டாக்டர் ஜெ பாஸ்கர் அவர்களின் ” அது ஒரு கனாக் காலம் ” என்ற புத்தகம் ஜூலை 30 ஆம் தேதி சவேரா ஹோட்டலில் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. திருப்பூர் கிருஷ்ணன், ஜெ பாலகிருஷ்ணன், கிரிஜா ராகவன், அழகியசிங்கர் , ரவி தமிழ்வாணன், லோகேந்திரலிங்கம் போன்ற பிரமுகர்கள் கலந்துகொண்டு நூலையும் ஆசிரியரையும்பற்றி பாராட்டுரை நிகழ்த்தினர்.
சிறுகதை, குறுநாவல், தொடர்கதை, நாவல், கவிதை என ஒரு மொழிக்கு அணி சேர்க்கும் பல வடிவங்கள் காலப்போக்கில் இலக்கிய அந்தஸ்து
எனும் மேடையேறுகின்றன. சுயசரிதம் என்பது கிட்டத்தட்ட கட்டுரை வகை சார்ந்து சுவராஸ்யங்கள், போராட்டங்கள்,வெற்றிதோல்விகள் விவாதித்து அதை எழுதுபவரின் சாதனைப்புகழ் உள்ளடக்கியே பிரபலத்துவம் அடைகின்றன.
தன்வாழ்வில் தன் சிறுவயதில் சந்தித்த நிகழ்வுகள், ஊர் வாசத்தின் மண்வாசனை, வளர வளர வாழ்க்கை தன் இடநகர்த்துதலில் உருவாக்கித்தரும் இட, மனித,குண, சூழல் மாற்றங்கள் தனக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களை நினைவணைகளில் தேக்கிவைத்து அதை வாசக/ரசிக வயல் நீர்ப்பாசன வசதிகளுக்காக மதகு மதகுகளாய் திறந்துவிட்டு நமக்குள்ளும் அந்த நினைவலைகளை அதே பசுமைப்பொசிவு மாறாமல் அனுபவக் கட்டுரைகளாக கடத்தும் எழுத்தாளுமை கொண்ட படைப்புகள் மிகச்சிலவே..!
இந்த இரண்டாவது வகை எழுத்துக்களில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் சம்பவங்களையும் மனிதர்களையும் முன்னிறுத்தி தன்னை ஒரு பார்வையாளனாக மட்டுமே பாவித்து அதன் போக்கிலேயே பயணித்து முடிவில் ஒரு அனுபவ சிலாகிப்பை முத்தாய்ப்பாக்கி அதை சுவாரஸ்யமாகவும் “அட எனக்கும் இப்படி நடந்திருக்கே”என அங்கங்கே காணும் வாழ்க்கைப்பொதுநிலை சம்பவங்களில் நம்மையும் ஐக்கியப்படுத்தி உணரவைப்பதை எழுத்து மூலம் பிரதிபலிக்கச்செய்வதும் கொஞ்சம் அரியவகை எழுத்துநிலை எனலாம்.
அந்தவகையில்தான் வருகிறது அது ஒரு கனாக்காலம். டாக்டர் ஜெ..பாஸ்கரனின் வாழ்நிலைசார் அனுபவங்களின் சாரம் ததும்பும் கட்டுரைத்தொகுப்பு.
அப்பாவின் டைப்ரைட்டர், தேடல்,வரிசையில் ஹாட்ரிக் அடித்து மணிமேகலை பிரசுரம் வெளியீடு செய்கிற மூன்றாவது நூல் இது.
அரஸின் காரிகேச்சரில் ஆசிரியர் புன்முறுவலாக நம்மை நூலுக்குள் வாசிப்பு அனுபவத்திற்கு வரவேற்கிறார்.
பேராசிரியர் வ.வே.சு அவர்களின் அணிந்துரை ஒரு அனுபவ தரிசனத்தை அடர்த்தியான சாராம்சத்துடன் ஆத்மார்த்தமாக சொல்கிறது..கூடவே கட்டுரை அனைத்தையும் வாசிக்கவைத்து மறுபடி ஒரு முறை அணிந்துரை வாசிக்கவைத்து வியக்கவைக்கிறது. பேராசிரியரின் ஞான தீட்சண்யம் அணிந்துரையின் நூல் அலசலில் தெளிவாவது தனியான ஒரு சிலாகிப்பு அனுபவமும்கூட..!
திருமதி கிரிஜா ராகவன் லேடீஸ் ஸ்பெஷலில் வெளியிட்ட கட்டுரைத்தொகுப்புகளின் புத்தக வடிவத்திற்கு அணிந்துரை அளித்திருக்கிறார். நறுவிசான எழுத்துக்களால் ஆசிரியரை வாழ்த்தி இருப்பதும் சில கட்டுரைகளை முன்னிறுத்தி பாராட்டியிருப்பதிலும் இருவருடைய தனித்தன்மையும் சிறப்பும் மிளிர்வது நூலின் தரத்திற்கு உரம்.
அப்பாவின் ஐயப்பசாமி பக்தி தரிசனத்தின் துவக்கத்தில் துவங்குகிறது நூல். படித்தபள்ளி, கும்பிட்ட கோயில்பற்றிய குறிப்பு அடுத்துவர..
