சமர்த்து..! — நித்யா சங்கர்

 

கைபேசி சிணுங்கியது.

பேப்பர் படித்துக்கொண்டிருந்த கைலாசம் கைபேசியை
எடுத்து அதன் திரையை நோக்கினான்.

தம்பி முகுந்தன்.

கைபேசியைக் காதுக்குக் கொடுத்துக்கொண்டே,
‘சொல்லுடா முகுந்தா…’ என்றான்.

‘……….’

‘அப்படியா ரொம்ப சந்தோஷம்.. நான் போய் அப்பா அம்மாவை ரிஸீவ் செய்துக்கறேன்’ என்று சந்தோஷமாகக்
கூறி கைபேசியை அணைத்தான்.

‘ உமா..உமா… சீக்கிரம் வாயேன்’ என்று சமையலறையை நோக்கிக் கூவினான்.

‘அடாடா… எதுக்கு இப்படிக் கத்தறீங்க..? என்ன ஆச்சு? என்ன விஷயம்?’ என்றபடியே உமா ஹாலுக்கு வந்தாள்.

‘சந்தோஷமா இருக்காதா பின்னே..? முகுந்த் போன் பண்ணினான்.. அப்பா அம்மாவை எர்ணாகுளம் இன்டர்ஸிடியில்
நாளைக்கு ஏற்றி விடுகிறானாம்.. நான் போய் கூட்டிண்டு வரணுமாம்’

‘அப்படியா.. எக்ஸெலன்ட்… என்னங்க, அப்பா அம்மா ஒரு வருஷத்துக்கப்புறம் வராங்க இல்லே… அவங்க ஸ்டே
கம்·பர்டபுளா இருக்கறமாதிரி பார்த்துக்கணும். அவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடணும். நாம
சாப்பிட்டிருக்கிற கொட்டை கொட்டையான ரேஷன் அரிசி வேண்டாங்க… நீங்க போய் நல்ல உயர்ந்த ரக அரிசியா
வாங்கிட்டு வந்திடுங்க… நான் ஸ்பெஷலா ஒரு மளிகை சாமான் லிஸ்ட் போட்டுத் தரேன்.. அதையும் வாங்கிட்டு
வந்துடுங்க. அவங்களைக் கூட்டிட்டு வர டாக்ஸிக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.. நான் படுக்கையெல்லாம் ரெடி பண்ண-
னும்..’ என்றாள் உமா குதூகலத்தோடு.

‘ஸ்டாப்… ஸ்டாப்… விட்டா தாம்தூம் பண்ணிடுவே போலிருக்கே… இதுக்கெல்லாம் பணம் வேண்டாமா.. மாசக்
கடைசி வேறே…’

‘எப்படியோ சமாளிக்க வேண்டியதுதான்.. மாதா மாதம் நீங்க வீட்டுச் செலவுக்குத் தர பணத்துலே கொஞ்சம்
சேமித்து வெச்சிருக்கேன். போதாதற்கு யார்கிட்டேயாவது கைமாத்து வாங்குங்க… அடுத்த மாதம் திருப்பிடலாம்..
அவர்களுக்கும் உங்க தங்கை பூரணிக்கும் ஜவுளியும் எடுத்துக் கொடுத்தனுப்பணும்…’

‘இட் ஈஸ் டூ மச்.. கொஞ்சம் நிதானமா இரு..’

அவள் கூறுகின்ற செலவினங்களுக்கான லிஸ்டைக் கேட்டுப் பயந்தாலும், கைலாசத்துக்கு அவளை நினைத்துச்
சிறிது பெருமையாக இருந்தது. மாமனார், மாமியார் வருகிறார்கள் என்றாலே முகத்தைச் சுளிக்கும் இந்தக் காலத்து
மருமகள்கள் நடுவிலே இப்படி ஒரு மருமகளா..? மாமனார், மாமியார், நாத்தனாரிடம் எத்தனை அன்பு வைத்திருக்கிறாள்..!

கைலாசமும், அப்பாவும், அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உமா பரிமாறிக் கொண்டிருந்தாள்.

‘இப்படீங்கறதுக்குள்ளே பதினைந்து நாள் ஓடிடிச்சு. நாளைக்கு ஊருக்கு கிளம்பிட்டிருக்கீங்க.. பதினைந்து நாளும்
கலகலப்பா இருந்தது. நாளைக்கு வீடெல்லாம் வெறிச்சோடிக்கிடக்கும்.’ என்றாள் உமா.

