சீட்டுக் கட்டு கணக்காக
இங்கே வீட்டைக் கட்டி இருக்காக
வீட்டைக் கட்டி இருந்தாலும்
பலர் ரோட்டுமேல படுக்காக
இப்போது சென்னை என்றுதான் சொல்கிறோம். மெட்ராஸ் என்றோ பட்டணம் என்றோதான் ஊரில் குறிப்பிடுவார்கள். என் அண்ணன் சென்னையில்தான் படிக்கப் போயிருந்தான். எனது தம்பியும் தங்கையும் ஏதோ ஒரு உறவினர் கல்யாணத்திற்கு அப்பா அம்மாவோடு போய்விட்டு வந்திருந்தார்கள். அந்தச் சமயம் பார்த்து எனக்கு ஏதோ பரிக்ஷை. நான் போகவில்லை.
எனது பட்டிணப் பிரவேசம் பத்தொன்பது வயதில்தான். அதுவரை சினிமாக்களில் ஒரு கதாபாத்திரம் சென்னை வருகிறது என்றால் சென்ட்ரல் ஸ்டேஷனும் எல்.ஐ.ஸி கட்டிடமும் காட்டுவார்களே, அவற்றைப் பார்த்ததுதான்.
வழியனுப்ப வரும் அளவிற்கு எனக்கு அப்போது நண்பர்கள் யாரும் இல்லை. என்னை வழியனுப்பிவிட்டு ஊருக்குத் திரும்பிச்செல்ல பஸ் கிடைப்பது சிரமம் என்பதால் அப்பாவும் ரயில் நிலையம் வரவில்லை.
பெட்டி படுக்கையோடு (படுக்கை என்றால் ஒரு ‘ஏர்பில்லோ’ என்று காற்றடிக்கும் தலையணை மட்டும்தான்.) இரயிலுக்காகக் காத்திருந்தேன். அங்கு காத்திருந்தவர்களில் ஒரு குடும்பம் இருந்தது.
கணவன், மனைவி மற்றும் ஒரு குழந்தை. அவர் மாற்றலில் வேறு ஊர் போகிறார் என்று புரிந்தது. அலுவலக மற்றும் அண்டை வீட்டு மக்கள் என பத்து பேருக்குமேல் வந்திருந்தார்கள். அவர் பழகுவதற்கு இனியவராக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அவர்களுக்கு ‘ bon voyage’ என்று வாழ்த்தினார் ஒருவர்.
அக்கரைச் சீமைக்குப் போவோருக்குத்தான் bon voyage என்று சொல்லி வழியனுப்புவார்கள் என்று நினைத்திருந்தேன் வாயேஜ் என்றாலே கடல் பயணம் என்று எனக்குத் தோன்றும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அலுவலகத்தில் இந்தப் பேச்சு அடிபட்டது.
‘வாயேஜ்’ என்றால் கடல் பயணம் என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் தன் கைப்பையிலிருந்து ஒரு ஆங்கிலம் தமிழ் அகராதியை எடுத்தார். (அவர் பெயரே அகராதி ஆறுமுகம் என்பார்கள். சாதாரணமாக அந்த அடைமொழி தேவையில்லாமல் விவாதம் வலிப்போருக்குத்தான் ஏற்படும். ஆனால் இவர் ஒரு டிக்ஷ்னரியை எப்போதும் பையில் வைத்திருப்பதால் அந்தப் பெயர்,) ‘வாயேஜ்’ என்றாலும் ஜர்னி என்றாலும் பயணம்தான். வாயேஜ் என்ற சொல்லிற்கு ஒரு பிரஞ்ச் வார்த்தைதான் மூலம் என்றெல்லாம் படித்துக் காட்டினார்.
கொலம்பஸ் அமெரிக்கா சென்ற கடல் பயணம்பற்றி ஆங்கிலப் பாடத்தில் இருந்தது. அதில்தான் முதன் முதல் அந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். வாயேஜை கடலோடு இணைத்துவிட அதுதான் காரணம் என்று புரிந்தது.
ரயில் வந்தது. நான் ஏறிய பெட்டியில்தான் காத்திருந்தவர்களில் பெரும்பாலோர் ஏறினார்கள். அவரவர் இடத்தைத் தேடிப் பிடித்து,பொருட்களை சரியாக வைத்து, டிக்கட் பரிசோதகரிடம் டிக்கட் காண்பித்து, … படுக்க வேண்டிய பெர்த் சரி செய்து… அப்புறம் தூங்கப் போக நேரம் சரியாக இருந்தது. அந்தப் பயணைத்தில் பெரும்பாலான கதைகளில் வரும் ‘இரயில் சிநேகிதம்’ ஏதும் கிட்டவில்லை.
