என் க்ளையன்ட் ஒருவர் விடைபெற்று முடித்து, கதவைத் திறந்து வெளியேறியதுமே, சட்டென்று இருவர் உள்ளே நுழைந்தார்கள். ஒருவர், “ஸாரீ, ரொம்ப அவசரம். நான் சுகன். எனக்கு உங்களைத் தெரியும். இவர் என் நண்பர். இவங்க மூத்த மக, காதல் விவகாரத்தால் வீட்டிலே அடைத்து வைத்திருக்கிறோம். நான்தான் உங்களிடம் அழைத்துவரச் சொன்னேன். என்னிக்கு வரலாம்?” மூச்சு விடாமல் முடித்தார். அவளை அடைத்து வைத்திருந்ததால், நாளை என்றேன். உடனே அந்த அப்பா கண்களில் நீர் வழிய “ராணி நல்ல பொண்ணு, இப்படி..” முடிக்காமல் வெளியே சென்றுவிட்டார்.
அடுத்த நாள் வந்தார்கள். ராணி கசங்கிய சுடிதார், வாராத தலை, என்றைக்கோ பின்னிய பின்னல். அவளின் இடப்பக்கத்தில் அவள் அப்பா, வலப் பக்கத்தில் ஒரு பெண்மணி (அம்மா?), பின்னே சுகன். உள்ளே நுழைந்ததும் சுகன், “நான் வெளியே இருக்கிறேன். இது இவர்கள் குடும்ப விவகாரம். ஏய் ராணி, மேடத்துக்கிட்ட எல்லாம் சொல்லு. மேடம், ஃபீஸ் நானே தருகிறேன்.” என்று சொல்லி வெளியேசென்றார்.
ராணியின் அப்பா என்னைப் பார்த்து, “என்னன்னு புரியவே இல்லை, நல்லா படிக்கிற புள்ள.” குபுக்கென்று அழ ஆரம்பித்தார். வந்த பெண்மணி, ராணியைப் பார்த்து, “பாரு அப்பா எப்படி அழறார், எல்லாம் உன்னாலே. மேடம், நா இவ அம்மா. பட்டறை இருக்கு. எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்ததுக்கு இப்படியா செய்யணும்?” என்றாள்.
ராணி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கீழே பார்த்தபடி இருந்தாள். அவளைப் பெயரிட்டுக் கூப்பிட்டு என்னிடம் பேச விரும்புகிறாளா என்று கேட்டேன். தலையை வேகமாக அசைத்தாள். பெற்றோரிடம் அவளைத் தனியாகப் பார்க்க விரும்புகிறேன் என்றேன். ஏன் என்று இருவரும் கேட்டதற்கு, பதிலளித்தேன், “உங்களை வைத்துப் பேசினால், உங்களுக்கு மன வருத்தமாகும். ராணிக்கும் கஷ்டமாக இருக்கும். இங்கு பேசுவதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டேன். தேவை இருந்தால்தான் சொல்வேன். நீங்களும் இங்கு பேசியதைச் சொல்ல ராணியை வற்புறுத்தக் கூடாது” என்றேன்.
பெற்றோர் வெளியேறியதும், ராணி பத்து நிமிடத்திற்குக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். தன்னை அடைத்து வைத்தது, என்னவோ செய்தது என்று ஆரம்பித்தாள். 12ம் வகுப்பில் படிக்கிறாள். படிக்கப் பிடிக்கும், எப்பொழுதும் முதல் ராங்க்தானாம்.
பத்தாவதிலிருந்து வீட்டில் கெடுபிடி அதிகம். அவள் பெற்றோருக்கு ஏதோ பயம். அவள் டீச்சர்களிடம், “ராணி குணவதியாக இருக்காளா?” என்றே கேட்பார்களாம். வெளியே சென்றாலே, ‘கீழே பார்த்து நட’, ‘யாரோடும் பேசாதே’ என்பார்களாம். இதற்கு முன்பு இப்படி எல்லாம் செய்யவில்லை என்றும் சொன்னாள்.
