காலைப் போது ! – தில்லை வேந்தன்

 
Image result for சூர்யோதயம்
 
கங்குலெனும் மாற்றரசன் கடும்போர் செய்து 
        களைத்தபின்னர் ஆற்றாது வெள்கி ஓடச் 
செங்கதிராம் படைகொண்டு வெய்யோன் வென்ற 
        செய்தியினைச் செங்கொண்டைச் சேவல் கூவும் 
பொங்கரினில் போதவிழும் புதும ணத்தைப்
        பொற்புடனே இளந்தென்றல் சுமந்து வீசும் 
தங்கமெனக் கீழ்வானம் பொலிவு கொள்ளத் 
        தமிழ்ப்புலவோர் வாழ்த்துரைக்கும் காலைப் போது 
 
  
 
கீழ்வானம் வெளுப்படைய மாம ரத்துக்
        கிளையினிலே கருங்குயில்கள் கூடிக் கூவ ,
தாழ்வாரம் தனில்சிட்டுக் குருவி மேய ,
       தையலர்கள் வாயிலிலே கோலம் போட ,
யாழ்வாணர் இசையோடு தமிழும் சேர்த்தே 
        எவ்வுயிரும் மயங்கிடவே உருகிப் பாட ,
வாழ்வாங்கு வாழ்கவெனப் புலவோர் கூறும் 
        வாழ்த்தொலிகள் பரவுகின்ற காலைப் போது 

குவிகம் அளவளாவல் ஏப்ரல் – மே 2018

அளவளாவளல் என்ற ஒரு சிறப்பான நிகழ்வு குவிகம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.

 

 

ஞாயிற்றுக்கிழமை  ஏப்ரல் 1    , 2018

Inline image

‘ஆவணப்படங்கள்  பற்றி

பரிசு பெற்ற ஆவணப்பட இயக்குனர்  அம்ஷன் குமார்

அவர்களுடன் ஒரு அளவளாவல்

 

 

ஞாயிற்றுக்கிழமை  ஏப்ரல் 8   , 2018

‘நீலகண்டப் பறவையைத் தேடி’  என்ற புத்தகத்தைப்பற்றிக்

கவிஞர் பானுமதி

அவர்களுடன் ஒரு அளவளாவல்

 

 

 

ஞாயிற்றுக்கிழமை  ஏப்ரல் 15 , 2018

Inline image

மாபெரும் எழுத்தாளர் , கவிதை மற்றும் கதாசிரியர், ஓவியர்

கவிஞர் வைதீஸ்வரன்

அவர்களுடன் ஒரு அளவளாவல்

சனிக்கிழமை ஏப்ரல் 21, 2018

“நாடக வெளி” இதழாசிரியரும் நிகழ்கலை ஆர்வலரும்

இலக்கிய விமரிசகரும் ஆகிய வெளி ரங்கராஜன்

அவர்களுடன் ஒரு அளவளாவல்

 

 

ஞாயிற்றுக்கிழமை  ஏப்ரல் 29 , 2018

மொழிபெயர்ப்பாளர் , இணைய இதழ் ஆசிரியர்

திரு ராஜேஷ் சுப்ரமணியம்

அவர்களுடன் ஒரு அளவளாவல்

 

 

ஞாயிற்றுக்கிழமை மே 13  , 2018

நாடக தயாரிப்பாளர் ,இயக்குனர்

திருமதி தாரிணி கோமல்

அவர்களுடன் ஒரு அளவளாவல்

பார்க்கவேண்டிய படம் – நடிகையர் திலகம்

மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள படம்

சாவித்திரியின் வாழ்க்கையை அழகாகப் படம்பிடித்துக்  காட்டியிருக்கும் படம்

தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வந்துள்ள படம்

தமிழில் நடிகையர் திலகம் என்று வரும் படம்

 

பார்க்கத் தவறாதீர்கள்!

பார்த்தபின் உங்கள் அபிப்ராயங்களைக் குவிகத்திற்கு எழுதுங்கள்!

 

இதோ அதன் டீஸர்

 

சிறந்த தமிழ் திரைப்படங்கள் – என் செல்வராஜ்

 

Related image

Image result for தமிழ் சினிமா

1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் படம் 87 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

ஆரம்பத்தில் 50 பாடல்கள்வரை இருந்த படங்கள் இப்போது 5 பாடல்களுடன் வெளிவருகின்றன.

வருடத்துக்கு 200 படங்கள்வரை இப்போது வெளிவருகின்றன.

அவற்றில் வெற்றிபெறும் படங்கள் மிகச் சிலவே.

1931ல் இருந்து இதுவரை வெளிவந்த படங்களின் சிறந்த   பட்டியல்கள் இணையத்தில் பலரால் வெளியிடப்பட்டுள்ளன.

பல திரைப்பட நூல்களும் சிறந்த திரைப்படங்களைப்பற்றி எழுதியுள்ளன.

எனக்குப் பிடித்த படங்கள், டாப் 10 படங்கள், சிறந்த படங்கள்,  அவசியம் பார்க்கவேண்டிய படங்கள் என்கிற தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. 

பட்டியல்களில் இருந்து அதிக பட்டியல்களில் இடம்பெற்ற படங்களின் பட்டியலைச் சிறந்த தமிழ் திரைப்படங்கள் பட்டியலாகத் திரைப்பட ஆர்வலர்களுக்காக  அளிக்கிறேன்..

