தண்ணீரைப்பற்றி நினைத்துக்கொண்டேன். உயிர்களின் சிருஷ்டிக்கே தண்ணீர் ஒரு ஆதாரமாக இருக்கிறது.
தண்ணீர் இல்லாமல் நம் உயிர் நிலைக்காது. பூமியின் ஜீவராசிகளின் உயிர் வாழ்வுக்காக, ஜீவ நதிகளும், நிரந்தரமான பரந்த பனி ஏரிகளும், காலக் கணக்கற்றுக் கொட்டும் நீர் வீழ்ச்சிகளும், பருவம் பார்த்துப்பார்த்துப் பெய்யும் வான் மழையும், நிலத்தை ஆதரவாக அணைத்துக்கொண்டு உணவும் உறவும் கொடுக்கும் மகா சமுத்திரங்களும் பூமி வாழ்க்கையை ஆனந்தமாக்குகின்றன. குளிர்விக்கின்றன.
இயற்கையின் உன்னதக் கொடையாய் பூமியெங்கும் பரந்து தளும்பும் இந்தத் தண்ணீரை, மனித ஆன்மாவைக் கரைசேர்க்கும் புனிதமான தெய்வப்பதமாக, அன்னையாக, வேதங்களும் இதிகாசங்களும் போற்றிப் புகழ்ந்தேத்துகிறது; கொண்டாடுகிறது. உயிர் நிலைப்பதற்கு அடிப்படையான எல்லா இயற்கைக் கொடைகளும் தெய்வத்தின் பிரத்யட்ச பிரதிமைகளாகப் பூஜிக்கப்படுகின்றன .
நாளடைவில் பூமி, தேசங்களாகவும், தேசங்கள் மாநிலங்களாகவும், பின் மொழிவாரிப் பிரதேசங்களாகவும், அரசியல் வட்டங்களாகவும், மேலும் மேலும் எல்லைகளைக் குறுக்கி வகுத்துக்கொண்டு, தனித்தனி வேலிகளைப் போட்டுக்கொண்டு, நிலத்தை பங்குபோடத் தொடங்கிவிட்ட பிறகு சகஜமாக வித்யாசமற்று ஓடிக் கொண்டிருந்த நீரோட்டங்கள் அரசியல் நிறம் கலந்து உரிமைப் பிரச்னைகளுக்கு ஆட்பட்டு அவரவர்கள் அணைகளைக் கட்டி நீரை முடக்கி சொந்தம் கொண்டாடிக்கொண்டு போராடும் பரிதாப நிலைக்கு இன்று வந்துவிட்டது
நதிகளின் விதியும் கதியும் இப்போது கேள்விக்குறியாகி விட்டன.
காற்றைப்போல் நீரும் பிரச்னைக்கு அப்பாற்பட்டுப் பொதுவாகி விடக்கூடும்.. .மனிதன் அதன் வறட்சிக்குக் காரணமாக இல்லாமல் இருந்தால்……
நதிகளை இணைத்தால் பிரச்னை வெகுவாகக் குறையலாம். மனித மனங்கள் தங்கள் குறுகிய அபிமானங்களைத்தாண்டி கூடிச் செயல்படுத்த வேண்டிய விஷயம் இது?
பாரதியாரின் பல கனவுகளைப்போல் இதுவும் இன்னொரு கனவாகவே இருந்து விடக்கூடுமோ?
**************
சமீபத்தில் மொகலாய மன்னர்களின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு மன்னர்களும் தம் நாட்டு நீர் வளத்தை எப்படிப் பராமரித்து பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற தகவல் சுவையாக இருக்கின்றன.
அக்பர் சக்கரவர்த்திக்குக் கங்கா நதி நீர்தான் மிகவும் விசேஷமானதாக இருந்திருக்கிறது. அவர் தலைநகரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் அவருக்கும் அவரை சூழ்ந்திருக்கும் நிர்வாகிகளுக்கும் தேவையானது கங்கைத் தண்ணீர். அது கிடைக்கும்படியான சேகரிப்புகளை நிர்வகிக்கப் பொறுப்பான அதிகாரிகளும் அதற்கென்று வாரியமும் ஏற்படுத்தப்பட்டிருந்தன .
அந்த தண்ணீர்க் கிடங்குக்குப் பெயர்” “அப்தர் கன்னா” கங்கா நதிநீரை களங்கப் படுத்தாமல் இருப்பதற்காக அங்கே பாதுகாவலர்களை நியமித்திருந்தார். தினந்தோறும் அவர்கள் பெரிய பெரிய ஸீல் வைத்த மூடிகள் போட்ட தொட்டிகளில் நீரை நிரப்பி அரண்மனைக்கு வண்டிகளில் அனுப்பி வைப்பார்களாம்.
