காளிதாசன்-ரகுவம்சம் 3
ரகுவம்சம் தொடர்கிறது…
ரகுவம்சத்தை நிறைவு செய்து – பிறகு .. இந்திய வரலாற்றின் மற்ற நாயக நாயகிகள் கதைகள் தொடரும்.
இப்பொழுது நேயர்களை ‘ரகு’வின் ஆட்சிக்கு அழைத்துச் செல்கிறோம்.
முன்கதை:
ரகுவம்சத்தில் – திலீபன் தொடங்கி ரகு கதை படித்துக்கொண்டிருக்கிறோம்…
ரகு, விஸ்வஜித் யாகத்தைச் செய்து தாராளமாகத் தானங்களைக் கொடுத்தான். அரச கஜானாவின் செல்வம் குறைந்துகொண்டே வந்தது. யாக முடிவில் மன்னனுக்கு மிஞ்சியது ‘மண் பாத்திரம்’ மட்டுமே. யாகத்தை நடத்தி முடித்து, ஏதுமற்றவனாய் நின்றான். அவனது கவலை: இந்த நேரம் பார்த்து எவனாவது தானம் என்று கேட்டு வந்தால்?
கலங்கி நின்றான்!
‘ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ…’ என்று ஒரு சோகப்பாடல் பாடினான்..
அவன் பயந்தது நடந்தேவிட்டது.
அவனைத் தேடி கௌட்ச முனிவர் வந்தார்.
அவர்..வரதந்து எனும் மாமுனிவரின் சிஷ்யர். அவருக்குத் தனது ‘குரு’வுக்குக் குரு தட்க்ஷணை கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருந்தது. சரி..அதற்குத் தேவையான செல்வத்தை மன்னனிடம் இருந்து யாசகமாகப் பெற்றுக்கொண்டு செல்லலாம் – என வந்தார். முனிவரை அமரச் சொல்லி அர்க்கியம் கொடுத்து அன்புடன் நலம் விசாரிக்கலானான்.
முனிவருக்கு ‘விஷயம்’ விளங்கிவிட்டது.
அரசன் இன்று செல்வந்தனல்லன்.. ஒரு அன்னக்காவடி என்று..
அரசன் கையில் இருந்ததெல்லாம் .. மண் பாண்டம்… மட்டுமே!
‘சரி இது காசுக்காகாது’ – என்று எண்ணி மன்னரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.
முனிவரைத் தடுத்து நிறுத்தி ரகுராமன் கேட்டார் :
முனிவரே! தாங்கள் வந்த காரியம் யாது? அதைக் கூறுவீர்களா?
சங்கடத்தில் ஆழ்ந்த முனிவர் கூறினார்:
மன்னா – நான் வரதந்து எனும் முனிவரின் சீடராக இருந்தேன். நான் அவரிடம் கல்வி கற்கத் துவங்கிச் சில காலமானதுமே அவருக்கான குரு தட்க்ஷணை என்ன தரவேண்டும் என்று கேட்டேன். அதற்கு, ‘நான் அவருக்கு செய்யும் பணிவிடையும், அவரிடம் காட்டும் அன்பும் பக்தியும்’ மட்டுமே குரு தட்க்ஷணையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதுவே தனக்குப் போதுமானது என்றார். ஆனால் … அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அவர் ஆஸ்ரமத்தில் இருந்து புறப்படும்போது… கடைசியாக .. ‘நான் என்ன தக்ஷணை தரவேண்டும்’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘நீ எனக்கு இதுவரை குரு தட்க்ஷணை தரவில்லை என்பதினால் ஒரு வித்தைக்கு ஒரு கோடி என பதினான்கு வித்தைகளுக்குத் தட்க்ஷணையாகப் பதினான்கு கோடி தங்க நாணயங்கள் கொண்டு வா’ என்று கூறி என்னை அனுப்பிவிட்டார்.
அடிச்சிட்டார் அந்தர் பல்டி!
குரு – சாதாரண – சராசரி- மனிதன் ஆனார்!
சில நேரங்களில் சில மனிதர்கள்!
எம்புட்டுப் பணம் கேட்கிறார்!
முனிவர் தொடர்ந்தார்:
நான் உன்னைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு செல்லலாம் என இங்கு வந்தேன். ஆனால் – உன்னுடைய நிலைமை கண்டேன். ஆகவே மன்னா, இதை எண்ணி நீ யோசனை செய்யவேண்டாம். நான் வேறு யாரிடமாவது சென்று யாசகம் கேட்டுக்கொள்கிறேன்.