இதனாலேயோ என்னவோ, அவள் ஆசிரியர்கள், இவள் ஒரு மார்க் குறைந்தாலும் “என்ன சரியா இருக்கியா? காதல் கீதல் இல்லையே” என்று கேலியாகக் கேட்பார்களாம். இந்த முறை அவள் வகுப்புத் தோழன் சுரேஷ், இரண்டாவது ராங்க் வாங்குபவன், இவள் தனக்கென்றுத் தக்க வைத்திருந்த முதலாவது ராங்க்கைப் பறித்து வாங்கி விட்டான். சுரேஷ் தானாக வந்து, ஆறுதல் சொல்லிச்சென்றான். அவள் மனதிற்கு இதமாக இருந்தது.
அன்றிலிருந்து சுரேஷிடம் சந்தேகங்கள் கேட்பது, வாழ்த்துவது ஆரம்பமானது. அவனுடன் செலவிட்ட நிமிடங்கள் மிக இனிமையாக இருக்க, ஏதோ கிளர்ச்சி செய்தது. ஏதாவது சாக்குக் கண்டுபிடித்துப் பேசுவார்கள். நாளடைவில், சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீடு திரும்புவது என்றாயிற்று.
அடுத்த பரீட்சையில், இருவரும் 60-70 மதிப்பெண்கள் வாங்கினார்கள். வீட்டில், ஆசிரியர்கள், நண்பர்கள், எல்லாரும் கேட்டார்கள், சத்தம் போட்டார்கள். ராணி-சுரேஷ் ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்திக் கொண்டார்கள். திடீரென, ‘இது தான் காதல். காதல் என்றால் இதெல்லாம் சகஜம்ப்பா ‘என்று நகைத்தார்கள். கவலைப்படவில்லை.
ராணியின் அப்பா சந்தேகித்தார். ராணி-சுரேஷ்பற்றிக் கண்டுபிடித்து, அவளை உதைத்து, வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அறையில் பூட்டிவிட்டார்கள். ஸ்கூலில் லீவ் கேட்டுக்கொண்டார்கள். சுரேஷ் வீட்டிற்குப் போய், அவனைச் சத்தம் போட்டுவிட்டுப் பிறகு சுகன் சொன்னதால், என்னிடம் வந்தார்கள்.
ராணியிடம், அவள் கடந்துவந்த வாழ்க்கைப் பகுதிகளை வைத்தே அவளின் இன்றைய நிலையை விளக்கினேன். ஒவ்வொரு பருவத்திலும், மாற்றங்கள், சந்தோஷங்கள், திகைப்பு எல்லாம் உண்டு.
நம்முடைய சிறு வயதில், ஸ்கூல் போகப் பழகுகிறோம். முதலில் சிறிது நேரத்திற்கு, வெளி உலகம் பழகிக்கொள்ள, ஒழுங்கு வளர, மழலையர் பள்ளிக்குச் செல்லுகிறோம். எவ்வளவோ புது அனுபவங்கள், பலவற்றுக்குக் குதூகலம் அடைந்தோம். மூன்றே மணி நேரம் பள்ளி, விதவிதமாக பல வண்ண உடைகள் அணியலாம். பிறகு ஆரம்பப் பள்ளி, 5-6 மணி நேரம், சீருடை. பாட புத்தகங்கள் அதிகரிக்க, நண்பர்கள் கூடி, நல்லது-கெட்டது, சரி-தவறு தெரிய வந்தது. பாட்டு, நாடகம், விளையாட்டுப் பயிற்சிகள் தொடங்கியது, இதிலேயும் சில நம்மை மிகவும் ஈர்த்தது. உடல் மனம் வளர, தோழமையும் சேர, பெஸ்ட் நண்பன், எல்லாம் வளர்ந்தது. இது, ஐந்து வருட காலம். அதன் பிறகு, மேல்நிலைப் பள்ளி, குழந்தைப் பருவத்திலிருந்து