அந்தப் பள்ளியில் ஸ்கூல் கவுன்சிலராக அந்த ஆண்டுதான் நான் பணியைத் துவங்கியிருந்தேன். என் அறை எல்லோருக்கும் தெரிந்ததே, யாரும் வரலாம். ரிஷி அந்த வருடம் சேர்ந்த புது மாணவன். அவனுடைய அப்பா டூர் போவதால், அம்மா தனலட்சுமி மற்றும் அவன் அண்ணனுடன் எங்கள் ஸ்கூல் அருகில் வசிக்கும் தாத்தா-பாட்டியின் வீட்டில் குடியேறினார்கள்.
என் அறையை நோக்கி, கண்ணீர் வழிந்தபடி ரிஷி வந்தான். வருவதைக் கவனித்து, விரைந்துபோய் அழைத்து வந்தேன். அவன் சட்டை அவிழ்ந்தபடி இருக்க, மேலே ஆரஞ்சு நிற பெயிண்ட் அடித்த சின்ன துணி சொருகி இருந்தது. ரிஷி இதைக் காட்டி, “அ..அ.வ.வ..ங்…க..” என்று அழ ஆரம்பித்தான். 12 வயதானவன். கண்களில் நீர் ததும்ப, விவரத்தை மென்று விழுங்கிச் சொன்னான். தன் பெயரைக் கேட்டதும் வகுப்பில் இருவர், ரிஷிகள்போல் காவி அணிய இப்படிச் செய்தனர் என்றான். “முனிவர்” என்று அழைத்து மற்ற மாணவர்கள் சிரிப்பதைப் பார்த்து, வகுப்பில் தனக்கு ஆதரவு இல்லை என்று உணர, வெட்கம் கவ்வ, இந்தப் பள்ளி வேண்டாம் என்று சொன்னான்.
ரிஷி, தலையைக் குனிந்து தனக்கு “stammering” (திக்குவாய்) என்று சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவன் அப்பாவும், பாட்டியும் இப்படிக் கேட்கச் சொன்னார்களாம். ரிஷிக்குத் திக்கும்போது, அவன் அப்பா அருகில் இருந்தால் அவன் உதடுகளைச் சுண்டிவிட்டு வார்த்தையைத் திரும்பச் சொல்லச் சொல்வாராம். அவன் திக்கிப் பேசினால் பாட்டி உடனே “பையனா இருக்க. எப்படித்தான் வாழப் போகிறாயோ?” என்பாளாம். தனலட்சுமி ரிஷியின் கைகளை அழுத்தித் தன் ஆறுதலைத் தெரிவிப்பாள். அப்பொழுதெல்லாம் தனலட்சுமியின் கண்கள் சிவந்து, கண்ணீர் ததும்பி இருக்குமாம். இவனுக்கு என்னசெய்வது என்று புரியாதாம்.
ரிஷியின் அண்ணனும் எங்கள் பள்ளியில்தான் சேர்ந்திருந்தான். மிகத் துணிச்சல்காரன், நல்ல உள்ளம் கொண்டவன், வகுப்பில் முதலிடம் பெறுபவன். ரிஷி தன் அண்ணனைப் பார்த்து வியந்தான். அவனைப்போல் இல்லாததால் கொஞ்சம் பொறாமை, பேச்சு திக்கிவிடுவதால் வெட்கப்பட்டுப் பேச மறுப்பான். வயது 12 என்பதால், அந்த வயதின் சுபாவமும் எனலாம்.
அவனைச் சமாதானப்படுத்தினேன். என் அறையில் ஒருவர் இருந்தால் வேறு யாருக்கும் உள்ளேவர அனுமதி கிடையாது. அங்கே வந்த அவன் வகுப்பு ஆசிரியர், இதைப் புரிந்துகொண்டு சென்று விட்டாள். ரிஷியுடன் பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சென்று சந்தித்தோம், இதை ஆராய்வதாக உறுதி அளித்தார். சமாதானப்படுத்தி வகுப்புக்கு அனுப்பி வைத்தோம்.
