கவி காளமேகம் பாடல்கள்


Related image

 

காளமேகம் என்றால் சிலேடையும் வசைப் பாடல்களும் நமக்கு நினைவுக்கு வரும்.

அவரின் சிறப்புப் பாடல்கள் !

ஒன்று முதல் பதினெட்டு வரை அடைமொழி இன்றி ஒரு
வெண்பாவில் அமையப் பாடியது)

ஒன்றுஇரண்டு, மூன்றுநான்கு, ஐந்துஆறு, ஏழ்எட்டு
ஒன்பதுபத் துப்பதி னொன்று – பன்னிரண்டு பதின்
மூன்றுபதி னான்குபதி னைந்து
பதி னாறுபதி னேழ்பதி னெட்டு.

 

தமிழ்ப் புலவர்களின் வரிசையில் காளமேகம் ஒரு அற்புதமானவர்.
ஆசுகவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்), சிலேடை கவி (ஒரே பாடல் இரு பொருள்), நிந்தா ஸ்துதி கவி (வசை பாடுவது போல் இருக்கும் ஆனால்உட்பொருள் போற்றுவது இருக்கும்) போன்ற கவி வகைகளில் சிறந்து விளங்கியவர்.

தமிழின் “க’ என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
(கூகை – ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).
அதே போல ‘த’ எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார்.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை தின்னும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)

பாட வேண்டும் !தில்லைவேந்தன்

Image result for கவிதைகள் tamil
ஒப்பில்லா வண்மழையை,வானம் எங்கும்
     ஓடோடி விளையாடும் முகிலி னத்தை,
குப்பென்று பரவுகின்ற  பூம ணத்தை,
      குளிர்நிலவை, உடுநிரையை நெடும லையை,
உப்பைவிளை ஆழ்கடலை, அருவி, ஆற்றை
     ஒளிர்கதிரை, பயிர்வயலை, அடர்ந்த காட்டை,
செப்பழகு விண்வில்லை, செக்கர் வானைச்
      செவியினிக்கச்  செந்தமிழில்   பாட வேண்டும்
வருத்தத்தை,மகிழ்ச்சியினை,கடுஞ்சி னத்தை,
     மாறாத வெறுப்புணர்வை, அருளை,அன்பை,
ஒருத்தரையும் மதிக்காத ஆண வத்தை,
     உயர்வான பணிவதனை, பொறுமை,அச்சம்,
கருத்தில்லாத் தற்பெருமை, இரக்கம், வீரம்,
     காதலினை,நட்புறவை எல்லாம் எண்சீர்
விருத்தத்தில் வகையாகப் பாட வேண்டும்
     விந்தைமிகு மாந்தருளம் தேட  வேண்டும்
மானிடரின் வாழ்வினிலே இன்ப துன்பம்
     மாறிவரும் கலந்துவரும் தன்மை ஏனோ?
வானவர்கள் வகுத்திட்ட  வழியோ, அன்றி
     வல்வினையோ,செய்பலனோ இயற்கை தானோ ?
ஏனிவர்கள்  மரப்பாவைக் கூத்துப் பொம்மை
     இயங்குவதைப் போலாடி ஓய வேண்டும்?
நானிவற்றைப் பட்டறிவும்,கற்றுத் தேர்ந்த
     நல்லறிவும் துணைகொண்டு பாட வேண்டும் !
(செய்பலன் – கர்மபலன்/ பட்டறிவு – அனுபவம்)
 வெண்பாவில் விளையாடி விருத்தப் பாவில்
        விதவிதமாய்ச் சந்தங்கள்  அமைத்துக் கொண்டு
கண்பார்க்கும் அத்தனையும் மட்டும் இன்றிக்
          காணாத அவையனைத்தும் கற்ப னையால்
பண்பான செந்தமிழில் இனிமை தோன்ற
         பார்போற்ற , ஊர்போற்ற , நாடு போற்ற
மண்பால்நான் மாக்கவிதை  பாட  வேண்டும்.
          மாகாளி  சக்தியருள்  கூட   வேண்டும் !

சாகித்ய அகாடமி பரிசு 2018

 

சுனீல் கிருஷ்ணன் எழுதிய அம்புப்படுக்கை நூலுக்காக சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

அம்புப்படுக்கை  வெளியிட்டபோது யாவரும்.காம் நிகழ்வில்  சுனில் கிருஷ்ணன் பேசிய உரையின் காணொளி இங்கே!

(நன்றி: ஸ்ருதி டிவி )

 

 

கிருங்கை சேதுபதி எழுதிய சிறகு முளைத்த யானை என்ற கவிதைத் தொகுப்புக்கு பால் சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

குட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்

சீரியல் தரும் பாடம்..!

