. ராகுவின் பார்வையிலிருந்து சூரியன் தப்பலாம் . விதியின் பார்வையிலிருந்து அவனாலும் தப்பமுடியவில்லை.
தப்பமுடியாது.
அதுதான் விதி.
(தொடரும்)
எம கதை (இரண்டாம் பகுதி)
சித்திரகுப்தனின் புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் கசிந்துவிட்டால் அது பூலோகத்தை மட்டுமல்லாமல் தேவ உலகத்தையும் ஆட்டிப்படைக்கும், பிறகு பிரும்மா விஷ்ணு சிவன் இந்த மூன்று பேர்களின் கோபத்தை யாராலும் தாங்கமுடியாது என்பதை அறிந்த எமன் கலங்கினான். அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு தவறுகளுக்குப் பதில் எழுதியே அவனால் தாளமுடியவில்லை. ஏதாவது பெரிய அளவில் தவறு நடந்தால் சித்ரகுப்தனை மன்னித்தாலும் தன்னை யாரும் மன்னிக்கமாட்டார்கள் என்று எமன் பயந்தான்.
அதனால் நாரதரிடம் அதைப்பற்றிக் கேட்டு, வரப்போகும் ஆபத்தைப்பற்றி சபைக் குறிப்பில் இடம்பெறச் செய்துவிட்டால் நாளை நடக்கும் விசாரணையின்போது அது தனக்கு உதவக்கூடும் என்று அதைப்பற்றிய தன் கருத்தை ஆழமாகப் பதிவுசெய்தான் எமன். அவுட்சோர்ஸ் செய்யும்போது, தகவல் தெரிந்த நபர்கள், தங்கள் மாமன் மச்சான் இவர்களின் சாவு நாளைத் தெரிந்துகொண்டு சொல்லிவிட்டால், அதனால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு அளவே இருக்காது. இன்னும் சிலர், தகவல்களை நல்ல விலைக்குச் சில ஏஜென்சிக்கு விற்றுவிட்டார்கள் என்றால், அவர்கள் அதை வைத்துக்கொண்டு நாடிஜோதிடம்மாதிரி புதிய பிஸினஸ் ஆரம்பித்து விடுவார்கள். அதன்பின் சிவ தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. மார்க்கண்டேயன் விவகாரத்தில் சிவபெருமானிடம் வாங்கியதைப்போல் பலமடங்கு உதை வாங்கவேண்டி நேரிடும் என்பதை உணர்ந்தான் எமன்.
அதனால் தகவல் பாதுகாப்புச் சரிவரத் தெரிந்தால்தான் இதற்குத் தான் அனுமதி அளிக்கமுடியும் என்று திட்டவட்டமாக எமன் கூறினான்.
எமன் கூறியதைக் கேட்டதும் அங்கிருந்த எல்லோரும் கொஞ்சம் ஆடிப்போய்விட்டனர். ஆனால் நாரதர் இந்தக் கேள்வியை யாராவது கேட்பார்கள் என்பதை அறிந்து முன்கூட்டியே அதற்கான பதிலையும் தயார் செய்துகொண்டு வந்திருந்தார்.
“எனதருமை எமதர்மராஜரே! உங்கள் கேள்வி மிகவும் சரியான கேள்வி! அதுவும் சரியான சமயத்தில் கேட்ட – கேட்கப்படவேண்டிய கேள்வி! இதைக் கேட்டதும் மும்மூர்த்திகள்கூடக் கொஞ்சம் கலங்கிப் போய்விட்டார்கள் என்பதை அவர்களின் முகக் குறிப்பே சொல்கிறது. சிவபெருமானின் தலையிலிருந்து சந்திரன் கீழே விழுந்துவிட்டான். விஷ்ணுவின் சக்கரம் சுற்றுவதை சில வினாடிகள் நிறுத்திவிட்டன. பிரும்மாவின் நான்கு முகங்களும் ஒரே திசையை அதாவது எமனை நோக்கியே பார்க்கின்றன. தேவிகளின் கரங்களும் தங்கள் நாதர்களின் கரங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. முருகனோ பேச்சை மாற்ற விநாயகப் பெருமானின் தும்பிக்கையை முழம்போட்டு அளக்க ஆரம்பித்துவிட்டார். விநாயகப் பெருமானும் அதைப் புரிந்துகொண்டு தம்பியின் முகங்களில் இருக்கும் கண்களை எண்ண ஆரம்பித்துவிட்டார். சித்திரகுப்தனோ தான் ராகு காலத்தில் இந்தத் திட்டத்தை ஆரம்பித்து விட்டோமோ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
“உங்கள் அனைவருடைய கவலையையும் போக்கவேண்டியது இப்போது என் கடமை ஆகிறது.
