தமிழ்த் திரையுலகு சாராயக் குப்பியுடன் பெண்கள் பின்னால் அலைந்துகொண்டு எதிரே வருபவர்களைப் பெருமையுடன் அரிவாளால் வெட்டிக் குவித்து சமூகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போது………. கவிதையாக ஒரு மராத்தி படம்.
ரேவதி நன்றாக இருக்கிறது என்று பதிவு போட்ட அன்றே மகனுடன் பார்க்க சமயமும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
கற்றுத் தேர்ந்த சம்ஸ்கிருத பண்டிதர் சக்ரபாணி சாஸ்திரி வயதான காலத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகிறார். மகள் கடையில் பொருள் வாங்கிவருவதற்குள் காரிலிருந்து இறங்கி மறைந்து விடுகிறார். குழந்தையாக மாறிவிடும் அவர் யானை மீதிருக்கும் ஆசையாலும், ஆச்சர்யத்தாலும் அதன் பின்னாடியே போய்விடுகிறார். அவரைத் தேடும் மகளின், மாப்பிள்ளையின் 24 மணி நேரப் பயணமே கதை.
ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு அழைத்துச் செல்லும் யானைப்பாகன் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் சங்கடத்தில் தவிக்கும் காட்சிகள், நினைவுகளில் பின்னோக்கி விரியும் காட்சிகள், அவை நிஜத்துடன் இணையும் இடம் அத்தனையும் முத்துமுத்தாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.
லைட்டிங், சினிமாடோகிராஃபி பிரமாதம். ஆற்றங்கரை, யானை குளிப்பது, கடைவீதி, கார் ரோட்டில் விரைவது அத்தனையும் அழகு அள்ளும் காட்சிகள். உருவகமாக படத்தில் அந்த இடத்தின் தன்மையை, உணர்வுகளை எடுத்துக்காட்டும்படி அமைக்கப்பட்ட விதம் மிகவும் ரசிக்கத் தக்கது. படிக்கட்டில் அமர்ந்தபடி வரும் சீன் உலகத்தரமானது. யானை அடியில் யானைப்பாகன் செய்வதறியாமல் அமர்ந்திருக்கும் சீன், கடைசியில் அப்பா கிடைத்தபின் தோன்றும் சலனமற்ற நிலையை வெளிப்படுத்தும் ஈரச்சாலையில் கார் விரையும் சீன் அனைத்தும் அருமை.
இசை! சுகம். தேவையான அளவு தேவையான இடத்தில் தேனான இசை. பாக்ரவுன்ட் ம்யூசிக்கும் சரி, இரண்டு மராத்தி பாடல்களும் சரி கதையோடு இணைந்து உங்கள் மனதைத் தொடுகிறது. ஜோஜோ மனக்கல்ல மாலிங்க தேவாயி…..என்ற வரியும் யானை மணியோசையும் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
தன் யானைப் பயணத்தில் பெரியவர் உதிர்க்கும் தத்வார்த்தமான சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் காட்சியோடு சேர்ந்து நம்மை ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது. மெல்லிய காற்று நம்மை வருடுகிறது. லேசாக உணர்கிறோம். என்ன அருமையான மேற்கோள்கள்! கொஞ்சமாக இதோ….
Truth always emerges from awareness
Yagnyavalkya are you in search of food or knowledge?
God has sent him to you. You didnt call him
How he came he would go back
How much is he yours, how much a stranger
You come alone and go alone
Compassion the essence of humanity, the nectar the brahman
Who takes just enough to survive… he is a saint
I see myself as nothing but you glorious sun..
நடிப்போ பாராட்டி முடியாது. பெரியவரா, பெண்ணா, மாப்பிள்ளையா, யானைப் பாகனா, அவன் மனைவியா யார் சிறந்த நடிகர் என அசந்தே போகுமளவு ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பு. பெரியவர் சுவாதீனத்திலிருக்கும்போது கம்பீரம், தெளிவு – குழந்தையாகும்போது பயம், ஆர்வம், இன்னசன்ஸ் என்று அசத்துகிறார். யானைப்பாகனுக்கு சங்கடமான சூழ்நிலையை வெளிப்படுத்தும் ஒரு காட்சி போதும் நம் மனதில் இடம்பிடிக்க. அவன் மனைவியோ….அது நடித்த பாத்திரமா என்ன? அவளே அல்லவோ? கடைசியில் அம்மா என்று அவர் அழைக்கும் ஒரு தருணத்தில் அவர் முக பாவம்..அடேயப்பா. மகளாக நடித்தவரின் அழுத்தமான நடிப்பு படத்தில் மிகமுக்கியமானது.
காட்சிகளா? லைட்டிங்கா? நடிப்பா? வசனமா? எதையென்று சொல்வது. அனைத்தும் சிறப்பு. இது படமல்ல அம்மா…அனுபவம் என்கிறான் என் மகன்.
இன்று அப்பாவுடனும், இரண்டு மகன்களுடனும் மீண்டும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மூன்று ஜெனரேஷனும் ரசித்து, நெகிழ்ந்து, டிஸ்கஸ் செய்தபடி பார்த்தோம். பதினான்கு வயது மகனும் ஆர்வத்தோடு பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது. அஸ்து!