அக்பருடைய தர்பார் ஆக்ராவுக்கும் பதேபூர் சிக்ரிக்கும் அவ்வப்போது இடம் மாறும் சமயங்களில் அவருடைய சைன்யத்தைத் தொடர்ந்து பெரிய மாட்டு வண்டிகளில் கங்கை நீர்த் தொட்டிகளும் பின்தொடரும்.. அக்பர் லாஹூரில் இருந்தபோது அவருக்கு ஹரித்வாரிலிருந்து கங்கை நீர் கொண்டுவரப்பட்டது அக்பர் கங்கைநீரை விரும்பியது அதன் புனிதத் தன்மைபற்றிய மதநம்பிக்கைகளால் அல்ல. கங்கை நீர் தூய்மையானது என்ற அபிப்ராயம்தானாம்.
கங்கைநதியின் வெவ்வேறு கரைகளில் இருந்து நீரைமொண்டு அதன் சுவையின் தரத்தை அறிந்துகொள்ள அவர் தொழில்முறை சுவைஞரை [Water tasters} நியமித்திருந்தாராம்.
ஆனால் அவருடைய மகன் ஜஹாங்கீருக்குக் கங்கை ஜலம் அவ்வளவு முக்கியமல்ல. அவருக்கு இயற்கையாக ஓடிவரும் எந்த நதி நீரும் உபயோகத்திற்கு உகந்தது. அவர் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திலுள்ள நீர் நிலைகளில் நீரெடுத்து அதன் எடை வேறுபாட்டை அறிந்து அவற்றுள் எடை குறைந்த நீர் எதுவென்று கண்டுபிடித்து உபயோகிக்க விரும்பினாராம். ஒரு வேளை தூய்மையான நீர் எடை குறைவாக இருக்கும் என்ற ஊகம் போலும்!
ஷாஜஹான் மன்னருக்கு எப்போதும் யமுனை நீர்தான் விருப்பமானது. யமுனை ஜலம் பளிங்குபோல் தெளிவானது. பரிசுத்தமானது. ஆக்ராவிலும் செங்கோட்டையிலும் சுவையான நீரூற்றுக்கள்கொண்ட கிணறுகள் பல இருந்தபோதிலும் ஷாஜஹான் யமுனையைத்தான் விரும்பினார்.
ஔரங்கசீப் தன் தந்தை ஷாஜஹானை ஆக்ராக் கோட்டையில் சிறை வைத்திருந்த வருஷம் 1658ல் அவன் அந்தக் கோட்டைக்குள் யமுனைத் தண்ணீர் பாய்வதற்குக் கட்டிய நீர்க் குழாய்களை அடைத்துவிட்டானாம்.
ஒரு பெரிய முகலாய மன்னர் ஷாஜஹான் தன் அந்திம காலத்தில் தாகம் தீர்த்துக்கொள்வதற்குத் தனக்கு விருப்பமான யமுனைத் தண்ணீர் கிடைக்காமல் ஏங்கித் தவிக்க வேண்டிவந்திருக்கிறது. .
தன் மகனே தனக்குத் தண்ணீர் கிடைக்காமல் செய்த வேதனையில் வெம்பி அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினார் ஷாஜஹான்
“ என் புதல்வனே! மாவீரனே!
என்னுடைய துர்ப்பாக்கிய நிலைமையைப் பற்றி
நான் எவரிடம் ஏன் புகார் செய்யப் போகிறேன்?
இதோ இந்த மரத்தின் ஒரு சின்னத் துளிர் கூட
ஆண்டவனின் சித்தமன்றி விழக் கூடுமா?
நேற்றுத் தான் என் அதிகாரத்தின் கீழ் ஒன்பது
லட்சம்வீர்ர்கள் கட்டளைக்கு கைகட்டி நின்றார்கள்.
இன்று ஒரு வாய்த் தண்ணீருக்காக…. மகனே…. உன்னிடம்
கையேந்தி நிற்கிறேன்
ஹிந்து மக்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
இறந்தவர்களுக்கும் ஒரு வாய்த் தண்ணீர் அளிக்கிறார்கள்.
என் தவப் புதல்வனே…….முகலாய வம்சத்தின் தலைவனே!
இப்போது தண்ணீருக்கு ஏங்கிப் புலம்பும் தந்தையின்
வேதனைக்கு நீ காரணமாகி விட்டாயே!.
“
இந்த செய்தியைப் படித்த ஔரங்கசீப் ஒன்றும் கலங்கிக் கண்ணீர் விட்டுவிடவில்லை. முகலாய அரசுகளில் உறவினர்களை சிறை வைப்பதும் கொலை செய்வதும்தான் அரசாங்க நடைமுறையாக இருந்திருக்கிறது. குடும்பப் பாசம் அரசியலில் இல்லை !
“” தந்தையே ! இதற்குக் காரணம் நானல்ல.
இந்த நிலைமையை வருத்திக் கொண்டது நீர் தான்…….”””.”
அட பாவிகளே! பெற்றவனுக்குத் தண்ணீர் தரக்கூடவா இரக்கம் இல்லாமல் போயிற்று அந்த மகனுக்கு! பரம்பரை குணம் எளிதில் மாறுமா? தகவல்களுக்கு நன்றி.
LikeLike
இந்திரா பார்த்தசார்ரதியின் அவுரங்கஜீப் நாடகம் படித்திருப்பீர்ர்கள். முகலாய சாம்ராஜ்யத்தைப் பற்றிய அபாரமான நாடகம்
LikeLike