குவிகம்

தமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்

மீனம்மா நானுன் தாஸனம்மா..! — கோவை சங்கர்

Image result for madurai meenakshi

 

மீனம்மா நானுன் தாஸனம்மா – உன்னூராம்
மதுரை யம்பதி வாஸனம்மா!

அவளிலையேல் அவனில்லை சக்தியின்றி சிவமில்லை
உன்னருள் இலையென்றால் அவனியிலே அசைவில்லை!

உனைப்பாடும் பக்தர்யாம் துன்பத்தில் உழல்கையிலே
மனசாந்தி சாந்தியென மனம்விட்டு கதறுகிறோம்
வன்முறைகள் எங்களையே விடாது வாட்டுகையில்
அன்புக்கும் அமைதிக்கும் இறைஞ்சியே ஏங்குகிறோம்!

வெறிகொண்ட மாந்தர்கள் நடுவில்யாம் நிற்கையிலே
பட்டால்தான் புரியுமென நினைப்பதுவும் முறைதானோ
அபயமென்று வந்தவரை சோதிப்பது சரிதானோ
உபாயமொன்று சொல்லியெமை காத்திடவே வேண்டாமோ!

ஆசையது அதிகமாக நெறிகெட்டு செல்கையிலே
அணையிட்டு தடுப்பதுன் கடமைதா னில்லையோ
அழுக்காறு ஆட்கொள்ள மனம்வெதும்பி வாடுகையில்
பொறாமையே வராமல் செய்திடவே வேண்டாமோ!

யாமெல்லாம் உன்னுடைய பிள்ளைகள் அல்லவோ
எமையெல்லாம் வதைப்பது உனக்குத்தான் நீதியோ
எப்போதும் உனைநினைக்க நீசெய்யும் சூழ்ச்சியோ – எமக்கு
நல்வாழ்க்கை அமைப்பதுன் கடமைதான் இல்லையோ!

 

இது ஐ பி எல் சீசன் அதற்காக மீண்டும் ராமாயண கிரிக்கெட்

ராமாயண கிரிக்கெட்

image

 

அறுபதினாயிரம் டெஸ்ட்  ரன்களைக் குவித்தவரும் இந்நாள் ‘அயோத்யா  கிரிக்கெட்   கிளப்’ தலைவருமான தசரதன் தன் பிள்ளைகள்  ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் நால்வரும் கிரிக்கெட் டில் சிறப்பாக இருப்பதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டார். அதுசமயம் அங்கே வந்த விஸ்வாமித்ரர்  சௌத் ஆப்ரிக்காவில் நடக்கும் லோக்கல் மேட்சில்  கலந்துகொள்ள ராமனையும் லக்ஷ்மணனையும் கூப்பிட்டபோது அவர்கள் எதிர்காலம் என்னாகுமோ என்று கவலைப்பட்டார். 

 சௌத் ஆப்பிரிக்காவில் சூப்பராக அவர்கள் விளையாடியதைப் பார்த்து மனம் மகிழ்ந்த  விஸ்வாமித்ரர் மிதிலையில் நடக்கும் புதுவித  கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள ராம லக்ஷ்மணரை அழைத்துச்சென்றார்.

 மிதிலையில் தக தக என்று தங்கத்தினால் ஆன ‘வோர்ல்ட் கப் ‘ ஒன்று பரிசாகக் காத்துக்கொண்டிருந்தது. அருகே மாபெரும் பேட்.. அந்த பேட்டை எடுத்து யார் ஜனகர் போடும் பந்தை சிக்ஸர் அடிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் ‘வோர்ல்ட் கப்’.

 

ராமன் வந்து imageபேட்டைத்தூக்கி ஜனகர் போட்ட புல்டாஸ்சை வேகமாக அடிக்க பேட், பந்து, ஜனகரின்

imageஅரண்மனை ஜன்னல்கள் எல்லாம் நொறுங்கிப் போயின.

ராமனுக்குக் கிடைத்தது  வோர்ல்ட் கப் .

தசரதன் மிக மகிழ்ந்து ராமனை அயோத்யா  கிரிக்கெட்   டீமின் காப்டனாக்க நிச்சயித்து அறிவித்தார்.

உடனே  ஏ சி சி யின் மற்றொரு மெம்பர் கைகேயி, பரதனைத்தான் கேப்டனாகப் போடவேண்டும் என்று வாதாடினாள் .

அதுமட்டுமல்லாமல் ராமன் 14 வருஷம் ‘சென்னை 28ல்’ இருக்க வேண்டும் என்றும் போராடினாள் . கைகேயிக்குக் கொடுத்த சத்தியத்தை எண்ணிக் கலங்கினான் தசரதன்.