யாருக்கும் தெரியாத – தெரிந்து கொள்ளக்கூடாத தகவல்கள் கசிந்தால் அது விளைவிக்கும் அனர்த்தங்கள் நம் அனைவருக்கும் தெரியும்.”
இப்படிச் சொல்லிக் கொண்டே நாரதர் யாரும் அறியாமல் தன் தம்பூராவின் நரம்பை மெல்லத் தடவினார். அது பூலோகம் சென்று இணையம் வழியாக விக்கிபீடியாவெல்லாம் சென்று தகவல் என்றால் என்ன என்பதற்கு எவ்வளவு ஜார்கன் இருக்கமுடியுமோ அவ்வளவு தகவல்களைக் கொட்டியது . அதை அப்படியே நாரதர் வார்த்தையில் கொட்டினார்:
” தகவல் என்னும் கருத்துரு அன்றாடப் பயன்பாடுகளிலிருந்து தொழில்நுட்பப் பின்புலம் கொண்ட பொருள்கள் வரை பல்வேறு பொருண்மை பரவல் கொண்டதாக இருந்தாலும் எளிமையாக, தகவல் என்பது குறிப்பிட்ட செய்தியின் அறிவிப்பு வடிவம் ஆகும்.
எனவே இது தரவு, அறிவு எனும் கருத்துப் படிமங்களோடு தொடர்புள்ள சொல்லாகும்.
தரவு என்பது குறிப்பிட்ட அளபுருக்கள் சார்ந்த இயல்மதிப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது.
அறிவு என்பது இயல்பொருள்கள் அல்லது நுண்ணிலைக் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் தகவு அல்லது திறன் ஆகும். தரவைப் பொறுத்த வரையில் அதன் நிலவலுக்கு ஒரு நோக்கீட்டாளர் தேவையில்லை. ஆனால், அறிவு என்பதற்கு அறியும் நோக்கர் அதாவது அறிபவர் கட்டாயமாகத் தேவைப்படும்.
அடிப்படையில் தகவல் என்பது ஓர் அமைப்பில் நிலவும் முதல்-விளைவு நிகழ்வின் பரவுதல் ஆகும். தகவல் ஒரு செய்தியின் உள்ளடக்கமாகவோ நிலவுகை குறித்த நேரடியாக அல்லது மறைமுகமாக நோக்கீட்டின் உள்ளடக்கமாகவோ அமையும். காணும் எதுவும் தன்னளவில் ஒரு செய்தியாகும். இந்தப் பொருளிலும் தகவல் செய்தியின் உள்ளடக்கம் ஆகிறது. தகவலைப் பல்வேறு வடிவங்களில் குறிமுறைப்படுத்தி செலுத்தலாம் அல்லது விளக்கலாம். விளக்கத்தை காட்டாக, தகவலைக் குறிகளின் நிரலாக வரிசைப்படுத்தலாம் அல்லது குறிகைகளாக்கி அவற்றை வரிசைப்படுத்தி அனுப்பலாம். அல்லது காப்பாகத் தேக்கிவைக்க கரந்தநிலைக் குறிகளில் குறிமுறைப்படுத்திச் செலுத்தலாம் அல்லது பாதுகாக்கலாம்.
