ரகுவம்சம் அனுமார் வால்போல் தொடர்ந்து வருகிறதே என்ற கவலைவேண்டாம். அடுத்த மாதம் சரித்திரம் உண்மையில் நகரும் !
சரித்திரம் எப்படியிருந்தாலும் காளிதாசனின் எழுத்திற்கு ஈடு இணை கிடையவேகிடையாது.
ராமன் மகன்கள்: லவன், குசன்!
குசன் நாகராஜனின் சகோதரியான குமுதவதியை மணந்துகொண்டான். குசன் மற்றும் குமுதவதிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அதீதி என்ற பெயரிட்டு வளர்த்து வரலானார்கள்.
ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்குச் சென்றபோது, அவர் தனக்குத் துணையாக குசனையும் அழைத்துச் சென்றார். அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா மரணம் அடைந்தான். ஆனால் அதுபோலவே அந்தக் கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தான். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மனவருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின்னர் அதீதி அரச தலைமைப் பொறுப்பை ஏற்று நாடாண்டான்.
ரகு வம்சத்தில்.. பலப்பல அரசர்கள் பிறந்து… மடிந்து… காலச் சக்கரம் ஓடியது…
பல மன்னர்களுக்குப் பிறகு அந்த சந்ததியில்…
துருவசாந்தி மன்னனானதும் தனது மூதாதையர்கள்போல வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தான். அப்போது ஒருநாள் அவன் வேட்டை ஆடிக்கொண்டு இருக்கையில், அவன் ஒரு சிங்கத்தினால் அடித்துக் கொல்லப்பட்டு மரணம் எய்தினான். அந்நேரம் அவனுக்கு சுதர்சனன் எனும் குழந்தை இருந்தது. ஆனால் அந்தக் குழந்தைக்கு அவர் முடிசூட்டவில்லை, தமது வாரிசாக நியமிக்கவும் இல்லை. துருவசாந்தி மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட மந்திரிமார்கள் உடனடியாக ஆறு வயதுக் குழந்தைப் பருவத்தில் இருந்தாலும் அவரது மகனான சுதர்சனுக்கு அயோத்தியாவின் மன்னனாக முடி சூட்டினார்கள்.
இந்த நிலையில்தான் ரகுவம்சத்தின் அழிவும் துவங்கத்தொடங்கியது.
சுதர்சனன் எனும் அந்தக் குழந்தையும் அனைத்தையும் முறையாகக் கற்றறிந்து அறிவில் சிறந்து விளங்கிற்று. நவரத்தினங்களில் நீல வண்ணத்தில் காணப்படும் ரத்தினக்கல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதை மகாநீலம் என்றே அழைப்பார்கள். அதைப் போலவேதான் மன்னன் சிறுவனாக இருந்தாலும் மகாராஜன் என்றே அழைக்கப்பட்டார். அவனது அழகிய வதனம் பெண்களைக் கவர்ந்தது. காம புருஷார்த்தங்கள் அனைத்தையும் கற்றிருந்த அவனைப் பல பெண்கள் மோகிக்கலாயினர்.
ரகுவம்ச ஆட்சி தொடர்வு முறிந்தது:
பல காலம் ஆட்சி செய்து வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்த சுதர்சனுக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கையே அலுத்துப்போய் சலிப்பு ஏற்பட, தனது மகனான அக்னிவருணனை ஆட்சியில் அமர்த்திவிட்டு, நைமிசாரண்ய வனத்துக்குச் சென்று தவத்தில் அமர்ந்துகொண்டான். அக்னிவருணன் ஆட்சிக்கு வந்த நேரத்திலே நாட்டில் அவனுக்கு எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் இருந்தது. அக்கம்பக்கத்து மன்னர்கள் அடங்கிக்கிடந்தார்கள். நாட்டில் செல்வம் கொழித்துக்கிடந்தது. மக்களுக்கு எந்தக் குறையுமில்லை. ஆகவே அக்னிவருணன் நாட்டு நடப்பின் எதைக் குறித்தும் கவலைகொள்ளாமல் சிற்றின்ப வாழ்க்கையில் மூழ்கிக்கிடந்தான். காமம் தலைக்கேறப் பெண்கள் விஷயத்தில் துர்நடத்தை கொண்டவனாக மாறிக்கொண்டே வந்தான். அவனுக்கு எந்த அமைச்சரும் முன்வந்து அறிவுரை கூறமுடியாமல் பயந்தார்கள். அவர்கள் எத்தனை எடுத்துக்கூறியும் அவன் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அளவுக்கு மீறிச் சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டதினால் அக்னி வருணனுக்கு மெல்ல மெல்ல உடலில் தீர்க்க முடியாத தேக வியாதி பிடித்துக்கொண்டது. சில நாட்களிலேயே அவனால் நடக்கக்கூட முடியாமல் போயிற்று.
