விஷ்வகர்மாவின் ஆணைப்படி சூரியதேவனுக்கும் ஸந்த்யாவிற்கும் தனித்தனியாக சாந்துக்குளியல் ஏற்பாடு செய்யப்பட்டது.
நான்கு சேவகர்கள் சாந்து மண்டபத்தில் சூரியதேவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
சூரியதேவன் வந்த பறக்கும் கூண்டு அந்த மண்டபத்திற்கு வந்ததும் அந்த நால்வரும் சூரியதேவன் கூண்டிலிருந்து வெளியே வருவதற்கு வசதியாகக் கதவைத் திறந்து அவரை வரவேற்று சாந்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களின் தலைவன் சூரியதேவரை வணங்கி ,
” சூரிய தேவரே! இந்த சாந்துக் குளியலின் மகத்துவத்தைப்பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும்படி விஷ்வகர்மா அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டிருக்கிறார்கள்.
பொதுவாக காந்தச் சிகித்சை நடைபெற்றபிறகு உடல் முழுவதும் பற்றி எரிவதுபோன்ற உணர்ச்சி ஏற்படும். அது சந்திர காந்தக் கல்லின் மூலம் உடலை சாணை பிடிப்பதால் ஏற்படும் வெளி பாதிப்பு. அப்படிச் செய்வதன் மூலம் தங்கள் உடலின் வெப்பத்தைக் குறைக்க முடிந்ததது. அதே சமயம் உடலுக்குள் ஓடும் நரம்புகள் அனைத்தும் முடுக்கி விடப்படும். இது சிகித்சையின் எதிர்மறை விளைவு. இந்த இரண்டு விளைவுகளையும் சமன் செய்யவேண்டியது மிக மிக முக்கியம். அதற்கு உங்கள் ஒத்துழைப்புத் தேவை ” என்று பவ்யமாகக் கூறினான்.
சூரியதேவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். காந்த சிகித்சையோ அதன் வீரியத்தைக் குறைக்கும் மாற்று சிகித்சையான சாந்துக் குளியலோ எதுவும் தன்னைப் பெரிதும் பாதிக்காது என்று அவனுக்குத் தெரியும். ஸந்த்யாவின் மீது அவனுக்கு ஏற்பட்ட காதல் அவன் இதயத்தை முழுதும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் அவனுக்குச் சந்தேகமின்றிப் புரிந்திருந்தது. அதனால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பரபரவென்று பற்றி எரிவதுபோன்ற உணர்வு இருக்கிறது என்பதை உணர்ந்தான். அதுமட்டுமல்லாமல் அவன் நாடி நரம்புகளும் தூண்டப்பட்டு அவை ஸந்த்யாவின் தேகத் தேடலையே எதிர்நோக்கி இருக்கின்றன என்பது அவனுக்குத் தெள்ளெனத் தெரிந்திருந்தது.
காலையில் அவன் உதிக்கும்பொழுது பூலோகத்தில் ஆயிரமாயிரம் தாமரை மலர்கள் மலர்வதைப் பார்த்துப் பரவசமடைந்திருக்கிறான். ஆனால் அவன் ஸந்த்யாவின் தேகத்தைத் தொட்டுத் தழுவும்போது அவள் வெள்ளை உடலில் குபீர் குபீர் என்று ரத்தம் பாய்வதால் ஏற்படும் சிவப்புக் குமிழிகள், நரம்புகள் புடைப்பதால் ஏற்படும் பச்சை ஆறுகள் , பொன்னிற மயிர்க்கால்கள் சிலிர்ப்பதால் தோன்றும் பொன் மழை எல்லாவற்றிற்கும் மேலாக அமிர்தத்தைக் கடைந்து வைத்த அவள் இதழும் நெஞ்சகமும் இடையும் அவனுக்கு அளித்த பரவசத்திற்கு எதுவும் ஈடாகாது என்பதை நன்கு உணர்ந்துகொண்டான். அவளின்றித் தான் இயங்க முடியாது என்று அவன் நன்கு உணர்ந்ததன் காரணமாகவே இந்த சந்திர காந்தச் சிகித்சைக்கு ஒப்புக்கொண்டான்.
இந்த் சாந்துக் குளியல் அவன் காதல் வேகத்தையும் குறைத்துவிடுமோ என்றும் பயந்தான்.