Related image

‘குழப்பங்களிலோ, சங்கடங்களிலோ உழன்றால் அந்த
அகிலாண்டேசுவரியையும், மகேசுவரனையும் மனதார
வேண்டிக் கொண்டால் குழப்பங்களும், சங்கடங்களும் ஓடிப்
போய்விடும். ‘தேவி போற்றி.. பெருமானே போற்றி..’ என்று
வேண்டிக் கொண்டால் ஓடோடி வந்து குறைதீர்ப்பார்கள்’
என்றார் குருஜி.

கேட்டுக் கொண்டிருந்த எனக்குப் புல்லரித்தது. பக்தகோடிகள் நிரம்பிய                                                                                                                                                          அந்த ஹாலே நிசப்தமாய் இருந்தது.

எனக்கு அடுத்த இருக்கையில் இருந்த என் சுட்டிப்பெண்
மிதிலா, ‘அப்பா, இந்த குருஜி சன் டி.வி.யில் ஏழு மணிக்கு
வர ‘விநாயகர்’ சீரியல் பார்க்கறதில்லைன்னு நினைக்கிறேன்.
அங்கே சிவபெருமானும், உமாதேவியும் அசுரர்கள் கொடுக்கிற
 நெருக்கடிகளாலும், குழப்பங்களாலும், சங்கடங்களாலும்
தவிக்கும் தவிப்பு இருக்கே.. அப்பப்பா.. அவர்களை நாமதான்                                                                                                                                                                   போய்க் காப்பாத்தணும் போலிருக்கு. அவர்களுக்கு
அவர்களுடைய பிராப்ளங்களையே தீர்க்க முடியலே..
நமக்கு ஹெல்ப் பண்ண வரப் போறாங்களா என்ன..?’
என்றாள் மெதுவாக.

பக்கத்திலிருந்த பார்வையாளர்கள் மிதிலாவின் பேச்சைக்
கேட்டு மெதுவாகச் சிரித்தனர்.

நான் சங்கடத்தோடு இருக்கையில் நெளிந்தேன்.

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்..:-

 

அப்பா : இன்னிக்கு சாயந்தரம் போய் அந்த பல் டாக்டர்கிட்டே                                                                                                                                                               பல்லைக் காட்டிட்டு ஆயிரம் ரூபாய்
அழுதுட்டு வரணும்..!

மகள் : என்னப்பா… இன்னும் புரியாம பேசிட்டிருக்கியே..
நம்மகிட்டே வேலை செய்யறவங்க பல் இளிச்சிட்டுத்
 தலையைச் சொறிந்தா நாமதானே காசு
கொடுக்கறோம். அதேமாதிரி டாக்டர்கிட்டே
நீ பல்லைக் காட்டினா அவர்தானே உனக்கப்
பணம் தரணும்.

 

மாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்

சென்னையில் சமீபத்தில்  இன்றைய எழுத்தாளர் திலகம் ஜெயமோகன் அவர்கள் இலக்கியத்துறையில் மாற்றங்கள் என்பதைப்பற்றிப் பேசிய பேச்சின் காணொளியைப் பார்த்துக் கேட்டு ரசிக்கலாம்.

 

நன்றி ஸ்ருதி டி‌வி

அஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்

Image may contain: 2 people, people sitting

தமிழ்த் திரையுலகு சாராயக் குப்பியுடன் பெண்கள் பின்னால் அலைந்துகொண்டு எதிரே வருபவர்களைப் பெருமையுடன் அரிவாளால் வெட்டிக் குவித்து சமூகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போது………. கவிதையாக ஒரு மராத்தி படம்.

ரேவதி நன்றாக இருக்கிறது என்று பதிவு போட்ட அன்றே மகனுடன் பார்க்க சமயமும் சந்தர்ப்பமும் கிடைத்தது.

கற்றுத் தேர்ந்த சம்ஸ்கிருத பண்டிதர் சக்ரபாணி சாஸ்திரி வயதான காலத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகிறார். மகள் கடையில் பொருள் வாங்கிவருவதற்குள் காரிலிருந்து இறங்கி மறைந்து விடுகிறார். குழந்தையாக மாறிவிடும் அவர் யானை மீதிருக்கும் ஆசையாலும், ஆச்சர்யத்தாலும் அதன் பின்னாடியே போய்விடுகிறார். அவரைத் தேடும் மகளின், மாப்பிள்ளையின் 24 மணி நேரப் பயணமே கதை.

ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு அழைத்துச் செல்லும் யானைப்பாகன் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் சங்கடத்தில் தவிக்கும் காட்சிகள், நினைவுகளில் பின்னோக்கி விரியும் காட்சிகள், அவை நிஜத்துடன் இணையும் இடம் அத்தனையும் முத்துமுத்தாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.