‘ஆமாம் உமா… எங்களுக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. என்ன செய்யறது..? பூரணி அங்கே ஊர்லே தனியே
சமையலையும் பார்த்துண்டு வேலைக்கும் போய்ட்டு இருக்காளே.. ‘என்றாள் அம்மா.

‘ஒண்ணு சொல்றேன் உமா… உன் கைப் பக்குவமே தனி. இந்தப் பதினஞ்சு நாளும் ரொம்ப சுவையா. விதவிதமாச்
சாப்பிட்டோம். அதுவும் நீ ஆசையாபண்ணி அன்போடு போட்டது சாப்பாட்டின் சுவையை ஒரு படி அதிகமாகவே
ஆக்கிடுத்து…’ என்றார் அப்பா ரொம்ப சந்தோஷத்தோடு திருப்தியாக.

‘சும்மா என் சமாதானத்துக்காகச் சொல்லாதீங்க அப்பா.. மீராவின் சமையலை விடவா என் சமையல் ருசியாக இருந்-
தது..?’

‘இல்லேம்மா.. நான் நிஜமாத்தான் சொல்றேன்..’என்று சில விநாடிகள் நிதானித்தவர், ‘டேய்..கைலாசம்.. நாம எல்லோரும்
முகுந்த் நல்லா சௌகரியமா இருக்கான்னு நினச்சிட்டிருக்கோம். ஆனா பத்துநாள் அவன் வீட்டிலே இருந்ததுலே
எனக்கு அப்படித் தோணலே.. நாங்க அவன் ஊர்லே போய் இறங்கியதும்.. டாக்ஸி வேண்டாம்.. அட்லீஸ்ட் ஆட்டொவிலேயாவது வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவான்னு நெனச்சோம். பஸ்ஸ¤க்காக அரைமணி நேரம் காத்திருந்து பஸ்ஸ¤லே கூட்டிட்டுப் போனான்…மீரா நல்லா சமைக்கிறாள்.. சரிதான்.. ஆனா சாதம் நல்லா இருந்தாத்தானே சாப்பாடு ருசிக்கும். கொட்டை கொட்டையா ரேஷன் அரிசியிலே சாப்பாடு. பின் எப்படி சுவையா இருக்கும்.. ஸோ.. நாம நினைக்கற மாதிரி இல்லே.. அவன் ·பினான்ஷியலா சௌகரியமா இல்லேன்னு நினைக்கறேன்.. இங்கே பார்.. நீங்க உயர்ந்த ரக அரிசியை யூஸ் பண்ணிட்டிருக்கீங்க.. சாதமும்  நல்லா வருது.. சாப்பாடும் ருசியா இருக்கு.. நீயும் அவன்கிட்டே பேசி மெதுவா விசாரி. நாம ஏதாவது செய்யணும்..’ என்றார் அப்பா.

துணுக்குற்று கைலாசமும், உமாவும் ஒருவர் முகத்தை  ஒருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டனர். ‘முகுந்தன்
நல்ல வேலையில்தானே இருக்கிறான்.. நல்லா சம்பாதித்துக்கொண்டுதானே இருக்கிறான்.. பின் ஏன் இப்படி..?’ புரியவில்லை அவர்களுக்கு.

‘கைலாசம்.. அப்புறம் முக்கியமா ஒரு விஷயம்.. பூரணிக்குக் கல்யாணத்திற்கு வரன் பார்த்துட்டிருக்கேன். சில
வரன்கள் பக்கத்துலே வந்துருக்கு. நான் ஒரிஜினலா நீங்க ரெண்டுபேரும் சம்பாதிக்கறீங்கங்கற தைரியத்துலே ஒரு
பதினைந்து லட்சம் பட்ஜெட் போட்டிருந்தேன். இப்போ  உங்க ரெண்டுபேர் நெலமையையும் பார்த்தா ஏழு.. எட்டு
லட்சத்துக்குமேல் முடியாது போலிருக்கு. அதுபடி நான் பட்ஜெட்டை ரீவர்க் பண்ணனும். இப்போ உள்ள நெலமையிலே முகுந்த் அவ்வளவா கான்ட்ரிபியூட் பண்ணமுடியும்னு தோணலே… நீதான் மேஜர்பார்ட் செலவை ஏத்துக்கணும்..’ என்று கூறியபடியே கைகழுவ போனார். அம்மாவும் எழுந்து கூடப்போனாள்.