ராமன் தானாகவே சென்னை 28 போவதாக ஒப்புக்கொண்டு வோர்ல்ட் கப்பையும் லக்ஷ்மணனையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

imageசென்னை 28ல் தனியாக இருந்த ‘ வோர்ல்ட் கப் ’பைப் பார்த்த ஸ்ரீ லங்கா கேப்டன் ராவணனின் தங்கை சூர்ப்பனகை அதைத் திருடும்போது  லக்ஷ்மணன் பேட்டால் அடிக்க மூக்கில் அடிபட்டு ஓடினாள்.   அவள் கேப்டன் ராவணனிடம் விஷயத்தைக் கூறியதும் அவன் விடுதலைப் புலிகள் வேஷத்தில் வந்து’ வோர்ல்ட்  கப்’பைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டான்.  ராமனும், லக்ஷ்மணனும் மனம் தளர்ந்து ‘ வோர்ல்ட் கப்’பைத் தேடியபடி சென்னைத் தெருவெல்லாம் ஓடினார்கள். 

   வரும் வழியில் ‘ கிஷ்கிந்தா கிரிக்கெட் ‘ கிளப்பின்  மெம்பரான  அனுமனைச் சந்தித்தனர்.  அனுமன்   ராமனை  அயோத்யா குப்பத்தில் நடைபெறும் வாலி – 11 Vs  சுக்ரீவன் – 11  போட்டிக்கு அம்பயராக இருக்கும்படி வேண்டிக்கொண்டான்.மற்ற அம்பயர்கள் எல்லாம்  தாதா  வாலிக்குப் பயந்து அவனுக்கு அவுட்டே கொடுப்பதில்லை என்றும் சொன்னான் சொல்லின் செல்வன் அனுமன்.  மேட்சின் போது சுக்ரீவன் போட்ட ‘ நோ பாலுக்கு ‘ ராமன் வாலியை ‘ LBW ‘என்று சொல்லி அவுட் ஆக்கினான். “ ராமா !  நீயே இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டு லோக்கல் மேட்சில் இருந்து ரிடயர்ட் ஆனான் வாலி.

   சுக்ரீவனைக் கேப்டனாக்கி அவன் ஆட்களை விட்டு ‘ வோர்ல்ட் கப்’ பைத் தேடும்படி கேட்டுக்கொண்டான் ராமன்.

   அனுமன் அது ஸ்ரீ லங்காவில் இருக்கிறது என்று கண்டுசொன்னான். உடனே லக்ஷ்மணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஸ்ரீ லங்கா புறப்பட்டான் ராமன்.  அங்கே ‘ வைஸ் கேப்டன் ‘ விபீஷணன் கட்சிமாறி இவர்கள் டீமில் சேர்ந்துகொண்டான்.

மேட்ச் தொடங்கியது. முப்பத்து முக்கோடி தேவரும் ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்தனர். முதலில் பேட் செய்த ராமன் – லக்ஷ்மணன் – ஓபனிங் பேட்ஸ் மென் இருவரும் பவுண்டரி, சிக்சராகவே  அடித்தனர்.  ராவணனின் பௌலர்கள் எல்லோரும் களைத்துப்  போயினர்.  ஆனால் திடீரென்று  ஆல்  ரவுண்டர்  இந்திரஜித்  ஒரு  ‘ பவுன்ஸர் ‘  போட லக்ஷ்மணன் அடிபட்டு மயங்கி விழுந்தான்.  ராமன் துடித்துப்போனான்.  ஆனால் அனுமன் ஓடி வந்து  முகத்தில்  ‘ ஸ்பிரே ‘ பண்ண லக்ஷ்மண் எழுந்து விளையாடத் துவங்கினான்.  ஐம்பது ஓவரில் ஆயிரம் ரன் எடுத்து ராமன் லக்ஷ்மண் இருவரும் ‘ நாட் அவுட் ‘ பொசிஷனில் ‘ டிக்ளேர் ‘ செய்தனர்.

  அடுத்து வந்தது ஸ்ரீ லங்காவின் பேட்டிங்.  ராமன் லக்ஷ்மணன் பாஸ்ட் பௌலிங்கிற்கு  முன்னால்  ஆட முடியாமல் தவித்தனர்.  அங்கதனும் சுருள்பந்து போட்டு வேறு திணறடித்தான்..  ஆனால் பல செஞ்சுரி போட்ட கும்பகர்ணன் வந்து, எல்லா பந்துகளையும் சிக்ஸராக  அடிக்க  ராமன் கவலைப்பட ஆரம்பித்தான்.  ஆனால் முடிவில் சுக்ரீவனின் சுருள்பந்தில் முகத்தில் அடிபட்டு,  ராமனின் பெருமையை உணர்ந்து,  “ ராமா” உன் கையாலேயே அவுட் ஆக விரும்புகிறேன் “ என்று சொல்ல அடுத்துப் போட்ட ராமனின் பந்தில் ‘ கிளீன் போல்டாகி ‘ வெளியேறினான் கும்பகர்ணன். 

   அதேபோல், இந்திரஜித் எப்படிப் போட்டாலும் பவுண்டரியாக அடிப்பதைக்  கண்டு கலங்கிய ராமனிடம் ‘ ஷார்ட் பிட்ச் ‘ போட்டால் தடுமாறுவான் என்று விபீஷணன் சொல்ல லக்ஷ்மணன் அதே மாதிரி போட அவுட் ஆனான் இந்திரஜித்.  ஸ்டேடியத்தில் இருந்த முப்பத்து முக்கோடி தேவரும் ‘ ஜிங் ஜிங் ‘ என்று  ‘ ஜால்ரா ‘ தட்டி ஆரவாரம் செய்தனர்.