அக்னிவருணனுக்குக் குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. வியாதி பிடித்துக்கிடந்த அக்னிவருணனுக்குப் பிறகு அடுத்து ராஜ்யத்தை யார் ஆளப்போகிறார்கள் என்ற கவலையும் மந்திரிமார்களுக்கு எழுந்தது. பல ஆண்டுகளாக அரசனோ மக்கள் யாரையுமே சந்திக்கவில்லை. எப்போதாவது, எதற்கேனும் அரசனை சந்திக்க விரும்பிய மக்களுக்கு அரசன் புத்திர பாக்கியம் பெறுவதற்காகத் தபத்தில் அமர்ந்துள்ளதாகவும், ஆகவே அவரைத் தொந்தரவு செய்ய இயலாது என்று பொய்கூறி, அரசனுக்கு வந்திருந்த வியாதி குறித்த விஷயத்தை அடியோடு மறைத்து வைத்திருந்தார்கள். அரண்மனையில்கூட அரசனைக் குறித்த எந்த செய்தியுமே யாருக்கும் தெரியவில்லை. அரண்மனையின் அறையிலேயே முடங்கிக்கிடந்த அரசனும் ஒரு நாள் மரணம் அடைந்தான்.
அரசன் மரணம் அடைந்தபின், அதை வெளியில் தெரியாமல் மறைத்துவைத்து, அமைச்சர்கள் கூடி ஆலோசனை செய்தபின், கைதேர்ந்த பண்டிதரை அழைத்து,அவரைக் கொண்டு யாகாக்கினி எனும் யாகம் செய்வதைப்போலப் போலி நாடகம் நடத்தி, அந்த அக்னிக்குள் அரசனை மறைத்துவைத்து அவர் உடலை எரித்தார்கள்.
வாசகர்களே! அந்தக் காலத்திலேயே.. ஆட்சியாளர்கள் ‘தலைவரது’ மரணத்தை மர்மமாக மக்களுக்குத் தெரியாமல் மறைத்து வந்தனர்!
அனைத்துக் காரியங்களும் முடிந்ததும் அரசனுக்கு பிள்ளை ஏதும் இல்லை என்றாலும் அவனுடைய மனைவியை நாட்டை ஆளுமாறு கோரினார்கள். ராஜ்யத்தை ஆள்வதற்கு அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும், ரகுவம்ச ஆட்சி தழைத்திட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவளும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பல காலம் நல்லாட்சி தந்து வந்தாள்.
அவளுடன் ரகுவம்சம் முடிந்தது!!
நன்றி:
நன்றி: http://www.sangatham.com/classics/raghu-vamsam-selected-slokas.html
காளிதாசரின் ரகுவம்ச காவியம் முடிந்தது.
அவர் எழுதிய மேகதூதம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் இவைகளைப்பற்றியெல்லாம் எழுத வேண்டாமா?
‘ஓட வேண்டாம் வாசகரே… சும்மானாச்சிக்கும் சொன்னேன். இருக்கும் ஒரு வாசகரையும் இழந்துவிட்டுப் பிறகு யாருக்குத்தான் எழுதுவது?’
… சரித்திரம் நகர்கிறது..
அடுத்த கதை என்னவாயிருக்கும்….
ஒரு ரூம் போட்டு யோசிக்கவேண்டிய சமாசாரம்…
சந்திப்போம் விரைவில்…
(தொடரும்)