இருப்பினும் விஷ்வகர்மாவின் சேவகர்கள் கேட்டுக்கொண்டபடி அந்த அறையிலிருந்த தங்கப் படுக்கையில் தன் ஆடைகளைக் களைந்து படுத்தான். அவன் தலைக்கு மேலே ஒரு பொன்னாலான பாத்திரம் கட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து பால் போன்ற ஒரு திரவத்தை மெல்லிய நூலிழைபோல அவன் நெற்றியில் வழிய வைத்தார்கள். அது ஏற்படுத்திய சுகானுபாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே இலேசாக சூடு செய்த எண்ணையை எடுத்துக்கொண்டு இருவர் சூரியதேவனின் கழுத்திலிந்து கால்வரை மெதுவாகவும் சற்று அழுத்தமாகவும் தொடர்ந்து தடவினார்கள். அவர்களின் கரங்களில் இருந்த மாயமோ நளினமோ வேகமோ ஏதோ ஒன்று அல்லது எல்லாமும் அவனை ஒரு மயக்க நிலைக்கு ஆளாக்கியது.
சூரியதேவன் கண்களை மூடிக்கொண்டான். புறக் கண்கள் மூடியதும் அகக் கண்கள் திறந்தன. ஸந்த்யாவே அவனுக்கு இரு புறமும் நின்று அவனுக்கு அந்த வாச எண்ணையைத் தடவுவதுபோன்ற மயக்க நிலை உண்டாயிற்று.
அதன் பின்னர் ஒரு பசுமையான சாந்தை அவன் உடல் முழுவதும் பூசினர். அதன் குளிர்ச்சி தன் வெப்பத்தை முழுதும் அழித்து நிலவைப் போல குளிர வைத்துவிடுமோ என்றும் பயந்தான்.
அவன் தலையில் வழிந்து கொண்டிருந்த பால் போன்ற திரவம் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. அவன் தலையில் பொதிந்திருக்கும் நரம்பு மண்டலம் அனைத்தையும் அமைதிப்படுத்தியது.
அப்போது விஷ்வகர்மா அறைக்குள் நுழைந்தது மயக்கத்திலிருந்த சூரியதேவனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. விஷ்வகர்மாவைக் கண்டதும் சாந்தைப் பூசி முடித்த சேவகர்கள் அனைவரும் அவர் கண் ஜாடைக்கு இணங்கி அறையைவிட்டு வெளியேறினர்.
விஷ்வகர்மா தன் கையிலிருந்த வசியக் கோலால் சூரியதேவனின் உடலைத் தொட்டும் தொடாமலும் மெல்லத் தடவினார். கொஞ்சம் கொஞ்சமாக சூரியதேவன் தன் வசியத்திற்கு வருவதை உணர்ந்த அவரது கண்களில் மகிழ்ச்சி கரைபுரண்டது. அதில் கோடானுகோடி ஆசை தெளித்தது.
மெதுவாக சூரியதேவனின் மூடிய கண்களைப் பார்த்து ” சூரியதேவரே!” என்று அமைதியான குரலில் மூன்று முறை அழைத்தார்.
“சொல்லுங்கள்; நான் என்ன செய்யவேண்டும்?” – அவன் குரல் ஈனசுரமாக ஒலித்தது.
“மகாபிரும்மருத்ரன்.. மகாபிரும்மருத்ரன்.. மகாபிரும்மருத்ரன்..” என்று விஷ்வகர்மாவின் வாய் முணுமுணுத்தது.
அதே சமயம் ஸந்த்யாவின் தாய் விஷ்வகர்மாவின் ஆணைக்கு இணங்கி ஸந்த்யாவின் வாயில் மருந்தினை ஊற்றுவதற்காக வலம்புரிச் சங்கை அவள் வாயருகே கொண்டுசென்றாள். பாவம் அந்தத் தாய்க்குத் தெரியாது. அந்த மருந்து தன் மகள் வயிற்றில் அப்போதுதான் துளிர்விட்ட மூன்று கருக்களையும் கலைக்கும் மருந்து என்று.
எது எப்போது எப்படி நடக்கும் என்று ஊகிக்க முடியாத அந்த வேளையில் ராகு காலம் உதித்தது.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
தேவ ரகசியம் மனிதர்களுக்குப் போய்விடுமோ என்ற பயத்தை எமன் விதைத்திருந்தது அனைவர் மனதிலும் பதிந்திருந்தது. ஆரக்கிள் என்பது குறி சொல்லும் தேவதை என்றும், அது பின்னால் நடக்கப்போவதை முன்னாடியே தெரிவிக்கும் என்ற கதையை தத்தாம்ஸானந்தா ஆரக்கிள் என்றால் என்ன என்பதை விளக்கவே கூறினார். ஆனால் அது தேவர்களுக்குத் தகவல் பாதுகாப்பைப்பற்றி இப்படி ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்று தத்தாம்ஸானந்தா முதலில் உணரவில்லை.