வெள்ளிவிழா கண்ட படங்கள்,  சிறந்த திரைப்பட விருதுபெற்ற படங்களின் பட்டியல், முக நூலில் வந்த பட்டியல்கள் ஆகியவையும் இந்த தேர்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

1 16வயதினிலே கமல்
2 அக்னிநட்சத்திரம் பிரபு
3 அங்காடித்தெரு அஞ்சலி
4 அஞ்சலி மணிரத்னம்
5 அஞ்சாதே மிஷ்கின்
6 அந்த 7 நாட்கள் பாக்யராஜ்
7 அந்தநாள் சிவாஜி
8 அந்நியன் விக்ரம்
9 அபூர்வசகோதரர்கள்(கமல்) கமல்
10 அபூர்வராகங்கள் கமல்
11 அமைதிப்படை சத்யராஜ்
12 அலிபாபாவும்திருடர்களும் எம்ஜிஆர்
13 அலைகள்ஓய்வதில்லை கார்த்திக்
14 அலைபாயுதே மாதவன்
15 அவர்கள் கமல்
16 அவள்அப்படித்தான் கமல்
17 அவள்ஒருதொடர்கதை பாலசந்தர்
18 அவ்வைசண்முகி கமல்
19 அழகி பார்த்திபன்
20 அழியாதகோலங்கள் பாலுமகேந்த்ரா
21 அன்பேசிவம் கமல்
22 அன்பேவா எம்ஜிஆர்
23 அன்னக்கிளி சிவகுமார்
24 ஆடுகளம் தனுஷ்
25 ஆட்டோகிராப் சேரன்
26 ஆண்பாவம் பாண்டியராஜ்
27 ஆயிரத்தில்ஒருவன் எம்ஜிஆர்
28 ஆரண்யகாண்டம் குமாரராஜா
29 ஆறிலிருந்துஅறுபதுவரை ரஜினி
30 இதயம் முரளி
31 இந்தியன் கமல்
32 இம்சைஅரசன் 23ஆம்புலிகேசி வடிவேலு
33 இருவர் மணிரத்னம்
34 உதிரிப்பூக்கள் மகேந்த்ரன்
35 உள்ளத்தைஅள்ளித்தா கார்த்திக்
36 உன்னால்முடியும்தம்பி கமல்
37 ஊமைவிழிகள் விஜயகாந்த்
38 எங்கவீட்டுப்பிள்ளை எம்ஜிஆர்
39 எதிர்நீச்சல் நாகேஷ்
40 ஒருதலைராகம் ராஜேந்தர்
41 கப்பலோட்டியதமிழன் சிவாஜி
42 கரகாட்டக்காரன் ராமராஜன்
43 கருத்தம்மா பாரதிராஜா
44 கர்ணன் சிவாஜி
45 கல்யாணபரிசு ஸ்ரீதர்
46 கற்றதுதமிழ் ராம்
47 கன்னத்தில்முத்தமிட்டால் மணிரத்னம்
48 கஜினி சூர்யா
49 காக்ககாக்க சூர்யா
50 காக்காமுட்டை வெற்றிமாறன்
51 காதலிக்கநேரமில்லை ஸ்ரீதர்
52 காதலுக்குமரியாதை விஜய்
53 காதல் பரத்
54 காதல்கொண்டேன் தனுஷ்
55 காதல்கோட்டை அஜீத்
56 கிழக்குச்சீமையிலே பாரதிராஜா
57 குணா கமல்
58 குருதிப்புனல் கமல்
59 கேளடிகண்மணி எஸ்பிபி
60 கோ ஜீவா
61 சந்தியாராகம் பாலு  மகேந்த்ரா
62 சந்திரமுகி ரஜினி
63 சந்திரலேகா எஸ் எஸ் வாசன்
64 சபாபதி டி ஆர் ராமசந்திரன் ்
65 சம்சாரம்அதுமின்சாரம் விசு
66 சர்வர்சுந்தரம் நாகேஷ்
67 சலங்கைஒலி கமல்
68 சிகப்புரோஜாக்கள் கமல்
69 சிந்தாமணி பாகவதர்
70 சிந்துபைரவி பாலசந்தர்
71 சிலநேரங்களில்சிலமனிதர்கள் ஜெயகாந்தன்
72 சின்னதம்பி பிரபு
73 சுப்ரமண்யபுரம் சசிகுமார்
74 சூர்யவம்சம் சரத்குமார்
75 சேது விக்ரம்
76 தண்ணீர்தண்ணீர் கோமல்
77 தவமாய்தவமிருந்து சேரன்
78 தளபதி மணிரத்னம்
79 திருவிளையாடல் சிவாஜி
80 தில்லானாமோகனாம்பாள் சிவாஜி
81 தில்லுமுல்லு(ரஜினி) ரஜினி
82 துள்ளாதமனமும்துள்ளும் விஜய்
83 தெய்வத்திருமகள் விக்ரம்
84 தேவதாஸ் சாவித்ரி
85 தேவர்மகன் கமல்
86 நாடோடிமன்னன் எம்ஜிஆர்
87 நாட்டாமை சரத்குமார்
88 நாயகன் மணிரத்னம்
89 நெஞ்சத்தைக்கிள்ளாதே மகேந்த்ரன்
90 நெஞ்சம்மறப்பதில்லை ஸ்ரீதர்
91 நெஞ்சில்ஓர்ஆலயம் ஸ்ரீதர்
92 பசங்க பாண்டிராஜ்
93 பசி ஷோபா
94 பஞ்சதந்திரம் கிரேஸி மோகன்
95 படையப்பா ரஜினி
96 பம்பாய் மணிரத்னம்
97 பயணங்கள்முடிவதில்லை மோகன்
98 பராசக்தி சிவாஜி
99 பருத்திவீரன் கார்த்திக்
100 பாகப்பிரிவினை சிவாஜி
101 பாசமலர் சிவாஜி
102 பாட்ஷா ரஜினி
103 பாமாவிஜயம் பாலசந்தர்
104 பாலைவனச்சோலை சத்யராஜ்
105 பிதாமகன் பாலா
106 புதியபறவை சிவாஜி
107 புதியபாதை பார்த்திபன்
108 புதுப்பேட்டை தனுஷ்
109 புதுவசந்தம் விக்ரமன்
110 புன்னகைமன்னன் கமல்
111 பூவேஉனக்காக விஜய்
112 பூவேபூச்சூடவா நதியா
113 மகாநதி கமல்
114 மண்வாசனை பாரதிராஜா
115 மலைக்கள்ளன் எம்ஜிஆர்
116 மனோகரா கருணாநிதி
117 முதல்மரியாதை பாரதிராஜா
118 முதல்வன் ஷங்கர்
119 முந்தானைமுடிச்சு பாக்யாராஜ்
120 முள்ளும்மலரும் மகேந்த்ரன்
121 மூன்றாம்பிறை கமல்
122 மைக்கேல்மதனகாமராஜன் கமல்
123 மைனா பிரபு சாலமன்
124 மொழி ராதாமோகன்
125 மௌனகீதங்கள் பாக்யாராஜ்
126 மௌனராகம் மணிரத்னம்
127 ரத்தக்கண்ணீர் எம் ஆர்  ராதா
128 ரமணா முருகதாஸ்
129 ரோசாப்பூரவிக்கைக்காரி சிவகுமார்
130 ரோஜா மணிரத்னம்
131 வசந்தமாளிகை சிவாஜி
132 வழக்குஎண் 18 வசந்தபாலன்
133 வறுமையின்நிறம்சிவப்பு பாலசந்தர்
134 வாரணம்ஆயிரம் சூரியா
135 வாலி அஜித்
136 வாழ்வேமாயம் கமல்
137 வானமேஎல்லை பாலசந்தர்
138 விண்ணைத்தாண்டிவருவாயா கௌதம் மேனன்
139 விருமாண்டி கமல்
140 வீடு பாலுமகேந்த்ரா
141 வீரபாண்டியகட்டபொம்மன் சிவாஜி
142 வெயில் வசந்தபாலன்
143 வேட்டையாடுவிளையாடு கௌதம் மேனன்
144 வேதம்புதிது பாரதிராஜா
145 ஜானி மகேந்த்ரன்
146 ஜிரெயின்போகாலணி செல்வராகவன்
147 ஜெண்டில்மேன் ஷங்கர்
148 ஹரிதாஸ் பாகவதர்
149 ஹேராம் கமல்

