காளிதாசன்-ரகுவம்சம்4
‘குவிகம் ஆசிரியர்’ எச்சரிக்கிறார்:
“இனியும் சரித்திரம் நகரவில்லை என்றால் …” என்று சொல்லாமல் மிரட்டுகிறார்..
சரி..ரகுவம்சத்தை இப்பொழுது முடித்துவிடுவோம்.
காளிதாசனையும் விட்டு நகர்வோம்…
இது சத்தியம்…
(இந்த பத்திரிகை ஆசிரியர்கள் படுத்தும் பாடு இருக்கே … தாங்க முடியலப்பா)
சரி…நம் கதையை எங்கே விட்டோம்?
முன்கதை:
ரகுவம்சத்தில் – திலீபன் , ரகு, என்று தொடங்கி அயன்வரை கதை படித்துக்கொண்டிருக்கிறோம்…
அயன் தன் மனைவி இந்துமதியுடன் பூங்காவில் மகிழ்ந்து இருக்கும்போது… வானத்தில் இருந்து விழுந்த மாலை ஒன்று… இந்துமதியின் மார்பில் விழ… அவள் மரணமடைகிறாள். இனித் தொடர்ந்து கதைக்குச் செல்வோம்.
அயனும் மூர்ச்சை அடைந்து விழுந்தான். பிறகு கண் விழித்தான். இறந்துகிடந்த தனது மனைவியின் உடலைக் கண்டு திடுக்கிட்டு, துக்கம் தாளாமல் அழுது புலம்பினான்.
‘தேவி, என்னே விதி இது? ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்த மாலையினால் உன் உயிர் போனதின் காரணம் என்னவோ …உன் மெல்லிய உடலை அந்த மெல்லிய மலர் மாலை பறித்ததின் காரணமும் தெரியவில்லையே……பிரியமானவளே ….. நாம் எந்தப் பாவமும் செய்யவில்லையே… அனைவருக்கும் நல்லதையல்லவா செய்து வந்தோம்… தேவி….உயிர் பிழைத்து எழுந்துவந்து அந்த காரணத்தைக் கூற மாட்டாயா? இனி நான் எப்படி உறங்குவேன்? உன் அழகிய வதனம் மீது உன்னை எரிக்கப் போடப்படும் கட்டைகளை எப்படியம்மா உன் உடம்பு தாங்கும்?’ என்றெல்லாம் கூறிக்கூறிக் கதறினான்.
இந்த இடத்தில் நாம் சற்று நின்று, காளிதாசனின் கவிதையைக் கேட்போம்:
அந்த தெய்வ மாலை, தேனும் நறுமணமும் திகழும் சோலைக் கொடிகளில் மலர்ந்த வசந்தகாலப் பூக்களின் அழகை நிராகரித்து, மன்னனது மனைவியின் செழித்த முலைகளின் நுனியில் சென்று பொருந்தியது.
எழிலுற எழுந்த முலைகளுக்கு ஒரு கணம் முன்பு கிடைத்த தோழியான அவளைப் (மாலையை) பார்த்து தன்வசமிழந்தாள் இந்துமதி. ராகு கவர்ந்த சந்திரன்போல கண்மூடினாள்.
உணர்வு நீங்கிய உடலுடன் கீழே விழுகின்ற அவள், கணவனையும் வீழ்த்தினாள். கீழே சிந்தும் எண்ணெய்த் துளியுடன்கூட, விளக்கின் சுடரும் மண்ணில் வீழுமன்றோ? அயன் மயங்கி விழுந்தான்.
தந்தி தளர்ந்து அறுந்த வீணையைப்போலக் கிடந்த அழகியை, அளவற்ற அன்புகொண்ட அவன் எடுத்து அவள் பழகிய மடியில் வைத்துக்கொண்டான்.
அவன் தனக்குரிய இயல்பான தீரத்தையும்விட்டுக் கண்ணீரினால் தழுதழுத்த குரலில், புலம்பலானான். நன்கு காய்ச்சிய இரும்பும் மென்மையை அடைகிறது. எனின், மனிதரைப்பற்றி என்ன சொல்வது?
மலர்களும் கூட உடல்மீது விழுந்து உயிர் போகக் கூடுமோ? அந்தோ, அழிக்கத் துணிந்த விதிக்கு எப்பொருள்தான் கருவியாகாது?
