ஒப்பில்லா வண்மழையை,வானம் எங்கும்
ஓடோடி விளையாடும் முகிலி னத்தை,
குப்பென்று பரவுகின்ற பூம ணத்தை,
குளிர்நிலவை, உடுநிரையை நெடும லையை,
உப்பைவிளை ஆழ்கடலை, அருவி, ஆற்றை
ஒளிர்கதிரை, பயிர்வயலை, அடர்ந்த காட்டை,
செப்பழகு விண்வில்லை, செக்கர் வானைச்
செவியினிக்கச் செந்தமிழில் பாட வேண்டும்
வருத்தத்தை,மகிழ்ச்சியினை,கடுஞ்சி னத்தை,
மாறாத வெறுப்புணர்வை, அருளை,அன்பை,
ஒருத்தரையும் மதிக்காத ஆண வத்தை,
உயர்வான பணிவதனை, பொறுமை,அச்சம்,
கருத்தில்லாத் தற்பெருமை, இரக்கம், வீரம்,
காதலினை,நட்புறவை எல்லாம் எண்சீர்
விருத்தத்தில் வகையாகப் பாட வேண்டும்
விந்தைமிகு மாந்தருளம் தேட வேண்டும்
மானிடரின் வாழ்வினிலே இன்ப துன்பம்
மாறிவரும் கலந்துவரும் தன்மை ஏனோ?
வானவர்கள் வகுத்திட்ட வழியோ, அன்றி
வல்வினையோ,செய்பலனோ இயற்கை தானோ ?
ஏனிவர்கள் மரப்பாவைக் கூத்துப் பொம்மை
இயங்குவதைப் போலாடி ஓய வேண்டும்?
நானிவற்றைப் பட்டறிவும்,கற்றுத் தேர்ந்த
நல்லறிவும் துணைகொண்டு பாட வேண்டும் !
(செய்பலன் – கர்மபலன்/ பட்டறிவு – அனுபவம்)
வெண்பாவில் விளையாடி விருத்தப் பாவில்
விதவிதமாய்ச் சந்தங்கள் அமைத்துக் கொண்டு
கண்பார்க்கும் அத்தனையும் மட்டும் இன்றிக்
காணாத அவையனைத்தும் கற்ப னையால்
பண்பான செந்தமிழில் இனிமை தோன்ற
பார்போற்ற , ஊர்போற்ற , நாடு போற்ற
மண்பால்நான் மாக்கவிதை பாட வேண்டும்.
மாகாளி சக்தியருள் கூட வேண்டும் !
Great poem.. great flow of thoughts and beautiful rhyme.
LikeLike