லைட்டிங், சினிமாடோகிராஃபி பிரமாதம். ஆற்றங்கரை, யானை குளிப்பது, கடைவீதி, கார் ரோட்டில் விரைவது அத்தனையும் அழகு அள்ளும் காட்சிகள். உருவகமாக படத்தில் அந்த இடத்தின் தன்மையை, உணர்வுகளை எடுத்துக்காட்டும்படி அமைக்கப்பட்ட விதம் மிகவும் ரசிக்கத் தக்கது. படிக்கட்டில் அமர்ந்தபடி வரும் சீன் உலகத்தரமானது. யானை அடியில் யானைப்பாகன் செய்வதறியாமல் அமர்ந்திருக்கும் சீன், கடைசியில் அப்பா கிடைத்தபின் தோன்றும் சலனமற்ற நிலையை வெளிப்படுத்தும் ஈரச்சாலையில் கார் விரையும் சீன் அனைத்தும் அருமை.

இசை! சுகம். தேவையான அளவு தேவையான இடத்தில் தேனான இசை. பாக்ரவுன்ட் ம்யூசிக்கும் சரி, இரண்டு மராத்தி பாடல்களும் சரி கதையோடு இணைந்து உங்கள் மனதைத் தொடுகிறது. ஜோஜோ மனக்கல்ல மாலிங்க தேவாயி…..என்ற வரியும் யானை மணியோசையும் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

தன் யானைப் பயணத்தில் பெரியவர் உதிர்க்கும் தத்வார்த்தமான சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் காட்சியோடு சேர்ந்து நம்மை ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது. மெல்லிய காற்று நம்மை வருடுகிறது. லேசாக உணர்கிறோம். என்ன அருமையான மேற்கோள்கள்! கொஞ்சமாக இதோ….

Truth always emerges from awareness

Yagnyavalkya are you in search of food or knowledge?

God has sent him to you. You didnt call him
How he came he would go back

How much is he yours, how much a stranger
You come alone and go alone

Compassion the essence of humanity, the nectar the brahman

Who takes just enough to survive… he is a saint

I see myself as nothing but you glorious sun..

நடிப்போ பாராட்டி முடியாது. பெரியவரா, பெண்ணா, மாப்பிள்ளையா, யானைப் பாகனா, அவன் மனைவியா யார் சிறந்த நடிகர் என அசந்தே போகுமளவு ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பு. பெரியவர் சுவாதீனத்திலிருக்கும்போது கம்பீரம், தெளிவு – குழந்தையாகும்போது பயம், ஆர்வம், இன்னசன்ஸ் என்று அசத்துகிறார். யானைப்பாகனுக்கு சங்கடமான சூழ்நிலையை வெளிப்படுத்தும் ஒரு காட்சி போதும் நம் மனதில் இடம்பிடிக்க. அவன் மனைவியோ….அது நடித்த பாத்திரமா என்ன? அவளே அல்லவோ? கடைசியில் அம்மா என்று அவர் அழைக்கும் ஒரு தருணத்தில் அவர் முக பாவம்..அடேயப்பா. மகளாக நடித்தவரின் அழுத்தமான நடிப்பு படத்தில் மிகமுக்கியமானது.

காட்சிகளா? லைட்டிங்கா? நடிப்பா? வசனமா? எதையென்று சொல்வது. அனைத்தும் சிறப்பு. இது படமல்ல அம்மா…அனுபவம் என்கிறான் என் மகன்.

இன்று அப்பாவுடனும், இரண்டு மகன்களுடனும் மீண்டும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மூன்று ஜெனரேஷனும் ரசித்து, நெகிழ்ந்து, டிஸ்கஸ் செய்தபடி பார்த்தோம். பதினான்கு வயது மகனும் ஆர்வத்தோடு பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது. அஸ்து!

மிச்சத்தை மீட்போம் !- பூ.சுப்ரமணியன்

Image result for மீட்போம்

உலகில் அதர்மங்கள்

உச்சத்தை தொடுவதற்கு முன்

‘அச்சமில்லை அச்சமில்லை’

உச்சஸ்தாயில் குரல் கொடுத்த

பாரதியின் வீர வரிகளை

மனதில் இருத்தி

மிச்சமிருக்கும்

மனிதநேயம் மீட்போம் !

 

‘ கடை விரித்தேன்

கொள்வார் யாருமில்லை ‘

கலங்கிய வள்ளலார்

உள்ளம் மகிழ

மிச்சமிருக்கும்

உயிர் இரக்கம் மீட்போம் !

 

கல்விக்கூடங்களில்

காமக்களியாட்டம் ஆடும்

கொடூர ஆசிரியர்ளை

கடுமையாக தண்டித்து

மிச்சமிருக்கும்

பண்பாட்டை மீட்போம் !

 

விளைநிலங்களை

வீடுகளாக மாற்றும்

விவசாயி பெருமக்களிடம்

விழிப்புணர்வு ஏற்படுத்தி

மிச்சமிருக்கும்

விளைநிலங்களை மீட்போம் !