மாறும் நேரம், பெரியவர்களாகவில்லை. உடைகள், உயரம், இடை, குரல் மாறின. சலிப்பு, கோபம் அதிகரித்தது. நம்முள் பல ரசாயனம் சுரப்பதால் இந்த மாற்றங்கள். இந்தப் பருவத்தில் பல வளர்ச்சி அடைவதால், ‘நான் யார்’ என்ற கேள்வியும் எழ, அதே நிலையில் உள்ள நண்பர்களுடனேயே இருக்கத் தோன்றுகிறது. அவர்களில், பாசம் காட்டுவோர்மேல் அதிக ஈர்ப்பு உண்டாகிறது என்றேன்
இவை ஒவ்வொன்றும் பருவம் மாறிவரும் அறிகுறிகள். அதில் ஒரு இயற்கையான அம்சம், ஆண் பெண் ஒருவரோடு ஒருவர் பேச விரும்புவது. நம் வயதுடையவர் நம்மைப்போலவே யோசிப்பது, பேசுவதால் அவர்களுடன் ஒத்துப்போய்விடும். பெற்றோர் நம்மைத் திருத்திக்கொண்டே இருப்பதால் வாக்குவாதமாக இருக்கும்.
அம்மா அப்பா கண்டிப்பு, டீச்சர்களின் சந்தேகங்கள் நிலவ, சுரேஷ் பரிவாகப் பேசினது, ஆதரவு காட்டியதை காதல் என்று அவள் தீர்மானம் கொண்டதாகச் சொன்னேன். இதைத் தனக்கு நியாயப்படுத்த, மதிப்பெண் குறைந்ததும் அது பெற்றோரை பழி வாங்கியதாகத் தோன்றச்செய்தது என்று விளக்கினேன்.
ராணி ஒப்புக் கொண்டாள். தனக்கு வீட்டிலும், தோழிகளிலும் ஆதரவு இருப்பதை விரல் விட்டு எண்ணினாள். தனக்குள் ஏதோ குழப்பம் இருப்பதாகவும், இதைச் சரி செய்யவேண்டும் என்றும் சொன்னாள்.
ராணியின் பெற்றோரை அழைத்து, அவளை அடுத்த ஐந்து நாட்களுக்குத் தினம் அழைத்து வரச்சொன்னேன். பெற்றோர், பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து, நல்லவர்களாகப் பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காகப் பருவம் வந்த பின்பு கண்டிப்பை அதிகரித்தோம் என்றார்கள். அதுவும் காதலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். இதையே போதித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் தெளிவுபடுத்தினேன், இந்தப் பருவத்தில், கோபமாகச் சொன்னாலோ, போதிப்பதுபோல் சொன்னாலோ இவர்கள் காதில் போட்டுக்கொள்ள மாட்டார்கள் என்று.
பெற்றோரை ராணியிடம் பேசச்சொன்னேன். வார்த்தை, சைகைகளால் பாசத்தைக்காட்டி, அவளை நம்ப முயற்சிக்கச் சொன்னேன். இருவரும், மறுத்தார்கள். இந்த அடம் பிடிப்பினால், ராணி பயந்து, பகிர்ந்து கொள்ளவில்லை. வளரும் பருவத்தில், யாராவது தன் பயம், அச்சத்தைப் போக்குவார்களா என்று தேடுவார்கள். இதன் விளைவே, இந்தக் காதல். எடைபோடும் மனப்பான்மையால் இடைவெளி அதிகமாகிறது. இதைச் சுதாரிக்கவே ராணியிடம் பேசச்சொன்னேன். சரியாகும், இல்லை என்று எந்தவிதமான உத்தரவாதமும் கொடுக்காமல் அவர்களை அனுப்பிவைத்தேன்.