மூன்றாவதாய் பொங்கலோ பொங்கல் நூலின் மிக முக்கிய பதிவு. பொங்கல் பண்டிகையின் எல்லா எல்லைகளையும் முழுவீச்சில் சுவாரஸ்யமாய் விவரிக்கின்ற பதிவு. அன்றும் இன்றும் எனப் பார்க்கப்படுகிற analysis பார்வை ஆசிரியரின் எழுத்து வன்மைக்குச் சான்று..! டூரிங் டாக்கீஸ் நினைவுகளும் சைக்கிள் காலம் பதிவும் என்னை பின்னோக்கி பயணிக்க வைத்த அனுபவச்சுவைச்சிதர்..(எங்க ஊர் ஜெய்லானி டாக்கீஸ் அச்சு அசல் அப்படியேதான்..!)
பிறந்த சிதம்பரம், இருக்கிற மெட்ராஸ்பற்றி சொல்லிவிட்டு, பிடித்த நடிகைகள் குறித்து தாவியது மாறுதல் ட்ராக் டிரண்ட்..!
வீடு, பள்ளி, தெரு, ஊர், கனவுக்கன்னிகள் (நடிகைகள்தான் ஸ்வாமி..!) பிறகு பஜ்ஜி மகாத்மியம் என ருசித்த உணவுவகையையும் விட்டு வைக்கவில்லை டாக்டர் பாஸ்கரனின் எழுத்து வல்லமை..! வாழைப்பூ வடை, அடை ஆராய்ச்சியும் என்போல் சாப்பாட்டு ராமன்களின் சிறு பசிக்கும்
பெருந்தீனி தரும் சுவையான எழுத்துரகம்..!
தனக்கே உரிய வித்யாச பார்வை பாணியில் லண்டன் படிப்பு காலத்தையும் துபாய் பயணவாசத்தையும் பார்த்துப் பார்த்தப் பதிவு செய்திருக்கிறார்..
கிராமம் வளர்த்த சிறார்பருவ விளையாட்டின் பிரதான அங்கமான பம்பரத்தின் நினைவுகளையும் சுண்டிவிட்டிருக்கிறார் சுவாரஸ்யம் குறையாமல்..!
முப்பத்திரண்டு கட்டுரைகள்..தான் கடந்து வந்த பாதை மற்றும் வாழ்க்கையைப்பற்றி முன்பு சொன்னதுபோல தன்னை முன்னிறுத்தாமல் சூழலை, மனிதர்களை கலப்பு ஏதும் செய்யாமல் ஆனால் கலகலப்பாய் உணரவைக்கும் பதிவுகள்.
பெரும்பாலான கட்டுரைகள் லேடீஸ் ஸ்பெஷலில் இதே தலைப்பில் தொடராக வெளிவந்து வாசக வரவேற்பை பெருமளவில் ஈர்த்திருப்பது பின்னூட்ட வாசகர்கள் கடிதங்களில் நிதர்சனமாகத் தெரிகிறது..!
எழுத்து தவம்.. எழுதுகோல் தெய்வம். என்று முழு அர்ப்பணிப்புடன் எழுத்துலகில் வெற்றிகரமாய் இயங்குபவர்கள் இவரைப்போன்ற வெகு சிலரே என்பது முழுமைத்தன்மை உள்ளடக்கிய இவரெழுத்தில் இந்த நூலில் பரவலாக உணரமுடிகிறது..!
அணிந்துரையில் முனைவர் வ வே சு அவர்கள் குறிப்பிட்டதுபோல அரசியல், வாதப் பிரதிவாதங்கள், சர்ச்சைகள், கட்சி சார்புகள் இல்லாத இம்மாதிரியான படைப்புகளுக்கான ரசிகர் மன்றங்கள் “பாலைவன” வாழ் பனிக்கரடிபோல குறைவானதே.. ஆனாலும் எல்லோருமே மறுப்பேதும் சொல்லிவிடமுடியாத படைப்புகளை சார்பு நிலை தாண்டி வாசக சுவாரஸ்ய அனுபவத்துள் திளைக்க வைக்கிற தேவன், சுஜாதா , ஜ.ரா.சு போன்ற படைப்பாளிகளின் வரிசையை நோக்கி வலதுகாலை எடுத்து வைத்திருக்கிறார் எனும் வ.வே.சு ஸாரின் பார்வை துல்லிய கணிப்பே..!
தொகுப்பில் உள்ள கட்டுரை மொத்தத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விடாமல் ஒரு கட்டுரையை படித்து ரசித்து நம் நினைவலைகளுடன் அதை தொடர்புபடுத்தி அசைபோட்டு ருசித்து பிறகு அடுத்த கட்டுரைக்கு கண்களை மனதை தாவவிடுவது உத்தமம். (விதி விலக்கு லண்டன் நினைவுகள்,கல்யாணமாம் கல்யாணம்.)
அது ஒரு கனாக்காலம்–ஐம்பதுகளைத் தாண்டிய வாசிப்பாளர்களுக்கு தாம் கடந்து வந்த பாதையின் நினைவுப் பெருமூச்சுவிட வைக்கும் கனாக்காலம்..!
ஐம்பதுகளுக்குள்ளிருக்கும் தலைமுறைக்கோ இதுவே “இப்படி எல்லாம் கூட இருந்ததா, நடந்ததா?” என வியப்பாய் விழி விரியவைக்கும்
கற்பனை உலக (பாவம்.. அவர்கள் என்னத்தைக்கண்டார்கள்!?)
கடந்தகால/எதிர்பார்ப்பு கால– “கனாக் காலம்..!”