முனிவரை மீண்டும் தடுத்து நிறுத்தினார் ரகுராமன். அவரிடம் கூறினான் ‘மகா முனிவரே, என்னிடம் வந்து தானம் கேட்டபின் அதை பெற்றுக்கொள்ளாமல் வெறும் கையோடு போக என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? ஆகவே தயை கூர்ந்து நீங்கள் இங்கு இன்னும் இரண்டு நாள் தங்கிச் செல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது நீங்கள் கேட்ட தானத்தைக் கொண்டுவந்து தருகிறேன்’ என்று கூறிவிட்டு அவரை ஓய்வு எடுக்குமாறு கூறினார்.
இந்நாளாக இருந்தால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கியிருக்கலாம்! ஹா ஹா !
பணக்கவலை மனிதனின் தூக்கத்தைக் குலைக்கிறது. இரவு முழுவதும் தூக்கம் இன்றித் தவித்தான் மன்னன். மறுநாள் காலை விழித்தெழுந்ததும் குபேரனிடம் சென்று செல்வம் கேட்கலாம், அவர் கொடுக்க மறுத்தால் போர் தொடுத்தாவது திரவியத்தைக் கொண்டுவரலாம் என்று நினைத்தான். மறுநாள் பொழுதுவிடிந்தது. அவரது அரண்மனையின் பொக்கிஷங்களைக் காப்பவர் விடியற்காலை ஓடோடி வந்து மன்னனை எழுப்பி ‘மன்னா நமது பொக்கிஷ அறையில் இடமில்லாமல் பொன்னும் பொருளும் நிரம்பிக் கிடக்கின்றன’ என்ற சேதியைக்கூற மன்னனும் அதிசயப்பட்டு அங்கு சென்றுபார்க்க அவர் முன் வந்த குபேரன் ‘மன்னா இது போதுமா, இல்லை இன்னும் வேண்டுமா?’ எனக் கேட்க மன்னனும் ‘நன்றி குபேரா, நன்றி’ எனக் கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான்.
அந்நாளைய பஞ்சாப் நேஷனல் வங்கி குபேரன் பேங்க்தான் போலும்!
பின் அந்த பொக்கிஷங்களை அப்படியே தன்னிடம் யாசகம் கேட்டு வந்திருந்த கௌட்ச முனிவருக்குக் கொடுத்தார். அந்த முனிவரும் ‘மன்னா! நீ நீடூழி வாழ்ந்து, உன் ராஜ்யத்தைத் தொடர்ந்து ஆள்வதற்கு, நல்ல மகன் பேறு பெற்றுக்கொண்டும் வாழ உனக்கு என் ஆசிகள்’ என மன்னனை வாழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்’ . நாளடைவில் ரகுராமனுக்கும் ஒரு மகன் பிறக்க அவனுக்கு அயன் என்ற நாமதேயம் சூட்டினார்கள்.
அயன் (அஜா)
அயனும் வயதுக்கு வந்தபோது பல கலைகளையும் கற்றறிந்தான். அப்போது விதர்ப தேசத்தைச் சேர்ந்த பேரரசன் தனது தங்கையான இந்துமதிக்கு சுயம்வரத்தை நடத்த முடிவு செய்து இருந்தார். அதில் பங்கேற்பதற்குப் பல நாட்டு ராஜகுமாரர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அயனுக்கும் அழைப்பு வந்தது.
அயனும் அந்த சுயம்வரத்தில் கலந்துகொள்ள விதர்ப தேசத்துக்குக் கிளம்பிச் சென்றான். அவர்கள் சென்ற வழியிலே நர்மதை ஆற்றில், அடுத்த பக்கத்தில் இருந்து மதம் பிடித்த மிகப் பெரிய யானை ஒன்று நதியிலே நீந்தி இந்தப் பக்கம் வந்து கரையில் இறங்கி ஆக்ரோஷமாகக் கோஷமிட்டபடி அவர்களை நோக்கி ஓடி வந்தது. அயன் தனது வில்லை எடுத்து அம்பு தொடுத்து அதன் நெற்றிப்பொட்டில் அதைச் செலுத்தினான். உடனே, அந்த யானை மறைந்து அதற்குப் பதில் அங்கு ஒரு அழகிய மனிதன் நின்றுகொண்டு இருந்தான்.