 அடுத்து வந்த ராவணன் கோபாவேசத்தில் அடிக்க ஆரம்பித்தான்.  ஆனால் அப்போது லைட் பெயிலியராகிக்  கொண்டிருந்தது.  ராமன் நினைத்திருந்தால்  அவனை அவுட் ஆக்கியிருக்கமுடியும்.  இருந்தாலும் ராமன் பெருந்தன்மையுடன்  ராவணனை  ‘ இன்று  போய்  நாளை  வா ‘ என்று சொன்னான்.  ராவணன் அவமானத்தில் துடிதுடித்துப் போய்விட்டான்.

 மறுநாள் மேட்சில் ராவணன் தனது பத்து பேட்டுகளை மாற்றி மாற்றி விளையாடியும் ராமன் லக்ஷ்மணன் பௌலிங்கில் ரன் எதுவும் எடுக்கவே முடியவில்லை.  எல்லா ஓவரும் மெய்டனாகவே  போய்க் கொண்டிருந்தன.  கடைசியில் ராமனின் சூப்பர் பௌலிங்கில் க்ளீன் போல்டானான் ராவணன்.  “வோர்ல்ட் கப் “ திரும்பவும் ராமனிடம் வந்து சேர்ந்தது,  இருப்பினும் அது ஸ்ரீ லங்காவில் ராவணனிடம் இத்தனை நாள் இருந்ததே என்று சந்தேகப்பட்டு  உலக மக்களுக்காக  அதை ‘ Fire  Polish ‘ போட்டு எடுத்துச்சென்றனர்.

ராமன் அயோத்திக்குக் கேப்டனாகும்  காட்சியில்லாமல்  எப்படி ராமாயணக் கிரிக்கெட் முடிவுறும்?

ராமன் கேப்டனாகி, வோர்ல்ட்  கப் அருகில் இருக்க  பரதன்,  லக்ஷ்மணன், சத்ருக்னனுடன்  அனுமனும் கை கட்டி பவ்யமாக நிற்க ஓர் குரூப்  போட்டோ எடுத்துக்கொண்டதும் ராமாயண கிரிக்கெட்  முடிவுற்றது.

imageImage result for dhoni in csk

 

 

இலக்கியவாசல் – ஏப்ரலில் நடந்தது மேயில் வருவது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஏப்ரல் 28 சனிக்கிழமையன்று வழக்கம்போல் இலக்கிய சிந்தனையும் இலக்கிய வாசலும் இணைந்து நடத்திய நிகழ்வு 

 

இலக்கியச் சிந்தனை சார்பில் பெருமதிப்பிற்குரிய புதுவை ராமசாமி அவர்கள் புலவர் கீரனின் தமிழ்ப் பணியைப்பற்றி அழகாக உரையாற்றினார்.

 

குவிகம் இலக்கியவாசல் சார்பில் திருமதி வல்லபா ஸ்ரீநிவாசன் அவர்கள் ‘கோவில் சிற்பங்களில் இலக்கியம்’ என்பதைப்பற்றித் தெளிவாகவும் பெருமையுடனும் பேசினார்கள்.

 

மே மாதம் 26 ஆம் நாள் திருமதி காந்தலக்ஷ்மி ‘சிறுகதைகளின் போக்கும் நோக்கமும்’ என்பதுபற்றி  இலக்கியச் சிந்தனை மற்றும் குவிகம் இலக்கியவாசல் இரண்டின்  சார்பாகவும் பேச இருக்கிறார்கள்!

அனைவரும் வருக!

அம்மா கை உணவு (3) – சதுர்புஜன்

 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  2. இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Image result for home made dosa

 

தோசை ஒரு தொடர்கதை

 

தோசையம்மா  தோசையென்று பாட்டு எழுதினான் 

அன்று முதல் இன்று வரை அந்த ஆசை விடலியே !

அரிசிமாவும் உளுந்துமாவும் அரைத்து சுட்ட தோசையில்

அன்றும் இன்றும் என்றும் என்றும் பாசம் சிறிதும் போகலை !

 

காலை என்றால் இட்டிலி ; மாலை என்றால் தோசைதான் ;

ஆண்டாண்டு காலமாக அம்மா வார்த்துப் போட்டது !

சட்டினியும் சாம்பாரும் சேர்த்தடித்தால் சொர்க்கமே –

இன்னும் ஒன்று இன்னும் ஒன்று என்று கேட்கத் தோன்றுமே !

 

தோசைக் கல்லைப் போட்டதும் சொய் சொய் ஓசை கேட்டதும்

நாவில் ஊறும் எச்சிலை நிறுத்திடவே முடியுமோ ?

முறுகலான தோசையை முகர்ந்து பார்க்கும் போதிலே

உறுதியாக நம் முகத்தில் புன்முறுவல் தோன்றுமே !

