கோடேஸ்வரம்மா
ஆகஸ்ட் மாதம் முதல் பதினைந்து தினங்களுக்குள் நான்கு வித்தியாசமான கூட்டங்களில் பங்குபெற நேர்ந்தது. அதில் ஒன்று மட்டும் வெளியூர். மற்ற மூன்றும் நமது குவிகம் இல்லத்தில்.
முதலில் வெளியூர்
ஐந்தாம் தேதி ஞாயிறன்று நூறாவது பிறந்தநாள் நிகழ்வு. நூறாண்டு காணும் அந்த அம்மையார் கேக் வெட்டி, ஒரு சில உறவினரும் ஏராளமான நண்பர்களும் கொண்ட சுமார் 600 பேர் கொண்ட கூட்டத்தில் பதினைந்து நிமிடம் உரை ஒன்றும் நிகழ்த்தினார். அவர்தான் கொண்டபள்ளி கோடேஸ்வரம்மா என்னும் மனோதிடத்தின் மொத்த உருவம். எல்லோராலாம் “அம்மம்மா” என்று பாசத்துடனும் , மரியாதையுடனும் அழைக்கப்படுபவர்.
சிறு வயதில் பள்ளிப் பருவத்திலேயே தேசபக்திக் கருத்துக்களில் ஆர்வம்கொண்டு விடுதலை இயக்கத்தில் ஒரு சிறு பங்கு ஆற்றியவர். கொண்டபள்ளி சீதாராமையா என்னும் பொதுவுடமைவாதியை மணம் புரிந்து அந்த இயக்கத்தின் பணிகளில் கணவருடன் சரிக்குச் சமமாக நின்று போராடுகிறார். கட்சி தடை செய்யப்பட்டதும் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொள்ளுகிறார்.
கணவர் திடீரென்று இவரை விட்டு விலக, இவர் எதற்கும் அஞ்சாமல் கல்வி கற்று, ஹாஸ்டல் வார்டன் ஆகப் பணிபுரிந்து கம்யூனிச இயக்கங்களிலும் பணியாற்றுகிறார்.
வாழ்க்கையில் எப்போதும் புயல் வீசிய வண்ணம் இருந்தும் தளராது ஈடு கொடுக்கிறார். மகன் என்கவுண்டரில் மரணம் அடைகிறான். மருத்துவராக சேவை செய்து வந்த மகள் தனது கணவனின் இறப்பைத் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறாள். எல்லாத் துயர்களையும் சந்தித்து கணவன் இறந்த பிறகும் தனது பேத்திகளுடன் வாழ்ந்துவரும் இந்தப் பெண்மணியின் ‘நிர்ஜன வாரதி’ என்ற பெயர்கொண்ட சுயவரலாறு பல பாடங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கும்
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த விழாவிற்கு பல இயக்கத்தினர், இலக்கியவாதிகள், பெண்கள் நலச் சங்க முக்கியஸ்தர்கள், அம்மம்மாவின் மனோதிடத்தின் விசிறிகள் என இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தனர். அந்த சுய வரலாற்று நூலினை தமிழாக்கம் (ஆளற்றபாலம், காலச்சுவடு) செய்தவர் என்ற முறையில் அந்த பிறந்தநாள் விழாவில் திருமதி கௌரி கிருபானந்தன் (எனது துணைவியார்) கலந்து கொள்ள, .அவருக்குத் துணையாக நானும் கலந்து கொண்டதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.