அயனிடம் கூறினான்:
‘மன்னா, நான் பிரியம்வதன் எனும் கந்தர்வ புருஷன் ஆவேன். முன் ஒரு நாள் – மாதங்க முனிவரின் சாபம் காரணமாக நான் யானை உருவில் இத்தனை காலமும் வாழ வேண்டியதாயிற்று. மாதங்க முனிவர் என்னிடம் கூறினார் ‘பின் காலத்தில் இங்கு வர உள்ள அயன் எனும் மன்னன் மூலமே சாப விமோசனம் கிடைக்கும்’
இந்த முனிவர்களோட ரௌசு தாங்கமுடியல … கோபம் வந்தா .. நல்லாப் போட்டுத் தாக்கறாங்கய்யா..பிடி சாபம்! என்று…
பிரியம்வதன் தொடர்ந்தான்:
‘மன்னா, நானும் இத்தனை காலமும் உன் வரவுக்காக இங்கே காத்துக்கிடந்தேன். மிக்க நன்றி. மன்னா, என்னிடம் சில சக்திகள் உள்ளன. அவற்றை உனக்குத் தருகிறேன். அவை உனக்குத் தக்க நேரத்தில் உதவிடும்’ என்று கூறியபின் அவருக்கு ஒரு பாணத்தைத் தந்துவிட்டுக் கூறினான் ‘மன்னா! நான் கொடுக்கும் சம்மோகனம் எனும் இந்தப் பாணமானது பல சக்திகளை உள்ளடக்கிக்கொண்ட ஒரு பெரிய படையைப் போன்றது. இந்த பாணம் உனக்கு வெற்றியைக் கொடுக்கும்’.
அயனும் அங்கிருந்து கிளம்பி விதர்பாவை நோக்கிச் சென்றான்.
விதர்ப அரசர், நகர் எல்லைக்கே வந்து அவனை வரவேற்றுச் சபைக்கு அழைத்துச்சென்றார். அங்கோ அரண்மனையில் பல மன்னர்களும், ராஜ குமாரர்களும் ஏற்கனவே அங்கு வந்து அவரவர் ஆசனங்களில் அமர்ந்துகொண்டு இருந்தனர். அயனும் தன் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான்.
சுயம்வரம் துவங்கியது. விதர்ப நாட்டு மன்னனின் அழகிய மகளான இந்துமதியும் தனது கையில் மாலையுடன் ஒவ்வொரு வரிசையாகச் சென்று அங்கிருந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் தனது உடலையும், முகத்தையும் முழுமையாக மூடி இருந்த சேலைவழியே பார்த்துக்கொண்டே நடந்துசென்றாள். கூட இருந்த அவளது தோழி அந்தந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் குறித்த அருமை பெருமைகளைக் கூறி அவளுக்கு அறிமுகம் செய்துவந்தாள். அந்த மன்னர்களும், ராஜகுமாரர்களும் இந்துமதி தம் அருகில் வரும்போது தமக்கே உரிய தோரணைகளை வெளிப்படுத்தியவாறு இருந்துகொண்டு அவள் கவனத்தைக் கவர முயற்சிசெய்தார்கள்.
ஒரு அரசன், தனது கையில் வைத்திருந்த ரோஜா மலரைச் சுற்றிச் சுற்றி சுழற்றியவண்ணம் அழகு சேட்டை செய்தான். இன்னொருவன், தான் எத்தனை செல்வந்தன் என்பதைக் காட்டத் தங்க இழைகளினால் நெய்யப்பட்ட தனது அங்கவஸ்திரத்தை அவ்வப்போது கையில் எடுத்தெடுத்து மீண்டும் தன்னுடைய தோள் மீது போர்த்திக்கொண்டான். இன்னொருவனோ தனது மார்பிலே கிடந்த மின்னும் வைர வைடூரிய மாலையை அலட்சியமாக வெளியில் எடுத்துத் தனது தோள்மீது போட்டுக்கொண்டான்.
சரியான காமெடி பீஸ்கள்!
அவள் மாலையைக் கையில் கொண்டு ஒவ்வொரு அரசராகக் கடந்துசென்றாள். அவள் தமக்கு மாலையிடாது அப்பால் செல்கிறபோது ஏமாற்றமடைகிற அவ்வரசர்களின் மனோநிலையைப் பதிவுசெய்கிறது இப்பாடல்..
இரவில் மாடவீதியில் விளக்கோடு செல்கிறபோது ஒவ்வொரு மாடமும் ஒளிபெற்றுப் பின்னர் இருளடைவதுபோல, இவள் வருதலைப் பார்த்து ஒளிபெற்ற அரசர்களின் முகம், கடந்து செல்லுதலைப் பார்த்து இருளடைந்தது என்கிறார் காளிதாசன்! ***
அயன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான். அவன் அருகில்சென்ற இந்துமதியின் கண்களும், அயனுடைய கண்களும் நேருக்கு நேர் மோதின. அவனது அமைதியான, அடக்கமான முகமே அவன் குணத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.
தோழி: ‘ராஜகுமாரி..மேலே செல்லலாமா’
இந்துமதி: ‘சற்றுப் பொறுடி.என்ன அவசரம்’ – மெல்ல முணுமுணுத்தாள்.
