இருபதாம் நூற்றாண்டின் தமிழ் நாடக வரலாற்றின் புத்துயிராக விளங்கியவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவர் தலைசிறந்த நடிகராகவும், இயக்குநராகவும், ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்த் தெருக்கூத்துகளைப் புதுப்பித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றி அரங்கேற்றினார். 1918இல் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா எனச் சிறுவர்கள் அடங்கிய நாடகக் குழுவைத் தொடங்கினார். சங்கரதாஸ் சுவாமிகள் தாம் வாழ்ந்த காலத்தில் மற்ற நாடக ஆசிரியர்களைக் காட்டிலும் மிகுதியாகத் திருக்குறட்பாக்களைத் தம் நாடகங்களுள் புகுத்தினார். நாடகங்களை முறையாக ஒழுங்குபடுத்தி மேடையேற்றியது இவருடைய சிறப்பாகும். வள்ளி திருமணம், பவளக் கொடி, சத்தியவான் சாவித்திரி, நல்லதங்காள் நாடகம், அபிமன்யு சுந்தரி போன்ற இவரது நாடகங்கள் இன்றும் தமிழகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் நடந்து கொண்டுதான் உள்ளன.
சங்கரதாசர் சுமார் 40 நாடகங்களை எழுதினார். அவற்றுள் தற்பொழுது 18 நாடகங்களின் பனுவல்களே கிடைத்திருக்கின்றன.
01. அபிமன்யு சுந்தரி
02. அரிச்சந்திரா
03 அல்லி அர்ஜூனா
04. இரணியன்
05 இலங்கா தகனம்
06 கர்வி பார்ஸ்
07 குலேபகாவலி
08 கோவலன் சரித்திரம்
09 சதி அனுசுயா
10 சதிசுலோசனா
11 சத்தியவான் சாவித்திரி
12 சாரங்கதரன்
13 சிறுத்தொண்டர்
14 சீமந்தனி
15 சுலோசனா சதி
16 ஞான சௌந்தரி சரித்திரம்
17 நல்ல தங்காள்
18 பவளக்கொடி
19 பாதுகாபட்டாபிசேகம்
20 பார்வதி கல்யாணம்
21 பிரகலாதன்
22 பிரபுலிங்கலீலை
23 மணிமேகலை
24 மிருச்சகடி
25 ரோமியோவும் ஜூலியத்தும்
26 வள்ளித் திருமணம்
27 வீரஅபிமன்யு
28 லவகுசா
29 லலிதாங்கி
இந்நாடகங்களில் வெண்பா, கலித்துறை, விருத்தம், சந்தம், சிந்து, வண்ணம், ஓரடி, கும்மி, கலிவெண்பா, தாழிசை, கீர்த்தனை ஆகியன உள்ளிட்ட பலவகைப்பாடல்களும் சிறுபகுதி உரையாடல்களும் நிறைந்தவையாக இருக்கின்றன.
இந்நாடகங்களை, புராண நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், சமய நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், கற்பனை நாடகங்கள் என வகைப்படுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.
1921 ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சங்கரதாசருக்கு வலதுகையும் இடதுகாலும் முடங்கிவிட்டன. வாய்திறந்து பேச இயலாது போய்விட்டது. இந்நிலையிலேயே 1922 நவம்பர் 13 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு புதுச்சேரியில் மரணமடைந்தார்.
சங்கரதாசு சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்தபொழுது, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் அவரது முத்தமிழ்ப் புலமையை ஆராய அங்குள்ள புலவர்களால் வினாக்கள் தொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சங்கரதாசர் வழங்கிய விடைகளைப் போற்றிய அச்சங்கத்தினர் அவருக்கு வலம்புரிச் சங்கு ஒன்றைப் பரிசளித்தனர்.[17]
சங்கரதாசர் நூற்றாண்டு நிறைவையொட்டி, 1967ஆம் ஆண்டில் சென்னையில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு மலர் ஒன்றை வெளியிட்டும் 1968 ஆம் ஆண்டில் மதுரை தமுக்கம் திடலின் வாயிலில் அவருக்குச் சிலை எழுப்பியும் அவருக்கு தி. க. சண்முகம் சிறப்புச் சேர்த்தார்.
மதுரை தமுக்கம் திடலில் உள்ள நாடக அரங்கிற்கு தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. மதுரை ஒப்பனைக்காரத் தெருவில் இயங்கிவரும் நாடகக் கலைஞர்கள் சங்கத்திற்கும் சங்கரதாசரின் பெயர் இடப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைக்கு தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைத் துறை எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
சங்கரதாசர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய நாடகப் பனுவல்களைத் திரட்டி அச்சேற்றும் முயற்சிகள் நடைபெற்றன. அவ்வகையில் அபிமன்யு சுந்தரி, சுலோசனா சதி ஆகிய இரு நாடகப் பனுவல்களும் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் ஆதரவோடு 1959 இல் வெளிவந்தன.
தி. க. சண்முகத்தின் தனிமுயற்சியால் சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யுசுந்தரி, பவளக்கொடி, சுலோசனாசதி, சதி அனுசூயா, கோவலன் ஆகிய நாடகப்பனுவல்கள் சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு என்னும் பெயரில் நூல்வடிவம் பெற்றன.
2009 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வீ. அரசு தற்பொழுது கிடைக்கக்கூடிய 18 பனுவல்களையும் தொகுத்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு – பதினெட்டுப் பனுவல்கள் என்ற பெயரில் புதுச்சேரியைச் சார்ந்த வல்லினம் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.
இவைதவிர, சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம் என்னும் நூலை சென்னை காவ்யா வெளியீடு வெளியிட்டு இருக்கிறது.