 

விண்டு விண்டு உண்ணும் போது தீர்ந்துபோகும் தோசைகள் –

ஒன்றிரண்டு மூன்று என்று எண்ணிக்கைகள் ஏதடா ?

தொட்டுத் தொட்டு உண்ணலாம் முழுகடித்தும் தின்னலாம்

எண்ணையும் பொடியும் போட்ட தோசைக்கேது ஈடடா ?

 

சாதா, மசாலா என்று ரகம்ரகமாய் தோசைகள் !

தோசைக்காகவே தனியே தொடங்கிவிட்ட ஓட்டல்கள் !

தமிழனுடன் கலந்துவிட்ட பெருமை பெற்ற தோசைதான் –

தரணி முழுதும் சுற்றிச் சுற்றி பவனியாக வருகுது !

 

ஆசைக்கோர் அளவில்லை ஆன்றோர் சொன்ன வாக்கிது –

தோசைக்கும் அளவில்லை – நாமறிந்த உண்மையே !

சலித்திடாது இறுதிவரை தோசை சுட்டு வழங்கினாள் –

அன்னை தந்த தோசை ருசி என் நாவில் என்றும் நின்றதே !

 

                 @@@@@@@@@@@@@@

Related image

    

 

சுஜாதாவின் பிறந்த நாள் மே 03 – அவரது தந்தையைப்பற்றிய ஒரு கட்டுரை (வாட்ஸ் அப்பில் வந்தது)

 

அப்பா அன்புள்ள அப்பா”

செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே வந்தே?” என்றார்.

“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன். “நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள். சாப்ட்டியா?” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”

“என்னப்பா வேணும் உனக்கு?”

“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.”

சட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்?” என்றார்.

பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.

நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்ப இன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.

பேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி “உன் முன்னோர் யார் என்று அப்புறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நூறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம்பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால் கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”

“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”

“தெரியும். ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போய்விட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”

“ஏதாவது படித்துக் காட்டட்டுமா அப்பா?”

“வேண்டாம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ. உனக்கு எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.

காலை புறப்படும்போது தூங்கிக் கொண்டிருந்தார்.

பெங்களூர் திரும்பி வந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்று தந்தி வந்தது. என்.எஸ் பஸ்ஸில் “என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”

“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா.”

“ஓஹோ அப்படிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா.”

ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட்சொட்டென்று ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசனையும் வயிற்றைக் கவ்வியது.

கண்ணைக் கொட்டிக் கொட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன். கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன். பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது. கையை மெல்லத் தூக்கி மூக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.

“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி மறுபடி…”

படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அப்பாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக் கொண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன்கோபிங்க” இவரா அணைக்கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக் கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்? “என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டுவிட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா? “ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”

மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார்.- “பெட்ஸோர் வந்துரும் பாருங்க.”

ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸ்பத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.

ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.

“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”

“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார். ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ.” “ஃப்ளுயிட் ரொம்ப கலெக்ட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்!”

எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள்தான், ஆனால்…

ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். தூக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப் போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா? கிட்டப் போய்க் கேட்கிறேன்.

“என்னப்பா?”

“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார். வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது.

If I had strength enough to hold a pen, I would write how easy and pleasant it is to die.

பொய்!

ஆனால் இவர் அவஸ்தைப்பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடண்ட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்து வைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபந்தத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?

காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

ஆஸ்பத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லறை கொடுக்காதவர்களை எல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது. இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்தைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ.” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.

“பேர் சொல்லுங்கோ”

“சீனிவாசரா..”

“அஃபேஸியா ஆர்ட்டீரியோ ஸ்கிலிரோஸிஸ். ஹி இஸ் மச் பெட்டர் நௌ. டோண்ட் ஒர்ரி!” புதுசாக பல்மனரி இடீமா (pulmonary oedema) என்று ஒன்று சேர்ந்துகொண்டு அவரை வீழ்த்தியது.

சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார். உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம். வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டு வைத்தார்கள். நண்பர்கள் வந்தார்கள். ஆஸ்பத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.

காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம். இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”

உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை எல்லாம் சிரித்துக்கொண்டே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞ்சித்து ஹிரண்யம்! அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி!”

“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes, we do not exist”.

ஒன்பதாம் நாள்… பத்தாம் நாள்… பதினோராம் நாள்… பிரேதத்தின் தாகமும் தாபமும் தீருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப் பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்த தடவை ஒரு ஸோஷல் தீமா எடுத்துண்டு எழுதுங்களேன்!”

சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும் சொம்புகளுக்கும் அலைந்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுஜ நூற்றந்தாதியும் சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு – “எனக்கினி வருத்தமில்லை” – இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.

“அவ்வளவுதாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.

சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷுவாலிடியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர்கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன்.

Ask Rangarajan about Bionics!

ஓவர்சீஸ் பாங்கில் மீசையில்லாத என்னைப் பார்த்து சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது!

