ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு காலையிலேயே காலிங் பெல் அடித்தது.
‘சண்டே, காலை கொஞ்சம் சோம்பலாய்த் தூங்கலாம்னா, விடமாட்டாங்களே’ – கண்ணைச் சுருக்கி எதிரே கடிகாரத்தைப் பார்த்தேன். காலை மணி 5.55. வந்த கொட்டாவியைக் கையால் மறைத்தபடி, கதவைத் திறந்தேன்.
’குட் மார்னிங். ஞாயிற்றுக் கிழமையும் சீக்கிரமா வெளீல போய்டப் போறயேன்னு, எழுந்த உடனேயே வந்தேன்!’ சிரித்தபடி ஜிப்பாவில் நண்பன்.
‘குட் மார்னிங்’ – அரைசிரிப்புடன் கதவைத் திறந்து, சோபாவைக் காட்டினேன் – கையில் கொண்டு வந்திருந்த நியூஸ் பேப்பரைப் (என் வீட்டு வாசலில் கிடந்ததுதான்!) பிரித்தவாறே ‘நான் வெயிட் பண்றேன்’ என்று பல் தேய்க்க எனக்கு பெர்மிஷன் கொடுத்தான்!
இப்படித்தான், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், எதிர்பாராமல், வார நாட்களை விட ’பிசி’யாகி விடும்! ஓய்வில்லாமல் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக வேலை செய்வதைப்போன்ற உணர்வு வந்து சோர்வைத்தரும்!
சனிக்கிழமை காலையிலேயே (அரை நாள், முழுநாள் வேலை இருந்தாலும், வாரத்தின் கடைசி வேலை நாள் என்பதால்!) ஹாலிடே மூட் வந்துவிடும். இப்போதெல்லாம், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலையே “வீக் எண்ட்” சிண்ட்ரோம் பிடித்துக்கொண்டு விடுகிறது ! அத்துடன் வெள்ளிக்கிழமையோ, திங்கட்கிழமையோ விடுமுறையானால், ’லாங்க்’ வீக் எண்ட் – ரயில், பஸ்களில் ஒரு அவசரத்துக்குக்கூட இடம் கிடைக்காது!
சிலருக்கு, சண்டே செய்வதற்கென்றே சில கடமைகள் இருக்கின்றன – துணிகளையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும், புத்தக அலமாரியைச் சரி செய்து, அடுக்கி வைக்கவேண்டும், அங்கங்கே இறைந்துகிடக்கும் பொருட்களை எடுத்து வைக்கவேண்டும் (ஒரு வாரமாய்த் தேடிக்கொண்டிருந்த ஸ்டேப்ளரோ, பால்(B) பேனாவோ கண்ணில்படும் அதிர்ஷ்டம் இருக்கிறது!), மதியம் கொஞ்சம் தூங்க வேண்டும் (பகலில் தூங்குவது கெடுதல் என்றாலும் ஞாயிறு பகல் மட்டும் விதி விலக்கு – வார நாட்களில் ஆபீசில் பகலில் தூங்குவது இவ்விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது!) – இப்படிப் பல திட்டங்கள் இருந்தாலும், ஒன்றும் நிறைவேறாமல், ‘சட்’டென வழுக்கி ஓடி விடும் சண்டேக்களே அதிகம்! அன்று மட்டும் கடிகாரம் டபுள் ஸ்பீடில் ஓடுமோ தெரியாது!
இரண்டு மூன்று வேலைகள் வரிசைகட்டி நிற்கும்போது, எதை முதலில் செய்வது, எங்கே தொடங்குவது என்ற யோசனையிலேயே, ஞாயிறு முழுவதும் தீர்ந்து விடுவதும் உண்டு!
அறுபது, எழுபதுகளில் – பள்ளிக்கூட நாட்களில் – ஞாயிறு அவ்வளவாக ரசிக்காது – வார நாட்களில் பள்ளிக்கூடத்தின் கொட்டங்கள் ருசிகரமானவை!
