படம் நன்றி: http://consenttobenothing.blogspot.in
நேர்மையின் மறுபெயர் ஏ என் சிவராமன்!
இந்திய பத்திரிக்கைத் துறையின் பிதாமகர் என்றே சொல்லலாம் – தேசப்பற்று, நாணயம், நேர்மை, மனத் துணிவு, எழுதும் கருத்துக்களில் தெளிவு இப்படிப் பல குணாதிசயங்களின் மொத்த உருவம் திரு ஏ என் எஸ் அவர்கள்.
சென்ற வாரம் டேக் மையத்தில் சதர்ன் ஹெரிடேஜ் சார்பில், கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள், தினமணி பத்திரிக்கை ஆசிரியர் மறைந்த திரு ஏ என் சிவராமன் அவர்களைப்பற்றி (கீழாம்பூரின் அப்பா வழி மாமா தாத்தா திரு ஏ என் எஸ்) சுமார் தொண்ணூறு நிமிடங்கள் ஓர் அருமையான உரையாற்றினார். – 1904 ல் அவர் பிறந்தது முதல், தனது தொண்ணூற்று ஏழாவது பிறந்த நாளில் (பிறந்த நாளும், இறந்த நாளும் ஒன்றே – மார்ச் 1) இறந்தது வரையிலான சில நிகழ்வுகளைக் கையில் குறிப்பேதுமின்றி, சுவைபடச் சொன்னார் கீழாம்பூர் – அவர் பேசியதிலிருந்து சில பகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்!
1904 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி கொச்சியில் பிறந்தார் ஆம்பூர் நாணுஐயர் சிவராமன் ! அந்தக் கால இண்டர்மீடியட் படித்தவர். தனது படிப்பில் நூற்றுக்கு இருநூறு மார்க்குகள் எடுத்தவர் – சாய்சில் விடவேண்டிய கேள்விகளுக்கும் பதில் எழுதினால் இப்படித்தானே மார்க் கிடைக்கும்! தனது பதினேழாவது வயதிலேயே, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுக்கொண்டு சிறை சென்றார்! படிப்பும் ஒரு முடிவுக்கு வந்தது!
டிசி வாங்கும்போது, அன்றைய பிரின்சிபால் திரு கே சி போஸ், எந்த நேரத்திலும், படிப்பதை விட்டுவிடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறார் – எப்படிப்பட்ட ஆசிரியர்! சத்தியத்துக் கேற்ப ஏ என் எஸ் அவர்களும், தனது இறுதி மூச்சுவரை நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் – சில நாட்களில் பதினாறு மணி நேரம் – படித்துக்கொண்டிருந்தார் – இவர் எப்படிப்பட்ட மாணவர்! இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ளவேண்டிய நல்லதொரு பண்பு இது!
அன்று ஏ என் எஸ் க்குப் பிடித்த தலைவர் திலகர். அவர் மறைவுக்கு, தாமிரபரணி ஆற்றில் திதி கொடுத்தவர் ஏ என் எஸ்! அதனால் பிரிட்டிஷ் போலீசால் கவனிக்கப்பட்டவர். ஒரு முறை அவரைக் கைதுசெய்ய, அவர் இருக்கும் கிராமத்துக்கு வருகின்றனர் போலீசார் – இடம் கண்டுபிடித்து வந்து கைதுசெய்து, போலீஸ் வானில் ஏற்றிச்செல்ல, வீட்டிலிருந்து, அக்கிரகாரத்தின் முனைவரை அவரது தாய் கூவியபடி வேனுக்குப் பின்னால் ஓடி வருகிறார். அவருக்குத்தான் தன் பிள்ளையின் மீதும், அதைவிடத் தாய்நாட்டின் மீதும் எவ்வளவு பாசம் – கண்ணிலிருந்து வேன் மறையும்வரையில் அவர் ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்று உரக்கக் கூவியவாறே ஓடிவருகிறார்!
கல்லிடைக்குறிச்சியில் சில காலம் சுதேசி பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தார் ஏ என் எஸ் – அப்போது கிடைத்த நேரத்தில், சரித்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். பின்னாளில் தினமணியில் அவரது நேர்மையான தலையங்கங்களுக்கு அடித்தளமாக அமைந்தது இந்தப் படிப்பு!!
அப்போது மிகச் சிறந்த பத்திரிக்கையாளராக இருந்த திரு டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் சென்னையில் நடத்திக்கொண்டிருந்த ’காந்தி’ இதழில் ஏ என் எஸ் சேர்ந்தார். அந்த சமயத்தில் இராஜாஜியுடன் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு இருபது மாதங்கள் சிறைத் தண்டனை அடைந்தார். உடன் சிறையில் இருந்தவர் திரு காமராஜ்.
1934 ல் தொடங்கப்பட்ட தினமணிக்கு டி எஸ் சொக்கலிங்கம் ஆசிரியராக, ஏ என் எஸ் அவர்கள் உதவி ஆசிரியர் ஆனார். 1944 ல் சொக்கலிங்கம் தினமணியை விட்டுவிட, ஏ என் எஸ் அவர்கள் தினமணி ஆசிரியரானார். 1987 வரை தினமணியின் ஆசிரியராக அவர் ஆற்றிய பணி, பத்திரிக்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை!