வகுப்பில் இந்தக் குறையைப் பார்த்து, இரண்டு மாணவர்கள் கிண்டலாக அவனைப்போல் பேச முயல்வதாகத் தெரியவந்தது. ஸ்கூல் கவுன்சி்லர் என்பதால் முதல் கட்டமாக , அன்றைக்கே இதை என் செஷனில் எடுத்துக்கொண்டேன்.
ரிஷி போன்றவர்களுக்குச் சீண்டுவதால் நிலைமை அதிகரிக்கும். அதன் நேர் விளைவு, தனிமை, வெறுப்பு ஏற்படுவது. இதைப்பற்றிப் பிற மாணவர்கள் புரிந்துகொள்வது அவசியம் என்று எண்ணினேன்.
கிண்டல், நக்கல், கேலி, செய்வதின் விளைவைப் பல கோணங்களில் ஆராய்ந்தோம். பல மாணவர்கள் இதையும் கேட்டார்கள், “அப்படி என்றால், நாங்கள் கேலி செய்யாமல் இருந்தால்தான் சரியா?” என்று. நான் புரிய வைத்தேன், கேலி செய்வது மனிதனின் இயல்பே. அதைச் செய்யும்பொழுது, மற்றவரைப் புண்படுத்தி, அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி, வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளாமல் தனிமைப்படுத்துவது, இவை துன்புறுத்துவதாகும். இப்படிக் கிண்டல், கேலியை கொடூரமாகச் செய்யும்போது, அவர்களை உணர்வுகள் இல்லாத ஒரு ஜடம்போல் பாவிக்கிறோம்.
ரிஷி இப்படி அனுபவித்ததால், வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்ற நினைப்பதைப்பற்றிப் பகிர்ந்தேன், சக மாணவர்களின் பரிவுக் குறைவைக் காட்டுகிறது என்றேன். எங்கள் “உயிர் திறன்” வகுப்பு நேரத்தில் மற்றவரிடம் பேசுவது, பரிவு காட்டுவது, உதவுவது, என்று பல ஸெஷன்களில் எடுத்துக் கலந்துரையாடலாக ஆராய்ந்தோம். அவர்கள் புரிந்துகொண்டு செயல்பட, சிநேகம் அழகாக வளர்ந்துவந்தது.
மாணவர்களின் பெற்றோருடனும், நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் மூன்று மணி நேரத்துக்கு நடத்தும் வர்க்ஷாப்பில், நக்கல் அடிக்கும் குணாதிசயங்களைப்பற்றியும் கலந்து ஆராய்ந்தோம். பிள்ளைகள் பெற்றோரைப் பார்த்துச் செய்வதுண்டு. பெற்றோர்களும் தங்கள் சொல்லும் விதம், பழகும் விதத்தில் கவனம் செலுத்தி, தேவையானால் மாற்றிக் கொள்ளவேண்டும்.
ரிஷி வகுப்பில் பதில் சொல்ல மறுப்பதாக அவன் வகுப்பு ஆசிரியர்கள் பகிர்ந்தார்கள். இது பேசுவதில் தடுமாறுவதால், அவன் தன்னம்பிக்கை குறைந்து இருந்ததைக் குறித்தது.
இதை அறிந்ததும் ரிஷியுடன் ஸெஷன்கள் ஆரம்பமானது. தனலட்சுமியையும் வாரத்தில் ஒரு நாள் சந்தித்தேன். அவன் அப்பா, ரிஷியைப் பராமரிக்க அவளைத் தன் பட்டயக் கணக்கர் (Chartered Accountancy) ஆலோசகர் நிறுவனத்தை மூடிவிட்டு இவனைக் கவனிக்கச் சொன்னார்.
வீட்டாரின் கவனம் முழுக்க ரிஷியின் மேல் நிலவ, அவனுடைய தன்னம்பிக்கை மேலும் ஊசலாடியது. வீட்டிலும், வெளியிலும் பேசவே தயங்கினான், தலையாட்டியே பதில் தெரிவித்தான்.