முதல் நாள், ராணியின் உணர்வுகளை வரைமுறைப்படுத்த ஆரம்பித்தோம். உணர்வுகளைப் பெயர் இட்டுச் சொன்னால், அதன் ஆதங்கம் குறையும். இதைப் பழக்கிக்கத் தொடங்கினாள். உணர்வுகளை, பல கண்ணோட்டத்தில் பார்த்தாள், இதன் தாக்கத்தை உன்னிப்பாகக் கவனிக்கப் புரிய ஆரம்பித்தது. ராணி, “புது உலகம் திறந்தது என்றாள்!”
அடுத்ததாக, ராணி, சுரேஷிடம் பெற்ற ஆதரவைப்போல், மற்றவர்கள் எவ்வாறு கொடுக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டு வந்தோம். ஒப்பிட்டுப் பார்த்ததில், அவள் தோழிகள், அம்மா, தம்பி, டீச்சர்கள் இவர்களின் பங்களிப்பும் பலவிதமாக இருந்தது. சுரேஷ் தந்த அன்பு, ஊக்கத்தை, காதல் என்ற வட்டத்துக்குள் வைத்தாள். அப்படி வைத்ததால், அதில்மட்டும் கவனத்தைச் செலுத்தினாள். தன் இடப்புகளையும் விட்டுவிட்டதால், மதிப்பெண்ணும் குறைய, பாதிப்பு தனக்குத்தான் என்பதையும் கவனிக்கவில்லை. பெற்றோர் சொல்வதைக் கேட்க மனம் விடவில்லை.
நாள் தோறும் சுரேஷ் நினைப்பு இருப்பதாக ராணி கவலையுடன் சொன்னாள். இதைச் சுதாரிக்க, பிப்லியோதெரபீ உபயோகித்து, கட்டுரைகள், சிறுகதை, கவிதை, படித்து (Bibliotherapy) விவாதித்தோம். ராணி, வீட்டு வேலைகளில் கைகொடுக்க ஆரம்பித்தாள். இந்த வேலைகளைச் செய்யும்போது, சுரேஷை நினைப்பதைக் குறித்து வரச்சொன்னேன். நாள் 4: சுரேஷ் பெயர் இல்லவேயில்லை! சுரேஷுடன் கலக்கம் இல்லாமல் பேசமுடிந்தது. மற்ற ஆண் தோழர்களுடனும் கூச்சமில்லாமல் பழகமுடிந்தது.
இதைப் பார்த்த சுரேஷ் வியந்தான். அன்று ராணியால் வர முடியவில்லை. நான் என் அறையை அடைந்ததும், மூன்று பேர், ஸ்கூல் யூனிஃபார்முடன் உள்ளே நுழைந்தார்கள். உட்கார மறுத்து, முறைத்தார்கள். “ம்ம் சொல்லுங்க” என்றதற்கு, “நான் உட்கார வரலை” என்றான் கதவு அருகில் இருந்தவன். “நீங்க யார்?” என்றேன். “நாங்க ஃப்ரெண்ட்ஸ்” என்றான் இன்னொருவன். “புரியலை “என்றேன். “ப்ரெண்ட்ஸ் சினிமா பார்க்கல?” என்றான் நக்கலாக. நான் உடனே “யார் சூர்யா, யார் விஜய்?” என்றதற்கு, கதவருகே இருப்பவனைக் காட்டி “சூர்யா” என்றவுடன். “ஓ, அப்போது நீ ரமேஷ் கண்ணா, இவன் விஜய்” என்றேன்.
“நான், ராணி” என்றதுமே அவனை நிறுத்திச் சொன்னேன், “மன்னிக்கவும், என்னைப் பார்க்க வருபவரைப்பற்றி எங்கள் தொழில் தர்மப்படி யாரிடமும் சொல்லமாட்டோம்”.