பனித்துளி வீழ்ந்ததும் தாமரை அழிகிறது. அந்தகன் மெல்லியலை மெல்லியலாலேயே கொல்லத் துணிந்தானோ?
இந்த மாலை உயிரைக் கவரும் இயல்புடையதானால், இதனை மார்பில் சூடிக் கொண்டும் என்னை ஏன் கொல்லவில்லை? தெய்வத்தின் இச்சையால், சிலபோது விஷமும் அமுதமாகும். அமுதமும் விஷமாகுமோ?
என்ன துர்ப்பாக்கியம்! இம்மாலையை தெய்வம் இடியாகக் கற்பித்து விட்டது. இந்த இடியால் மரம் வீழவில்லை, அதைச் சுற்றியிருந்த கொடிமட்டும் அழிந்து விட்டதே.
அழகி, வண்டுகள்போன்று நிறமுடைய, மலர்கள் சூடிய, உன் சுருண்ட முன்னெற்றிக் கூந்தலைக் காற்று அசைக்கிறதே. நீ உயிரோடு எழுவாய் என்று எனக்கு அது நம்பிக்கை ஊட்டுகிறதோ?
அந்த ஒப்பற்ற ஒற்றைத் தாமரை இரவில் கூம்புகிறது. உள்ளே வண்டுகளின் ஒலி நின்றுவிட்டது. கலைந்த கூந்தலோடு, பேச்சடங்கிய உன் முகம்!
உனது முதல் அந்தரங்கத் தோழி இந்த மேகலை – அழகிய நடையழிந்து, ஒலி இழந்து போயிற்று. அதுவும் உன்னுடனே சோகத்தால் இறந்துவிட்டதோ?
நீ இந்த அசோகமரத்தை உன் மெல்லியகால்களால் உதைத்தாய். இது பூக்கப் போகிறது. உன் கூந்தலுக்கு அணிகலனாக வேண்டிய அம்மலரை, ஐயோ, எப்படி உனக்கு தர்ப்பண புஷ்பமாகத் தருவேன்?
நீ எனக்கு மனைவியாக, மந்திரியாக இருந்தாய். தனிமையில் துணையாகவும், கலைகளைக் கற்கையில் அன்பான மாணவியாகவும் இருந்தாய். கருணையற்ற யமன் எனது எப்பொருளைத்தான் அபகரிக்கவில்லை?
நான் வாய்வழி தரும் இனிய மதுவையே பருகி மயக்கும் விழியாளே! என் கண்ணீரைக் கலந்து நான் கைகளால் தரும் தர்ப்பண நீரை மறுவுலகில் எப்படிப் பருகுவாய்?
வர்ணனையில் மயங்கிக் கிடக்கும் நாம் விழித்தெழுந்து.. கதைக்குச் செல்வோம்.
அவனை உற்றாரும் உறவினரும், சுற்றத்தாரும் தேற்றி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்துமதியின் இறுதிக் காரியங்கள் நடந்து முடிந்தேறியபின் அங்கு வந்திருந்த வசிஷ்ட முனிவருடைய சீடர்கள் மன்னர் அயனிடம் சென்று கூறினார்கள்.
ஒரு பிளாஷ்பேக் விரிகிறது…
மறுபடியும்… இந்திரனுடைய ‘விக்டிம்’ கதை!
பதவி மோகம் … அது இந்திரனை ஒரு சீரியல் கில்லர் லெவெலுக்குக் கொண்டுசெல்கிறது.