‘மை காட்… உமா இப்போ என்னடி பண்ணறது..?’

‘உங்க ஒரே தங்கச்சி.. அருமைத் தங்கச்சி.. செய்யத்தானுங்க வேணும். எப்படியோ சமாளிக்கலாம்.. யோசிப்போம்..’ என்றாள் உமா ஆறுதலாக.

கைபேசியை அணைத்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தான் முகுந்தன்.

ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்த மீரா, ‘எதுக்கு இப்படிச் சிரிக்கிறிங்க..?’ என்றாள்.

‘விஷயத்தைச் சொன்னா நீயும் சிரிப்பே.. அண்ணா ·போன் பண்ணி இருந்தான். அப்பாவும், அம்மாவும்
இன்னிக்குக் கிளம்பி ஊருக்குப் போனாங்களாம். அப்பா பூரணிக்கு வரன் பார்த்துட்டிருக்காராம். நாங்க ரெண்டுபேரும்
சம்பாதிச்சிட்டிருக்கோம்ங்கற நம்பிக்கையிலே பதினைந்து லட்சம் பட்ஜெட் போட்டிருந்தாராம். இங்கே வந்து நெலமையைப் பார்த்தப்புறம் அவ்வளவு தேறாது. அதனாலே எட்டு லட்சத்துக்குள்ளே பட்ஜெட்டைக் கொறச்சுக்கலாம்னு இருக்காராம்.. பார்த்ததுலே எங்க ரெண்டுபேர்லே நான் ரொம்ப கஷ்டத்துலே இருக்கேனாம்.. அதனாலே அண்ணாதான் மேஜர்பார்ட் செலவை ஏத்துக்கணும்னு சொல்லியிருக்காராம்’ என்று சிரித்தான் முகுந்தன்.

‘எனக்கு அவமானமா இருக்கு. நாம ரொம்ப மோசமான நிலைமையிலே இருக்கோம்னு ஒரு இம்ப்ரெஷனைக் கிரியேட்
பண்ணிட்டீங்களே.. அதுவும் நம்ம எவ்வளவு நல்ல அரிசி வாங்கி நார்மலா சமைக்கிறோம்..அதை விட்டுவிட்டு ரேஷன்
அரிசி வாங்கி சமைச்சுப்போட்டு.. சேச்சே..’ என்றாள் மீரா.

‘போடி.. அசடு.. எல்லாம் ஒரு காரணமாகத்தான், நீ அப்ஜெக்ட் பண்ணியும் அப்படிச் செய்தேன். நீ சொன்னபடி
நாம தாம்தூம்னு இருந்திருந்தா கல்யாண பட்ஜெட் பதினைந்துலேருந்து இருபத்தஞ்சு ஆகி இருக்கும்…’ என்றான்
முகுந்தன் சிரித்தபடியே.

‘இருக்கட்டுமே… ஒரே தங்கச்சி.. நல்லா பிரமாதமா ஜாம்ஜாம்னு கல்யாணம் நடத்தி இருக்கலாமே..’

‘மீரா.. எமோஷனலா அகலக் கால் வெச்சோம்னா மூவாயிரம் ரூபாய் செலவு பண்ணவேண்டிய இடத்துலே
முப்பதாயிரம் ரூபாய் செலவு செய்யத் தோணும். அங்கேயும் இங்கேயும் அளவுக்கதிகமா கடன் வாங்கிச் செஞ்சோம்னா
அப்புறம் கஷ்டம் நமக்கு எல்லோர்க்கும்தானே..’

‘அப்போ தங்கைக்கு.. அஸ் எ பிரதர் தாம்தூம்னு கல்யாணம் பண்ணனும்னு ஆசையில்லையா உங்களுக்கு..’

