சுழலும் பம்பர நினைவுகள்!
எப் எம் ரேடியோவில் ‘பம்பரக் கண்ணாலே’ பாட்டுக் கேட்டு முடித்தபோது, மனதில் பம்பரமாய்ச் சுழன்றன பழைய நினைவுகள் –பம்பர நினைவுகள்!
எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம் –
கொத்தங்குடி மணித் தாத்தா(அப்பா வழி) தான் எனக்கு முதன் முதல் பம்பரம் வாங்கிக் கொடுத்தார்! நள்ளிரவுக்குமேல் வேலையிலிருந்து வந்தவர் சுவற்றில் மாட்டிய மஞ்சள்பையில் பம்பரமும் சாட்டையும்! காலையில் கையில் எடுத்ததும் முதல் அறிவுரை “வெளீல போய் பம்பரம் விளையாடாதெ – தோத்தா “ ஆக்கர்” வாங்கும் பம்பரம்” சொன்னவர் பத்தாவது படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பா! பம்பரம் ஆக்கர் வாங்குவது அவ்வளவு வருத்தத்திற்குரிய சமாசாரம் அந்த வயதில்!
மண்டையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் என வட்டங்கள் பெயிண்ட் செய்யப்பட்ட சின்னப் பம்பரமும், அதைச் சுழல வைக்க, இரண்டடி நீள சிவப்புக் கயிறும் – சாட்டையும் என் முதல் பம்பரம், மறக்க முடியாதது.
இரண்டு மூக்கிலும் சளி ஒழுக, நாக்கை மடித்து மேலுதட்டில் அழுத்திக்கொண்டு, இடது கையில் பம்பரத்தைப் பிடித்துக்கொண்டு வலது கையால் கீழே ஆணியிலிருந்து வரி வரியாகச் சாட்டையைச் சுற்றுவதில் இருக்கிறது சாமர்த்தியம். சாட்டை வழுக்குவதும், பம்பரம் நழுவுவதும் (சில சமயம் ஏடாகூடமாக, டவுசர் இடுப்பிலிருந்து நழுவுவதும் உண்டு உடுக்கையை விட்டு பம்பரத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளும் விரோதக் கைகளும் உண்டு!) ஆரம்ப நிலை சறுக்கல்கள்!
கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே சாட்டை சுற்றிய பம்பரத்தைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு, மற்ற விரல்களில் சாட்டையின் முடிச்சு போட்ட நுனியைச் சுற்றிக்கொண்டு, கையை முன்னும் பின்னும் இழுத்து, சாட்டையை உருவி, பம்பரத்தைச் சுழல விடுவது, ‘இழுப்பு பம்பரம்’ விடுதலின் பால பாடம்!
தலைக்குமேல் கையை உயர்த்தி, பம்பரத்தைத் தரையில் குத்துவதைப்போல செலுத்த, சாட்டையை இழுத்துச் சுழல விடுவத “குத்து” அவசியம் அறிந்திருக்க வேண்டிய பாடம் –
எல்லாவகைப் பம்பர விளையாட்டுகளுக்கும் இம்முறையே பயன்படும்! இறங்கிய பம்பரம் சுழலாமல், ஒரு பக்கமாக உருண்டோடிவிடும் பொறியிலிருந்து விடுபட்ட எலியைப் போல! இப்படி ‘மட்டையடித்தல்’ சில சமயங்களில் வட்டத்துக்குள் இருக்கும் பம்பரங்களை வெளிக்கொணர உதவும் –அதெல்லாம் தேர்ந்த பம்பர ஸ்பெஷலிஸ்டுகளுக்கே உரிய பண்பு!
இழுப்புபோலக் காற்றில் சாட்டையை இழுத்து, சுழலும் பம்பரத்தைத் தரையிறங்க விடாமல், உள்ளங்கையில் ஏந்திக் கொள்வதற்குக் கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும் வேண்டும்! சிலர் சாட்டை சொடுக்குவதைப்போல சொடுக்கி, காற்றிலிருந்து பம்பரத்தைக் கையில் சுழலவிடுவார்கள் ’டாக்டரேட்’ பெற்றவர்களுக்குச் சமமானவர்கள்! (இதனை முதலில் நான் முயற்சிசெய்து, சாட்டையில் சிக்கிய பம்பரம், சொடுக்கிய வேகத்தில் என்னையே பதம் பார்த்த சம்பவம் சரித்திரப் பிரசித்தம்!)
கொய்யா, கருவேல மரங்களில் செய்யப்படும் பம்பரங்கள் – மெஷினில் சுழலவிட்டு, சீராக செதுக்கப்பட்டவை! அழகிய வண்ணங்களில் எங்கும்கிடைக்கும்.
(பெரிய கோயில் வாசல்களில், பனை ஓலைப் பெட்டிகளில் பல வண்ணங்களில் சாட்டையுடன் விற்பனை!).
தனியாக ஆசாரியின் மரப் பட்டறைகளில் ‘கடைந்து’ செய்யப்படும் பம்பரங்களுக்கு மவுசும், விலையும் கூடத்தான். ரோஸ்வுட் / தேக்கு மரஃபினிஷ், அழகான சாட்டை சுற்றும் வரிகள், பெரிய மண்டை, குறைந்தஉயரம், தடி ஆணி தரையிலோ, கையிலோ சுழலும்போது, ஒருவித அமைதியுடன் மயங்குவதைப்போலத் தோன்றும் காதருகே கொண்டுவந்தால், சன்னமான ‘ஹம்மிங்’ கேட்கும்!