“மன்னா எம்முடைய மா முனிவரான வசிஷ்ட முனிவர் உமக்குச் சில உண்மைகளைக் கூற எம்மை இங்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இறந்துபோன உன்னுடைய மனைவி பூர்வ ஜென்மத்தில் அருணை என்பவளாக இருந்தாள். அவள் இந்திரனின் சபையில் ஒரு அப்ஸரஸ் ஆவாள். ஒருமுறை திருணவின்து எனும் மாமுனிவர் தவத்தில் இருந்தார். அவர் தவம் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டால் அவர் இந்திரனையும் மிஞ்சிய சக்தி கொண்டவர் ஆகிவிடுவார் என்ற பயத்தில் இந்திரன் ஒரு சூழ்ச்சி செய்து அருணையை அந்த முனிவரின் தவத்தைக் கலைக்க அனுப்பினார். அவளும் அந்த முனிவர் தவம் இருந்த இடத்தை அடைந்து நடன நாட்டிய ஓசை எழுப்பி அவர் தவத்தைக் கலைத்தாள். தவம் கலைந்த முனிவரும் கோபம்கொண்டு அவளை மானிடப் பெண்ணாகப் பிறவி எடுத்து பூமியிலேயே சென்று வாழுமாறு சாபமிட்டார். அழுது புலம்பியவாறு , தான் வேண்டும் என்றே எந்தத் தவறையும் செய்யவில்லை, இந்திரனின் கட்டளைப்படியே வேறு வழி இன்றி அங்கு வந்து அவர் தவத்தைக் கலைக்க வேண்டியதாயிற்று என்று கூறி தனக்கு சாப விமோசனம் தருமாறு வேண்டினாள். முனிவர் அவள் மீது இரக்கப்பட்டு ‘அவள் பூமியிலே பிறந்து அயனுக்கு மனைவியாக வாழ்ந்துகொண்டு இருக்கையில் நாரதர் வீணையில் இருந்து எப்போது அவள் மார்பின்மீது கற்பக மாலை விழுமோ அப்போது அவளுக்கு மரணம் சம்பவித்து அவள் மீண்டும் இந்திரலோகத்துக்குச் சென்றுவிடுவாள். அதுவரை அவள் பூமியிலே மானிடப் பிறவியில் இருந்து அவதியுறவேண்டும் என்று அவளுக்குத் தான் முதலில் கொடுத்த சாபத்தின் தன்மையை மாற்றினார்.”
வசிஷ்ட முனிவருடைய சீடர்கள் மேலும் தொடர்ந்தார்கள், “மன்னா இதனால்தான் பூர்வ ஜென்மத்தில் அருணையாக இருந்த உன்னுடைய மனைவியான இந்துமதியும் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்துக்குத் திரும்பச் சென்றுவிட்டாள். ஆகவே நீ எத்தனைதான் அழுது புலம்பினாலும் அவள் மீண்டும் உயிர் பிழைத்து வரமாட்டாள். ஆகவே மனதைத் தேற்றிக்கொண்டு உன் கடமையை வழுவாமல் செய்து வா” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
ஆனாலும் அயனினால் இந்துமதியை மறக்க முடியவில்லை.
மனதில் ஏற்பட்டு இருந்த துக்கம் ஆற முடியாத பெரிய ரணமாகவே உருமாறிக் கொண்டுஇருந்தது. காலம் கடந்தது. துக்கத்தினால் தன் நிலை இழந்த மன்னன் தனது மகன் தசரதன் எட்டு வயதாகும்வரை காத்திருந்தான். தசரதன் இளம் வயதுக்கு வந்து முடி சூட்டிக்கொள்ளும் நிலைக்கு வந்ததும், அவனை அரியணையில் அமர்த்திவிட்டு ராஜ்ய பரிபாலனத்தையும் அவரிடத்திலே தந்துவிட்டுப் பல காலம் உபவாசம் இருந்து…
ஒருநாள்… சரயு நதிக்கரைக்குச் சென்று சரயு நதியில் விழுந்து உயிரைத் துறந்துகொண்டான்.
அது கிட்டத்தட்டத் தற்கொலையாகும்.
பின்னாளில் இராமபிரான் இந்த வம்சத்தில் பிறந்து தனது முடிவைத் தேடும் சமயம்…
இதேபோல் சரயு நதியில் விழுந்து ‘ஜல சமாதி’ கொள்கிறார்!
அயனுக்குப் பின்…
தசரதன் கதை…
அதன் பிறகு…
ராமன் கதை…
இவை இரண்டும் வாசகர்கள் அறிந்ததே!
ஆதலால் அதைக் கூறாது தொடர்வோம்!
‘அப்பாடா…’ என்று வாசகர்கள் விடும் பெருமூச்சின் வெப்பம் என்னைத் தாக்குகிறது!
அவசரப்படாதீர்கள்..அவ்வளவு சுலபமாக என்னிடமிருந்து தப்ப முடியுமா?
ராமனுக்குப் பின் நடந்ததை சொல்லியே ஆகவேண்டும்..
சுருக்கமாகச் சொல்லி முடிப்போம்.
(தொடரும்)