அலைகடலும் அலைவதேன்?
ஆர்ப்பரித்து ஓடிவரும் கடலலையே
அவசரமாய் வருவதுமேன் சொல் அலையே
வீருடனே சீறி வரும் கடலலையே
சீறுவதன் காரணமேன் தெரியலையே
நண்டுவளை தூர்ப்பதுமேன் கடலலையே-நண்டு
துரத்திடவே பின்வாங்கி ஓடுவதேன்?
சிப்பிகளை உமிழ்ந்து வரும் கடலலையே
தெப்பமாக நனைத்து விட்டாய் உடைகளையே
கால் நனைக்கத் தயங்கிடும்தம் மழலையரை
கைப்பிடித்து கவனமுடன் அழைத்து வந்தால்
ஆசையுடன் ஓடிவந்து தழுவிடுவாய்
அரைநனைய மணல் முழுதும் அப்பிடுவாய்
நேசமுடன் சிறுவர்களும் சிரித்திடுவார்
சிப்பிகள்தேடித் தன்பை நிறைத்திடுவார்
கரைமணலில் வீடுகட்டி விளையாடி
களிப்புடனே மனமின்றிப் பிரிந்திடுவார்
பணிமுடித்துக் களைத்துவரும் பகலவனும்-உன்
மடியினிலே முகம்புதைய அமைதி கொள்வான்
விடிந்திடவே ஊர்ஜனங்கள் விழிக்குமுன்னே-அவன்
அவசரமாய் முகம் சிவக்க வருவதென்ன?
ஆயிரமாம் உயிரினமுன் அரவணைப்பில்
ஆதரித்துக் காத்திடுவாய் கடலன்னையே
அரவணைப்பை மீறித்துள்ளும் மீன்களுமே-ஐயோ
மீனவரின் வலையினிலே பிடிபடுமே
தோணியிலே துடுப்பெடுத்து வலைவீசி
காத்திருக்கும் மீனவர்க்கும் வளமளிப்பாய்
சிப்பிக்குள்ளே பூட்டிவைப்பாய் முத்தினையே-ஆனால்
மொத்தமாக தூக்கி விற்பார் மனிதருமே
பாறையிலே விளைத்திடுவாய் பவழமதை
பறித்துச்சென்று அணிந்திடுவார் மாந்தருமே-ஆயினும்
பெருமனதாய் ஆசிகளைத் தெளிக்கின்றாய்
மனிதர்களும் மனக்கவலை மறக்கின்றார்
வேதனையைச் சுமந்துவரும் மனிதர்களின்
குமுரல்களை ஆதரவாய்ச் செவிமடுத்தாய்
பகிர்ந்திடவே தெரியாமல் விழிக்கின்றாய்
பரிதவித்து நீரைவாரி இறைக்கின்றாய்
அனைத்துலகும் அடங்கிவிடும் இரவினிலும்
ஆரவாரம் ஓயாமல் சலிக்கின்றாய்
பரசிவத்தின் முழுவுருவாய் பரவிநிற்பாய்-உனை
பார்ப்பவர்தம் கவலைகளை மறக்கடிப்பாய்
ஆழ்கடலில் நீர்மூழ்கி முத்தெடுப்பார்
அகக்கடலில் மூழ்கியவர் சிவம்பெறுவார்!