‘டெபனட்லி… ஆனா வீ மஸ்ட் ஹவ் எ லிமிட்..  கல்யாணம்ங்கறது ஜாம்ஜாம்னு ஐந்து லட்சம் ரூபாயிலும்
பண்ணலாம்.. ஐம்பது லட்சம் ரூபாயிலும் பண்ணலாம். பட் அகலக் கால் வைக்காம நம்ம சக்திக்கு உட்பட்ட வகையிலே
கல்யாணத்தை ஜாம்ஜாம்னு ஒரு குறையும் இல்லாம நடத்தலாம். அப்பா எட்டு லட்சம் பட்ஜெட் போட்டிருக்கார்.
கல்யாணம்ங்கறதாலே அது பத்துலே வந்து நிற்கலாம். அதை ஈஸியா சமாளிச்சுக்கலாம். அண்ணா முடிஞ்சதைக் கொடுக்கட்டும். மீதியை நாம் காண்ட்ரிபியூட் பண்ணுவோம்.. ஓகே சந்தோஷம்தானே…’

ஒரு நிமிடம் பெருமைபொங்க அவனைப் பார்த்தாள் மீரா. பின்னர் ‘ஸோ ஸ்வீட் ..சமர்த்து..’ என்று அவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.

 

வா உடனே ! – தில்லைவேந்தன்

 

Related imageயாருமே அற்றவர்க்கும் –உன்
அருளினை நம்பியே உற்றவர்க்கும்
நேரிடும் துயர்கண்டு — நீ
நேரினில் ஓடியே வருவதுண்டு.
போரினை மிகவிரும்பி — மகன்
புகன்றவோர் அறவுரை தனைப்பழித்தான்
சீறிடும் சிங்கமெனத் — தூணில்
சென்றுநீ அரக்கனின் உடல்கிழித்தாய்.

Image result for கிருஷ்ணா குசேலாதோழனாம் வறியவனின் — அவல்
சுவையென உண்டுஅவன் மிடிகளைந்தாய்.
ஆழமாம் கடலினையே — ஓர்
அணையினால் கடந்தபின் இகல்மலைந்தாய்.
வேழமும் அழைத்திடவே — அன்று
விரைந்தனை அதனுயிர் பிழைத்திடவே.
சூழுமக் களம்நடுவே — கீதை
சொல்லினை அடியவன் மருள்கெடவே.

 

                                   Image result for draupadi vastrapaharanam english painter

மாந்தரில் கொடியவனின் — தம்பி
மங்கையின் உடையினை உரித்தெடுத்தான்
வேந்தனாம் துருபதனின் — மகள்
விம்மினாள்வேண்டினாள்உனைஅடுத்தாள்.
ஆந்துணை ஆகவந்தாய் — கடல்
அலையென ஆடைகள் அவைதந்தாய்.
ஏந்தலே வடமதுரைக் — கண்ணா
என்குறை தீர்த்திட வாஉடனே !

சாவித்திரியின் அழகு முகம் பாடல் வழியே! -குவிகம் தயாரிப்பு (உதவி : துதிகர்)

 

புதிதாக வந்த நடிகையர் திலகம் சினிமாவைப் பார்த்ததும் தமிழ் சினிமாவில் சாவித்திரி  கோலோச்சிய படங்கள் நினைவிற்கு வந்தன.  அதன் விளைவு இந்தச் சிறு வீடியோ. பார்த்து மகிழுங்கள்!

( தொழில்நுட்ப உதவி : துதிகர்)

 

உன் வாழ்க்கையே ஒரு புத்தகம் ! – பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Cartoon: Face Book (medium) by Munguia tagged zuckerbook,comunity,social,red,pc,computer,calcamunguias,book,face,facebook

உன் வாழ்க்கையே
ஒரு புத்தகம்
உன் பெயரே அதன் தலைப்பு
உன்னை உலகிற்கு
அறிமுகம் செய்வதே
உன் புத்தகத்தின் முகவுரை !

நீ
நாள்தோறும்
சந்திக்கும் சோதனைகள்
சிந்திக்கும் சிந்தனைகள்
செய்யும் முயற்சிகள்
அனுபவிக்கும் இன்பங்கள்
உன் புத்தகத்தின் பக்கங்கள் !

உன்
இறுதி நாளில்
கட்டாயம் முடிக்கவேண்டும்’
சுபம் என்னும்
உன் புத்தகத்தின் முடிவுரை !

உன்
வாழ்க்கையே ஒரு புத்தகம்
உயர்ந்த கொள்கையாக
இனிய வரலாறாக
புனித செயல்களாக நீ
வாழும் சுயசரிதையென
உலகம் உன்னை
நாளும் பாராட்ட வேண்டும் !