டி எஸ் சி அவர்களும், ஏ என் எஸ் அவர்களும் பத்திரிக்கை உலகின் இரட்டையர்கள் என்றே அழைக்கப்பட்டனர்! பரஸ்பரம் அவர்கள் புதிய கதராடைகளை பரிமாறிக்கொள்ளாமல், ஒரு தீபாவளியும் கடந்ததில்லை!
காஞ்சி மகாப் பெரியவர், ஒரு முறை ஏ என் எஸ் அவர்களிடம் ஒரு கட்டிட வரைபடத்தைக் கொடுக்கிறார் – ஒரு கோயிலுக்கான ‘ஷெட்’.- இதை ஏன் கொடுத்தார் என்பது இருவருக்கும் புரியாத ஒன்று! திரும்ப வந்த ஏ என் எஸ், திரு கோயங்கா அவர்களிடம், இதைப்பற்றிக் கூற, அருகிலிருந்து கேட்டவர், திரு பிர்லா அவர்கள். அரை மணி நேரத்தில் அந்த ஷெட் கட்டுவதற்கான முழுத் தொகையையும் பிர்லா அவர்கள் வழங்கி விடுகிறார்கள். எல்லாமே எதிர்பாராமல் நடக்கின்றன – பிர்லா அவர்களின் காஞ்சித் தொடர்பு, ஏ என் எஸ் அவர்களாலேயே முதலில் ஏற்படுகிறது!
எமர்ஜென்சியை வெளிப்படையாக எதிர்த்த இரண்டு பத்திரிக்கைகளில் ஒன்று தினமணி. சென்சார் கடுமையாக இருந்த காலம் – தலையங்கப் பகுதியை ஒன்றும் எழுதாமல் வெறுமையாக விட்டுவிடுவார் – அல்லது உலக ஜனநாயக நாடுகளைக் கேலி செய்வதுபோல் பகடியாக எமர்ஜென்சியை சாடுவார்!
திரு காமராஜ் அவர்களுக்கும், ஏ என் எஸ் க்கும் அவ்வளவு நெருக்கம். எமர்ஜென்சியில் மனமுடைந்து காமராஜ் மறைந்தபோது, வருந்தி, ஒரு வரி எழுதிவிட்டு, ‘ என் பேனா இனி எழுத மறுக்கிறது ‘ என்றெழுதி சென்சார் இருப்பதைச் சுட்டினார்! எமர்ஜென்சிக்குப் பிறகு, ‘எமர்ஜென்சியின் முதல் பலி (VICTIM) திரு காமராஜ்’ என்று எழுதினார்.(இதனை திரு மெரினா அவர்கள் ஆனந்த விகடனில் குறிப்பிட்டுள்ளார்!).
திரு டி எஸ் கிருஷ்ணா, திரு காமராஜ், திரு கருணாநிதி ஆகிய மூன்று பெரும் ஆளுமைகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர். எமர்ஜென்சி சமயத்தில், அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களைச் சந்திக்க, செக்யூரிடிகளுக்குத் தெரியாமல், பேப்பர் கட்டுகளுடன் வேனில் ஏ என் எஸ் பயணித்தது வியப்புக்குரியது!
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஃப்ரென்ச், ஜெர்மன், உருது என இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை எழுத, படிக்கத் தெரிந்தவர். ஒரிஜினல் குரானைப் படிப்பதற்காக உருது மொழியை ஓர் ஆசிரியர் வைத்துக் கற்றுக்கொண்டார் – அப்போது அவருக்கு வயது எண்பதுக்கும் மேலே!
’கணக்கன்’, ‘அரைகுறைப் பாமரன்’ போன்ற புனைப் பெயர்களில், அறிவியல், பொருளாதாரம், அரசியல் களங்களில் ஏராளமான கட்டுரைகள், பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதியவர் ஏ என் எஸ். ‘மாகாண சுயாட்சி’ பற்றிய புத்தகம் 1928 லேயே எழுதியவர்! ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே’ – கணக்கன் கட்டுரைகள் – ‘நாணயத்தின் மதிப்பு இறங்கியது ஏன்?’ போன்ற புத்தகங்கள் அனைவரும் படிக்க வேண்டியவை! ‘விண்வெளிக்கு அப்பால்’ என்ற இவரது புத்தகம், கலாம் அவர்கள் ஏவுகணைபற்றி அறிந்துகொள்ள ஓர் உந்துதலாக இருந்தது என்று கலாம் அவர்களே குறிப்பிட்டுள்ளார்!
1987 ஆகஸ்ட் – தினமணி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார் – ஆனாலும் படிப்பதையோ, எழுதுவதையோ விட்டுவிடவில்லை!
பத்திரிக்கைத் துறையில் அவரது சேவையைப் பாராட்டி, 1988 ல் அவருக்கு “B.D.GOENKA AWARD” கொடுக்கப்பட்டது!
2001, மார்ச் 1 திரு ஏ என் எஸ் மறைந்தார் – அவர் வாழ்க்கை முழுவதும் நேர்மை, உண்மை, உழைப்பு, படிப்பு, எழுத்து என்று நற்பண்புகளால் நிறைந்தது.
இன்றைய இளைஞர் சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு தலை சிறந்த பத்திரிக்கையாளர் திரு ஏ என் சிவராமன் அவர்கள்.
திரு கீழாம்பூர் அவர்களுக்கு என் நன்றி – அவர் பேசியதில் மிகக் குறைந்த அளவே இங்கே எழுதியிருக்கிறேன் – ஆனாலும் மனம் நிறைவாய் இருக்கிறது!