ஏன் இந்த ஈர்ப்பு? – மாலதி சுவாமிநாதன் மன நல மற்றும் கல்வி ஆலோசகர்

Related image

என் க்ளையன்ட் ஒருவர் விடைபெற்று முடித்து, கதவைத் திறந்து வெளியேறியதுமே, சட்டென்று இருவர் உள்ளே நுழைந்தார்கள். ஒருவர், “ஸாரீ, ரொம்ப அவசரம். நான் சுகன். எனக்கு உங்களைத் தெரியும். இவர் என் நண்பர். இவங்க மூத்த மக, காதல் விவகாரத்தால் வீட்டிலே அடைத்து வைத்திருக்கிறோம். நான்தான் உங்களிடம் அழைத்துவரச் சொன்னேன். என்னிக்கு வரலாம்?” மூச்சு விடாமல் முடித்தார். அவளை அடைத்து வைத்திருந்ததால், நாளை என்றேன். உடனே அந்த அப்பா கண்களில் நீர் வழிய “ராணி நல்ல பொண்ணு, இப்படி..” முடிக்காமல் வெளியே சென்றுவிட்டார்.

அடுத்த நாள் வந்தார்கள். ராணி கசங்கிய சுடிதார், வாராத தலை, என்றைக்கோ பின்னிய பின்னல். அவளின் இடப்பக்கத்தில் அவள் அப்பா, வலப் பக்கத்தில் ஒரு பெண்மணி (அம்மா?), பின்னே சுகன். உள்ளே நுழைந்ததும் சுகன், “நான் வெளியே இருக்கிறேன். இது இவர்கள் குடும்ப விவகாரம். ஏய் ராணி, மேடத்துக்கிட்ட எல்லாம் சொல்லு. மேடம், ஃபீஸ் நானே தருகிறேன்.” என்று சொல்லி வெளியேசென்றார்.

ராணியின் அப்பா என்னைப் பார்த்து, “என்னன்னு புரியவே இல்லை, நல்லா படிக்கிற புள்ள.” குபுக்கென்று அழ ஆரம்பித்தார். வந்த பெண்மணி, ராணியைப் பார்த்து, “பாரு அப்பா எப்படி அழறார், எல்லாம் உன்னாலே. மேடம், நா இவ அம்மா. பட்டறை இருக்கு. எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்ததுக்கு இப்படியா செய்யணும்?” என்றாள்.

ராணி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கீழே பார்த்தபடி இருந்தாள். அவளைப் பெயரிட்டுக் கூப்பிட்டு என்னிடம் பேச விரும்புகிறாளா என்று கேட்டேன். தலையை வேகமாக அசைத்தாள். பெற்றோரிடம் அவளைத் தனியாகப் பார்க்க விரும்புகிறேன் என்றேன். ஏன் என்று இருவரும் கேட்டதற்கு, பதிலளித்தேன், “உங்களை வைத்துப் பேசினால், உங்களுக்கு மன வருத்தமாகும். ராணிக்கும் கஷ்டமாக இருக்கும். இங்கு பேசுவதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டேன். தேவை இருந்தால்தான் சொல்வேன். நீங்களும் இங்கு பேசியதைச் சொல்ல ராணியை வற்புறுத்தக் கூடாது” என்றேன்.

பெற்றோர் வெளியேறியதும், ராணி பத்து நிமிடத்திற்குக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். தன்னை அடைத்து வைத்தது, என்னவோ செய்தது என்று ஆரம்பித்தாள். 12ம் வகுப்பில் படிக்கிறாள். படிக்கப் பிடிக்கும், எப்பொழுதும் முதல் ராங்க்தானாம்.

பத்தாவதிலிருந்து வீட்டில் கெடுபிடி அதிகம். அவள் பெற்றோருக்கு ஏதோ பயம். அவள் டீச்சர்களிடம், “ராணி குணவதியாக இருக்காளா?” என்றே கேட்பார்களாம். வெளியே சென்றாலே, ‘கீழே பார்த்து நட’, ‘யாரோடும் பேசாதே’ என்பார்களாம். இதற்கு முன்பு இப்படி எல்லாம் செய்யவில்லை என்றும் சொன்னாள்.

இதனாலேயோ என்னவோ, அவள் ஆசிரியர்கள், இவள் ஒரு மார்க் குறைந்தாலும் “என்ன சரியா இருக்கியா? காதல் கீதல் இல்லையே” என்று கேலியாகக் கேட்பார்களாம். இந்த முறை அவள் வகுப்புத் தோழன் சுரேஷ், இரண்டாவது ராங்க் வாங்குபவன், இவள் தனக்கென்றுத் தக்க வைத்திருந்த முதலாவது ராங்க்கைப் பறித்து வாங்கி விட்டான். சுரேஷ் தானாக வந்து, ஆறுதல் சொல்லிச்சென்றான். அவள் மனதிற்கு இதமாக இருந்தது.

அன்றிலிருந்து சுரேஷிடம் சந்தேகங்கள் கேட்பது, வாழ்த்துவது ஆரம்பமானது. அவனுடன் செலவிட்ட நிமிடங்கள் மிக இனிமையாக இருக்க, ஏதோ கிளர்ச்சி செய்தது. ஏதாவது சாக்குக் கண்டுபிடித்துப் பேசுவார்கள். நாளடைவில், சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீடு திரும்புவது என்றாயிற்று.