 

 

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து

Image result for சிறுகதை

படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்

பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

கொடுத்த வேலையை முடிப்பது சேட்டம்

குடிசைத் தொழிலுக்கு வேணும் நாட்டம்

 

உள்ளூரில் விலை போகாத மாட்டுக்கெல்லாம் கொம்பு சீவி பெயின்ட் அடிச்சுக் கொஞ்சம் தள்ளியிருக்கிற ஊரில் சந்தையில் விற்றுவிடுவார்கள் என்று சொல்வார்கள். அந்த ஊரில்போய் அந்த மாடு பேந்தப்பேந்த விழிக்குமா என்று தெரியவில்லை.

மேலே சொன்ன பாடலில் சொல்லப்பட்டதுபோல் பலபேர் நோட்டம் விடும் படித்த வேலை கிடைத்துவிட்டது. வெளியூராக இருந்தால் என்ன?

புதியதாக ஒரு ஊர். முன்பின் அறியாத மக்கள். பதினெட்டு வயது என்பது வளர்ந்த சிறுவனா, வளர இருக்கும் இளைஞனா?  அப்பா ஒரு பஸ்ஸிலும் நான் ஒரு பஸ்ஸிலும் ஏறிக்கொண்டோம். முதலில் அவர் பஸ்தான்புறப்படவேண்டும். என்ன நினைத்தாரோ தெரியவில்லை . அவர் இறங்கிவிட்டார். என் பஸ் போகும்வரை காத்திருந்துவிட்டுப் போனார். அடுத்த பஸ்ஸில் ஏறி இருப்பார்.

அந்த சில நிமிடங்கள் மனதில் அதுவரை அனுபவித்திருக்காத உணர்வு. என்னவோ நாடு கடந்து திரும்பவே வரமுடியாத இடத்திற்குப் போகவில்லை. ஒரு வாரத்தில் திரும்பவும் சந்திக்கப் போகிறோம். பெரும்பாலான  ஹிந்திப் படங்களில் தங்கை திருமணமாகிப் புகுந்தவீடு போவாள். அதை பிதாயி… விதாயி… ஏதோ ஒன்று சொல்வார்கள். பின்னணியில் ஒரு பாட்டும் ஒலிக்கும் . அப்போது அண்ணன்காரன் கண் முழுவதும் சோகத்தோடும் உதட்டில் போலிப் புன்னகையோடும் காட்சி அளிப்பான்.  இந்தக் காட்சியில் நடிக்காத நடிகர்களும் இல்லை என்றும், அதில் சோடை போகாதவர்கள்தான் சினிமாவில் நிலைத்து நிற்பார்கள் என்றும் பின்னாளில் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்

வெளியூர் போகும் மாடோ , புகுந்தவீடு போகும் பெண்ணோ இல்லாவிட்டாலும் நான் எனது கண்களாலேயே உலகைப் பார்க்க ஒரு தேவை மற்றும் வாய்ப்பு. ஒரு குறிப்பிட்ட வயதுவரை தாத்தா பாட்டி சொன்னதுதான் வேதவாக்கு. சுடுதண்ணியில் குளிக்கணுமா, இல்ல குளத்துக்குப் போகணுமா என்புது முதல் அவர்கள்தான் வழி நடத்துவார்கள். அப்புறம் அம்மா. இதைச்செய் அதைச் செய்யாதே என்று எப்போதும் கட்டளைகள்.  அப்பா அதிகம் என் விஷயங்களில் தலையிட்டதாக நினைவு இல்லை. அப்புறம் அண்ணன். முக்கியமாக அவன் நண்பர்கள் கூட இருந்தால் என் மீது அவனுக்கு ஏதோ அதிகாரம் இருப்பதுபோல் காண்பித்துக் கொள்வான். ஒரு வகையில் பார்த்தால் எனது அரட்டை நண்பர்கள் சொல்லும் வழியில்தான்  நான் நடந்திருக்கிறேன். – இவை அன்றைய நினைவோட்டம் அல்ல. திரும்பிப் பார்க்கும்போது தோன்றியவை.

முன்னேற்பாடாக அப்பா ஒரு ஜமக்காளமும் ஒரு காற்றுத் தலையணையும் கொண்டுவந்திருந்தார். இருக்க அறையும் தயார். இரவு தூங்கிவிடலாம். காலை காபி, குளியல் எல்லாம் பின்னால் யோசித்துக்கொள்ளலாம். குளம் ஒன்று பார்த்திருந்தேன்.. குளியல் பிரச்சினை இருக்காது என்று எண்ணம்.

ஊருக்கு வந்து, ஏற்பாடு செய்திருந்த அறைக்குப் போனேன். அது ஒரு ஓட்டு வீட்டின் முன்னறை. பூட்டாமல்தான் வைத்திருந்தார்கள். கதவைத் திறந்து விளக்கைப் போட்டால் ஒரு ஆச்சரியம். பாய், தலையணை, போர்வை ஒரு மண் கூஜாவில் தண்ணீரும் டம்பளரும். வீட்டுக்காரரின் முன்யோசனையும் கரிசனமும் மனதிற்கு இதமாக இருந்தது.

