படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
கொடுத்த வேலையை முடிப்பது சேட்டம்
குடிசைத் தொழிலுக்கு வேணும் நாட்டம்
உள்ளூரில் விலை போகாத மாட்டுக்கெல்லாம் கொம்பு சீவி பெயின்ட் அடிச்சுக் கொஞ்சம் தள்ளியிருக்கிற ஊரில் சந்தையில் விற்றுவிடுவார்கள் என்று சொல்வார்கள். அந்த ஊரில்போய் அந்த மாடு பேந்தப்பேந்த விழிக்குமா என்று தெரியவில்லை.
மேலே சொன்ன பாடலில் சொல்லப்பட்டதுபோல் பலபேர் நோட்டம் விடும் படித்த வேலை கிடைத்துவிட்டது. வெளியூராக இருந்தால் என்ன?
புதியதாக ஒரு ஊர். முன்பின் அறியாத மக்கள். பதினெட்டு வயது என்பது வளர்ந்த சிறுவனா, வளர இருக்கும் இளைஞனா? அப்பா ஒரு பஸ்ஸிலும் நான் ஒரு பஸ்ஸிலும் ஏறிக்கொண்டோம். முதலில் அவர் பஸ்தான்புறப்படவேண்டும். என்ன நினைத்தாரோ தெரியவில்லை . அவர் இறங்கிவிட்டார். என் பஸ் போகும்வரை காத்திருந்துவிட்டுப் போனார். அடுத்த பஸ்ஸில் ஏறி இருப்பார்.
அந்த சில நிமிடங்கள் மனதில் அதுவரை அனுபவித்திருக்காத உணர்வு. என்னவோ நாடு கடந்து திரும்பவே வரமுடியாத இடத்திற்குப் போகவில்லை. ஒரு வாரத்தில் திரும்பவும் சந்திக்கப் போகிறோம். பெரும்பாலான ஹிந்திப் படங்களில் தங்கை திருமணமாகிப் புகுந்தவீடு போவாள். அதை பிதாயி… விதாயி… ஏதோ ஒன்று சொல்வார்கள். பின்னணியில் ஒரு பாட்டும் ஒலிக்கும் . அப்போது அண்ணன்காரன் கண் முழுவதும் சோகத்தோடும் உதட்டில் போலிப் புன்னகையோடும் காட்சி அளிப்பான். இந்தக் காட்சியில் நடிக்காத நடிகர்களும் இல்லை என்றும், அதில் சோடை போகாதவர்கள்தான் சினிமாவில் நிலைத்து நிற்பார்கள் என்றும் பின்னாளில் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்
வெளியூர் போகும் மாடோ , புகுந்தவீடு போகும் பெண்ணோ இல்லாவிட்டாலும் நான் எனது கண்களாலேயே உலகைப் பார்க்க ஒரு தேவை மற்றும் வாய்ப்பு. ஒரு குறிப்பிட்ட வயதுவரை தாத்தா பாட்டி சொன்னதுதான் வேதவாக்கு. சுடுதண்ணியில் குளிக்கணுமா, இல்ல குளத்துக்குப் போகணுமா என்புது முதல் அவர்கள்தான் வழி நடத்துவார்கள். அப்புறம் அம்மா. இதைச்செய் அதைச் செய்யாதே என்று எப்போதும் கட்டளைகள். அப்பா அதிகம் என் விஷயங்களில் தலையிட்டதாக நினைவு இல்லை. அப்புறம் அண்ணன். முக்கியமாக அவன் நண்பர்கள் கூட இருந்தால் என் மீது அவனுக்கு ஏதோ அதிகாரம் இருப்பதுபோல் காண்பித்துக் கொள்வான். ஒரு வகையில் பார்த்தால் எனது அரட்டை நண்பர்கள் சொல்லும் வழியில்தான் நான் நடந்திருக்கிறேன். – இவை அன்றைய நினைவோட்டம் அல்ல. திரும்பிப் பார்க்கும்போது தோன்றியவை.
