வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா?
வேலையில் சேர்ந்தபிறகு நடந்ததைச் சொல்வதற்குமுன் நான் வேலையில் சேர்ந்த கதையைச் சொல்கிறேன்.
நான் நேர்முகத் தேர்வுக்குப் போன நாள் இந்த என் எஸ் கிருஷ்ணன் பாட்டுதான் மனதில் சுற்றிச்சுற்றி வந்தது. அவர் சொன்ன நிலை அந்த 1939 ஆம் வருஷத்திற்குப் பொருத்தமாக இருந்தது. நான் வேலைக்குப் போகும்போது நிலைமை வேறு. நான் வேலைக்குச் சேர்ந்த கதையை நம்புவது கடினம்.
ஏறக்குறைய எல்லாக் குடும்பங்களிலும் வேலை இல்லாத இளைஞர்கள் இருந்தார்கள். படிப்புக்கேற்ற வேலைதான் வேண்டும் என்று வீம்பு பிடிப்பது குறைந்திருந்தது. நானோ வெறும் எஸ்.எஸ்.எல்.ஸி. தட்டச்சுத் திறமையும் ஒன்றும் சொல்லிக் கொள்வதுபோல் இல்லை. லோயர் எனப்படும் முதல் டெஸ்டிற்குக்கூட அதுவரை தகுதி அடையவில்லை. எப்போதோ அப்பா சொன்ன ஒரு நண்பரிடம் நான் எழுதிக் கொடுத்த விண்ணப்பம் (பெறுனர் என்னும் இடம் காலியாக விடப்பட்ட நான்கைந்து விண்ணப்பங்கள் ) ஒன்றிற்கு ஒரு நேர்முகத் தேர்வு கடிதம் வந்தது.
எல்லா சர்டிபிகேட்டுகளுடன் அவற்றின் நகல் ஒன்றும் கொண்டுவரச் சொல்லியிருந்தார்கள். அப்போதெல்லாம் வழக்கத்தில் இருந்ததைப்போல கெஜட்டட் ஆபீசர் அட்டெஸ்டேஷன் தேவையில்லை என்றும் சொல்லியிருந்தார்கள்.
ஒரு வேலை மிச்சம். எங்கள் ஊரில் பச்சை மசி கையெழுத்திட ஒரு அதிகாரிதான் இருந்தார். கையெழுத்து வாங்க வீட்டிற்குத்தான் செல்லவேண்டும் . ஆனால் ரப்பர் ஸ்டாம்ப் வீட்டில் வைத்திருக்க மாட்டார். மறுநாள் ஆபீசில் அவரது உதவியாளரிடம் கொடுத்தால், அந்த அதிகாரிக்குத் தெரிவித்துவிட்டு முத்திரையைக் குத்தி எடுத்துவந்து கொடுப்பார்.
பஸ் பிடித்து மாவட்டத் தலைநகர் போய் அந்த அலுவலகத்திற்கு நேரத்திலேயே போய்ச்சேர்ந்தேன். அது ஒரு வியாழக்கிழமை. அந்த நிறுவனம் அரசாங்கமும் இல்லாத தனியாரும் இல்லாத ஒரு நிறுவனம். நான் சென்ற அலுவலகத்தில் அதிகபட்சம் இருபது பேர் வேலை செய்துகொண்டு இருப்பார்கள். என்னைப்போல இன்னும் ஒரே ஒரு விண்ணப்பதாரர்தான் வந்திருந்தார்.
முதல் டேபிளில் இருந்தவரிடம் கடிதத்தைக் காட்டினேன். என்னிடம் ஒன்றும் சொல்லாமல் ‘டீ கே ஆர்.. “ என்று சத்தமாகக் கூப்பிட்டார். இன்னொருவர் அவசர அவசமாக வந்து என்னையும் மற்றொரு விண்ணப்பதாரரையும் வேறு அறைக்குக் கூட்டிப் போனார். அங்கிருந்த இன்னொரு நபர் சர்டிபிகேட்டுகளையும் அதன் நகல்களையும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் எங்கள் இருவரிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்.