 

இவற்றுள் நான் 130 படங்கள் பார்த்துள்ளேன். நீங்கள்?

100க்கும் கீழே உங்கள் எண்ணிக்கையாயிருந்தால் நீங்கள் நிறைய மிஸ் பண்ணிவிட்டீர்கள்!

இன்னும் நிறைய நல்ல படங்கள் இருக்கே. ( உதாரணமாக   கில்லி, விக்ரம் வேதா, தனி ஒருவன்) அதெல்லாம் இதில காணோமே என்று தேடுபவர்கள்  வேற லிஸ்ட் போடலாம். !!

 

அணிகலன்கள் – தீபா இளங்கோ

Related image
என் அரக்கு நிறப் பட்டின்
” மரமர” ஓசையின் நடுவே
மௌனமானதோர்
அரற்றல் ஒலி கேட்டீர்களா?
அல்லது ,
பளபளக்கும் வைரங்களின்
பகட்டின் பின்னே
பரிதவிக்கும் மனதையாவது
கண்டதுண்டோ யாரும்?
இல்லையா?!!!!
பன்மாட வீட்டின் சாளரத்தினூடோ,
மகிழுந்து  ஒலியெழுப்பியின் ஓசையினூடோ
கேட்கிறதா மனதின் ஓலம்?
இருக்கவே முடியாதுதான்…..
கவனமாகத் தேர்ந்தெடுத்து
தினம் தவறாமல் அணிகின்றனே….
வகைவகையாய் முகமூடிகள்!
அவை கண்டிப்பாக மறைத்திருக்கும்.
ஏனெனில் ,
என் அணிகலன்களில்
அவையே சிறந்தவை….
அத்தியாவசியமானவையும் கூட.

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு அஞ்சலி

 

கலைமாமணி , சிந்தனைச் செம்மல், எழுத்துச் சித்தர்  என்றெல்லாம் பட்டம் , மற்றும் பல விருதுகள் வாங்கிய – பாலகுமாரன் என்கிற, தமிழ் எழுத்துலகத்தின்  மாபெரும் தூண்   இன்று (15 மே 2018) விழுந்துவிட்டது.

