ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது – வாழ்வை
இணைக்கும் பாலம் இது !
ஏதோ தத்திக்கொத்தி நானும் வேலை செய்ய ஆரம்பித்தேன். வானத்தை வில்லாக வளைக்கிற வேலையென்று இல்லாவிட்டாலும் நான் பதிவு செய்யும் விஷயங்கள்போலப் பல வேறு கிளைகள் பதிவு செய்தவை நிறுவனத்திற்கு சில முடிவுகள் எடுக்க ஆதாரங்களாக இருக்குமாம். ஒரு சில சமயங்களில் சில விளக்கங்களும் கேட்கப்படும்.
பதிவுகள் ஓரிரு வார்த்தைகளாக இருந்தால் ஏதோ சமாளித்து எழுதிவிடுவேன். மூன்றாவது வார்த்தை என்றாலே ஒரு நேர்கோட்டில் வராமல் கோணல் மாணலாக வந்து தொலையும். நேராக எழுத மிகுந்த முயற்சி செய்வேன். ஓரளவிற்கு வெற்றிதான்
நான் குடியிருந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு சிறுமி திண்ணையில் உட்கார்ந்துதான் வீட்டுப்பாடம் எழுதுவாள். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு ஏதோ சந்தேகம் கேட்டாள். நான் சொன்ன பதில் அவளுக்கு உபயோகமாக இருந்ததா என்று தெரியாது. ஆனால், எனக்கு ஒரு புதிய ஐடியா கிடைத்தது. அவள் எழுதும்போது எழுதவேண்டிய கோட்டிற்கு சற்று மேலே ஒரு ஒரு-அடி ஸ்கேலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு எழுதுவதைக் கவனித்தேன். எழுத்துகள் அந்த ஸ்கேலை முட்டுமாறு எழுதினால் எழுத்துக்கள் ஒரே அளவில் இருக்க, கீழே உள்ள கோட்டின் உதவியால் நேராக இருக்க, வார்த்தைகள் வரிசையாக ஒழுங்காகத் தோற்றமளித்தன. பிறகென்ன! மறுநாள் முதல் எனக்கு ஸ்கேல்தான் உபகரணம். கூட வேலை செய்யும் நண்பர் ஒருவர் என்னை ஸ்கேலாயுதம் என்றுகூட கேலி செய்வார்.
போஸ்ட் ஆபீஸ் நான் குடியிருந்த தெருவில்தான் இருந்தது. நான் அலுவலகம் போகும் நேரமும், தபால்காரர் தபால்களோடு வெளியே வரும் நேரமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அவருக்காக நான் சிறிது நேரம் காத்திருப்பது வழக்கம். ஏதோ ஒரு படத்தில் ஜெய்சங்கர்போல ‘ஒருவர் மனதை ஒருவர் அறிய .. ’ என்று பாடிக்கொண்டு வரமாட்டார். அவர் அந்தத் தெருவிலேயே ஒரு வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்து தெரு வாரியாகத் தபால்களைப் பிரிப்பார். கடிதம் எதிர்பார்க்கும் சிலர் அங்கு வந்து நின்றுவிடுவார்கள். அந்த சமயம் அவர் கோபிகா ஸ்திரீகள் சூழ்ந்த கண்ணன்போல எனக்குக் காட்சி தருவார்.
முதலில் அலுவலகத் தபால் என எனக்குக் கொடுத்துவிடுவார். யாரவது “எனக்கு தபால் உண்டா?” என்று கேட்டால் தேடி எடுத்துக் கொடுத்துவிடுவார். இல்லையென்றால், “இப்பத்தான் எழுதிக்கிட்டு இருக்காங்க போலிருக்கு.” என்பார். திங்கள் கிழமைகளில் பஸ்ஸை விட்டிறங்கித் தபால் ஆபீஸ் வழியாக வந்து கடிதங்களை வாங்கிக்கொண்டு அலுவலகம் வருவேன்.