தனது கையில் இருந்த மாலையை அயன் கழுத்திலே போட்டாள்.
அரசரும் அவனை ஆரத்தழுவி அனைவர் முன்னிலையிலும் தனது மகளை அயனுக்குத் திருமணம் செய்வித்தார். இந்துமதியை அழைத்துக்கொண்டு அயன் தனது நாட்டுக்குத் திரும்பலானான்.
இங்கு ஒரு சண்டைக் காட்சியை அமைப்பது அவசியம் என்று காளிதாசன் நினைத்தார் போலும்!
இந்துமதி தமக்குக் கிடைக்காத கோபத்தில் வழியில் பல நாட்டு ராஜகுமாரர்களும் அயனை வழிமறித்து அவனுடன் போர் புரியத் துவங்கினார்கள். நான்குபுறமும் படைகள் சூழ்ந்து தாக்கினர். ஒரு கட்ட யுத்தத்தில் பிரியம்வதன் கொடுத்த விசேஷ பாணம் நினைவுக்குவர அதை அவன் எதிரிகள்மீது பிரயோகித்தான். அந்த பாணம் பல மன்னர்களையும் அவர்களது படையினரையும் கொன்றுகுவிக்க அயனும் பாதுகாப்பாக இந்துமதியை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினான்.
மகன் அயன் வெற்றிகரமாக நாடு திரும்பி வந்துகொண்டிருந்த செய்தியைக் கேட்ட மன்னன் ரகுராமன் மனம் மகிழ்ந்தான். அயனும் இந்துமதியுடன் சென்று தாய் தந்தையரை வணங்கி அவர்களுடைய ஆசிர்வாதம் பெற்றனர். அடுத்த நாளே அயனிடம் தனது ராஜ்ய பரிபாலனத்தைத் தந்துவிட்டு ரகுராமனும் முக்தி தேடி வனத்துக்குச் சென்று விட்டார். அயனும் தனது தந்தை வழியிலேயே திறமையாக நாட்டையும் ஆண்டு வந்தான் . ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அயனும் நல்ல ஆட்சி தந்தான்.
ஒருநாள் அவனது தந்தை ரகுராமனும் தமது யோக சக்தியைக்கொண்டு மூச்சை அடக்கி முக்தி தேடிக்கொண்டான் என்ற செய்தி வந்தது. தனது தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதிக் காரியங்களைச் செய்தான். அவனுக்குச் சூரியனை ஒத்த புத்திரன் ஒருவன் பிறந்தான். பத்து திக்குகளும் போற்றும் அளவில் அழகுற இருந்த மைந்தனுக்குத் தசரதன் என்ற பெயர்சூட்டி மகிழ்ந்தார்.
அயன் பல விஷயங்களிலும் சிறந்து விளங்கினார். பெரும் பலமும் வீரமும் மிக்கவனாக இருந்தார்.
அமைதியாக நதியினிலே ஓடம்!
ஓடும்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்!
ஒருநாள் அவன் தனது மனைவி இந்துமதியுடன் சோலையில் அமர்ந்திருந்தபடி விளையாடிக்கொண்டு இருந்தான். இருவரும் ஒரு மரத்தடியில் படுத்திருந்தவாறு பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது வானத்து வழியே நாரதமுனி சென்றுகொண்டு இருந்தார்.
அவரது வீணையில் இருந்து ஒரு மாலை கீழே விழுந்தது.
விழுந்த மாலை இந்துமதியின் மார்புமீது வந்து விழுந்தது.
அவள் ஒரு கணம் பரவசம் அடைந்து மகிழ்ந்தாள்.
அடுத்த கணம் கீழே விழுந்தாள்.
உடலை விட்டு உயிர் பிரிந்தது…
அது தேவன் செய்த விதியோ?
சரித்திரம் தொடர்ந்து பேசும்….
அயன் கதை தாண்டி … ரகு வம்சத்தின் கடைசி வரை கதை சொல்வோம்…
***
संचारिणी दीपशिखेव रत्रौ यं यं व्यतीयाय पतिंवरा सा नरेन्द्रमार्गाट्ट इव प्रपेदे विवर्णभावं स स भूमिपालः!! |
“Sancharini deepashikheva ratrau Yam Yam vyatiyay patimvara sa Narendramargatta eva prapede Vivarnabhavam sa sa bhoomipalah”. |
(சப்ஜெக்டுக்கு வா ! சப்ஜெக்டுக்கு வா ! என்று மிரட்டினால் கூட வரமாட்டேன்கிறாரே, இந்த ‘யாரோ’ … வேற வழி ….. தொடரும்)