விருதுகள் இவரைத் தேடி வந்தன.

திரைப்படங்கள் இவருக்குப் புகழை  அள்ளித்தந்தன ( ரஜினிகாந்த் பேசிய ‘நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி’  என்ற பாட்ஷா வசனம் இவர் பேனாவில் உதித்ததுதான்)

இவரது பல நாவல்கள்  சிறுகதைகள் ஆன்மீகக் கட்டுரைகள்  மக்கள் மனதில் வெகுகாலம் நிலைத்து நிற்கும்.

அவரின் முழுமையான வெற்றிகளைத் தெரிந்து கொள்ள http://www.writerbalakumaran.com

என்ற  இணைய தளத்திற்குச் சென்று பாருங்கள்.

அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் தமிழ் இலக்கிய அன்பர்களுக்கும் குவிகம் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து

Image result for வேலை இல்லாத கிராம வாலிபர்கள்

“மேற்கோள் காட்டிப் பேசுவது

அழகே அல்ல

எதையும் சுயமாகச் சிந்திக்க  வேண்டும்

மேற்கோள் காட்டிப் பேசுபவன் எல்லாம்

முட்டாள் என்றான்

சீன அறிஞன் சியாங்கு புயாங்கு”

(எப்போதோ படித்த ஒரு கவிதை)

 

அரட்டைச் சங்க நண்பர்களுடன் செலவிட்ட நேரங்கள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கு என்று சொல்லமுடியாது. சில நல்ல விஷயங்கள் காதில் விழும். சில உபயோககரமான தகவல்களும் கிடைக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக எனக்கு ஒவ்வொருவரும்  ஒரு விஷயத்தைப் பார்க்கும் முறையில்  உள்ள வித்தியாசங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

எப்போதாவது இரண்டுபேர் மத்தியில் ஒரு கருத்து முரண்பாடு இருக்கும்போது, எல்லோருடைய  உடனடித் தேர்வும் மகேந்திரன்தான். வரது சார்,  ஏதாவது ஜோக்கடித்துப் பேச்சைத் திருப்பிவிடுவாரே தவிர, ஒரு தீர்வோ   – ஏன் குறைந்தபட்சம் ஒரு நிலைப்பாடோகூட –  கிடைக்காது. ஏகாம்பரம், ‘இப்படித்தான் ஆறு வருஷம் முன்னால், என் மாமா வீட்டில்…’ என்று   எதாவது ஒரு நிகழ்ச்சியைச் (சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ) சொல்ல ஆரம்பித்துவிடுவார்.  சந்துரு சமயத்தில் நிதானமாகவும் சமயத்தில் உணர்ச்சிவசப்பட்டும் எதாவது ஒரு பக்கம் பேசுவார் என்றாலும் அது லாஜிகல் ஆக இருக்கும் என்று சொல்லமுடியாது. கேள்விக்குப் பதிலளிக்கவே  மிகவும் தயக்கம் காட்டும் நான், கருத்துச் சொல்வதோ விவாதம் புரிவதோ நடக்காத காரியம்.

நடுவில் கொஞ்சநாட்கள் சங்கத்திற்கு வந்துபோய்கொண்டிருந்தார் ஒருவர். பெயர் ராஜசேகரன் என்று நினைக்கிறேன். அவர் இந்தக் கோஷ்டியில் எப்படி வந்தார் என்றும் தெரியவில்லை. அங்கத்தினர் யாருக்கும் உறவினரோ தெரிந்தவரோகூடக் கிடையாது. ஏகாம்பரம் ஒருநாள் ஏதோ ‘கொறிக்க’ கொண்டுவந்திருந்தார்.  நாங்கள் அமரும் இடத்தின் அருகில் எதற்காகவோ வந்து அமர்ந்திருந்த  அவரையும் கூப்பிட்டுக் கொடுத்தார். அவரும் எங்களுடன் அமர்ந்து அதைச் சாப்பிட்டார்.  மறுநாளே அவரும் ஏதோ கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் கொடுத்துக் கணக்கைச் சரி செய்துகொண்டார்.  அதன் பிறகு அவ்வப்போது எங்களுடன்  அமர்ந்து கொள்வார்.

‘என்ன சார் நான் சொல்வது?’ என்று யாரவது அவரை விவாதத்திற்குள் இழுத்தால் “ரொம்பச்  சரி… ஆமாம் என்ன சொன்னீங்க?”  என்று கேட்டு எல்லோரையும் திகைக்க  வைத்து விடுவார். எப்படி திடீரென்று சேர்ந்து கொண்டாரோ, அது போலவே காணாமலும் போனார்.  ஆனால். அவர் சொன்ன ஒரு விஷயம் யோசிக்க வைத்தது.  ‘நீங்களெல்லாம் ரொம்பநாள்  நண்பர்கள். இன்னிக்கு அடித்துக்கொள்வீர்கள்- நாளைக்குச் சேர்ந்து கொள்வீர்கள். நான் எதாவது சொல்ல …. சரி விடுங்கள்’ இதுவும் என் சித்தாந்தத்திற்கு ஒட்டி வருகிறது.

