அரியாலை (Ariyalai) யாழ்ப்பாணத்தில் இருந்து A9 கண்டி வீதியில் ஏறத்தாழ 4 கிமீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியில் முன்னொருகாலத்தில் மரஅரிவு ஆலைகள் பல காணப்பட்டதினாலேயே. இப்பகுதி அரியாலை என்றழைக்கப்பட்டது. இப்பகுதி கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது. யாழ்ப்பாணக் குடாக்கடலை நோக்கித் தவழ்ந்து செல்லும் கடலேரியும் அமைந்திருக்க, மேலும் தென் திசையில் பாண்டியன் தாழ்வு – கொழும்புத்துறையைச் சென்றடையும் வீதியும், மேற்கே கச்சேரி – நல்லூர் வீதியும், வடக்கே செம்மணி- வீதியையும் எல்லைகளாகக்கொண்டு அழகு மிளிரக் காட்சி தரும் கிராமம் ஒன்றினைக் காணலாம்
அந்தக் கிராமத்தில் பிரபல்யமான வேளாளர் குடியைச் சேர்ந்த செல்வராணி பாட்டிக்கு வயது தொன்னுற்று ஒன்பது என்று சொன்னால் ஒருவரும் நம்பப் போவதில்லை. இன்னும் அவளுக்கு ஒரு பல்லும் விழவில்லை. அவள் பல் தேய்க்கப் பாவிப்பது வெப்பம் தடி அல்லது ஆலம் விழுது. அவள் இருந்த பூர்வீக வீட்டில் இருந்து இருநூறு யார் தூரத்தில் கடலேரிக் கரைக்கு அருகே ஒரு பெரிய ஆலமரம். அம் மரத்துக்குக் குறைந்தது நூறு வயதுக்குமேல் இருக்கும். ராணி பாட்டி அந்தத் தள்ளாத வயதில் அவ்வளவு தூரம் நடந்து சென்று ஆலமரத்தில் உள்ள விழுதப் பிடுங்கப் பல் தேய்த்து , குளத்தில் குளித்து வருவது அவள் செய்யும் செயல்களில் ஓன்று. ராணி நீச்சல் தெரிந்தவள்.
அவள் வாழும் மூன்று அறைகள் உள்ள வீடு அவளின் தந்தை சங்கரலிங்கம் அவளுக்குக் கொடுத்த சீதனம வீடு . செல்வராணியின் புருஷன் ராஜலிங்கம், தெனியாயாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் சகல வசதிகளோடு பெரிய துரையாக வேலை செய்தார் . அமைதியானவர். கால் பந்தாட்ட வீரர் கூட. அவர் படித்தது பிரபலமான சுண்டுக்குளியில் உள்ள பரியோவான் கல்லூரியில்.. .
செல்வராணி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் படித்து. பத்தாம் வகுப்புப் பரீட்சையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களில் ஏ(A) க்கள் பெற்று, மேலும் படிப்பைத் தொடராது பதினறு வயதானபோதே தூரத்து உறவினரான ராஜலிங்கத்தைத் திருமணம் செய்தவர். சாதிப் பிரச்சனை அவர்களின் திருமணத்தில் இருக்கவில்லை, காரணம் ராஜலிங்கம் சங்கரலிங்கத்துக்கு தூரத்துச் சொந்தம்.
திருமணமாகிப் பதினைந்து வருடங்களுக்குள் அவள் மூன்று மகன்களையும் இரு மகள்களையும் ராஜாவுக்குப் பெற்றுக் கொடுத்தாள் . அவர்களை வளர்த்துப் படிப்பித்து நல்ல இடத்தில திருமணம் செய்துகொடுத்த பெருமை செல்வராணிக்குச் சேரும். படிக்கும்போதே தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டினாள்.
அரியாலை கிராமத்தில் பல பெண்களுக்குப் பிள்ளைப்பேறு பார்த்த மருத்துவிச்சி ராணி பாட்டியை தெரியாதவர் அவ்வூரில் இல்லை. ராணி கைராசிக்காரி. அவள் கை பட பிள்ளை பிறந்தால் ஒரு பிரச்சனையும் தாயுக்கு இருக்காது. அதோடு போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவளத் துணையும் ( Counselling) செய்தாள். போர் காரணமாக கனடாவுக்குப் புலம் பெயர்ந்தும் அவளின் சேவை தொடர்ந்தது.
தன் ஊரில் ஒரு காலத்தில் செய்த சேவைக்கு அவள் பணம் வாங்கியதில்லை . அப்படி இருந்தும் பிரசவம் பார்த்த குடும்பம் அவளின் மருத்துவிச்சிக் கூலியையும் ஒரு சேலையும் கொடுக்கத் தவறுவதில்லை . அவள் நச்சுக் கொடி அறுத்த குழந்தையின் காது குத்து விழாவுக்கு அவளை அழைக்கவும் தவறமாட்டார்கள்.
