அன்னத்தை, அணிமயிலை, அழகு மானை,
அன்றலர்ந்த புதுமலரில் ததும்பும் தேனை,
கன்னத்தில் பொன்னிறத்தைக் கூட்டு வாளை,
கார்முகிலைக் கூந்தலென மாட்டு வாளை
மின்னைத்தன் புன்சிரிப்பாய்க் காட்டு வாளை,
மீனைத்தன் விழியசைப்பில் ஓட்டு வாளை,
என்னைத்தன் உளச்சிறையில் பூட்டு வாளை
இன்றமிழ்ச்சொல் ஓவியமாய்த் தீட்டு வேனே !
பாதிநிலா படுத்திருக்கும் இடமோ நெற்றி
பாயுகணை புருவவில் விடுமோ சுற்றி.
வீதியுலா வருகின்ற அம்மன் தேரோ
விண்மகளோ அமரர்பதி இவளின் ஊரோ
மீதியின்றி, மிச்சமின்றி அழகைப் பேர்த்தாள்
வேறெவர்க்கும் தாராமல் தன்னுள் சேர்த்தாள்.
நாதியின்றித் தவிக்கின்ற என்றன் நெஞ்சம்
நாளெல்லாம் இரவெல்லாம் அவளைக் கெஞ்சும்
உயிரெழுத்து மெய்யெழுத்தை அணைந்த பின்னர்
உயிர்மெய்யாய் ஆவதைப்போல் இணைவோம் நாமும்.
இயற்சீரின் ஈரசையாய் இணங்கி நிற்போம்
இன்பமெனும் இசைத்தமிழின் பாடல் கற்போம்.
குயிலெடுத்துக் கூவுகின்ற குறிஞ்சிப் பண்ணே
கொஞ்சுமொழி கிளிபோல பேசும் பெண்ணே
வெயிலென்றும் ,மழையென்றும் காலம் ஓடும்
விருப்பென்றும் குறையாமல் நாளும் கூடும் !
Beautiful tamil!!
LikeLike
Superb,Thamiz is dancing in beautiful motion.WE PRAY MANY MORE laurels.
LikeLike