பார்த்தீர்களா? நான் ஏதோ பரம ஞானிபோல சித்தாந்தம் , கோட்பாடு, உளவியல் என்று அடித்து விடுகிறேனே?  இதுபோல் எதையும் (உலக வழக்கம், கூட்ட மனவியல், சமூகப் பண்பாடு)   யாரையும் (அடங்காப்பிடாரி, பரோபகாரி, அதிகப் பிரசங்கி, எந்த வம்புக்கும் போகாதவன்)  வகைப்படுத்தித்தான் பார்க்கவேண்டும் என்று ஏன் தோன்றுகிறது? மேலாண்மை (MANAGEMENT) மேற்படிப்புகளில் ‘EFFECT’ , SYNDROME’ ‘ISAM’  என்றெல்லாம் பெயர்வைத்துத்தான்    (ஆங்கிலத்தில் ஜார்கன் என்று சொல்வார்களாம்) பாடமும் நடத்துவார்கள். நல்ல மதிப்பெண் வேண்டுமென்றால் தேர்வில் அவற்றை எழுதத்தான் வேண்டும். அதுபோல் ராஜசேகரன் நினைவு வந்ததும் அவர்போலவே யோசிக்கிறேனோ என்னவோ? அவரது இன்னுமொரு மேற்கோள்… “வாழ்க்கையில் ஸ்ட்ராட்டஜி தேவைதான் . ஆனால் அதுவே வாழ்க்கையாகிவிடக் கூடாது.’

மேடைப் பேச்சுகளிலும் இதுபோல மேற்கோள், ஜார்கன், கவிதை, சிறு நிகழ்வுகள், குட்டிக் கதைகள் என்று நிரவி விட்டால்தான் தாக்குப் பிடிக்க முடியும். கூட்டத்திற்குச் சற்று தாமதமாக வந்தார் ஒரு பேச்சாளர். அவர் ஆர்ப்பாட்டமாகச்  சொன்ன இரண்டு குட்டிக்கதைகள், ஒரு ஜோக், ஒரு நிகழ்ச்சி எல்லாமே அவருக்கு முன்பு பேசியவர்கள் சொல்லிவிட்டர்கள்.  இவர் பேச்சை மயான அமைதியுடன் எல்லோரும் கேட்க, இவர் பேச்சை சீக்கிரம் முடித்துக்கொண்டார். ‘ரசனை கெட்ட கும்பல்’ என்று முணுமுணுத்தது மேடையிலிருந்த சிலர் காதில் விழுந்தது.

ஏதோ சுவாரசியமாகப் போய்க்கொண்டிருந்த வெட்டிச்சங்க வாழ்க்கை திடீரென்று முடிவுக்கு வந்தது –  எனக்கு வேலை கிடைத்த காரணத்தால். என் அண்ணன் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாய் அது. ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம்தான்  என்று சொல்லவேண்டும். சிவகுமார் என்னும் ஒரு நல்ல மனிதர்  ஒரு ஸ்டேஷனரி கடை வைத்திருந்தார். அவர் கடையில் பேப்பர் வாங்கிக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக என் அப்பா அங்கே வந்தார். இருவரும் பொருள் வாங்கக் காத்துக்கொண்டு இருக்கும்போது, சிவகுமார் அப்பாவைப் பார்த்து, “நீங்க நேஷனல் ஸ்கூல்லதானே படிச்சீங்க?” என்று கேட்டார். “அட.. சிவகுமாரா?” என்று என் அப்பா கிட்டத்தட்ட கூச்சல் போட்டார்.

அந்தக் காலத்தில் இருவரும் இணைபிரியாத நண்பர்கள். பள்ளியை விட்டபிறகு சந்திக்கவும் இல்லை. சிவகுமாரின்  அப்பாவிற்கு மாற்றல் ஆகிவிட்ட காரணத்தினால், படிப்பு முடிந்ததுமே வேறு ஊருக்குப் போய்விட்டாராம். பள்ளியிலிருந்து எஸ்.எஸ்.எல்.ஸி புத்தகம் வாங்கிய அன்றுதான் இருவரும் கடைசியாக  சந்தித்து இருக்கிறார்கள்.

கடையைப் பையனிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, எங்களுடன் பக்கத்துக்கு ஹோட்டலில் காப்பி சாப்பிட வந்தார். இருவரும் பழைய நினைவுகளையும் தற்போதைய நிலைமைகளையும் பரிமாறிக் கொண்டார்கள். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

அன்று அப்பா தாமதமாக வீட்டிற்கு வந்தார். அவர் வரும் முன்பே நான் தூங்கிவிட்டிருந்தேன்.  காலையில் என்னைக் கூப்பிட்டுக் கடிதம் ஒன்றைக் கொடுத்தார்.  சிவகுமார் அவரது உறவினர் ஒருவருக்கு என்னை அறிமுகப்படுத்தி எழுதிய கடிதம் அது. அந்த உறவினரைப்  பார்க்க நானும் அப்பாவும் மாவட்டத் தலைநகர் போனோம்.

அந்த  மனிதர் மிகவும் செல்வாக்குள்ள பரோபகாரி. என்னைப்பற்றி எல்லாம் விசாரித்துக்கொண்டு ஒரு விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து நிரப்பித் தரச்சொன்னார். பின்னாட்களில் நான் ‘வேலை’ என்று பார்த்த நிறுவனத்தின் பெயரையே அன்றுதான் நான் முதலில் பார்த்தேன்.  ஊருக்குத் திரும்பி வந்துவிட்டோம்.

