கருவாகி உயிராகி உருபெற்று உருவாகி
வரமாக தாய் கரத்தில் தவழும் முதலாய்
அண்டங்கள் ஆளும் அறிவியல் அனைத்தும்
கோள்களும் பால்வெளியும் மாறும் இயல்புகளும்
பூதங்கள் ஐந்துடன் பூமியின் பரிவர்த்தனையும்
அஞ்சாமல் வாழவைக்கும் ஆன்ம விசாரணையும்
மகத்தான மானுடம் மறுகரை ஏறவே
கடலாக நுண்ணறிவை புதையலாய்ப் புகுத்தி
அழகான இலக்கணம் அணியாகக் கொண்ட
நம் தமிழை, தன்னேரில்லாத செந்தமிழை
வேண்டுமென்றே சீண்டாது வேண்டாத வார்தைகளை
இன்றைய இயல் இசை நாடக தமிழ் என்றே
அரங்கேற வைத்து அல்லல் படுத்தி
மாணவ மாணவியர் இளைஞர் மனஏட்டில்
கூடாத வார்த்தைகளை புழக்கத்தில் ஏற்றி
சமுதாய கேடுகளை அள்ளித் தெளித்து
தினந்தோறும் கலாசார சீரழிவைத் தந்து
வாய் திறந்து பேசவும் கூடாத மொழியாக
“எனக்கு டமில் தெரியாது. ஸோ வாட் பர்வாயில்லை” என்று
போலியாக தமிழர்வாழும் தேசமாய் மாறுவது
ஐயகோ! கெடு மதியார்க்கு தோதாக ஆனதே!