புத்தகம்,  கரும்பலகை, பிரம்பு ஆகியவற்றோடு ஒரு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடமாக இல்லாத, நான் கற்ற முதல் பாடம் இது.   பிற்காலத்திலும்  என் வீட்டிற்கு வந்து தங்குகிறவர்கள் குறைவு.  அவர்களுக்கு என்னனென்ன தேவைகள் இருக்கக்கூடும் என்று யோசித்து ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்த இந்த அனுபவம்தான் காரணம்.

முதல்நாள் அலுவலில் நான் ஒன்றும் செய்யவேண்டியிருக்கவில்லை. அலுவலகத்திலிருந்த ஆறு பேர் அறிமுகம். ஒரு பதிவேட்டில் எனது விவரங்கள் பதிவு செய்வது இரண்டும் முடிந்தது. கனகேசன் என்பவர் செய்து வந்த வேலைகளை எனக்குக் கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்கள்.  அவரருகில் ஒரு நாற்காலி போட்டு அமரச் செய்துவிட்டர்கள். ஒவ்வொரு வேலையைச் செய்யும்போதும்,  என்ன செய்யவேண்டும் என்றும், எதற்காக அது தேவைப்படுகிறது என்றும் விளக்கிக்கொண்டே கனகேசன் வேலைகளை செய்துவந்தார். புரிந்ததுபோலத்தான் இருந்தது.

மாலை நாலுமணி இருக்கும். கனகேசன் என்னை அவரது இருக்கையில் அமரச் சொல்லி , எதிரில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். முதல் பதிவினை நான் செய்வதை அக்கறையோடு கவனித்தார்.

“வேலைக்குச் சேர நாள் பார்க்கலியா?” என்று கேட்டார்.

நான் இல்லை என்று தலையசைத்தேன்.

“இன்னிக்கு மூணு மணி வரை நவமி. நாளைக்குச் செவ்வாய்க்கிழமை, அதுதான் நவமி போனதும் உங்களை வேலையைத் தொடங்கச் சொன்னேன்.”  என்றார்.

எனக்கு நாள் கோள் என்பதைப்பற்றிய நம்பிக்கை இருந்ததா என்பதைவிட அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான் உண்மை. நான் வேலைக்குச் சேர நாள் பார்க்கவேண்டும் என்று  என் பெற்றோர்களும் யோசித்ததாகத் தெரியவில்லை.  அடுத்த வாரம் ஊருக்குப் போனபோது, அப்பாவைக் கேட்டேன்.

“இல்லைடா.. உன்னை திங்கட்கிழமை சேரச்சொல்லி ஆர்டர் வந்துவிட்டது. நாள் என்று பார்க்க ஆரம்பித்தால், யாரவது ஏதாவது சொல்லி, அதை நாம் கேட்கவில்லை என்றால் அது உறுத்திக்கொண்டே இருக்கும். எந்தப் பிரச்சினை வந்தாலும் பழியை ராகு , சந்திரன் மேல போடத் தோணும். இப்பப் பிரச்சினை இல்லை பார்.” என்றார்.

எப்படியோ, அப்பாவினுடைய பிராக்டிகல் அபிப்பிராயத்தாலோ, கனகேசன் சித்தப்படி நவமி – செவ்வாய்க்கிழமை தவிர்த்ததினாலோ நாற்பது வருடங்களுக்குமேல் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வும் பெற்றுவிட்டேன். இந்த ஜாதகம், நேரம், காலம் இதற்கெல்லாம் பின்னால் வருவோம்.

தினம் காலையில் வீட்டிற்கே காப்பி வந்துவிடும். குளத்தில்  குளித்துவிட்டு வந்து, சுவற்றில் மாட்டியிருக்கும் சாமி படத்திற்கு ஒரு கும்பிடு போட்டு, உடைமாற்றி ஆபீசுக்குப் போகும் வழியில் அந்த சிறிய ஹோட்டலில் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொள்வேன். மதிய சாப்பாடு ஆபீசுக்கே வந்துவிடும். இரவு ஹோட்டலுக்கே நேரில் சென்று ஆகாரம். அந்த சிறிய ஹோட்டலை அங்கு பலகாரக் கடை என்று சொல்வார்கள். மாதம் பிறந்ததும் கணக்கு சொல்வார் ஹோட்டல்காரர். இப்படியாக ஏற்பாடு வசதியாகத்தான் இருந்தது.

சனிக்கிழமைகளில் பாதிநாள் வேலை.. மதியமே பஸ் பிடித்து அந்த மாவட்டத் தலைநகர் சென்று பஸ் மாறி வீட்டுக்குப் போய்விடுவேன். மீண்டும் திங்களன்று காலையில் வீட்டை விட்டுக் கிளம்பி மீண்டும் பஸ் மாறி அலுவலகம் நேரே வந்துவிடுவேன். இதுதான் ரொடீன்.