நம்மில் பலருக்குக் காலையில் நியூஸ் பேப்பர வந்தால்தான் பொழுதே விடியும். என்றேனும் தினசரி இல்லை என்றால் என்னவோ போல்தான் இருக்கும். அதுபோல, தபால் வரவில்லை என்றால் அலுவலக மேலதிகாரி சேஷையனுக்கு ஒரு வேலையும் ஓடாது. என்றாவது எங்கள் அலுவலக வேலை நாளாகவும் தபால் அலுவலக விடுமுறையாகவும் இருந்தால், அரை மணிக்கு ஒருமுறை “இன்னிக்குத் தபால் கிடையாதில்ல?” என்று சொல்லிக்கொண்டு இருப்பார்,
ஒரு திங்கட்கிழமை ஊரிலிருந்து நேரடியாக ஆபீஸ் வந்துசேர்ந்தேன். பஸ் பிரேக் டவுன் காரணமாகச் சற்று தாமதம் ஆகிவிட்டது. அந்த பஸ்சிலேயே என்னுடன் மற்றொரு ஊழியரும் வந்தார்.. இருவரும் லேட். நேராக அலுவலகம் போய்விட்டோம். தபால்காரரும் ஊரெல்லாம் சுற்றித் தபால் கொடுத்துவிட்டு நேரம் கழித்தே எங்கள் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வந்தார். அதற்குள்ளாக சேஷய்யன் சார் ‘இன்னும் வரலியா?’, ‘இன்னும் வரலியா?’ என்று பலமுறை கேட்டுவிட்டார். அப்படி ஒன்றும் மிக முக்கியமான தபால் வந்து உலகம் மாறிவிடப் போவதில்லை என்றாலும் அப்படி ஒரு ஆரவாரம்.
தபால்காரரும் வந்தார். கடிதங்களை என்னிடம் கொடுக்க, நான் சேஷய்யன் சாரிடம் கொடுத்தேன்.
பத்து நிமிடம் கழித்து என்னைக் கூப்பிட்டார் சேஷய்யன். நான் உள்ளே போனேன்.
“உங்களுக்கு வேண்டியவங்க யாராவது மெட்ராஸில் இருக்காங்களா?” என்று கேட்டார்.
“என் அண்ணன் இருக்கிறான்” என்றேன்
“நீங்கள் மெட்ராஸில் ஒரு வாரம் தங்கவேண்டும். அவரோட தங்கிக்கொள்ளலாம் இல்லியா?” என்று கேட்டார். ஒன்றும் புரியவில்லை.
ஒரு கடிதத்தை என்னிடம் காட்டினார். அப்போது மெட்ராஸ் சென்னை ஆகவில்லை. சென்னை மாநிலம்தான் தமிழ்நாடு ஆகியிருந்தது. சென்னையில் இருந்த எங்கள் பயிற்சி மையத்தில் என்னை ஐந்து நாள் பயிற்சிக்கு வரச்சொல்லி இருந்தார்கள். புதியதாக வேலைக்குச் சேரும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பயிற்சி உண்டாம். இது தமிழ்நாட்டுக்கான மையம் என்பதால் மொழி ஒரு தடையாக இருக்காது என்று தோன்றியது.
சென்னை செல்ல 20 நாட்கள் இருந்தன. முதலில் சென்னை போய்வர இரயிலில் முன்பதிவு செய்யவேண்டும் என்றார்கள். வரும் தகவலை அண்ணனுக்குத் தெரிவித்துத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துகொள் என்று மற்ற ஊழியர்கள் அறிவுறுத்தினார்கள்.
தாமதம் செய்யாமல் அன்றே ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். முதலில் கடிதம். உண்மையைச் சொல்லப்போனால் இதற்கு முன் கடிதம் எழுதியது ஒரே ஒருமுறை. பள்ளியில் படிக்கும்போது (எட்டாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ) தான். உள்ளூரில் நடக்கும் திருவிழாவிற்கு நண்பன் ஒருவனை அழைப்பதாக வகுப்பில் உள்ள எல்லோரும் எழுத வைக்கப்பட்ட பாடத் திட்ட கடிதம். தபாலாபீஸ் காணாத கடிதம்.
எல்லோரும் ‘நண்பனுக்கு’ , ‘வாசுவிற்கு’, ‘அன்புள்ள ராமுவிற்கு‘ என்று தொடங்கியிருந்தார்கள். ஒரு மாணவன் மட்டும் ‘அன்பு நண்ப’ என்று தொடங்கியதிற்கு ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார். அந்த மாணவன் யாரென்று தெரிவிக்கவில்லை. அது நான்தான். விஷயம் என்னவென்றால், எனக்கு ‘அன்பு நண்பன் கண்ணனுக்கு’ என்றுதான் தொடங்க எண்ணம். கவனக் குறைவால் பாதியிலே நிறுத்திவிட்டு அடுத்த வரிக்குப் போயிருக்கிறேன்.
அந்தக் கடிதத்தில் என்ன குற்றம் குறையிருந்தாலும் பெரிய பிரச்சினை இல்லை. மதிப்பெண் சற்று குறையும். இப்போது நமக்கு வேண்டும் என்கிற தகவல் கிடைக்கவேண்டும் என்றால் நம் கடிதம் தெளிவாக இருக்க வேண்டும் அல்லவா?