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

 

தாகூரின் பிரார்த்தனை – கீதாஞ்சலி

 

Image result for tagore's Gitanjali My prayer

கீதாஞ்சலி (36)

This is my prayer to thee, my lord - 
strike, strike at the root of penury in my heart. 
Give me the strength lightly 
to bear my joys and sorrows. 
Give me the strength 
to make my love fruitful in service. 
Give me the strength 
never to disown the poor 
or bend my knees before insolent might. 
Give me the strength to raise my mind 
high above daily trifles. 
And give me the strength 
to surrender my strength 
to thy will with love.

என் பிரார்த்தனை

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

இதுவே நான் செய்யும்
பிரார்த்தனை இறைவா!
நெஞ்சில் முளைக்கும் தாழ்ச்சி
எண்ணத்தின்
வேரை நோக்கி அடி!
ஓங்கி அடி!

இன்ப துன்பத்தை எளிதில் தாங்கிட
எனக்குப் பொறுமை அளித்திடு!
நற்பலன்கள் விளையும் பணிகளை
நான் பாசமுடன் புரிய
நல்கிடு உறுதி!
வறியோரை என்றும் மறவா திருக்கவும்,
நெறியிலா மூர்க்கர் முன்பாக
முழங்கால் மடக்கி
என்றும்
வணங்கா திருக்கவும், எனக்கு
வைராக்கியம் கொடுத்திடு!

தினச் சச்சரவி லிருந்து விடுபட்டு
மனம் அப்பால் சென்று,
எனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க
மனத் தெளிவைத் தந்திடு!

அத்துடன்
எனது ஆற்றல் முழுவதையும்
ஒப்படைத்து
உன் ஆசைப் பணிக்கு
பாசமோடு உழைத்திட
எனக்குச்
சக்தியை அளித்திடு!

கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்

dr1

சுழலும் பம்பர நினைவுகள்!

 

எப் எம் ரேடியோவில் ‘பம்பரக் கண்ணாலே’ பாட்டுக் கேட்டு முடித்தபோது, மனதில் பம்பரமாய்ச் சுழன்றன பழைய நினைவுகள் –பம்பர நினைவுகள்!

எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம் –

கொத்தங்குடி மணித் தாத்தா(அப்பா வழி) தான் எனக்கு முதன் முதல் பம்பரம் வாங்கிக் கொடுத்தார்! நள்ளிரவுக்குமேல் வேலையிலிருந்து வந்தவர் சுவற்றில் மாட்டிய மஞ்சள்பையில் பம்பரமும் சாட்டையும்!   காலையில் கையில் எடுத்ததும்  முதல் அறிவுரை “வெளீல போய் பம்பரம் விளையாடாதெ – தோத்தா “ ஆக்கர்” வாங்கும் பம்பரம்” சொன்னவர் பத்தாவது படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பா!  பம்பரம் ஆக்கர் வாங்குவது அவ்வளவு வருத்தத்திற்குரிய சமாசாரம் அந்த  வயதில்!

மண்டையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் என வட்டங்கள் பெயிண்ட் செய்யப்பட்ட சின்னப் பம்பரமும்,  அதைச் சுழல வைக்க, இரண்டடி நீள சிவப்புக் கயிறும் – சாட்டையும் என் முதல் பம்பரம், மறக்க முடியாதது.

இரண்டு மூக்கிலும் சளி ஒழுக, நாக்கை மடித்து மேலுதட்டில் அழுத்திக்கொண்டு, இடது கையில் பம்பரத்தைப் பிடித்துக்கொண்டு வலது கையால் கீழே ஆணியிலிருந்து வரி வரியாகச் சாட்டையைச் சுற்றுவதில் இருக்கிறது சாமர்த்தியம். சாட்டை வழுக்குவதும், பம்பரம் நழுவுவதும் (சில சமயம் ஏடாகூடமாக,  டவுசர் இடுப்பிலிருந்து நழுவுவதும் உண்டு உடுக்கையை விட்டு பம்பரத்தைக் கெட்டியாய்ப்  பிடித்துக்கொள்ளும் விரோதக் கைகளும் உண்டு!) ஆரம்ப நிலை சறுக்கல்கள்!

கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே சாட்டை சுற்றிய பம்பரத்தைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு, மற்ற விரல்களில் சாட்டையின் முடிச்சு போட்ட நுனியைச் சுற்றிக்கொண்டு,  கையை முன்னும் பின்னும் இழுத்து, சாட்டையை உருவி, பம்பரத்தைச் சுழல விடுவது, ‘இழுப்பு  பம்பரம்’ விடுதலின் பால பாடம்!

தலைக்குமேல் கையை உயர்த்தி, பம்பரத்தைத் தரையில் குத்துவதைப்போல செலுத்த, சாட்டையை இழுத்துச் சுழல விடுவத “குத்து” அவசியம் அறிந்திருக்க வேண்டிய பாடம் –

எல்லாவகைப் பம்பர   விளையாட்டுகளுக்கும் இம்முறையே பயன்படும்! இறங்கிய பம்பரம் சுழலாமல், ஒரு பக்கமாக உருண்டோடிவிடும் பொறியிலிருந்து விடுபட்ட எலியைப் போல! இப்படி ‘மட்டையடித்தல்’ சில சமயங்களில் வட்டத்துக்குள் இருக்கும் பம்பரங்களை வெளிக்கொணர உதவும் –அதெல்லாம் தேர்ந்த பம்பர ஸ்பெஷலிஸ்டுகளுக்கே உரிய பண்பு!

இழுப்புபோலக் காற்றில் சாட்டையை இழுத்து, சுழலும் பம்பரத்தைத் தரையிறங்க விடாமல், உள்ளங்கையில்  ஏந்திக் கொள்வதற்குக்  கொஞ்சம் பயிற்சியும், முயற்சியும் வேண்டும்! சிலர் சாட்டை சொடுக்குவதைப்போல சொடுக்கி,  காற்றிலிருந்து பம்பரத்தைக்  கையில் சுழலவிடுவார்கள் ’டாக்டரேட்’ பெற்றவர்களுக்குச் சமமானவர்கள்! (இதனை முதலில் நான் முயற்சிசெய்து, சாட்டையில் சிக்கிய பம்பரம், சொடுக்கிய வேகத்தில் என்னையே பதம் பார்த்த சம்பவம்  சரித்திரப் பிரசித்தம்!)

கொய்யா, கருவேல மரங்களில் செய்யப்படும் பம்பரங்கள் – மெஷினில் சுழலவிட்டு, சீராக செதுக்கப்பட்டவை! அழகிய வண்ணங்களில் எங்கும்கிடைக்கும்.

(பெரிய கோயில் வாசல்களில், பனை ஓலைப் பெட்டிகளில் பல வண்ணங்களில் சாட்டையுடன் விற்பனை!).

தனியாக ஆசாரியின் மரப் பட்டறைகளில் ‘கடைந்து’ செய்யப்படும் பம்பரங்களுக்கு மவுசும், விலையும் கூடத்தான். ரோஸ்வுட் / தேக்கு மரஃபினிஷ், அழகான சாட்டை சுற்றும் வரிகள், பெரிய மண்டை, குறைந்தஉயரம், தடி ஆணி  தரையிலோ, கையிலோ சுழலும்போது, ஒருவித  அமைதியுடன் மயங்குவதைப்போலத் தோன்றும்  காதருகே கொண்டுவந்தால், சன்னமான ‘ஹம்மிங்’ கேட்கும்!

சிதம்பரத்தில், மேல சன்னதி ஃபேன்சி ஷாப்பில் கலர்ப் பம்பரங்களும், சின்னகடைத் தெருவில் கடைந்த  பம்பரங்களும் கிடைக்கும்! அதைவாங்கக் காசுதான் கிடைக்காது!

அவசரத்துக்குச் செய்தாற்போல், ஏதோ ஒரு கட்டையில் சீவி, கொஞ்சம் நீளமான ’கோம்பை’ (இந்த வார்த்தையின் பொருள் அறிய பம்பரப்  பண்டிதர்களை அணுகவும்!) போல செதுக்கப்பட்ட  பம்பரம் கொஞ்சம் ரஃபாகச் சுழலும்; அதிலும் ஆணி மெல்லியதாகவும், கோணலாகவும் இருந்தால்,  தரை இறங்கியவுடன், தட தடவென்று குதித்துக் குதித்துச்  சுற்றும் –  ”தொகுறு” பம்பரங்கள்! நம்ம ஊரில் சில பிரபலங்கள்கூட இப்படித் தொகுறும் பம்பரங்களாக  குதித்துச் சவுண்டு விடுவதைக் காணலாம்!!