கனகேசன் பார்த்துவந்த பணிகளை எனக்குக் கொடுத்துவிட்டு அவர் மேற்பார்வையாளர் போன்ற வேலைகளைச் செய்துவந்தார். எல்லாக் கோப்புகளும் பதிவேடுகளும் அவர் மூலமாகத்தான் கிளை நிர்வாகி சேஷையன் சாருக்குப் போகும். சேஷையன் தவிர எல்லோருக்கும் உதவியாளர் என்கிற ஒரே பதவி. அதில் கனகேசன் எல்லோருக்கும் சீனியர். அவர் செய்துவந்த வேலைகளை நேரடியாகப் புதிதாக வந்த எனக்குக் கொடுத்ததில்தான்  ரமேஷ்பாபுவிற்கு வருத்தம். ஒரு சீனியரின் சீட்டை புது ஆளுக்குக் கொடுப்பது மற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று எண்ணம். (அந்த ரமேஷ்பாபுதான் நான் சேர்ந்த அன்று என்னை விரோதமாகப் பார்த்த இளைஞர்.)

அடுத்த செட் பிரமோஷனில் கனகேசனுக்கு பிரமோஷன் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். பிரமோஷன் என்று ஒன்று வரும்வரை சீனியாரிட்டி  பிரகாரம் ஒவ்வோருவருக்கும் வேலைகளைக் கொடுக்கவேண்டும். முறைப்படி கனகேசன் சீட்டிற்கு அவருக்கு அடுத்த சீனியர் போயிருக்க வேண்டும் என்பது ரமேஷ்பாபுவின் வாதம். எல்லாரும் ஒரே கேடர்தானே?  உழக்கில் என்ன கிழக்கு மேற்கு என்று சேஷையன் ரமேஷ்பாபுவின்  யோசனையை நிராகரித்து விட்டாராம். அதனால், இந்த தேவையற்ற விவாதத்தில் என்மீது ரமேஷ்பாபுவிற்குக் கோபம். ஆனால் அது நீடிக்கவில்ல. ஒரே வாரத்தில் சகஜமாகப் பழகிக்கொள்ளத் தொடங்கிவிட்டோம்.

 

ஆபீஸ் என்று ஒன்பது மணிநேரம் கழிந்துவிடுகிறது. ஊரில் உள்ள டெண்ட் கொட்டகையில் வாரத்திற்கு இரண்டு படமாவது மாறும். அதில் இரண்டு மாலைப் பொழுதுகள் கடந்துவிடும். சில நாள் காலார நடந்துவிட்டுத் திரும்புவேன்.  எதிர்ப்படும் தெரிந்தவர் ஏதேனும் அரைகுறைக் கேள்விகளைக் கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போய்விடுவார்கள். ஒருநாள் எதிரே வந்த ஒருவர் “என்ன சார், வடக்கே போகிறீர்களா?”என்று கேட்டார். சூரியன் அஸ்தமனம் ஆகவில்லை. கிழக்குப் பக்கம் மானசீகமாகத் திரும்பிக் கைளையும் மானசீகமாக நீட்டி, திசையைக் கண்டுபிடித்து , “ஆமாம்” என்றேன். அவர் “ சரி போயிட்டு வாங்க “  என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அந்த ஊர் பெரும்பாலும் விவசாயக் குடும்பங்கள் கொண்டது. எங்கள் அலுவலகம் தவிர ஒரு டவுன் பஞ்சாயத்து ஆபீஸ், பி.ஹெச். சி. என்று சொல்லப்படுகிற ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், மாட்டாஸ்பத்திரி என்று குறிப்பிடப்படும்  ஒரு கால்நடை உதவி நிலையம், எட்டாம் வகுப்புவரை உள்ள ஒரு  பள்ளி, ஒரு கூட்டுறவு சொசைட்டி , ஒரு கிளை நூலகம்  ஆகியவை இருந்தன. இவற்றில் வேலை பார்பவர்கள் (எங்களையும் சேர்த்து) மொத்தம் ஒரு ஐம்பது பேர் தேறும். அதில் பெரும்பாலானவர்கள் பக்கத்து ஊர்களில் இருந்து வருபவர்கள்தான்.  ஐந்தாறுபேர் மட்டுமே உள்ளூரில் தங்கி இருந்தோம்.

ஒரு நாள் குளக்கரையில் அந்த நூலகர் என்னைப் பார்த்தார். “புதிதாக நம்ப கிராமத்திற்கு வேலைக்கு வந்திருக்கீங்க. ஒரு நாள் நூலகம் பக்கம் எட்டிப் பாருங்களேன்” என்று சொன்னார். நானும் எட்டிப் பார்க்கப்போனேன். பூட்டியிருந்தது.

“சார். இன்னிக்கு வெள்ளிக்கிழமை” என்று குரல் வந்தது. எதிர் வீட்டுக்காரர். சம்பந்தமில்லாமல் கேள்விகள் மட்டும் கேட்கமாட்டார்கள் போலிருக்கிறது. இது போல ஒரு ஸ்டேட்மெண்டும் விடுவார்கள் போலும் என்று தோன்றியது. நான் விழித்தேன். தொடர்ந்து,”வார விடுமறை” என்றார். குழப்பம் தீர்ந்தது.

