தெலுங்கில் மஹாநடி , தமிழில் நடிகையர் திலகம்.
இப்படியும் ஒரு bio pic எடுக்கமுடியுமா?
கொம்மாரெட்டி சாவித்திரியாக வளர்ந்து , புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெமினி கணேசனைக் காதலித்து திருமணம் புரிந்து சாவித்திரி கணேசனாகமாறி தென்னிந்திய திரைப்படத்துறையில் ஒரு கதாநாயகனுக்கு இணையாகப் பேசப்பட்ட, மதிக்கப்பட்ட மாபெரும் நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.
சித்தார்த் சிவசாமியின் தொய்வில்லாத திரைக்கதையில், நாக் அஸ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷின் அர்ப்பணிப்பில், துல்கரின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் ஒரு அற்புதமான திரைப்படம், ரசிகர்களுக்குக் கோடை விருந்தாகக் கிடைத்திருக்கிறது.
மனிதர்களின் உண்மை வாழ்க்கையை சொல்லும்போது போரடிக்காமல் விறுவிறுப்பாக சொல்வது ஒரு தனிக்கலை. அந்த விதத்தில் பத்திரிகையாளர்கள் (சமந்தா, விஜய் தேவரகொண்டா) என்கிற கதை சொல்லிகள் மூலம் இக்கதையை சுவாரசியமாக நகர்த்தியிருக்கும் புத்திசாலித்தனமான உத்திக்குத் திரைக்கதை ஆசிரியருக்கும், இயக்குனருக்கும் மிகப்பெரிய பாராட்டு. (விருதுகள் காத்திருக்கிறது).
ஒரு வெகுளியான கிராமத்துச் சுட்டிப் பெண்ணாக அறிமுகமாகும் நாயகி, ஒரு புகழ்பெற்ற திரைப்பட நடிகையாக வெற்றிக்கொடி நாட்டி, திருமண உறவில் ஏற்படும் மன அழுத்தத்தினால் , குடி போதைக்கு அடிமையாகிக் கோமா நிலைக்குச் செல்கின்ற முடிவில், நாம் மிகப்பெரிய மனபாரத்துடன் வெளியே வருகிறோம்.
சாவித்திரியின் வாழ்க்கை நமக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் , இத்திரைப்படம் அவரின் பல மென்மையான உணர்வுகளை வெளிக்கொணர்ந்து, அவரின் உண்மையான கதா பாத்திரத்தை நம் மனதில் ஆழமாக பதிக்கிறது.
இது உண்மைக்கதை என்றாலும், ஒரு பெண் எத்துறையில் இருந்தாலும் தனக்கு மிஞ்சிய அவளின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆணின் ஈகோவைப் பட்டவர்த்தனமாக்கும் ஒரு கதை.
என்னதான் மிகச்சிறந்த நடிகையாகத் திரைத்துறையில் வெற்றி கொண்டாலும், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உற்சாகமடையும் ஒரு குழந்தை மனதுடன், யாரையும் சுலபமாக நம்பிவிடும், அதிகம் உலக நடப்புகள் தெரியாத , பிறர் துன்பம் கண்டு இளகும் பெண்ணாக, தான் காதலித்த ஆண்மகனின்மீது கொண்ட உண்மையான காதலின் பொய்த்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சராசரி வெகுளிப்பெண்ணாக வாழ்ந்தவரின் இறுதி வாழ்க்கை நம்மை நிலை குலையச் செய்கிறது.
இப்படிப்பட்ட ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு , தன் பாதையில் வெற்றி நடை போட்ட பெண்கள் தான் அதிகம். இவரும் அப்படிச் செய்திருக்கலாமே என்கிற ஆதங்கம் எழாமலில்லை. அப்படிச் செய்திருந்தால் அது சராசரிக் கதை, திரைப்படமாக ஆகியிருக்காது என்பதும் புரிகிறது.
திரைப்பட ரசிகர்கள் அனைவரும் பார்க்கத்தவற விடக்கூடாத ஒரு திரைக்காவியம்.