சற்று நேரம் வெளியில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். ஊரும் பெயரும் பரஸ்பரம் தெரிந்து கொண்டதைத்தவிர அதிகம் பேசிக்கொள்ளவில்லை. என்ன கேட்பார்கள், என்ன பதில் சொல்லவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வரச் சொன்ன நேரம் பதினொரு மணி. அங்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆகியிருந்தது. அந்த டீ.கே.ஆர் வெளியில் வந்து பக்கத்தில் சென்று ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அரைமணியில் திரும்பி வாருங்கள் என்று சொன்னார். நானும் கேசவனும் (அந்த இன்னொரு விண்ணப்பதாரர்) சேர்ந்துதான் போனோம், ஏதோ அரைகுறையாகச் சாப்பிட்டோம். உடனே திரும்பியும் வந்துவிட்டோம்.
இருவரையும் சேர்த்தே கூப்பிட்டார்கள். நாங்கள் போன அந்த அறை ஒரு விசாலமான அறை. ஒரே ஒரு பெரிய மேஜைதான் இருந்தது. அது அந்தத் தலைமை அதிகாரியின் மேஜை. இருவரையும் உட்காரச் சொன்னார்கள். மூன்று நாற்காலிகளில் ஒன்றில் சர்டிபிகேட் வாங்கிக்கொண்ட அந்த அலுவலர் அமர்ந்திருந்தார்.
“உங்களில் யார் கேசவன்?” என்று அவர்தான் கேட்டார். நான்தான் என்று சொன்ன கேசவனிடம் ஒரு கட்டுக் காகிதங்களையும் அதேபோல் இன்னொரு கட்டுக் காகிதங்களை என்னிடமும் கொடுத்தார். எங்கெல்லாம் அப்ளிகண்ட் என்று உள்ளதோ அங்கெல்லாம் கையெழுத்திடச் சொன்னார். நாங்களும் அவ்வாறே செய்தோம். எல்லாவற்றையும் திரும்ப வாங்கிக்கொண்டு சரி பார்த்துவிட்டுத் தலைமை அதிகாரியைப் பார்த்தார். அவர் சரி என்பதுபோல் தலையை அசைத்தார்.
ஒரே போன்ற கடிதத்தின் இரு நகல்களை இருவரிடமும் கொடுத்து, ஒன்றில் பெற்றுக்கொண்டேன் என்று எழுதிக் கையெழுத்திடச் சொன்னார். அவரவர் பெயரில் இருந்த அவற்றின் ஒரிஜினல் கடிதத்தைக் கையில் கொடுத்து “திங்கட்கிழமை அன்று கடிதத்திலுள்ள ஊரில் உள்ள அலுவலகத்தில் வேலைக்குச் சேருங்கள். நீங்கள் போகலாம்.” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
ஒரே ஆச்சரியம். கேசவனாவது ‘நான்தான்’ என்று ஒரு வார்த்தை சொன்னான். நான் அந்த அலுவலகத்தில் ஒரு வார்த்தை யாரிடமும் சொல்லவில்லை. ஊர், பெயர் பரிமாறிக்கொண்டதுகூட வெளியில் உட்கார்ந்திருந்தபோதுதான்.
ஊருக்குத் திரும்பும்போது பஸ்ஸில் அந்தக் கடிதத்தைப் படித்தேன். என்ன வேலை, அடிப்படைச் சம்பளம், எந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்று எல்லாம் அந்தக் கடிதத்தில் இருந்தது . அந்த அடிப்படைச் சம்பளத்திற்கு மொத்த சம்பளம் எவ்வளவு வரும் என்று புரியவில்லை. வேலைக்குச் சேரவேண்டிய ஊர் எங்கள் மாவட்டத்திலேயே இருந்தது. ஆனால் எனது ஊரிலிருந்து தினமும் போய்வர முடியாது. எங்கே தங்குவது? வேலை செய்யவேண்டிய ஊரிலேயே தங்கமுடியுமா? பக்கத்து டவுனிலேயா? கட்டாயம் பஸ் கிடைக்கும் மாவட்டத் தலைநகரிலேயா? கேசவனுக்கு மாவட்டத் தலைநகர் அருகிலேயே இருந்த ஒரு புறநகர் அலுவலகம் கொடுத்திருந்தார்கள்.
