நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
ரசமாயம் !
ரசமொன்று செய்தாயே பெண்ணே !
அறுசுவை உணவும் வேண்டாமென்றேன் –
உன் ரசமதைக் குடித்ததன் பின்னே !
நிசமொன்று சொல்வேனே கண்ணே !
தேனோடு முக்கனி சேர்ந்திருந்தாலும் –
உன் ரசங்கண்டு வெட்கிடுந்தானே !
தக்காளி தெரிந்தது பெண்ணே !
அது கொண்டு நீ செய்த மாயங்கள் தெரியலை –
தெரியவில்லையடி கண்ணே !
ஒரு கரண்டி குடித்தாலே பெண்ணே !
வாய் மறுபடி ஒரு கரண்டி வேண்டுமென்று சொல்லுது –
மறுக்கமுடியவில்லையடி கண்ணே !
மதுவைப் போல் தெரியுதடி பெண்ணே !
மனம் மயங்கியே போவதால் மற்றது மறத்தலால்
உன் ரசமுன் மதுதானே கண்ணே !
எது கொண்டு நீ செய்தாய் பெண்ணே !
மந்திரம், தந்திரம், மாயாஜாலங்கள் நீ –
யாரிடம் கற்றாயோ கண்ணே !
ரகசியம் தேடினேன் பெண்ணே !
ஐந்தறைப் பெட்டியில் அங்குமிங்கும் தேடினேன் –
அறியவில்லை புரியவில்லை கண்ணே !
அப்புறம் தெரிந்ததடி பெண்ணே !
அன்பைக் கரைத்து நீ அமுதத்தைக் காய்ச்சினாய் –
ரசப் பெருமை அதுதானே கண்ணே !
நல்ல ‘ரசமான’ கவிதை! சரி, பாகற்காய் பிட்லை கவிதை எப்போது வரும்?
LikeLike
பாகற்காய் பிட்லைக் கவிதை இனிக்குமே, பரவாயில்லையா?
LikeLike