அதிக ஆக்கர் வாங்கிய பம்பரங்கள் (தோற்று, மற்ற பம்பர ஆணிகளால்‘குத்து’ப் பட்டவை) அம்மை வடு  முகம்போல இருந்தாலும், சுழலும் போது அழகாகவும், மயங்குவதாகவும் இருக்கும். அடிபட்டால்தானே அமைதியும், அழகும் வருகிறது!

“அப்பீட்” எடுப்பது தெரிந்திருக்க வேண்டும், அதுவும் விரைவாக எல்லோருக்கும் முன்பாக எடுக்கவேண்டும். (இரண்டு மூன்று சுற்றுக்களில் பம்பரத்தைச் சுழலவிட்டு, தரையிலிருந்து சாட்டையால் தூக்கிக் ’காட்ச்’பிடிப்பது ’அப்பீட்’ (அ) கோஸ்’) கடைசியில் எடுப்பவர் தன் பம்பரத்தை வட்டத்துக்குள் வைக்க,, மற்றவர்கள் ’குத்து’ விட, பம்பரம்  வெளியே வரவேண்டும்  (ஆக்கர் வாங்குவதும், உடைவதும் உள்ளிருக்கும் பம்பரத்தின் தலைவிதியைப் பொறுத்தது!).  மீண்டும் எல்லோரும் அப்பீட் – கடைசீ அப்பீட் வட்டத்தின் உள்ளே – ஒரு வட்டம், இரு வட்டம்,

”தலையாரி” ஆடஇரண்டு அரை வட்டம் எனப் பல வகை ஆட்டங்கள்!

பம்பரத்தின் மண்டையில் தகர ஸ்லீவுடன் ஒரு ஆணி, அடித்து, சாட்டையைக் கட்டி, தரையிறக்காமல்,  அதிலேயே சுற்றுவது “தொங்கிச்சுற்றும் பம்பரம்” – குழந்தைகளுக்கானது சில சிறுமிகளுக்கும்! ( பம்பரவிளையாட்டில் சிறுமிகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் உண்டு – வட்டத்திலிருந்து வெளியே ஓடும் பம்பரத்தை, தன் பாவாடையை விரித்துத் தடுத்து விடுவார்கள் ஓடுவதைத் தவிர்க்க! நான் அந்தக்காலச் சிறுமிகளைச் சொன்னேன்,  பம்பரம்போல பாவாடையும் இப்போது மறைந்து வருகிறது!)

இராமாயணத்தில் ‘பம்பரமாய்ச் சுழன்றான்’ என்று வருகிறது! பெண்களுக்குப் பம்பரக் கண்கள்” என்ற வர்ணனை உண்டு –சுழலுவதாலா? ஆணியால் குத்துவதாலா? என்ற பட்டிமன்றம் நடத்தலாம்!

தரையில் விடும் பம்பரங்கள் சிறுவர்களுக்கு, வித்தியசமாக, நாயகியரின் தொப்புளைச் சுற்றி, கிச்சு கிச்சு மூட்டும் பம்பரங்கள் தமிழ்க் கதாநாயகர்களுக்கு!

ஆணியின்றி மரத்தில் கூம்பு வடிவில் செதுக்கப்படும் பம்பரங்களும்,பிளாஸ்டிக் தட்டு வடிவில்  பம்பரங்களும், ஒன்றன்மேல் ஒன்றாக இரட்டை பம்பரங்களும் இப்போது கிடைக்கின்றன வீட்டில் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்ட அன்று தெருவில், புழுதியில்  ஆடிய  பம்பரங்களுக்கு இவை ஒருபோதும் இணையாக முடியாது!

பம்பரம் இப்போது யாராவது விளையாடுகிறார்களா, தெரியவில்லை.கிராமங்களில்கூட போஸ்டர்களில்  கட்சிச் சின்னமாகத்தான் பம்பரம் தென்படுகிறது!

எஃப் எம் ரேடியோவில் சந்திரபாபு பாடிக்கொண்டிருக்கிறார் – ‘பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே’! கண்களைத் தவிர  இன்று வேறெதுவும் நம்மிடையே இல்லை!!