இதை மாற்ற, தினம் காலையில் பல் துவக்கியதும், தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து ஒரு “ஹலோ”/ “காலை வணக்கம்” என்று சொல்லச்சொன்னேன். இப்படி நம்மைப் பார்த்துச் சொல்வதில் தைரியம் கூடும். தன்மேல் காட்டும் அக்கறையே அதற்குத் தீனி என்று சொல்லலாம்.
அவனுடைய வகுப்புத் தோழர்களுடன் சாப்பிட ஊக்குவித்தேன். சொன்னதைச் செய்தேன் என்பதாக, பல நாட்களுக்கு அவர்களுடன் போய் ஏதும் பேசாமல் சாப்பிட்டு வந்துவிடுவான். இதைப்பற்றி அவனுடைய ஸெஷன்களில் ஆராய்ந்தோம். ஒரிரு வார்த்தை சொல்ல முயலலாம் என்று ஆரம்பித்தோம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்கள் வாயால் தர முயற்சிப்பதும் சேர்ந்தது. அவன் முயற்சிக்க, மற்றவர்களும் ஊக்குவித்தார்கள்.
அந்த வகுப்புடன் என் ஸெஷன்ஸ் போய்க்கொண்டு இருந்ததால் சந்தேகங்களைத் தெளிவு செய்யமுடிந்தது. இந்த ஆரம்ப நிலையில் ஒன்றை வலியுறுத்தினேன். ரிஷி பேசும்போது, கேட்பவர் ஊக்குவிக்கத் தலை ஆட்டி, ம்ம் சொல்லி, தங்களின் முழு கவனம் தரவேண்டும், அவன் சொல்வதை அவனே முடிக்கவேண்டும். எங்கள் பள்ளிக்கூடம் ஒரு “இன்க்ளூசிவ் ஸ்கூல்” (Inclusive school),“மாற்றுத்திறனாளி” மாணவர்கள் எங்கள் வகுப்புகளில் உண்டு.அவர்களுக்குப் ப்ரத்யேகமாகப் பேச்சுப் பயிற்சி தருபவரையும், வகுப்பு மாணவர்களுக்கு மேலும் விளக்க ஸெஷன்ஸில் சேர்த்துக்கொண்டேன்.
இதையெல்லாம் வருட ஆரம்பத்தில் செய்ததில் ரிஷிக்குத் தெம்பு கூடியது. மாணவர்களும் தங்களைச் சுதாரித்துப் பழக, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ததால், அவர்களின் ஒற்றுமை, மதிப்பெண்கள் இரண்டுமே மேல்நிலையில் சென்றது.
ரிஷியின் அம்மா, இதை “Stammering” என்றாள், அவன் அப்பா “Stuttering” என்றார். என்னை விளக்கச் சொன்னார்கள். இரண்டுமே சரி. நம் நாட்டிலும், இங்கிலாந்திலும் இதை “Stammer” என்றும், அமெரிக்கா மற்றும் ஆஸ்ட்ரேலியாவில் இதை “Stutter” என்றும் கூறுவார்கள். இரண்டுமே, முதல் வார்த்தையை இழுத்துச் சொல்வது, இல்லை அதே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்வதாகும். பயம், சந்தேகம், எரிச்சல், கோபம், இந்த நிலையை நீடிக்கச் செய்யும்.
உச்சரிப்பிற்கு உதவும் என்பதால், நாங்கள் ஸெஷன்ஸ் ஆரம்பிப்பது, முடிப்பது ஒரு சிறிய சுலோகத்துடன். அதேபோல் பாட்டை hum செய்வதும் உதவும். ரிஷியிடம் “உனக்குத் தோன்றுகிற பாடலின் இரண்டு வரிகளை hum செய்” என்பேன். பிறகு வீட்டில் தனலட்சுமியுடன் இரண்டு-மூன்று வரிகளைப் பாடுவது என்று தொடக்கினோம். இப்படி, மற்றவருடன் இணைந்து வார்த்தைகளை உச்சரிப்பதில், ரிஷியின் திக்குவது வெளிப்படையாகத் தெரியாததினால், அதுவே தைரியத்தை அதிகரிக்கும். சட்டென்று சமாளிக்கும் திறனையும் வளர்க்கும்.