அது விஷயம் மறந்தும் போய்விட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து  எனக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்ததும், என்னை ஒரு கேள்வியும் கேட்காமல் வேலையில் சேரச் சொன்னதும் ஒரு கனவுபோல்தான் இருந்தது.

வரது சார், மகேந்திரன் சார், ஏகாம்பரம், சீனா எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். சந்துருவும் என்னைப் பாராட்டினார். அவர் இது போன்ற ‘சிறிய’ வேலைகளுக்குப் போவதாக இல்லையே! சற்றுத் தொலைவிலிருந்த இன்னொரு ஊரில்தான் வேலையில் சேரவேண்டும்.  சங்க வாழ்க்கை முடிவடைந்தது.

என்னை உளமாரப் பாராட்டியவன் எதிர் வீட்டு வேம்புதான். அவன் கதை ஒரு சோகக் கதை. நான் வேலை பார்த்த லட்சணத்தைச் சொல்லும் முன் வேம்புவின் கதையைச் சொல்லவேண்டும்

… இன்னும்

 

தலையங்கம்

மூன்று செய்திகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

 

 

 

 

 

 

ஒன்று காவிரி நீர் பங்கீடு ..

 

Image result for காவிரி பிரச்சினை

இந்தப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

அணைகளை நேசிய நீரோட்டத்தில் கலக்க எந்த மாநில அரசும் தயாராயில்லை.

அப்படிக் கொடுத்தாலும் மத்தியில்  இருக்கும் எந்த  அரசும் ஓட்டு வங்கியைக் கணக்கில் கொள்ளாமல் நியாயமாகச் செயலாற்றுமா என்பதும் புரியவில்லை.

இரு தீர்ப்பு வருவதற்குப் பத்துப் பதினைந்து ஆண்டுகள், அதை செயலாற்ற இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகள் என்று போனால் நமது இந்தியா வல்லரசாகப் போகும் கனவு இன்னும் பத்துப் பதினைந்து நூற்றாண்டுகளுக்குத் தள்ளிப் போய்விடும்!

சரியென்று நீதிமன்றமோ மத்திய அரசோ மாநில அரசோ தீர்மானிப்பதை உடனே செயலாற்றவேண்டும்!

தாமதமான நீதி, தரமான நீதி – அல்ல தரமறுத்த நீதியைவிட மோசமானது .

செயல்.. செயல்.. செயல்.. இதுதான் ஒவ்வொரு இந்தியனின் கடமையாக இருக்கவேண்டும்!

 

அடுத்தது நீட் தேர்வு!

Related image

இதில் ஏன் இத்தனை குளறுடி!

நீட் வேண்டாம் என்று சென்ற ஆண்டு போராட்டம் !

இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் ஏன் தமிழகத்தில் அதிக அளவில் வைக்கவில்லை என்ற போராட்டம்!

எதையுமே எதிர்ப்பது என்ற போக்கை அரசியல் கட்சிகள் விடவேண்டும்!

அரசியலை அனைத்துக் கட்சிகளும் ஒரு நாகரிகமாகப் போற்றவேண்டும்!

இது ஒரு இந்தியனின் கனவு. நிறைவேறுமா?

 

 

மூன்றாவது கர்நாடகா தேர்தல்.

Image result for karnataka election final results

தொங்கு சபை என்று பல அரசியல் ஆரூடங்கள் சொல்லின.

அது சரியாகவும் அமைந்தது.

இனி சாணக்கிய வேலைகள் தொடரும்.

யானைப் பேரங்கள் நிகழும்  (குதிரையெல்லாம் போய் விட்டது)

ஏன் அரசு அமைப்பதற்குப்  புதிய முறையை சிந்திக்கக் கூடாது?

ஆட்களைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுப்பதைவிடக் கட்சியைத் தேர்ந்தெடுத்தால் என்ன? எந்தக் கட்சிக்கு ஒரு மாநிலத்தில் அதிக ஓட்டு எண்ணிக்கை கிடைக்கிறதோ அதையே ஐந்து ஆண்டுகள் ஆளச் சொல்வோம்.

அதே  போல் நாட்டின் பிரதமரையும் தேர்ந்தெடுப்போம்

(கிட்டத்தட்ட அமெரிக்காமாதிரி இருக்கிறதே என்று தோன்றுகிறதா? )

அது சரியானால் அதைச் செய்வதில் என்ன தவறு?

பூனைக்கு மணிகட்ட மணி பார்க்க வேண்டாம்.

யோசிக்க ஆரம்பித்தாலே அது முதல் மணி!

(அம்மையார் பாணியில்) செய்வீங்களா? அல்ல – செய்வோமா?

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

dr1

 

படம் நன்றி: http://consenttobenothing.blogspot.in

 

நேர்மையின் மறுபெயர் ஏ என் சிவராமன்!

 

இந்திய பத்திரிக்கைத் துறையின் பிதாமகர் என்றே சொல்லலாம் – தேசப்பற்று, நாணயம், நேர்மை, மனத் துணிவு, எழுதும் கருத்துக்களில் தெளிவு இப்படிப் பல குணாதிசயங்களின் மொத்த உருவம் திரு ஏ என் எஸ் அவர்கள்.