Related image

அடுத்த வாரம், வெள்ளிக்கிழமை அல்லாத ஒரு நாள் மீண்டும் போனேன். ஒரே ஆச்சரியம். அந்த ஊரின் மக்கள் தொகையைக்  கணக்கில் கொண்டால் ஏராளமான புத்தகங்கள். பருவ இதழ் பிரிவு என்று போட்டிருந்த சிறு அறையில் ஒரு பெஞ்சில் பல நாள் மற்றும் வார இதழ்கள் கிடக்க அரை டஜன் பேர் ஏதாவது படித்துக் கொண்டிருந்தார்கள்.

நூலகரைப் பார்த்தேன். உட்காரச் சொல்லி ஒரு படிவம் கொடுத்தார். சொற்பத் தொகையினை சந்தாவாக வாங்கிக்கொண்டு, மூன்று புத்தகங்கள் படிப்பதற்கு எடுத்துப் போகலாம் என்றார். .

எங்கே பார்த்தாலும் புத்தகங்கள். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நீள மேஜைக்கு அருகிலிருந்த பெட்டியில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. திரும்பி வந்த புத்தகங்கள். சரியான இடத்திற்குப் போக வேண்டியவை. அதிலிருந்தே மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். புத்தகம் படிக்கத் தொடங்கிய கதை இதுதான்.

புதிய ஊரில் புதிய நபர்கள்  மத்தியில் பிரச்சனை ஏதும் இன்றி நாட்கள் நகர்ந்தன

 

 

…… இன்னும் வரும்

கடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்

dr1

Related image

ஞாயிறு போற்றுதும்!

ஞாயிறு காலையிலேயே காலிங் பெல் அடித்தது.

‘சண்டே, காலை கொஞ்சம் சோம்பலாய்த் தூங்கலாம்னா, விடமாட்டாங்களே’ – கண்ணைச் சுருக்கி எதிரே கடிகாரத்தைப் பார்த்தேன். காலை மணி 5.55. வந்த கொட்டாவியைக் கையால் மறைத்தபடி, கதவைத் திறந்தேன்.

 ’குட் மார்னிங். ஞாயிற்றுக் கிழமையும் சீக்கிரமா வெளீல போய்டப் போறயேன்னு, எழுந்த உடனேயே வந்தேன்!’ சிரித்தபடி ஜிப்பாவில் நண்பன்.

‘குட் மார்னிங்’ – அரைசிரிப்புடன் கதவைத் திறந்து, சோபாவைக் காட்டினேன் – கையில் கொண்டு வந்திருந்த நியூஸ் பேப்பரைப் (என் வீட்டு வாசலில் கிடந்ததுதான்!) பிரித்தவாறே ‘நான் வெயிட் பண்றேன்’ என்று பல் தேய்க்க எனக்கு பெர்மிஷன் கொடுத்தான்!

இப்படித்தான், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், எதிர்பாராமல், வார நாட்களை விட ’பிசி’யாகி விடும்!  ஓய்வில்லாமல் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக வேலை செய்வதைப்போன்ற உணர்வு வந்து சோர்வைத்தரும்!

சனிக்கிழமை காலையிலேயே (அரை நாள், முழுநாள் வேலை இருந்தாலும், வாரத்தின் கடைசி  வேலை நாள் என்பதால்!) ஹாலிடே மூட் வந்துவிடும். இப்போதெல்லாம், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலையே “வீக் எண்ட்” சிண்ட்ரோம் பிடித்துக்கொண்டு விடுகிறது ! அத்துடன் வெள்ளிக்கிழமையோ, திங்கட்கிழமையோ விடுமுறையானால், ’லாங்க்’ வீக் எண்ட் – ரயில், பஸ்களில் ஒரு அவசரத்துக்குக்கூட இடம் கிடைக்காது!

சிலருக்கு, சண்டே செய்வதற்கென்றே சில கடமைகள் இருக்கின்றன – துணிகளையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும், புத்தக அலமாரியைச் சரி செய்து, அடுக்கி வைக்கவேண்டும், அங்கங்கே இறைந்துகிடக்கும் பொருட்களை எடுத்து வைக்கவேண்டும் (ஒரு வாரமாய்த் தேடிக்கொண்டிருந்த ஸ்டேப்ளரோ, பால்(B) பேனாவோ கண்ணில்படும் அதிர்ஷ்டம் இருக்கிறது!), மதியம் கொஞ்சம் தூங்க வேண்டும் (பகலில் தூங்குவது கெடுதல் என்றாலும் ஞாயிறு பகல் மட்டும் விதி விலக்கு – வார நாட்களில் ஆபீசில் பகலில் தூங்குவது இவ்விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது!) – இப்படிப் பல திட்டங்கள் இருந்தாலும், ஒன்றும் நிறைவேறாமல், ‘சட்’டென வழுக்கி ஓடி விடும் சண்டேக்களே அதிகம்! அன்று மட்டும் கடிகாரம் டபுள் ஸ்பீடில் ஓடுமோ தெரியாது!