முன்னேற்பாடாக அப்பா ஒரு ஜமக்காளமும் ஒரு காற்றுத் தலையணையும் கொண்டுவந்திருந்தார். இருக்க அறையும் தயார். இரவு தூங்கிவிடலாம். காலை காபி, குளியல் எல்லாம் பின்னால் யோசித்துக்கொள்ளலாம். குளம் ஒன்று பார்த்திருந்தேன்.. குளியல் பிரச்சினை இருக்காது என்று எண்ணம்.
ஊருக்கு வந்து, ஏற்பாடு செய்திருந்த அறைக்குப் போனேன். அது ஒரு ஓட்டு வீட்டின் முன்னறை. பூட்டாமல்தான் வைத்திருந்தார்கள். கதவைத் திறந்து விளக்கைப் போட்டால் ஒரு ஆச்சரியம். பாய், தலையணை, போர்வை ஒரு மண் கூஜாவில் தண்ணீரும் டம்பளரும். வீட்டுக்காரரின் முன்யோசனையும் கரிசனமும் மனதிற்கு இதமாக இருந்தது.
புத்தகம், கரும்பலகை, பிரம்பு ஆகியவற்றோடு ஒரு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடமாக இல்லாத, நான் கற்ற முதல் பாடம் இது. பிற்காலத்திலும் என் வீட்டிற்கு வந்து தங்குகிறவர்கள் குறைவு. அவர்களுக்கு என்னனென்ன தேவைகள் இருக்கக்கூடும் என்று யோசித்து ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்த இந்த அனுபவம்தான் காரணம்.
முதல்நாள் அலுவலில் நான் ஒன்றும் செய்யவேண்டியிருக்கவில்லை. அலுவலகத்திலிருந்த ஆறு பேர் அறிமுகம். ஒரு பதிவேட்டில் எனது விவரங்கள் பதிவு செய்வது இரண்டும் முடிந்தது. கனகேசன் என்பவர் செய்து வந்த வேலைகளை எனக்குக் கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்கள். அவரருகில் ஒரு நாற்காலி போட்டு அமரச் செய்துவிட்டர்கள். ஒவ்வொரு வேலையைச் செய்யும்போதும், என்ன செய்யவேண்டும் என்றும், எதற்காக அது தேவைப்படுகிறது என்றும் விளக்கிக்கொண்டே கனகேசன் வேலைகளை செய்துவந்தார். புரிந்ததுபோலத்தான் இருந்தது.
மாலை நாலுமணி இருக்கும். கனகேசன் என்னை அவரது இருக்கையில் அமரச் சொல்லி , எதிரில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். முதல் பதிவினை நான் செய்வதை அக்கறையோடு கவனித்தார்.
“வேலைக்குச் சேர நாள் பார்க்கலியா?” என்று கேட்டார்.
நான் இல்லை என்று தலையசைத்தேன்.
“இன்னிக்கு மூணு மணி வரை நவமி. நாளைக்குச் செவ்வாய்க்கிழமை, அதுதான் நவமி போனதும் உங்களை வேலையைத் தொடங்கச் சொன்னேன்.” என்றார்.
எனக்கு நாள் கோள் என்பதைப்பற்றிய நம்பிக்கை இருந்ததா என்பதைவிட அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான் உண்மை. நான் வேலைக்குச் சேர நாள் பார்க்கவேண்டும் என்று என் பெற்றோர்களும் யோசித்ததாகத் தெரியவில்லை. அடுத்த வாரம் ஊருக்குப் போனபோது, அப்பாவைக் கேட்டேன்.
“இல்லைடா.. உன்னை திங்கட்கிழமை சேரச்சொல்லி ஆர்டர் வந்துவிட்டது. நாள் என்று பார்க்க ஆரம்பித்தால், யாரவது ஏதாவது சொல்லி, அதை நாம் கேட்கவில்லை என்றால் அது உறுத்திக்கொண்டே இருக்கும். எந்தப் பிரச்சினை வந்தாலும் பழியை ராகு , சந்திரன் மேல போடத் தோணும். இப்பப் பிரச்சினை இல்லை பார்.” என்றார்.