சென்ற வாரம் டேக் மையத்தில் சதர்ன் ஹெரிடேஜ் சார்பில், கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள், தினமணி பத்திரிக்கை ஆசிரியர் மறைந்த திரு ஏ என் சிவராமன் அவர்களைப்பற்றி  (கீழாம்பூரின் அப்பா வழி மாமா தாத்தா  திரு ஏ என் எஸ்) சுமார் தொண்ணூறு நிமிடங்கள் ஓர் அருமையான உரையாற்றினார். –  1904 ல் அவர் பிறந்தது முதல், தனது தொண்ணூற்று ஏழாவது பிறந்த நாளில் (பிறந்த நாளும், இறந்த நாளும் ஒன்றே – மார்ச் 1) இறந்தது வரையிலான சில நிகழ்வுகளைக் கையில் குறிப்பேதுமின்றி, சுவைபடச் சொன்னார் கீழாம்பூர் – அவர் பேசியதிலிருந்து சில பகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்!

1904 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி கொச்சியில் பிறந்தார் ஆம்பூர் நாணுஐயர் சிவராமன் ! அந்தக் கால இண்டர்மீடியட் படித்தவர். தனது படிப்பில் நூற்றுக்கு இருநூறு மார்க்குகள் எடுத்தவர் – சாய்சில் விடவேண்டிய கேள்விகளுக்கும் பதில் எழுதினால் இப்படித்தானே மார்க் கிடைக்கும்! தனது பதினேழாவது வயதிலேயே, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுக்கொண்டு சிறை சென்றார்! படிப்பும் ஒரு முடிவுக்கு வந்தது!

டிசி வாங்கும்போது, அன்றைய பிரின்சிபால் திரு கே சி போஸ், எந்த நேரத்திலும், படிப்பதை விட்டுவிடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறார் – எப்படிப்பட்ட ஆசிரியர்! சத்தியத்துக் கேற்ப ஏ என் எஸ் அவர்களும், தனது இறுதி மூச்சுவரை நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல் – சில நாட்களில் பதினாறு மணி நேரம் – படித்துக்கொண்டிருந்தார் – இவர் எப்படிப்பட்ட மாணவர்! இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ளவேண்டிய நல்லதொரு பண்பு இது!

அன்று ஏ என் எஸ் க்குப் பிடித்த தலைவர் திலகர். அவர் மறைவுக்கு, தாமிரபரணி ஆற்றில் திதி கொடுத்தவர் ஏ என் எஸ்! அதனால் பிரிட்டிஷ் போலீசால் கவனிக்கப்பட்டவர். ஒரு முறை அவரைக் கைதுசெய்ய, அவர் இருக்கும் கிராமத்துக்கு வருகின்றனர் போலீசார் – இடம் கண்டுபிடித்து வந்து கைதுசெய்து, போலீஸ் வானில் ஏற்றிச்செல்ல, வீட்டிலிருந்து, அக்கிரகாரத்தின் முனைவரை அவரது தாய் கூவியபடி வேனுக்குப் பின்னால் ஓடி வருகிறார். அவருக்குத்தான் தன் பிள்ளையின் மீதும், அதைவிடத் தாய்நாட்டின் மீதும் எவ்வளவு பாசம் – கண்ணிலிருந்து வேன்  மறையும்வரையில் அவர் ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்று உரக்கக் கூவியவாறே ஓடிவருகிறார்!

கல்லிடைக்குறிச்சியில் சில காலம் சுதேசி பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தார் ஏ என் எஸ் – அப்போது கிடைத்த நேரத்தில், சரித்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். பின்னாளில் தினமணியில் அவரது நேர்மையான தலையங்கங்களுக்கு அடித்தளமாக அமைந்தது இந்தப் படிப்பு!!

அப்போது மிகச் சிறந்த பத்திரிக்கையாளராக இருந்த திரு டி எஸ் சொக்கலிங்கம் அவர்கள் சென்னையில் நடத்திக்கொண்டிருந்த ’காந்தி’ இதழில் ஏ என் எஸ் சேர்ந்தார். அந்த சமயத்தில் இராஜாஜியுடன் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு இருபது மாதங்கள் சிறைத் தண்டனை அடைந்தார். உடன் சிறையில் இருந்தவர் திரு காமராஜ்.

1934 ல் தொடங்கப்பட்ட தினமணிக்கு டி எஸ் சொக்கலிங்கம் ஆசிரியராக, ஏ என் எஸ் அவர்கள் உதவி ஆசிரியர் ஆனார். 1944 ல் சொக்கலிங்கம் தினமணியை விட்டுவிட, ஏ என் எஸ் அவர்கள் தினமணி ஆசிரியரானார். 1987 வரை தினமணியின் ஆசிரியராக அவர் ஆற்றிய பணி, பத்திரிக்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை!

டி எஸ் சி அவர்களும், ஏ என் எஸ் அவர்களும் பத்திரிக்கை உலகின் இரட்டையர்கள் என்றே அழைக்கப்பட்டனர்! பரஸ்பரம் அவர்கள் புதிய கதராடைகளை பரிமாறிக்கொள்ளாமல், ஒரு தீபாவளியும் கடந்ததில்லை!

