வாடிநீ மீனாட்சி உனக்காச்சு எனக்காச்சு
உன்னுடன் சண்டைபோட துணிச்சலும் வந்தாச்சு!
படிப்படியாய் சோதிக்கத் துன்பத்தைக் கொடுத்தாலும் – உன்
அடிபணிந்து நிற்பதையே விடமாட்டேன் விடமாட்டேன்
ஐம்புலனை நெறிகெட்டு சென்றிடவே வைத்தாலும் – தேவீ
உம்புகழ் பாடுவதை விடமாட்டேன் விடமாட்டேன்!
ஆதாயம் அதர்மத்தில் தானென்று சொன்னாலும் – தேவீ
அதர்மத்தின் பிடியில்நான் வரமாட்டேன் வரமாட்டேன்
பிறர்துன்பம் பெற்றால்தான் எனக்கின்பம் என்றாலே – சக்தீ
அவ்வின்பம் நாடிநான் வரமாட்டேன் வரமாட்டேன்!
கலிகாலம் பணப்பேய்க்கு நிகழ்காலம் ஆனாலது
எனையண்ட முடியாத இறந்த காலம்
புகழாரம் மனிதனைக் கெடுக்கின்ற அரிதாரம் – உன்
திகட்டாத நல்வாக்கென் வாழ்க்கைக்கு ஆதாரம்!
நல்வழி எவ்வழி அதுவே எம்வழி
அன்புடன் அமைதியும் பண்பட்ட வாழ்க்கையும்
தேவிநீ கொடுத்துவிடு இறைஞ்சியே நிற்கின்றோம்
அபயமென்று வந்துவிட்டோம் தருவதினி உன்பாடு!