தகவல் உறுதியின்மையைக் குறைக்கிறது. ஒரு நிகழ்வின் உறுதியின்மை என்பது அதன் நிகழ்தலின் நிகழ்தகவு ஆகும். இது நிகழ்தலுக்கு தலைக்கீழ் விகிதத்தில் அமையும். ஒரு நிகழ்வு கூடுதலான உறுதியின்மையோடு இருந்தால், அதன் உறுதியின்மையைத் தீர்க்க கூடுதலான தகவல் தேவையாகும். தகவலின் அலகுகளாக பிட், நேட் என்பவை அமைகின்றன. தகவல் எண்பது செய்தி எனும் கருத்துப்படிமம் பல்வேறு சூழல்களில் பல்வேறு பொருளைக் குறிக்கிறது.
தகவல் என்பது கட்டுத்தளை, கருத்துபுலப்பாடு, கட்டுபாடு, தரவு, வடிவம், கல்வி, அறிவு, பொருள், புரிதல், உளத்தூண்டல்கள், படிவம் (பாணி), புலன்காட்சி, உருவகம், இயலடக்கம் ஆகிய கருதுபாடுகளுடன் நெருக்கமாக உறவு பூண்டுள்ளது.
தமிழில் தகவல் என்பது, செய்தி என்னும் பொருள்படவே முன்னர் வழங்கி வந்ததாகத் தெரிகிறது.
ஆங்கிலத்திலும், இதற்கு ஈடான information என்னும் சொல்லுக்கு, “தகவல் சொல்லும் செயல் எனப் பொருள் தரப்படுகிறது.
இது கல்வி, விளக்கம், பயிற்சி என்பவற்றில் அடங்கியுள்ளது போல, மனம் அல்லது எண்ணத்தின் வினைகளுக்கு வடிவம் கொடுத்தல்” என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
தகவல் என்னும் சொல்லை உட்படுத்தியுள்ள பல தொடர்கள் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளன. தகவல் சமூகம், தகவல் புரட்சி, தகவல் தொழில்நுட்பம், தகவல்
அறிவியல் என்பன அவற்றுட் சில. எனினும் தகவல் என்னும் சொல் அது கொண்டுள்ள பல்வேறு பொருள்களைக் கவனத்தில் கொள்ளாது பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.
இன்றைய தொழில்நுட்பப் பின்னணியில் தகவல் என்பது “ஆர்வத்துக்குரிய முறைமையொன்றின் நிலை” ஆகும். இதற்கு உருக்கொடுக்கும்போது அது செய்தியாகிறது. இதலிருந்து, தகவல் என்பது பெறுனர்களால் பெறப்படும் செய்திகளில் அடங்கிய உள்ளடக்கம் எனலாம்.
தகவல் என்பது காணும் ஏதோ ஒன்றைப் பற்றியது ஆகும். இவ்வகையில் நோக்கும்போது, தகவல் என்பது துல்லியத் தன்மை கொண்டிருக்க வேண்டியதில்லை. இது உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம், அல்லது விழும் மரமொன்றின் ஒலியாகக்கூட இருக்கலாம். பொதுவாக, கிடைக்கும் செய்தியில் உள்ள தகவலின் அளவு கூடும்போது அதன் துல்லியத் தன்மையும் மிகும்” (***)
நாரதர் ரொம்ப ஓவராகப் போவதாகத் தெரிந்த விஷ்ணு, சக்கரத்தால் அவரது தம்பூராவின் தந்தியை அறுக்க இணையத்தின் தகவல் துண்டிக்க, நாரதரும் நிலைமை அறிந்து சப்ஜெக்டுக்கு வந்தார்.
“தகவல் என்பது பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. அந்தப் பார்வையில் சிறிது காட்சிப் பிழையைக் கொடுத்துவிட்டால் தகவல் என்னவென்று பார்ப்பவர்களுக்கு அது புரியாது. இதை மனதில்கொண்டு நாம் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவரவேண்டும். எல்லாவற்றிற்கும் ஆதாரமாக அது இருக்கவேண்டும். அதை முதலில் புகுத்திவிட்டால் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.”
” அது, அது என்கிறீரே, அது என்ன? ” என்று பொறுமை இழந்து எமதர்மராஜன் கேட்டார்.
“அதுதான் ஆதார் எண் ” என்றார் நாரதர்.
(தொடரும்)
*** https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D