போகட்டும்… இப்போது பிரச்சினைகள் இரண்டு.
- ஆபரேஷன் முன்பதிவு:- நான் மாவட்டத் தலைநகர் புகைவண்டி நிலையம் போகவேண்டும். படிவத்தைச் சரியாகப் பூர்த்தி செய்து டிக்கட் வாங்கிக்கொள்ள வேண்டும். தேதியும் வண்டியும் குழப்பமின்றித் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். நல்ல வேளையாக சென்னைக்குத் தினம் மாலையில் ஒரு வண்டிதான்.
- ஆபரேஷன் தபால்:- அண்ணனுக்குத் தகவல் தெரியவேண்டும். அவன் முகவரி தெரியாது. வீட்டிற்குக் கடிதம் எழுதி , நான் வரும் விவரம் அண்ணனுக்குத் தெரிவித்து, எப்படி அவனை சந்திப்பது, தங்குவதற்கு என்ன ஏற்பாடு என்று கேட்டுவைத்துக் கொள்ள வேண்டும். நான் வாரமுடிவில் வீட்டுக்குப் போகும்போது விலாசமும் மற்ற விவரங்களும் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் .. ஆபரேஷன் தபால் முடிக்கலாம். தபால் அலுவலகம் சென்று விட்டேன். அஞ்சலட்டையை விட உள்நாட்டுக் கடிதம் என்னும் ‘Inland Letter’ எழுதிவிடலாம் என்று முடிவெடுத்தேன். ஊரில் எங்கள் அடுத்த வீட்டு மாமா எப்போதும் அஞ்சலட்டை தான் எழுதுவாராம். ஒரு அஞ்சலட்டைக்கு மேல் விஷயம் இருந்தால் இரண்டு அஞ்சலட்டை எழுதுவாரேதவிர உள்நாட்டுக் கடிதம் உபயோகிக்க மாட்டார். காரணம் மிக எளிது. அஞ்சலட்டை அப்போது 15 காசு. உள்நாட்டுக் கடிதம் 50 காசு. மூன்று அஞ்சலட்டை எழுதினாலும் 5 காசு மிச்சம்.
அவருக்கு இன்னொரு வித்தியாசமான குணாதிசயமும் உண்டு. மற்றவர்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்கக்கூடாது என்ற கோட்பாடு எல்லாம் அவருக்குக் கிடையாது. எங்களுக்கு வருகின்ற தபால் அவருக்கு முன்னால் கிடைத்துவிட்டால், “என்ன … உங்கள் சித்தப்பாவுக்கு பேரன் பிறந்திருக்கிறானாமே?” என்று கேட்டுக்கொண்டே கடிதத்தைக் கொடுப்பார். ஒன்றுவிட்ட அத்தை எப்போது கடிதம் எழுதினாலும், அவர் குடும்பத்தில் யாருக்கு என்ன உபாதை இருந்தது, எப்போது சரியாயிற்று என்று கட்டாயம் எழுதுவார். அதில் ஒன்றைப் பாராட்டவேண்டும், சென்ற கடிதத்தில் எங்கே முடித்தோம் என்று நினைவில் கொண்டு காலக்கிரமத்தை சரியாகத் தொடர்வார். அடுத்த வீட்டுக்காரர் கையில் அது போன்ற கடிதங்கள் அவ்வப்பொழுது மாட்டும். “அத்தையிடமிருந்து வர கார்டுக்குக் கூட டெம்பரேச்சர் இருக்கும்” என்பார் அந்த மாமா.
நான் அஞ்சலட்டைதான் எழுதும்படியாக ஆயிற்று. உள்நாட்டுக் கடிதம் இருப்பு இல்லையாம். அஞ்சலட்டையும் “ரிப்ளை கார்டு” தான் இருந்தது. வசதிதானே. அப்பாவோ அம்மாவோ பதிலெழுதக் கார்டு கவர் வாங்கப் போகவேண்டாமே! இல்லையே…, அண்ணனுக்கு எழுத தபாலாபீஸ் போய் வாங்கத்தானே வேண்டும்.
ரிப்ளை கார்ட் உபயோகித்துப் பார்ப்போமே என்று தோன்றியது. ஒரு அட்டையில் எனது விலாசமும் மற்றொரு அட்டையில் அப்பாவில் விலாசம் எழுதினேன். கவனமாக அப்பாவின் விலாசம் எழுதிய அட்டையில் விவரம் எழுதி ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துவிட்டு பெட்டியில் போட்டுவிட்டேன். வெற்றி….