எப்படியோ, அப்பாவினுடைய பிராக்டிகல் அபிப்பிராயத்தாலோ, கனகேசன் சித்தப்படி நவமி – செவ்வாய்க்கிழமை தவிர்த்ததினாலோ நாற்பது வருடங்களுக்குமேல் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வும் பெற்றுவிட்டேன். இந்த ஜாதகம், நேரம், காலம் இதற்கெல்லாம் பின்னால் வருவோம்.
தினம் காலையில் வீட்டிற்கே காப்பி வந்துவிடும். குளத்தில் குளித்துவிட்டு வந்து, சுவற்றில் மாட்டியிருக்கும் சாமி படத்திற்கு ஒரு கும்பிடு போட்டு, உடைமாற்றி ஆபீசுக்குப் போகும் வழியில் அந்த சிறிய ஹோட்டலில் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொள்வேன். மதிய சாப்பாடு ஆபீசுக்கே வந்துவிடும். இரவு ஹோட்டலுக்கே நேரில் சென்று ஆகாரம். அந்த சிறிய ஹோட்டலை அங்கு பலகாரக் கடை என்று சொல்வார்கள். மாதம் பிறந்ததும் கணக்கு சொல்வார் ஹோட்டல்காரர். இப்படியாக ஏற்பாடு வசதியாகத்தான் இருந்தது.
சனிக்கிழமைகளில் பாதிநாள் வேலை.. மதியமே பஸ் பிடித்து அந்த மாவட்டத் தலைநகர் சென்று பஸ் மாறி வீட்டுக்குப் போய்விடுவேன். மீண்டும் திங்களன்று காலையில் வீட்டை விட்டுக் கிளம்பி மீண்டும் பஸ் மாறி அலுவலகம் நேரே வந்துவிடுவேன். இதுதான் ரொடீன்.
கனகேசன் பார்த்துவந்த பணிகளை எனக்குக் கொடுத்துவிட்டு அவர் மேற்பார்வையாளர் போன்ற வேலைகளைச் செய்துவந்தார். எல்லாக் கோப்புகளும் பதிவேடுகளும் அவர் மூலமாகத்தான் கிளை நிர்வாகி சேஷையன் சாருக்குப் போகும். சேஷையன் தவிர எல்லோருக்கும் உதவியாளர் என்கிற ஒரே பதவி. அதில் கனகேசன் எல்லோருக்கும் சீனியர். அவர் செய்துவந்த வேலைகளை நேரடியாகப் புதிதாக வந்த எனக்குக் கொடுத்ததில்தான் ரமேஷ்பாபுவிற்கு வருத்தம். ஒரு சீனியரின் சீட்டை புது ஆளுக்குக் கொடுப்பது மற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று எண்ணம். (அந்த ரமேஷ்பாபுதான் நான் சேர்ந்த அன்று என்னை விரோதமாகப் பார்த்த இளைஞர்.)
அடுத்த செட் பிரமோஷனில் கனகேசனுக்கு பிரமோஷன் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். பிரமோஷன் என்று ஒன்று வரும்வரை சீனியாரிட்டி பிரகாரம் ஒவ்வோருவருக்கும் வேலைகளைக் கொடுக்கவேண்டும். முறைப்படி கனகேசன் சீட்டிற்கு அவருக்கு அடுத்த சீனியர் போயிருக்க வேண்டும் என்பது ரமேஷ்பாபுவின் வாதம். எல்லாரும் ஒரே கேடர்தானே? உழக்கில் என்ன கிழக்கு மேற்கு என்று சேஷையன் ரமேஷ்பாபுவின் யோசனையை நிராகரித்து விட்டாராம். அதனால், இந்த தேவையற்ற விவாதத்தில் என்மீது ரமேஷ்பாபுவிற்குக் கோபம். ஆனால் அது நீடிக்கவில்ல. ஒரே வாரத்தில் சகஜமாகப் பழகிக்கொள்ளத் தொடங்கிவிட்டோம்.