சூர்யா-சுரேஷிடம் மற்ற இருவரின் ராங்க்பற்றிக் கேட்டேன். விஜய் 10, ரமேஷ் கண்ணா 25 என்றார்கள். சூர்யா-சுரேஷைப் பார்த்து, “நீ சரியான கஞ்சன்” என்றேன். திகைத்து “ஏன்” என்றான். “பின்னென்ன, நீங்க “ப்ரெண்ட்ஸ்” ஆனா, இவங்க படிப்பில் கஷ்டப்படறாங்க. உனக்கு இவர்களை, நர்ஸரியிலேர்ந்து பழக்கம், ஆனா நேற்று அறிமுகமான ராணியைப்பற்றி அக்கறையாக் கேட்க வந்திருக்க”. திகைத்தான், உட்காரச் சொன்னேன் – உட்கார்ந்தார்கள். ஏன் இப்படி நிகழ்கிறது என்று மூவரும் கேட்டார்கள்.
சூர்யா-சுரேஷிடம் சொன்னேன், “உனக்கும் ராணிக்கும் இடையில் ஏற்படுவது உங்கள் வயது வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள். நீ அவளுக்குப் பரிதாபப்பட்டது, உதவியது உன்னுடைய இயல்பான குணம், பலபேருக்குச் செய்ததைத்தான் இவளுக்கும் செய்தாய். இதோ விஜய், ரமேஷ் கண்ணாவிற்குக் கைகொடுத்து மேலே வர உதவி செய், வகுப்பில், கஷ்டப்படும் மற்றவருக்கும் செய், பாடம் சொல்லித் தா. அதில் வரும் ஆனந்தத்திற்கு ஈடே கிடையாது, செய்து பார், அனுபவி” என்றேன்.
இத்துடன், அவன் கோட்டைவிட்ட மதிப்பெண்களை மறுபடி அடைய முயற்சிகளைச் செய்ய நினைவூட்டினேன். இந்த வயதில் ‘நான் யார்?’என்ற தேடல் இருக்கும். இதற்குப் பதில்கள், நாம் பலவேறு பங்களிப்பினால் விடைகளைக் கண்டு அறியமுடியும். அதனால்தான் இந்த வயதில் பலவற்றில் கலந்து கொள்வது அவசியமாகும். ஒருவரிடம் ஈர்ப்பு கொள்வது “ஏன்” என்று புரிந்தாலே அதை சுதாரித்துக் கொள்ளமுடியும்.
மூவரிடம் மேலும் சொன்னேன், நீங்கள் மூவரும் சூர்யா, விஜய், ரமேஷ் கண்ணா “ப்ஃரெண்ட்ஸ்” என்றால், அவர்களின் நல்ல குணங்கள்தானே உங்களை ஈர்த்தது. அப்போது, ஏன் இப்படி என்னிடம் வந்தார்கள் என்பதை யோசிக்கச் சொன்னேன்.
ராணியின் அப்பா தன் பட்டறையை அவள் ஒரு தொழிற்சாலை ஆக்கவேண்டும் என்ற கனவை அவளிடம் தெரிவித்தார். அவளுக்கும் இன்ஜினியரிங் படிக்க ஆசை, அத்துடன் இதை இணைத்துக்கொண்டாள்.
12வதின் பரீட்சை நெருங்கிக்கொண்டு இருந்ததால், ஜனவரி முதல் வாரத்துடன் ஸெஷன்கள் நிறைவு பெற்றது. ராணியின் முன்னேற்றத்தை அவள் அப்பா வந்து சொல்லிவிட்டுப் போவார்.
சூர்யா-சுரேஷ் ஒரு ஆறு மாதத்திற்குப் பிறகு வந்து தான் மருத்துவம் எடுத்ததாகவும், சென்னை அரசாங்க கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும் சொன்னான். ராணி நன்றாகப் படிப்பதை என்னிடம் சொல்வதற்காகவே நண்பர்களிடம் கேட்டறிந்ததாகச் சொன்னான். சிரித்த முகத்துடன் “Thanks” சொல்லிச் சென்றான் சூர்யா-சுரேஷ்.
**********************************************************************