அடுத்த பரீட்சையில், இருவரும் 60-70 மதிப்பெண்கள் வாங்கினார்கள். வீட்டில், ஆசிரியர்கள், நண்பர்கள், எல்லாரும் கேட்டார்கள், சத்தம் போட்டார்கள். ராணி-சுரேஷ் ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.  திடீரென, ‘இது தான் காதல். காதல் என்றால் இதெல்லாம் சகஜம்ப்பா ‘என்று நகைத்தார்கள். கவலைப்படவில்லை.

ராணியின் அப்பா சந்தேகித்தார். ராணி-சுரேஷ்பற்றிக் கண்டுபிடித்து, அவளை உதைத்து, வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அறையில் பூட்டிவிட்டார்கள். ஸ்கூலில் லீவ் கேட்டுக்கொண்டார்கள். சுரேஷ் வீட்டிற்குப் போய், அவனைச் சத்தம் போட்டுவிட்டுப் பிறகு சுகன் சொன்னதால், என்னிடம் வந்தார்கள்.

ராணியிடம், அவள் கடந்துவந்த வாழ்க்கைப் பகுதிகளை வைத்தே அவளின் இன்றைய நிலையை விளக்கினேன். ஒவ்வொரு பருவத்திலும், மாற்றங்கள், சந்தோஷங்கள், திகைப்பு எல்லாம் உண்டு.

நம்முடைய சிறு வயதில், ஸ்கூல் போகப் பழகுகிறோம். முதலில் சிறிது நேரத்திற்கு, வெளி உலகம் பழகிக்கொள்ள, ஒழுங்கு வளர, மழலையர் பள்ளிக்குச் செல்லுகிறோம். எவ்வளவோ புது அனுபவங்கள், பலவற்றுக்குக் குதூகலம் அடைந்தோம். மூன்றே மணி நேரம் பள்ளி, விதவிதமாக பல வண்ண உடைகள் அணியலாம். பிறகு ஆரம்பப் பள்ளி, 5-6 மணி நேரம், சீருடை. பாட புத்தகங்கள் அதிகரிக்க, நண்பர்கள் கூடி, நல்லது-கெட்டது, சரி-தவறு தெரிய வந்தது. பாட்டு, நாடகம், விளையாட்டுப் பயிற்சிகள் தொடங்கியது, இதிலேயும் சில நம்மை மிகவும் ஈர்த்தது. உடல் மனம் வளர, தோழமையும் சேர, பெஸ்ட் நண்பன், எல்லாம் வளர்ந்தது.  இது, ஐந்து வருட காலம். அதன் பிறகு, மேல்நிலைப் பள்ளி, குழந்தைப் பருவத்திலிருந்து மாறும் நேரம், பெரியவர்களாகவில்லை. உடைகள், உயரம், இடை, குரல் மாறின. சலிப்பு, கோபம் அதிகரித்தது. நம்முள் பல ரசாயனம் சுரப்பதால் இந்த மாற்றங்கள். இந்தப் பருவத்தில் பல வளர்ச்சி அடைவதால்,  ‘நான் யார்’ என்ற கேள்வியும் எழ, அதே நிலையில் உள்ள நண்பர்களுடனேயே இருக்கத் தோன்றுகிறது. அவர்களில், பாசம் காட்டுவோர்மேல் அதிக ஈர்ப்பு உண்டாகிறது என்றேன்

இவை ஒவ்வொன்றும் பருவம் மாறிவரும் அறிகுறிகள். அதில் ஒரு இயற்கையான அம்சம், ஆண் பெண் ஒருவரோடு ஒருவர் பேச விரும்புவது. நம் வயதுடையவர் நம்மைப்போலவே யோசிப்பது, பேசுவதால் அவர்களுடன் ஒத்துப்போய்விடும். பெற்றோர் நம்மைத் திருத்திக்கொண்டே இருப்பதால் வாக்குவாதமாக இருக்கும்.

அம்மா அப்பா கண்டிப்பு, டீச்சர்களின் சந்தேகங்கள் நிலவ, சுரேஷ் பரிவாகப் பேசினது, ஆதரவு காட்டியதை காதல் என்று அவள் தீர்மானம் கொண்டதாகச் சொன்னேன். இதைத் தனக்கு நியாயப்படுத்த, மதிப்பெண் குறைந்ததும் அது பெற்றோரை பழி வாங்கியதாகத் தோன்றச்செய்தது என்று விளக்கினேன்.

ராணி ஒப்புக் கொண்டாள். தனக்கு வீட்டிலும், தோழிகளிலும் ஆதரவு இருப்பதை விரல் விட்டு எண்ணினாள். தனக்குள் ஏதோ குழப்பம் இருப்பதாகவும், இதைச் சரி செய்யவேண்டும் என்றும் சொன்னாள்.