ஆபீஸ் என்று ஒன்பது மணிநேரம் கழிந்துவிடுகிறது. ஊரில் உள்ள டெண்ட் கொட்டகையில் வாரத்திற்கு இரண்டு படமாவது மாறும். அதில் இரண்டு மாலைப் பொழுதுகள் கடந்துவிடும். சில நாள் காலார நடந்துவிட்டுத் திரும்புவேன். எதிர்ப்படும் தெரிந்தவர் ஏதேனும் அரைகுறைக் கேள்விகளைக் கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போய்விடுவார்கள். ஒருநாள் எதிரே வந்த ஒருவர் “என்ன சார், வடக்கே போகிறீர்களா?”என்று கேட்டார். சூரியன் அஸ்தமனம் ஆகவில்லை. கிழக்குப் பக்கம் மானசீகமாகத் திரும்பிக் கைளையும் மானசீகமாக நீட்டி, திசையைக் கண்டுபிடித்து , “ஆமாம்” என்றேன். அவர் “ சரி போயிட்டு வாங்க “ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அந்த ஊர் பெரும்பாலும் விவசாயக் குடும்பங்கள் கொண்டது. எங்கள் அலுவலகம் தவிர ஒரு டவுன் பஞ்சாயத்து ஆபீஸ், பி.ஹெச். சி. என்று சொல்லப்படுகிற ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், மாட்டாஸ்பத்திரி என்று குறிப்பிடப்படும் ஒரு கால்நடை உதவி நிலையம், எட்டாம் வகுப்புவரை உள்ள ஒரு பள்ளி, ஒரு கூட்டுறவு சொசைட்டி , ஒரு கிளை நூலகம் ஆகியவை இருந்தன. இவற்றில் வேலை பார்பவர்கள் (எங்களையும் சேர்த்து) மொத்தம் ஒரு ஐம்பது பேர் தேறும். அதில் பெரும்பாலானவர்கள் பக்கத்து ஊர்களில் இருந்து வருபவர்கள்தான். ஐந்தாறுபேர் மட்டுமே உள்ளூரில் தங்கி இருந்தோம்.
ஒரு நாள் குளக்கரையில் அந்த நூலகர் என்னைப் பார்த்தார். “புதிதாக நம்ப கிராமத்திற்கு வேலைக்கு வந்திருக்கீங்க. ஒரு நாள் நூலகம் பக்கம் எட்டிப் பாருங்களேன்” என்று சொன்னார். நானும் எட்டிப் பார்க்கப்போனேன். பூட்டியிருந்தது.
“சார். இன்னிக்கு வெள்ளிக்கிழமை” என்று குரல் வந்தது. எதிர் வீட்டுக்காரர். சம்பந்தமில்லாமல் கேள்விகள் மட்டும் கேட்கமாட்டார்கள் போலிருக்கிறது. இது போல ஒரு ஸ்டேட்மெண்டும் விடுவார்கள் போலும் என்று தோன்றியது. நான் விழித்தேன். தொடர்ந்து,”வார விடுமறை” என்றார். குழப்பம் தீர்ந்தது.
அடுத்த வாரம், வெள்ளிக்கிழமை அல்லாத ஒரு நாள் மீண்டும் போனேன். ஒரே ஆச்சரியம். அந்த ஊரின் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால் ஏராளமான புத்தகங்கள். பருவ இதழ் பிரிவு என்று போட்டிருந்த சிறு அறையில் ஒரு பெஞ்சில் பல நாள் மற்றும் வார இதழ்கள் கிடக்க அரை டஜன் பேர் ஏதாவது படித்துக் கொண்டிருந்தார்கள்.
நூலகரைப் பார்த்தேன். உட்காரச் சொல்லி ஒரு படிவம் கொடுத்தார். சொற்பத் தொகையினை சந்தாவாக வாங்கிக்கொண்டு, மூன்று புத்தகங்கள் படிப்பதற்கு எடுத்துப் போகலாம் என்றார். .
எங்கே பார்த்தாலும் புத்தகங்கள். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நீள மேஜைக்கு அருகிலிருந்த பெட்டியில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. திரும்பி வந்த புத்தகங்கள். சரியான இடத்திற்குப் போக வேண்டியவை. அதிலிருந்தே மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். புத்தகம் படிக்கத் தொடங்கிய கதை இதுதான்.
புதிய ஊரில் புதிய நபர்கள் மத்தியில் பிரச்சனை ஏதும் இன்றி நாட்கள் நகர்ந்தன
…… இன்னும் வரும்