குவிகம் இலக்கியவாசலின் நான்காம் ஆண்டு தொடக்கவிழா குவிகம் இல்லத்தில் மே 6, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குவிகம் மின் நூலகத்தை நண்பர் ஷங்கர் ராமசாமி அவர்கள் துவக்கிவைத்து விளக்கிப் பேசினார்.
அதன்படி குவிகம் இல்லத்திற்கு வரும் நண்பர்கள் கிண்டில் பதிப்பில் வெளிவந்துள்ள புத்தகங்களை குவிகம் சந்தாவில் இலவசமாகப் படிக்கலாம்!
அத்துடன் குவிகத்திற்கு அங்கத்தினர் சேர்க்கையும் இந்த ஆண்டுவிழாவில் துவக்கப்பட்டது. வருடத்திற்கு 1200 ரூபாய் கொடுத்து குவிகம் அங்கத்தினராக அனைவரும் சேரலாம்.
இந்த விழாவின் வெற்றியைப்பற்றி நாங்கள் சொல்வதைவிட நண்பர் ஆர்கே முகநூலில் பதிவிட்ட கருத்தை இங்கே தருகிறோம். (நன்றி ஆர் கே)
குவிகம் இலக்கிய வாசல் ஆண்டு விழா தி.நகரில் அமைப்பாள இரட்டையருள் ஒருவரான கிருபானந்தனின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. கத்திரி வெயிலின் உக்கிரத்தையும் உஸ் உஸ்ஸையும் மீறி இலக்கிய தாகம் தணித்துக்கொள்ள முப்பதுபேருக்கு மேல் நான்கு மணி முதல் ஏழேமுக்கால் மணிவரை இருந்து முழுமையாக ரசித்தது கோடை மழை போன்ற அதிசயம்.
எங்கள் அபிமானக் கவிஞர் வைதீஸ்வரன் அவர்களின் “சில கட்டுரைகள், ஒருநேர்காணல் “புத்தக வெளியீடு. புத்தக விமர்சனமும்.
தொடர்ந்து கதை வாசித்தல், கவிதை வாசித்தல் வித்யாசமான ரசனைக்கலவை நிகழ்வு. படைப்பாளிகள் க்ருஷாங்கினி, முரளிக்கிருஷ்ணன்,பானுமதி, சரஸ்வதி, P R கிரிஜா, ஈஸ்வர், ஆர்.கே. ராமநாதன்,
லதா ரகுநாதன், விக்ரம் வைத்யா, சதுர்புஜன், உமா பாலு, கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என கதைசொல்லல்,கவிதை வாசிப்புகள் கலவையாகி மாறி சுவாரஸ்யம் சேர்த்தன. நேர நிர்வாகம் பெரிதாக நீளாமல் பங்களித்த அனைவரும் காலஅளவைக் கருத்தில்கொண்டு ஆர்வம் குறையாமல் உரையாற்றியது நல்ல முயற்சி.
கணையாழியில் பரிமளவிலாஸ் கதையெழுதிய முரளிகிருஷ்ணன் இதற்கு முன்னான குடந்தை மகாமக நிகழ்வை கதை சொல்லியாகச் சொன்னார்.
ரமணரைப்பற்றிய கவிதை, உறவுக்கார கைம்பெண் பாட்டியின் கதை, கருப்பை அறுவை சிகிச்சை கதை, பேப்பர் படிக்கும் 82 வயது தாத்தா கதை என கதைக்களங்களும் கதை சொல்லிய விதங்களும் புதிய பரிமாணத்தில் இருந்தன. சதுர்புஜன் தான் வகுப்பெடுத்த MBA மாணவர்களின் கதையில் சங்கரின் கதையை ‘காதல்பாடம்” பாடம் சிறுகதையாய் நிகழ்த்தியே காட்டினார். குரல் வளமும் உடல் மொழியும் முகபாவமும் அவரை ஒரு நல்ல மேடை அனுபவ நடிகனாக முன்னிறுத்தியது.
விக்ரம் வைத்யாவின் ஒரு வயதான இலையின் வீரியக் கவிதையும் கனவுகாண் பாலியல் வன்முறையாளன் தைரியக் கவிதையும் வித்தியாச தளங்கள்.
கிருஷ்ணமூர்த்தி தத்தெடுக்கப்பட்ட நான்கு வயது சிறுமி அமெரிக்கா சென்ற நிஜ நிகழ்வை நெகிழ்வுடன் கதைசொல்லியாய் சொன்னார்.
மேற்குமாம்பலம் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி homoeopathy.meditation.single dose methods எனும் ஆங்கில நூல்களையும் இங்கிலாந்து மலர் மருந்துகள் பாகம் 1 யும் வந்திருந்தோர்க்கு இலவசமாகத் தந்தார்.
உரையாடியபோது அனைவரும் எமர்ஸனை சில வரிகளாவது படித்தே ஆகவேண்டும் என பிரிஸ்கிருப்ஷன் எழுதாமல் பரிந்துரை செய்தார்..!
கிருபானந்தம் ஸார் நன்றிகூற மௌலி புது விருட்ச இதழ் தந்தார்.
அதிகபட்சம் குறைந்தபட்ச நிமிடங்களே எடுத்துக்கொள்வேன் என்று சொல்லி நான் நான்கே நான்கு கவிதை வாசித்தேன். அதில் இரண்டு பிரபல பத்திரிகைகள் இரண்டில் பிரசுரமாகி நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டவை.
நான் வாசித்த என்னுடைய கவிதைகள்பற்றி எந்தப் பத்திரிகை என்ன கவிதை என ஆர்வமாகக் கேட்பவர்கள் அந்தப் பத்திரிகைகளுக்கு ஒருவருட சந்தாவும் என் கவிதைத்தொகுப்பினை வாங்குவதாகவும் இஷ்ட தெய்வத்தின் மீது (சா)சத்யபிரமாணம் எடுத்து ஒரு ஐநூறு பேராவது பதிவிட்டால் கோடை மழை பெய்யவும் நல்ல கவிதையும் நல்ல பத்திரிகையும் உய்யவும் பலமானதொரு வாய்ப்பிருக்கிறது..!
சொல்றத சொல்லிட்டேன்.அப்பறம் உங்க இஷ்டம்…!