கல்லூரி நாட்களில், பையில் சில்லரை தேறாது; இருந்தாலும் நண்பர்களுடன் கூட்டமாக ஊர் சுற்றுவதில் சிக்கல்கள் இல்லை!
பையில் பத்து ரூபாய் இருந்தால் போதும், அந்த நாளைய சண்டே, ”ஸ்பெஷல்”தான்! காலை பாண்டிபசார் சாந்தா பவனில் ஒரு டிபன் – தக்காளி சட்னியுடன்! இரண்டு ரூபாய்க்குள் காபியுடன் நல்ல டிபன் கிடைத்த காலம் அது!! பஸ்ஸில் ஸ்டேஜுக்கு 4 பைசா வீதம் ஒரு ரூபாயில் மெட்ராஸைச் சுற்றி வரலாம்! ஃப்ரெண்ட்ஸ் வீடு, அரட்டை, பின்னர் லஞ்ச் (3 ரூபாய்க்கு நல்ல சாப்பாடு எல்லா மெஸ் / ஓட்டல்களிலும் கிடைக்கும்!) – சாந்தி தியேட்டர் மாதிரி பெரிய தியேட்டரில் மாட்டினீ ஷோ (ரூ1-75 க்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட்!), மாலை மெரீனாவில் இலவசக் காற்று ( சுண்டலுக்குக் காசு இருக்கும்!), மோர் சாதம் சாப்பிட வீட்டுக்கு வந்து விடலாம்!
இப்போதெல்லாம் சண்டேஸ் மிகவும் பிஸி – ஏதாவதொரு கூட்டம், ஒரு விழா, ஒரு சினிமா, ஏதாவதொரு ஓட்டலில் டின்னர் என வீடுகளில் சமையலுக்கும் விடுமுறை – வேண்டியதுதான்.
காலையில் சர்ச்சுகளிலும் / கோயில்களிலும் விசேஷக் கூட்டங்கள்! எல்லா கடவுளும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரொம்ப பிசி – ஓவர்டைம் செய்து அருள்பாலிக்கும் சூழ்நிலை!
வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியில், எதைக் காண்பித்தாலும், பார்த்தே தீருவது என்ற சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள், சினிமா விருது வழங்கும் விழா, சிறந்த குத்தாட்டப் போட்டி, இசைப் போட்டி, முன்னமேயே முடிவு செய்த விவாதங்கள், வந்து போனது தெரியாத திரைப்படங்கள், வெந்தும் வேகாத சமையற் குறிப்பு நிகழ்ச்சிகள், காமெடி என்ற பெயரில் அழவைத்து வேடிக்கை பார்க்கும் துணுக்குகள் என எதையாவது பார்த்துத் தொலைக்கும் சண்டேக்கள் !
கிரிக்கெட், ஃபுட் பால் என மேட்ச் இருந்து விட்டால் அந்த சண்டே தெருவில் ஈயாடும்!
காபி கொடுத்து, அவன் கொடுத்த இன்விடேஷனை இன்முகத்துடன் பெற்றுக்கொண்டு நண்பனை அனுப்பி வைத்தேன். மூன்று வாரமாக என்ன எழுதுவது என்று தெரியாமல், கடைசி நாள் வரை (அது நேற்றே போய்விட்டது!) திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல முழித்துக்கொண்டிருந்தேன் –
கலைந்து கிடக்கும் புத்தகங்களும், துணிகளும், சிடிக்களும் என்னை பயமுறுத்தின –
பேப்பர்க்காரன், பால்காரன்(ரி), ஜுரத்துடன் வாட்ச்மேன், தர்மம் கேட்டு மாரியம்மன் கோயில் திருவிழா பக்தர், ஃப்ரிஜ் மெகானிக் – தொடர்ந்து அடித்த காலிங் பெல்லைக் கழற்றி எறிந்து விடலாமா என்று நினைத்த வேளையில்,
செல் போன் அடித்தது – “ஃப்ரீயா இருக்கியா? இப்போ வரலாமா? ஒரு அவசரம்” – வேறொரு நண்பர்.
என்ன சொல்வது நான்?