காஞ்சி மகாப் பெரியவர், ஒரு முறை ஏ என் எஸ் அவர்களிடம் ஒரு கட்டிட வரைபடத்தைக் கொடுக்கிறார் – ஒரு கோயிலுக்கான ‘ஷெட்’.- இதை ஏன் கொடுத்தார் என்பது இருவருக்கும் புரியாத ஒன்று!  திரும்ப வந்த ஏ என் எஸ்,  திரு கோயங்கா அவர்களிடம், இதைப்பற்றிக் கூற, அருகிலிருந்து கேட்டவர், திரு பிர்லா அவர்கள். அரை மணி நேரத்தில் அந்த ஷெட் கட்டுவதற்கான முழுத் தொகையையும் பிர்லா அவர்கள் வழங்கி விடுகிறார்கள். எல்லாமே எதிர்பாராமல் நடக்கின்றன – பிர்லா அவர்களின் காஞ்சித் தொடர்பு, ஏ என் எஸ் அவர்களாலேயே முதலில் ஏற்படுகிறது!

எமர்ஜென்சியை வெளிப்படையாக எதிர்த்த இரண்டு பத்திரிக்கைகளில் ஒன்று தினமணி. சென்சார் கடுமையாக இருந்த காலம் – தலையங்கப் பகுதியை ஒன்றும் எழுதாமல் வெறுமையாக விட்டுவிடுவார் – அல்லது உலக ஜனநாயக நாடுகளைக் கேலி செய்வதுபோல் பகடியாக எமர்ஜென்சியை சாடுவார்!

திரு காமராஜ் அவர்களுக்கும், ஏ என் எஸ் க்கும் அவ்வளவு நெருக்கம். எமர்ஜென்சியில் மனமுடைந்து காமராஜ் மறைந்தபோது, வருந்தி, ஒரு வரி எழுதிவிட்டு, ‘ என் பேனா இனி எழுத மறுக்கிறது ‘ என்றெழுதி சென்சார் இருப்பதைச் சுட்டினார்! எமர்ஜென்சிக்குப் பிறகு, ‘எமர்ஜென்சியின் முதல் பலி (VICTIM) திரு காமராஜ்’ என்று எழுதினார்.(இதனை திரு மெரினா அவர்கள் ஆனந்த விகடனில் குறிப்பிட்டுள்ளார்!).

திரு டி எஸ் கிருஷ்ணா, திரு காமராஜ், திரு கருணாநிதி ஆகிய மூன்று பெரும் ஆளுமைகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர். எமர்ஜென்சி சமயத்தில், அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களைச் சந்திக்க, செக்யூரிடிகளுக்குத் தெரியாமல், பேப்பர் கட்டுகளுடன் வேனில் ஏ என் எஸ் பயணித்தது வியப்புக்குரியது!

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஃப்ரென்ச், ஜெர்மன், உருது என இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை எழுத, படிக்கத் தெரிந்தவர். ஒரிஜினல் குரானைப் படிப்பதற்காக உருது மொழியை ஓர் ஆசிரியர் வைத்துக் கற்றுக்கொண்டார் – அப்போது அவருக்கு வயது எண்பதுக்கும் மேலே!

’கணக்கன்’, ‘அரைகுறைப் பாமரன்’ போன்ற புனைப் பெயர்களில், அறிவியல், பொருளாதாரம், அரசியல் களங்களில் ஏராளமான கட்டுரைகள், பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதியவர் ஏ என் எஸ். ‘மாகாண சுயாட்சி’ பற்றிய புத்தகம் 1928 லேயே எழுதியவர்! ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே’ – கணக்கன் கட்டுரைகள் – ‘நாணயத்தின் மதிப்பு இறங்கியது ஏன்?’ போன்ற புத்தகங்கள் அனைவரும் படிக்க வேண்டியவை! ‘விண்வெளிக்கு அப்பால்’ என்ற இவரது புத்தகம், கலாம் அவர்கள் ஏவுகணைபற்றி அறிந்துகொள்ள ஓர் உந்துதலாக இருந்தது என்று கலாம் அவர்களே குறிப்பிட்டுள்ளார்!

1987 ஆகஸ்ட் – தினமணி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார் – ஆனாலும் படிப்பதையோ, எழுதுவதையோ விட்டுவிடவில்லை!

பத்திரிக்கைத் துறையில் அவரது சேவையைப் பாராட்டி, 1988 ல் அவருக்கு “B.D.GOENKA AWARD” கொடுக்கப்பட்டது!

2001, மார்ச் 1 திரு ஏ என் எஸ் மறைந்தார் – அவர் வாழ்க்கை முழுவதும் நேர்மை, உண்மை, உழைப்பு, படிப்பு, எழுத்து என்று நற்பண்புகளால் நிறைந்தது.

இன்றைய இளைஞர் சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு தலை சிறந்த பத்திரிக்கையாளர் திரு ஏ என் சிவராமன் அவர்கள்.

திரு கீழாம்பூர் அவர்களுக்கு என் நன்றி – அவர் பேசியதில் மிகக் குறைந்த அளவே இங்கே எழுதியிருக்கிறேன் – ஆனாலும் மனம் நிறைவாய் இருக்கிறது!

 

 

Image may contain: 6 people