இந்த “நிழல் சொல்வதை” (shadow speech) ஒவ்வொரு மாதமும் வேறு வழிகளில் அமைத்து வந்தேன். பாதி வார்த்தைகளைச் சொல்வது, மற்றவருக்கு முன் ஆரம்பிப்பது, வாயைத் திறந்து மிக நிதானமாக (slow motion) உச்சரிப்பது எனப் பல.
ரிஷி தன் அண்ணனுடன் வார விடுமுறைகளில் நாளிதழைச் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். இருவரின் உறவு வளர்ந்தது, மறுபடியும் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார்கள். விளையாடும் நேரங்களில் ரிஷியின் உச்சரிப்பு நன்றாகவே இருந்ததாக அவன் அண்ணன் தெரிவித்தான்.
ரிஷியின் அப்பாவுக்கு அவன் திக்குவது மிக அவமானமாக இருந்தது. அவருடைய எதிர்பார்ப்பினால் ரிஷிக்கு அழுத்தம் கூடி, திக்குவது அதிகமாகிறது என்று பல ஸெஷன்ஸிற்குப் பின் புரிந்துகொண்டார். அவர்களிடையே நிலவும் கசப்பு, வெறுப்புபற்றியும் கலந்துரையாடினோம். நிலைமையைச் சீர் செய்ய, (பேச்சே இல்லாமல் ஒருங்கிணைவதற்கு) அவர் ஊரில் இருக்கும் மாலைகளில் அரைமணி நேரம் சேர்ந்து சைக்கிள் செல்வதென்று ஆரம்பித்தோம். ஓர் அளவிற்கு இருவரும் சுமுகமாக ஆனதும், காய்-கனி வாங்க இருவரும் சேர்ந்துசெல்வது என்பதைக் கூட்டினேன். ஊரில் இருந்த நாட்களில் இதை எல்லாம் செய்யக் கொஞ்சம் பாசம் எட்டிப் பார்ப்பது தெரிந்தது.
வகுப்பிலும் மாணவரின் சுயமதிப்பை அதிகரிக்கும் விதங்களை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்தேன். முக்கியமாக, ரிஷியும் சரி, மற்ற மாணவர்களுக்கும் வகுப்பில் பேசக் கூடிய நிலையை உருவாக்குவதில் ஆசிரியர்களின் கவனம் தேவை. ரிஷியிடம், வகுப்பில் பதில் தர முன்வரச் சொன்னேன். முதல் மூன்று மாதங்களில் தெரியவில்லை என்று சொன்னவன் பின்பு சட்டென்று ஒரு வார்த்தை பதில் சொல்வான், முழுதாகச் சொல்ல ஏழு மாதங்கள் ஆயின. தன்னால் முடியும் என்பது புரியவர நேரமானது. தேவையானபோது உதவி கேட்க ஆரம்பித்தான்.
அவனுடைய வகுப்புத் தோழர்கள், பள்ளிக்கு வரும் therapist-டிடம் பேசி அறிந்து, ரிஷியிடம் வாய் அசைவு பயிற்சிகள் உதவலாம் என்று சொல்லி, செய்யப் பரிந்துரைகளைத் தந்தார்கள். இவை பொருந்துமா என்பது கேள்வி அல்ல. யார் இவனைக் கிண்டல் செய்தார்களோ, அவர்களே இப்போது இதைச் செய்தார்கள். அதான் வளரும் குழந்தைகளிடம் இருக்கும் சிறப்பு அம்சம். எடுத்துச் சொல்லிப் புரியவைத்தால், மாறிச் செயல் படுவார்கள்.
ரிஷியும் தான் செய்ய வேண்டியதை எல்லாம் முழுமையாகச் செய்துவந்தான். ஒரு நாள் திக்கியதும், அவன் பாட்டி வேதனைப்பட்டுக் கொண்டாள்: “என்னதான் பண்ணப் போரையோ” என்றதும், ரிஷி “ஏன் பாட்டி, நீ இவ்வளவு ஃபீல் ஆகிற? இப்போ நான் நல்லாப் படிக்கிறேன், ஒட்டப் பந்தய வீரன், கவிதை எழுதறேன், அப்புறம் என்ன குறைன்னு இவ்வளவு feeling?”