ராணியின் பெற்றோரை அழைத்து, அவளை அடுத்த ஐந்து நாட்களுக்குத் தினம் அழைத்து வரச்சொன்னேன். பெற்றோர், பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து, நல்லவர்களாகப் பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காகப் பருவம் வந்த பின்பு கண்டிப்பை அதிகரித்தோம் என்றார்கள். அதுவும் காதலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். இதையே போதித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் தெளிவுபடுத்தினேன், இந்தப் பருவத்தில், கோபமாகச் சொன்னாலோ, போதிப்பதுபோல் சொன்னாலோ இவர்கள் காதில் போட்டுக்கொள்ள மாட்டார்கள் என்று.

பெற்றோரை ராணியிடம் பேசச்சொன்னேன். வார்த்தை, சைகைகளால் பாசத்தைக்காட்டி, அவளை நம்ப முயற்சிக்கச் சொன்னேன். இருவரும், மறுத்தார்கள். இந்த அடம் பிடிப்பினால், ராணி பயந்து, பகிர்ந்து கொள்ளவில்லை. வளரும் பருவத்தில், யாராவது தன் பயம், அச்சத்தைப் போக்குவார்களா என்று தேடுவார்கள். இதன் விளைவே, இந்தக் காதல். எடைபோடும் மனப்பான்மையால் இடைவெளி அதிகமாகிறது. இதைச் சுதாரிக்கவே ராணியிடம் பேசச்சொன்னேன். சரியாகும், இல்லை என்று எந்தவிதமான உத்தரவாதமும் கொடுக்காமல் அவர்களை அனுப்பிவைத்தேன்.

முதல் நாள், ராணியின் உணர்வுகளை வரைமுறைப்படுத்த ஆரம்பித்தோம். உணர்வுகளைப் பெயர் இட்டுச் சொன்னால், அதன் ஆதங்கம் குறையும். இதைப் பழக்கிக்கத் தொடங்கினாள். உணர்வுகளை, பல கண்ணோட்டத்தில் பார்த்தாள், இதன் தாக்கத்தை உன்னிப்பாகக் கவனிக்கப் புரிய ஆரம்பித்தது. ராணி, “புது உலகம் திறந்தது என்றாள்!”

அடுத்ததாக, ராணி, சுரேஷிடம் பெற்ற ஆதரவைப்போல், மற்றவர்கள் எவ்வாறு கொடுக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டு வந்தோம். ஒப்பிட்டுப் பார்த்ததில், அவள் தோழிகள், அம்மா, தம்பி, டீச்சர்கள் இவர்களின் பங்களிப்பும் பலவிதமாக இருந்தது. சுரேஷ் தந்த அன்பு, ஊக்கத்தை, காதல் என்ற வட்டத்துக்குள் வைத்தாள். அப்படி வைத்ததால், அதில்மட்டும் கவனத்தைச் செலுத்தினாள்.  தன் இடப்புகளையும் விட்டுவிட்டதால், மதிப்பெண்ணும் குறைய, பாதிப்பு தனக்குத்தான் என்பதையும் கவனிக்கவில்லை. பெற்றோர் சொல்வதைக் கேட்க மனம் விடவில்லை.

நாள் தோறும் சுரேஷ் நினைப்பு இருப்பதாக ராணி கவலையுடன் சொன்னாள். இதைச் சுதாரிக்க, பிப்லியோதெரபீ உபயோகித்து, கட்டுரைகள், சிறுகதை, கவிதை, படித்து (Bibliotherapy) விவாதித்தோம். ராணி, வீட்டு வேலைகளில் கைகொடுக்க ஆரம்பித்தாள். இந்த வேலைகளைச் செய்யும்போது, சுரேஷை நினைப்பதைக் குறித்து வரச்சொன்னேன். நாள் 4: சுரேஷ் பெயர் இல்லவேயில்லை! சுரேஷுடன் கலக்கம் இல்லாமல் பேசமுடிந்தது. மற்ற ஆண் தோழர்களுடனும் கூச்சமில்லாமல் பழகமுடிந்தது.

இதைப் பார்த்த சுரேஷ் வியந்தான். அன்று ராணியால் வர முடியவில்லை. நான் என் அறையை அடைந்ததும், மூன்று பேர், ஸ்கூல் யூனிஃபார்முடன் உள்ளே நுழைந்தார்கள். உட்கார மறுத்து, முறைத்தார்கள். “ம்ம் சொல்லுங்க” என்றதற்கு, “நான் உட்கார வரலை” என்றான் கதவு அருகில் இருந்தவன். “நீங்க யார்?” என்றேன். “நாங்க ஃப்ரெண்ட்ஸ்” என்றான் இன்னொருவன். “புரியலை “என்றேன். “ப்ரெண்ட்ஸ் சினிமா பார்க்கல?” என்றான் நக்கலாக. நான் உடனே “யார் சூர்யா, யார் விஜய்?” என்றதற்கு, கதவருகே இருப்பவனைக் காட்டி “சூர்யா” என்றவுடன். “ஓ, அப்போது நீ ரமேஷ் கண்ணா, இவன் விஜய்” என்றேன்.