செல்வராணி கால் சுளுக்கு பார்ப்பதிலும் கெட்டிக்காரி. அவள் காலால் பிறந்ததால் அவள் சுளுக்குப் பார்த்தால் மூன்று நாட்களில் சுளுக்குப் போய்விடும் என்பது ஊர் மச்கள நம்பிக்கை.
தெய்வ நம்பிக்கையும், ஆவி நம்பிக்கையும் வேரூன்றியுள்ள நாட்டுப்புறச் சமூகத்தில் நம்பிக்கை மந்திர மருத்துவமும் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதனால் சில சமயம் ராணி பாட்டி பார்வையும் பார்த்து மந்திரித்துத் தலையில் திருநீறு போட்டால் தேகத்தில் இருக்கும் நோய் ஓடி ஒளிந்துவிடும். அவளுக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது ஊர் பேச்சு.
இரு காதுகளிலும் பிரகாசமாக மின்னும் பெரிய தோடுகள். மூக்கில் ஒரு மூக்குத்தி. சுருக்கு விழாத தோல் . முகத்தில் ஒரு புன்சிரிப்பு. இதுதான் செல்வராணிப் பாட்டியின் தோற்றம் .
ராணி பாட்டியின் பேரன் ரமணன் ஒரு டாக்டர். மரபணுப் பொறியியல் துறையில் மரபணுவால் தோன்றும் நீரிழிவு, நீரக வியாதி, புற்று நோய், இருதய நோய் போன்றவற்றின் அடிப்படைக் காரணத்தைக் காண சில வைத்தியர்களோடு ஆராய்ச்சி செய்துவந்தான். தன் பாட்டியும், அவளின் மூதாதையரான கொப்பாட்டன், பாட்டன், தந்தை நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள், வியாதிகள் இல்லாது வாழ்ந்தவர்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஒரு நாள் தன் பாட்டியோடு அவன் உரையாடும்போது,
” பாட்டி உங்கள் மூதாதையர் நீண்ட காலம் வாழ்ந்து மரணித்தவர்கள். அவர்கள் இந்துக்களானபடியால் அரியாலையில் உள்ள செம்மணிச் சுடலையில் தகனம் செய்ததாகப் பாட்டா சொல்லி அறிந்தேன். அது உண்மையா?”
” உண்மைதான் ரமணா. நான் படித்த கல்லூரியில் படித்த 19 வயது கிருஷாந்தி என்ற மாணவியை 1996 இல் கூட்டாக இராணுவத்தினர் கற்பழித்து அந்த செம்மணிச் சுடலையில், அவளையும், அவளின் தாய், தம்பி, இன்னுமொரு உறவினரையும் கொலைகாரர்கள் புதைத்த சம்பவம் எனக்கு இன்றும் என் நினைவில் இருக்கிறது. அந்த மாணவியின் தாயை எனக்குத் தெரியும். கற்பழித்துக் கொலை செய்த ஆறு பேருக்கு 1998 ல் மூன்று நீதிபதிகள் மரணதண்டனை விதித்தார்கள். 19 வருடங்களுக்கு மேலாகியும் அவர்கள் இன்னும் உயிரோடு ஜெயிலில் இருக்கிறார்கள். காரணம், அவர்கள் இராணுவத்தினர் என்பதால் .
“ இதுதான் தர்மம் இல்லாத சுயநலம் கலந்த அரசியல். அது சரி பாட்டி! இந்த வயதிலும் பாடி, நீங்கள் மக்களுக்கு சேவைகள் செய்து வருகிறீர்கள். உங்கள் மரணத்துக்குப் பின் தொடர்ந்து மக்களின் நீண்ட வாழ்வுக்குச் சேவை செய்யலாம் அல்லவா?”
“ நீர் சொல்வது எனக்கு புரியவிலை ராசா, சொஞ்சம் விளங்கத்தான் சொல்லுமேன்” ராணி பாட்டி பேரனுக்கு சொன்னாள்.
“ பாட்டி உங்கள் மூதாதையர் உங்களைப்போல் நீண்ட ஆயுள் உள்ளவர்களாக வாழ்ந்தார்கள் . இது என் கருத்துப்படி நீண்ட வியாதி இல்லாத வாழ்வு மரபணுவோடு தொடர்புள்ளது. இதுபற்றிய ஆராய்ச்சியில் மூன்று வைத்தியர்கள் சேர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் மரணத்தின் பின் உங்கள் உடலை மரபணு பொறியியல் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தத் தானம் செய்வதைப்பற்றி நீங்கள் ஏன் இன்னும் சிந்திக்கவில்லை?”
“நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி நீ சொல்லியிருகிறாய் ரமணா. என் உடல் எரிந்து ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாது சாம்பலாகுமுன் மருத்துவ ஆராய்சிக்குப் பயன்படுத்தி வருங்காலத்தில் மானிடர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க உதவட்டும் . இதைப்பற்றி நான் விரைவில் முடிவெடுக்கிறேன்” என்றாள் டாக்டர் ரமணனின் ராணி பாட்டி.
****
ஏப்ரல் மாதத்தில் அவளின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட 5 பிள்ளைகள், 10 பெரப்பிள்ளைகள், 4 பூட்டப் பிள்ளைகள். 2 கொப்பாட்டப் பிள்ளைகள், இனத்தவர்கள், ஊர் சனங்கள், ஆக மொத்தம் 51 பேர் கொண்டாட ஆயித்தங்கள் செய்தார்கள். அவள் பிறந்தது முதலாம் உலக யுத்தம் முடிவுபெற்ற 1918 ஆம் ஆண்டு.
ராணி பாட்டி, ஊரில் பல பெண்களுக்கு மருத்துவிச்சி வேலைசெய்து குழந்தையின் தொப்புள் கொடி அறுத்த பலர் இப்போ வைத்தியர்கள், பொறியிலாளர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் . ஆசிரியர்கள் வணிகர்களாக இருக்குறார்கள். பிரசவம் பார்த்து ஆண் பெண் குழந்தைகளைத் தாயின் வயற்றில் இருந்து சிசேரியன் ஒப்பரேசன் இல்லாமல் உலகுக்கு கொண்டு வந்தவள் ராணி பாட்டி
****
அனறு 2018 ஏப்ரல் 14 ஆம் திகதி நூறாவது பிறந்த தின விழா கொண்டாட்டம். அவள் பிறந்தது தமிழ் புத்தாண்டு தினத்தில். அவள் வீட்டில் ஒரே கூட்டம். கணவனை மூன்று வருடங்களுக்கு முன்பே அவள் இழந்தும், அவள் விதவை கோலத்தில் சமூகத்தில் தோன்ற அவள் விரும்பவில்லை.முற்போக்கு கொள்கைகள் உள்ளவள் . வெள்ளை சேலை அணியவில்லை. நெற்றியில் உள்ள குங்குமத்தை நீக்கவில்லை. பார்த்தவர்கள் அவளை விதவை என்று சொல்லமாட்டார்கள் .
அன்று ஜூலை மாதம் வழமை போல் புனர் வாழ்வு என்ற தலைப்பில் சிறு கதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரவு தூங்கப் போனவள், காலையில் கண் விழிக்கவில்லை. நித்திரையில் அவள் விரும்பியதுபோல் அவளின் உயிர் பிரிந்தது. ராணி பாட்டியின் கட்டிலுக்கு அருகில் உள்ள மேசையில் ஒரு கடித உறை இருந்தது . அதை மூத்த மகன் எடுத்துப் பிரித்தபோது அதற்குள் ஒரு கடிதம் இருந்தது.
அக்கடிதம் ராணி பாட்டி தன் முத்து முத்தான எழுத்தில் எழுதிய ஒரு பக்கக் கடிதம். மகன் அதை எல்லோருக்கும் வாசித்துக் காட்டினான்.
” இந்தக் கடிதம் நானாகவே தீர்மானித்தபின் எழுதிய கடிதம். நான் என் மரணத்தின் பின் என் உடலை மரபணு பொறியியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்த தானம் செய்துவிட்டேன். இதற்கான சட்ட ஒழுங்குகளை ஏற்கனவே என் பேரன் டாக்டர் ரமணன் செய்துவிட்டான். நான் தேவையான பத்திரங்களில் கையெழுத்து வைத்துவிட்டேன். டாக்டர் ரமணனும் அவனின் மனைவியும் அதற்கு சாட்சிகளாக கையெழுத்து ஏற்கனவே போட்டு விட்டார்கள் . என் கணவர் இருந்திருந்தால் அவரும் சாட்சியாகக் கையெழுத்து போட்டிருப்பார் . அவர் மரணிக்க முன் அவரோடு பேசி அவரின் சம்மதத்தையும் பெற்றுவிட்டேன்.
இனி நீங்கள் என் மரண வீட்டுக்கு ஆடம்பரமாக விலை உயர்ந்த சந்தனப் பெட்டி எடுத்து. அதில் என் உடலை மலர் வளையங்கள் ஓடு பார்வைக்கு வைத்து, வீண் செலவு செய்யவேண்டாம். அந்தப் பணத்தை நான் உளவளத்துணை செய்த, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் வாழும் நிலயத்துக்குக் கொடுங்கள். வேண்டுமென்றால் உங்கள் விருப்பப்படி எனக்கு நினிவாஞ்சலி வைப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.
இப்படிக்கு
செல்வராணி ராஜலிங்கம்
ராணி பவனம்
சுண்டுக்குளி வீதி, அரியாலை –
யாழ்ப்பாணம்.