இரண்டு மூன்று வேலைகள் வரிசைகட்டி நிற்கும்போது, எதை முதலில் செய்வது, எங்கே தொடங்குவது என்ற யோசனையிலேயே, ஞாயிறு முழுவதும் தீர்ந்து விடுவதும் உண்டு!

அறுபது, எழுபதுகளில் – பள்ளிக்கூட நாட்களில் – ஞாயிறு அவ்வளவாக ரசிக்காது – வார நாட்களில் பள்ளிக்கூடத்தின் கொட்டங்கள் ருசிகரமானவை!

கல்லூரி நாட்களில், பையில் சில்லரை தேறாது; இருந்தாலும் நண்பர்களுடன் கூட்டமாக ஊர் சுற்றுவதில் சிக்கல்கள் இல்லை!

பையில் பத்து ரூபாய் இருந்தால் போதும், அந்த நாளைய சண்டே, ”ஸ்பெஷல்”தான்!  காலை பாண்டிபசார் சாந்தா பவனில் ஒரு டிபன் – தக்காளி சட்னியுடன்! இரண்டு ரூபாய்க்குள் காபியுடன் நல்ல டிபன் கிடைத்த காலம் அது!!  பஸ்ஸில் ஸ்டேஜுக்கு 4 பைசா வீதம் ஒரு ரூபாயில் மெட்ராஸைச் சுற்றி வரலாம்! ஃப்ரெண்ட்ஸ் வீடு, அரட்டை, பின்னர் லஞ்ச் (3 ரூபாய்க்கு நல்ல சாப்பாடு எல்லா மெஸ் / ஓட்டல்களிலும் கிடைக்கும்!) – சாந்தி தியேட்டர் மாதிரி பெரிய தியேட்டரில் மாட்டினீ ஷோ (ரூ1-75 க்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட்!), மாலை மெரீனாவில் இலவசக் காற்று ( சுண்டலுக்குக் காசு இருக்கும்!), மோர் சாதம் சாப்பிட வீட்டுக்கு வந்து விடலாம்!

இப்போதெல்லாம் சண்டேஸ் மிகவும் பிஸி – ஏதாவதொரு கூட்டம், ஒரு விழா, ஒரு சினிமா, ஏதாவதொரு ஓட்டலில் டின்னர் என வீடுகளில் சமையலுக்கும் விடுமுறை – வேண்டியதுதான்.

காலையில் சர்ச்சுகளிலும் / கோயில்களிலும் விசேஷக் கூட்டங்கள்! எல்லா கடவுளும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரொம்ப பிசி – ஓவர்டைம் செய்து அருள்பாலிக்கும் சூழ்நிலை!

வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியில், எதைக் காண்பித்தாலும், பார்த்தே தீருவது என்ற சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள், சினிமா விருது வழங்கும் விழா, சிறந்த குத்தாட்டப் போட்டி, இசைப்  போட்டி, முன்னமேயே முடிவு செய்த விவாதங்கள், வந்து போனது தெரியாத திரைப்படங்கள், வெந்தும் வேகாத சமையற் குறிப்பு நிகழ்ச்சிகள், காமெடி என்ற பெயரில் அழவைத்து வேடிக்கை பார்க்கும் துணுக்குகள்  என எதையாவது பார்த்துத் தொலைக்கும் சண்டேக்கள் !

கிரிக்கெட், ஃபுட் பால் என மேட்ச் இருந்து விட்டால் அந்த சண்டே தெருவில் ஈயாடும்!

காபி கொடுத்து, அவன் கொடுத்த இன்விடேஷனை இன்முகத்துடன் பெற்றுக்கொண்டு நண்பனை அனுப்பி வைத்தேன். மூன்று வாரமாக என்ன எழுதுவது என்று தெரியாமல், கடைசி நாள் வரை (அது நேற்றே போய்விட்டது!) திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல முழித்துக்கொண்டிருந்தேன் –

கலைந்து கிடக்கும் புத்தகங்களும், துணிகளும், சிடிக்களும் என்னை பயமுறுத்தின –

பேப்பர்க்காரன், பால்காரன்(ரி), ஜுரத்துடன் வாட்ச்மேன், தர்மம் கேட்டு மாரியம்மன் கோயில் திருவிழா பக்தர், ஃப்ரிஜ் மெகானிக் – தொடர்ந்து அடித்த காலிங் பெல்லைக் கழற்றி எறிந்து விடலாமா என்று நினைத்த வேளையில்,

செல் போன் அடித்தது –  “ஃப்ரீயா இருக்கியா? இப்போ வரலாமா? ஒரு அவசரம்” – வேறொரு நண்பர்.

என்ன சொல்வது நான்?