“நான், ராணி” என்றதுமே அவனை நிறுத்திச் சொன்னேன், “மன்னிக்கவும், என்னைப் பார்க்க வருபவரைப்பற்றி எங்கள் தொழில் தர்மப்படி யாரிடமும் சொல்லமாட்டோம்”.

சூர்யா-சுரேஷிடம் மற்ற இருவரின் ராங்க்பற்றிக் கேட்டேன். விஜய் 10, ரமேஷ் கண்ணா 25 என்றார்கள். சூர்யா-சுரேஷைப் பார்த்து, “நீ சரியான கஞ்சன்” என்றேன். திகைத்து “ஏன்” என்றான். “பின்னென்ன, நீங்க “ப்ரெண்ட்ஸ்” ஆனா, இவங்க படிப்பில் கஷ்டப்படறாங்க. உனக்கு இவர்களை, நர்ஸரியிலேர்ந்து பழக்கம், ஆனா நேற்று அறிமுகமான ராணியைப்பற்றி அக்கறையாக் கேட்க வந்திருக்க”. திகைத்தான், உட்காரச் சொன்னேன் – உட்கார்ந்தார்கள். ஏன் இப்படி நிகழ்கிறது என்று மூவரும் கேட்டார்கள்.

சூர்யா-சுரேஷிடம் சொன்னேன், “உனக்கும் ராணிக்கும் இடையில் ஏற்படுவது உங்கள் வயது வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள். நீ அவளுக்குப் பரிதாபப்பட்டது, உதவியது உன்னுடைய இயல்பான குணம், பலபேருக்குச் செய்ததைத்தான் இவளுக்கும் செய்தாய். இதோ விஜய், ரமேஷ் கண்ணாவிற்குக் கைகொடுத்து மேலே வர உதவி செய், வகுப்பில், கஷ்டப்படும் மற்றவருக்கும் செய், பாடம் சொல்லித் தா. அதில் வரும் ஆனந்தத்திற்கு ஈடே கிடையாது, செய்து பார், அனுபவி” என்றேன்.

இத்துடன், அவன் கோட்டைவிட்ட மதிப்பெண்களை மறுபடி அடைய முயற்சிகளைச் செய்ய நினைவூட்டினேன். இந்த வயதில் ‘நான் யார்?’என்ற தேடல் இருக்கும். இதற்குப் பதில்கள், நாம் பலவேறு பங்களிப்பினால் விடைகளைக் கண்டு அறியமுடியும். அதனால்தான் இந்த வயதில் பலவற்றில் கலந்து கொள்வது அவசியமாகும். ஒருவரிடம் ஈர்ப்பு கொள்வது “ஏன்” என்று புரிந்தாலே அதை சுதாரித்துக் கொள்ளமுடியும்.

மூவரிடம் மேலும் சொன்னேன்,  நீங்கள் மூவரும் சூர்யா, விஜய், ரமேஷ் கண்ணா “ப்ஃரெண்ட்ஸ்” என்றால், அவர்களின் நல்ல குணங்கள்தானே உங்களை ஈர்த்தது. அப்போது, ஏன் இப்படி என்னிடம் வந்தார்கள் என்பதை யோசிக்கச் சொன்னேன்.

ராணியின் அப்பா தன் பட்டறையை அவள் ஒரு தொழிற்சாலை ஆக்கவேண்டும் என்ற கனவை அவளிடம் தெரிவித்தார். அவளுக்கும் இன்ஜினியரிங் படிக்க ஆசை, அத்துடன் இதை இணைத்துக்கொண்டாள்.

12வதின் பரீட்சை நெருங்கிக்கொண்டு இருந்ததால், ஜனவரி முதல் வாரத்துடன் ஸெஷன்கள் நிறைவு பெற்றது. ராணியின் முன்னேற்றத்தை அவள் அப்பா வந்து சொல்லிவிட்டுப் போவார்.

சூர்யா-சுரேஷ் ஒரு ஆறு மாதத்திற்குப் பிறகு வந்து தான் மருத்துவம் எடுத்ததாகவும், சென்னை அரசாங்க கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும் சொன்னான். ராணி நன்றாகப் படிப்பதை என்னிடம் சொல்வதற்காகவே நண்பர்களிடம் கேட்டறிந்ததாகச் சொன்னான். சிரித்த முகத்துடன் “Thanks” சொல்லிச் சென்றான் சூர்யா-சுரேஷ்.
**********************************************************************

டாக்டர் அறிவொளி அவர்களுக்கு அஞ்சலி !!

Image may contain: 1 person, standing and beard

 

திருச்சியைச் சேர்ந்த பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான டாக்டர் அறிவொளி உடல்நலக் குறைவால் தனது 80வது வயதில் இம்மாதம் காலமானார்.

டென்மார்க்கில் உள்ள புகழ்பெற்ற கோபேன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்  டாக்டர். அறிவொளி.

உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை எடுத்துச்சென்ற இவர்,புற்றுநோய்க்குத் தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறியதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தனது வாழ்நாளில் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

நன்றி : வானவில் தமிழ்ச் சங்கம்

அவருடைய வித்தியாசமான வாதத்தை இந்தக் காணொளியில் காணலாம் !