பாதுகாப்புப்பற்றிய விவரத்தை ஏற்கனவே தெரிவித்து அனைவரது ஒப்புதலையும் பெற்ற தத்தாம்ஸானந்தா ‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி ‘ என்பதுபோல ஆரக்கிள் கதையை சொல்லப்போக, அவர்களுக்கு மீண்டும் தகவல் பாதுகாப்பு பயம் வந்துவிட்டதே என்று கவலைப்பட்டார். பாதுகாப்புப்பற்றிய பயத்தைப் போக்காதவரையில், தனக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தார் தத்தாம்ஸானந்தா.
குறி சொல்லும் அந்த ஆரக்கிளுக்கும் இப்போது இருக்கும் ஆரக்கிள் தகவல் மையத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கினார்.
இன்னும் பல கடினமான ஜார்கனை எல்லாம் போட்டு தகவல் பாதுகாப்பு என்றால் என்ன என்பதைப்பற்றி எடுத்துக் கூறினார். ‘ஏண்டா கேட்டோம் என்று முருகனுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைத்துத் தேவர்களுக்கும் தோன்றியது. பரமசிவன் தத்தாம்ஸானந்தாவைப் பேசாமல் இருக்க பேசாமல் அவரை நெற்றிக்கண்ணால் எரித்து விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தார். அவர் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பார்வதி மெதுவாக அவர் காதருகில் ‘ ஆ ஊன்னா நெற்றிகண்ணைத் திறக்காதீங்கோ’ என்று எச்சரித்தாள். விநாயகருக்கோ முருகன் மேல் கோபம். கேள்வியைக் கேட்டது மட்டுமில்லாமல் ரெண்டு கண்ணை மட்டும் திறந்துகொண்டு பாக்கி பத்துக் கண்ணையும் மூடிக்கிட்டு தூங்குகிறானே என்று. எமனும் சித்திரகுப்தனும் நெளிய ஆரம்பித்தார்கள். சரஸ்வதியும் லக்ஷ்மியும் தாங்கள் பூலோகம் சென்றபோது பார்த்த சரஸ்வதி சபதம் சினிமாவைப்பற்றி மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். பரந்தாமனுக்குக் கவலையே கிடையாது. அந்த இடத்தையே பாற்கடலாகப் பாவித்துப் பள்ளி கொண்டுவிட்டார்.
ஒரு வழியாக தத்தாம்ஸானந்தா தனது கதா காலட்சேபத்தை முடிக்கும்போது , தகவல் பாதுகாப்பு என்பது உங்கள் அனைவரது கைகளில் தான் இருக்கிறது என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். எல்லோரும் திடுக்கிட்டு முழித்தார்கள்.
ஆம். நீங்கள்தான் இந்த தகவல் மையத்திற்கு அதிபதி. யார் யாருக்கு , எந்த அளவுக்குத் தகவல் தெரியலாம் என்பதை நீங்கள் முடிவு செய்துவிட்டால் அதன்படி ஆரக்கிளில் டேட்டாபேஸ் பாதுகாப்பு வளையங்களை அமைத்துவிடலாம். உதாரணமாக பிறப்பு ரகசியத்திற்குப் பொறுப்பாளராக பிரும்மா இருக்கலாம். அதைப்போல இறப்பு ரகசியத்துக்குக் கண்காணிப்பாளராக சிவபெருமான் இருக்கலாம். எமனுக்கு அன்றைய பொழுதில் யார் மடிவார்கள் என்ற தகவல் மட்டும் கிடைத்தால் போதுமானது. இறப்பவர்களின் பாவ புண்ணியத் தகவல் மட்டும் சித்திரகுப்தனுக்குப் போதும். எல்லாத் தகவல்களும் மேகத்தில் இருக்கும் ஆரக்கிள் டேட்டாபேஸில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். சித்திரகுப்தன் தகவல்களைப் பார்த்துவிட்டுத் தன்னுடைய சிபாரிசுகளைக் குறிப்பிட்டால் போதும். எமபுரிப்பட்டணம் சென்று ஒவ்வொருவருக்கும் சித்திரகுப்தன் பாவ புண்ணியக் கணக்கைப் படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதனால் ரிடன்டன்சி என்று சொல்லப்படும் ஒரே வேலை திரும்பத் திரும்பச் செய்வது ஒழியும். மேலும் பாவ புண்ணியங்கள் அது நடக்கும்போதே டேட்டாபேசில் ஏறிவிடும். ஆனால் எது பாவம் எது புண்ணியம் என்பதை நீங்கள் முதலிலேயே முடிவு செய்யவேண்டும்.