ஆபரேஷன் முன்பதிவு:- நான் இரயிலில் பயணம் செய்தே , ஏன் பயணம் செய்ததே, மிகக் குறைவு. அதுவும் எப்போதும் பொது பயணிகள் பெட்டிதான், முன்பதிவு என்று ஒன்று உண்டு என்பதே வெகு நாட்கள் கழித்துத்தான் தெரியும். இரயிலில் ஏறுவதும் இறங்குவதும் எப்போதுமே ஒரு சர்க்கஸ்தான்.
இப்போது உள்ளதுபோல இணையம் கிடையாது. ஏன்.. பதிவுகள் கூட கணினிமூலம் கிடையது. முன்பதிவிற்கு மாவட்டத் தலைநகர் போகவேண்டும். அங்குதான் முன்பதிவு வசதி இருந்தது.. முன்பதிவு இயங்கும் நேரத்தில் அங்கே இருக்கவேண்டும் என்றால் , எங்கள் அலுவலகம் முடியும் முன்பே பஸ் பிடித்தால்தான் நடக்கும். சேஷய்யன் சார் பெருந்தன்மையோடு அனுமதி அளித்தார். இரண்டு பேனாக்கள் (சரியாக எழுதுகிறதா என்று பரிசீலித்து விட்டு) எடுத்துக்கொண்டேன். விண்ணப்பத்தில் எழுதவேண்டியவற்றை ஒரு தாளில் குறித்துக்கொண்டேன். (அதுவும் இரண்டு பிரதிகள். ஒன்று சட்டைப் பையில் ஒன்று கைப் பையில்.)
இரயில் நிலையத்தில் விண்ணப்பப் படிவம் எடுத்துக்கொண்டேன். மூன்று படிவங்கள் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது என்பது உட்கார்ந்து எழுத ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது ஒருபடிவத்தை நிரப்பினேன். ஒரே அடித்தல் திருத்தல். கைவசம் படிவங்கள் இருந்ததால் நிதானமாக அடுத்த படிவத்தை நிரப்பினேன்
மூன்றாவது படிவத்தில் திரும்பிவரும் பயணம் பற்றிய விவரங்களை எழுதும்போதுதான் – “ரிடர்ன் ஜர்னி’ என்னும் பகுதியை கவனித்தேன். மீண்டும் ஒரு படிவம் எடுத்துக்கொண்டு நிதானமாக நிரப்பி முடித்தபோதுதான் ஒரு ஞானோதயம்.. சரியாக எழுதியிருந்த இரண்டாம் படிவத்திலே காரியத்தை முடித்திருக்கலாம் என்று. (தாய் பூனைக்கும், குட்டி பூனைக்கும் சுவற்றில் இரண்டு ஓட்டைகள் போட்ட விஞ்ஞானியும் நானும் ஒன்றுதானே?)
அங்கிருந்த அந்த உதவியாளர் பூதாகாரமான ஒரு பேரேட்டை எடுத்தார். அதன் பக்கங்களைப் புரட்டும்போது அவை எளிதில் கிழியக்கூடிய மெல்லிய தாள்கள் என்பதை கவனித்தேன். நல்லவேளை! சில கூட்டுறவு அலுவலக பதிவேடுகள்போல கார்பன் வைப்பது – கிழிப்பது என்றெல்லாம் இல்லை. ஒரு இடைஞ்சலும் இல்லாது டிக்கட்டுகள் கிடைத்தன. சரியாகவும் இருந்தன. மாபெரும் வெற்றி.
மறுநாள் மதியம் நான் போட்டிருந்த ரிப்ளை கார்ட் எனக்கே திரும்பி வந்துவிட்டது . எந்த அட்டையில் எந்த முகவரி எழுதவேண்டும் என்று அதிலேயே அச்சடித்திருந்தார்கள். நான் மாற்றி எழுதி உள்ளேன். பாதி வழியிலேயே இரண்டு அட்டையும் இணைபிரியாமல் என்னிடமே திரும்ப வந்துவிட்டது. முதல் வெற்றி .. படு தோல்வியாக மாறிவிட்டது.
மறுநாள் விடுப்பெடுத்துக்கொண்டு நேரடியாக ஊருக்குச் சென்று அண்ணனுக்குக் கடிதம் எழுதி ஒருவாறாக வேலை முடிந்தது. அந்த ரிடர்ன் கார்டும், ரிடர்ன் ஜர்னியும் மறக்க முடியாத விஷயங்கள்.
இனி என்ன … மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்தான் ….