சிதம்பரத்தில், மேல சன்னதி ஃபேன்சி ஷாப்பில் கலர்ப் பம்பரங்களும், சின்னகடைத் தெருவில் கடைந்த பம்பரங்களும் கிடைக்கும்! அதைவாங்கக் காசுதான் கிடைக்காது!
அவசரத்துக்குச் செய்தாற்போல், ஏதோ ஒரு கட்டையில் சீவி, கொஞ்சம் நீளமான ’கோம்பை’ (இந்த வார்த்தையின் பொருள் அறிய பம்பரப் பண்டிதர்களை அணுகவும்!) போல செதுக்கப்பட்ட பம்பரம் கொஞ்சம் ரஃபாகச் சுழலும்; அதிலும் ஆணி மெல்லியதாகவும், கோணலாகவும் இருந்தால், தரை இறங்கியவுடன், தட தடவென்று குதித்துக் குதித்துச் சுற்றும் – ”தொகுறு” பம்பரங்கள்! நம்ம ஊரில் சில பிரபலங்கள்கூட இப்படித் தொகுறும் பம்பரங்களாக குதித்துச் சவுண்டு விடுவதைக் காணலாம்!!
அதிக ஆக்கர் வாங்கிய பம்பரங்கள் (தோற்று, மற்ற பம்பர ஆணிகளால்‘குத்து’ப் பட்டவை) அம்மை வடு முகம்போல இருந்தாலும், சுழலும் போது அழகாகவும், மயங்குவதாகவும் இருக்கும். அடிபட்டால்தானே அமைதியும், அழகும் வருகிறது!
“அப்பீட்” எடுப்பது தெரிந்திருக்க வேண்டும், அதுவும் விரைவாக எல்லோருக்கும் முன்பாக எடுக்கவேண்டும். (இரண்டு மூன்று சுற்றுக்களில் பம்பரத்தைச் சுழலவிட்டு, தரையிலிருந்து சாட்டையால் தூக்கிக் ’காட்ச்’பிடிப்பது ’அப்பீட்’ (அ) கோஸ்’) கடைசியில் எடுப்பவர் தன் பம்பரத்தை வட்டத்துக்குள் வைக்க,, மற்றவர்கள் ’குத்து’ விட, பம்பரம் வெளியே வரவேண்டும் (ஆக்கர் வாங்குவதும், உடைவதும் உள்ளிருக்கும் பம்பரத்தின் தலைவிதியைப் பொறுத்தது!). மீண்டும் எல்லோரும் அப்பீட் – கடைசீ அப்பீட் வட்டத்தின் உள்ளே – ஒரு வட்டம், இரு வட்டம்,
”தலையாரி” ஆடஇரண்டு அரை வட்டம் எனப் பல வகை ஆட்டங்கள்!
பம்பரத்தின் மண்டையில் தகர ஸ்லீவுடன் ஒரு ஆணி, அடித்து, சாட்டையைக் கட்டி, தரையிறக்காமல், அதிலேயே சுற்றுவது “தொங்கிச்சுற்றும் பம்பரம்” – குழந்தைகளுக்கானது சில சிறுமிகளுக்கும்! ( பம்பரவிளையாட்டில் சிறுமிகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் உண்டு – வட்டத்திலிருந்து வெளியே ஓடும் பம்பரத்தை, தன் பாவாடையை விரித்துத் தடுத்து விடுவார்கள் ஓடுவதைத் தவிர்க்க! நான் அந்தக்காலச் சிறுமிகளைச் சொன்னேன், பம்பரம்போல பாவாடையும் இப்போது மறைந்து வருகிறது!)
இராமாயணத்தில் ‘பம்பரமாய்ச் சுழன்றான்’ என்று வருகிறது! பெண்களுக்குப் பம்பரக் கண்கள்” என்ற வர்ணனை உண்டு –சுழலுவதாலா? ஆணியால் குத்துவதாலா? என்ற பட்டிமன்றம் நடத்தலாம்!
தரையில் விடும் பம்பரங்கள் சிறுவர்களுக்கு, வித்தியசமாக, நாயகியரின் தொப்புளைச் சுற்றி, கிச்சு கிச்சு மூட்டும் பம்பரங்கள் தமிழ்க் கதாநாயகர்களுக்கு!
ஆணியின்றி மரத்தில் கூம்பு வடிவில் செதுக்கப்படும் பம்பரங்களும்,பிளாஸ்டிக் தட்டு வடிவில் பம்பரங்களும், ஒன்றன்மேல் ஒன்றாக இரட்டை பம்பரங்களும் இப்போது கிடைக்கின்றன வீட்டில் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்ட அன்று தெருவில், புழுதியில் ஆடிய பம்பரங்களுக்கு இவை ஒருபோதும் இணையாக முடியாது!
பம்பரம் இப்போது யாராவது விளையாடுகிறார்களா, தெரியவில்லை.கிராமங்களில்கூட போஸ்டர்களில் கட்சிச் சின்னமாகத்தான் பம்பரம் தென்படுகிறது!
எஃப் எம் ரேடியோவில் சந்திரபாபு பாடிக்கொண்டிருக்கிறார் – ‘பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே’! கண்களைத் தவிர இன்று வேறெதுவும் நம்மிடையே இல்லை!!