இரண்டாவது கட்டமாக சித்திரகுப்தன், எமன் இருவர் தலையீடும் இல்லாமல் நேரடியாகவே ஒரு மனிதன் தான் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப சொர்க்கமோ அல்லது நரகமோ நேரடியாகப் போய்விடுவான். எமனும் சித்திரகுப்தனும் இந்தத் திட்டத்தால் தங்கள் வேலை பறிபோய் விடுமே என்று நெளிந்தனர். அதை உணர்ந்த தத்தாம்ஸானந்தா, இந்தத் திட்டத்தினால் எமன் சித்ரகுப்தன் இருவருக்கும் பளு குறைவதனால் அவர்கள் சொர்க்கம் நரகம் இரண்டையும் சிறப்பான முறையில் நிர்வகிப்பதுடன் அவற்றை மேம்படுத்தவும் முடியும் என்றும் அதற்குத் தனியாக புது பிராஜக்ட் அமைக்க வேறு டீம் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
பூலோகத்தில் எல்லாவற்றையும் இணையதளம் மூலமாகச் செய்யும்போது மேலோகம் என்று சொல்லப்படும் இந்த உலகில் இன்னும் பழைய முறையில் வேலைகளைச் செய்து வந்தால் அது சரியாகாது என்று வாதத்துடன் தன் நீண்ட உரையை முடித்தார் தத்தாம்ஸானந்தா.
திட்டக்குழு அங்கத்தினர்கள் அனைவரும் அதை ஒப்புக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்துகொண்டு திட்டத்திற்குக் கொள்கை அளவு ஒப்புதல் அளித்தனர்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை – பிராஜக்ட் ரிபோர்ட் தயார் செய்து அங்கத்தினர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவதாகவும் தத்தாம்ஸானந்தா கூறினார். பிராஜக்ட் ரிபோர்ட் தயார் செய்யத் தனக்கு உதவியாக வியாசரையும் பிள்ளையாரையும் அனுப்பும்படி ஒரு கோரிக்கையையும் முன் வைத்தார்.
அதுவரை ஏனோதானோவென்று இருந்த பிள்ளையார் திடுக்கிட்டார். ஏற்கனவே மகாபாரதம் எழுதப் போய் தனது ஒரு கொம்பு உடைந்து போய் வீரபாகு, முருகன் இவர்கள் தன்னை ஒற்றைக் கொம்பன் என்று கேலி செய்வது பொறுக்கமுடியாமல் இருந்தார். இப்போது இன்னொரு கொம்பும் ஓடிந்தால் இவர்கள் என்னவெல்லாம் சொல்வார்கள் என்று தயங்கி நின்றார். முருகன் தனக்கு இந்த வேலை வந்துவிட்டால் பேசாமல் கோபித்துக்கொண்டு மலைக்குப் போய்விடலாமோ என்று நினைத்தார். ‘இந்த முறை பழனி வேண்டாம். ஊட்டி கொடைக்கானல் போவது என்றும் யோசிக்க ஆரம்பித்தார்.
கிளையண்டின் மனோபாவத்தை நன்கு அறிந்த தத்தாம்ஸானந்தா பிள்ளையாரிடம் ஒரு லேப்டாப்பையும் மவுசையும் கொடுத்தார்.
“நீங்கள் உங்கள் கொம்பை முறித்து எழுதவேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்கு மவுஸ் ஏற்கனவே நன்கு பழக்கம். கொஞ்சம் டிரெய்னிங் கொடுத்தால் வியாசர் சொல்லச் சொல்ல நீங்கள் எழுதிக்கொண்டே வரலாம்” என்றார். அதுமட்டுமல்ல இந்த ‘எமபுரிப்பட்டணம் பிராஜக்ட்’ அங்கத்தினர் அனைவருக்கும் ஒரு ஆப்பிள் 10 போனும் தரப்படும். நீங்கள் பிராஜக்ட் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள உபயோகமாயிருக்கும். அத்துடன் பூலோகத்தில் மிகவும் பரவலாக இருக்கும் ஒரு பயன்பாட்டையும் தருகிறோம்.” என்றார் தத்தாம்ஸானந்தா.
” மிஸ்டர் தத்தாம்ஸானந்தா ! அது மட்டும் வேண்டவே வேண்டாம் ” என்று அலறினார் திரிலோக சஞ்சாரி நாரதர் !