ஊர் போய் சேரும்போது நான்கு மணிதான் ஆகியிருந்தது . நேரே அப்பாவின் அலுவலகம் சென்றேன். விஷயம் தெரிந்து மிகவும் சந்தோஷப்பட்டார். பர்மிஷன் சொல்லிவிட்டு என்னுடனேயே புறப்பட்டுவிட்டார். இன்டர்வியூவில் ஒரு கேள்வியும் கேட்கவில்லை என்றெல்லாம் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொன்னார். (அதற்குப் பிறகு இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. இதைத் தெரிந்துகொள்ளும் முதல் ஆள் நீங்கள்தான். அதுவும் இப்போது சொல்வதில் ஏதும் கெட்டுப் போய்விடாது என்பதால்தான்.)
திங்கட்கிழமை இராகு காலத்திற்கு முன்பே கிளம்பி பஸ்பிடித்து மாவட்டத் தலைநகர் போய் பஸ்மாறி அந்த ஊரை அடைந்தேன். தினம் எப்படிப் போவது எங்கே தங்குவது என்றெல்லாம் முடிவு செய்யவேண்டும்.
அலுவலகத்தில் மொத்தமே ஆறு பேர்தான் இருந்தார்கள். நான் ஏழாவது. அதில் ஒரு தலை, மற்றவர் எல்லாம் வால்கள்தான். இன்சார்ஜ் பெயர் சேஷையன். வயதானவர். சில ஆண்டுகளில் ஓய்வுபெறப் போகிறவர். மற்றவர்கள் பல வயதினராக இருந்தார்கள். அதில் மிகவும் இளைஞன் என்னைப் பார்த்த பார்வையிலேயே ஒரு கடுப்பு தெரிந்தது. என்னென்ன வேலை என்பதை சொல்லிக் கொடுத்தவர் சகஜமாகத்தான் இருந்தார். முதல் நாள் பொழுது கழிந்தது.
அதிர்ஷ்ட வசமாகத் தங்கவும் சாப்பிடவும் உள்ளூரிலேயே வசதி இருந்தது. அன்று இரவிலிருந்தே தங்குவதற்கும் மறுநாள் முதல் சாப்பிடுவதற்கும் ஏற்பாடாகிவிட்டது
வேலைக்குச் சேர்ந்துவிட்டு மாலையில் மாவட்டத் தலைநகர் பேருந்து நிலையம் அருகே ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருந்தார் அப்பா. நான் வேலைக்குச் செல்லும் ஊரில் வசதி இல்லாவிட்டால் வேறு ஏற்பாடு செய்ய வேண்டுமே, அதற்குத்தான் இந்தத் திட்டம். மாற்று ஏற்பாடு தேவைப்படவில்லை. என் பஸ் கிளம்பும்வரை காத்திருந்துவிட்டு அப்பா தனது பஸ் பிடிக்கப்போனார்.
பழகின ஊர், பழகின மக்கள், சொந்தம் எல்லாவற்றையும் விட்டு விலகிப் போய்க்கொண்டிருந்தேன். ஆனால் தற்காலிகம் தானே! வாரக் கடைசியில் வீட்டிற்குப் போய்விட்டு வரலாமே. எனக்கு அப்போதிருந்த உணர்வு, பிரிவின் ஏக்கமா, புது அனுபவ எதிர்பார்ப்பா, சம்பாதிக்கத் தொடங்கும் உற்சாகமா? எல்லாம் சேர்ந்த குழப்பமா? எதையும் சாதிக்காவிட்டாலும் ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்கிற ஒரு நம்பிக்கை இருந்தது.
‘எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறார்’ என்று சொல்லப்படுவதுபோல நானும் வேலைக்குப் போனேன்.
.