எழும்பூர்வரை டிக்கட் இருந்தாலும் தாம்பரத்திலேயே இறங்கச் சொல்லியிருந்தான் அண்ணன்.
ரயிலில் நன்றாகத் தூங்கிவிட்டேன். இரவு முழுவதும் பயணம் செய்தது அதுதான் முதல் முறை. எங்கே நன்றாகத் தூங்கி தாம்பரத்தைக் கோட்டை விட்டுவிடுவோமோ என்று பயம் இருந்தது. ஆனால் காலையில் சீக்கிரம் எழுந்துவிடவேண்டும் என்று முடிவோடு படுத்தால், எவ்வளவு ஆழ்ந்த உறக்கம் வந்தாலும், சரியாக விழிப்பு வந்துவிடும். நான் கண் விழித்த சில நிமிடங்களில் செங்கல்பட்டு வந்திருந்தது. எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து, பல் விளக்கிவிட்டு இறங்கத் தயார் என்று நினைக்கும்போதே சரியாக தாம்பரம் ரயில் நிலையத்தில் வண்டி நுழைந்துகொண்டு இருந்தது. இன்னும் பொழுது விடியவில்லை.
ரயிலை விட்டு இறங்கியாயிற்று. ஒருவரை ஒருவர் தேடுவதற்குப் பதிலாக நடைமேடையில் எடைபார்க்கும் எந்திரம் அருகில் வந்து நின்றுவிடவும் என்று தெளிவாகச் சொல்லியிருந்தான்.
எடைபார்க்கும் இயந்திரம் கண்ணில்படவில்லை. அது எங்கிருக்கிறது என்று யாரையாவது கேட்கவேண்டும். எடை பார்க்கும் எந்திரம் என்று சொல்லிக் கேட்பதைவிட ‘வையிங் மிஷின்’ என்று கேட்பதுதான் எளிது. இதுபோல் மற்ற மொழிச் சொற்கள் நமது பேச்சில் கலந்துவிடுவது இது போன்ற விஷயங்களால்தான்.
ஒரு ரயில் பணியாளர் ஒருவரைப் பார்த்துவிட்டேன். அவரிடம் ‘ இங்கே வைட்டிங் மிஷின் எங்கே இருக்கும்?” என்று கேட்டு விட்டேன்.
அவர், “காத்திருக்கும் ரூமா?” என்று பதில் கேள்வி கேட்டார்.
‘வையிங்’ என்பதற்குப் பதிலாக நான் தவறாகக் கேட்டுவிட்டேன் என்பது அந்தச் சமயத்தில் புரிந்தது. பாருங்கள், அந்தப் பாழாய்ப் போன ‘weighing’ என்கிற சொல் சட்டென நினைவில் வரவில்லை. கலர் கலர் பல்ப், கலர் கலர் டிஸ்க், காந்தித் தாத்தாவின் ராட்டை., ஜோசியம் சொல்லும் அட்டை என்றெல்லாம் அண்ணன் விளக்கியிருந்தான். அதனை இவருக்கு எப்படிச் சொல்லுவது? மையமாகத் தலையை ஆட்டினேன். அவரும் கடமையாக ஏதோ வழி சொன்னார். மீண்டும் ஒரு தலை ஆட்டல். அவர் போய்விட்டார்.
முன்னால் போவதா, பின்னால் போவதா என்று யோசித்து முடிவெடுப்பதற்கு முன் ஆபத்பாந்தவனாக அண்ணன் வந்துவிட்டான். (பார்த்தீர்களா ‘ஆபத்பாந்தவன்’ இன்னொரு வேற்றுமொழி இடைச் செருகல்.)
வெளியே வந்தோம். சைக்கிள் ரிக்ஷா பிடிக்கும்வரை நடந்த தூரத்திலேயே மூட்டைகள்போல கையும் காலும் தெரியாமல் போர்த்திக்கொண்டு ஏராளமான மக்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நாகேஷ் பாடும் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாட்டு நினைவு வந்தது.
அண்ணன் ஒரு ரூமில் தங்கியிருந்தான். அவனுடன் அவனது நண்பன் ஒருவன் தங்கியிருக்கிறானாம்.. இடத்தை அடைந்ததும் பைகளை இறக்கி வைத்து, உள்ளே போவதற்கு முன்பே அவன் பலமாகக் கையைத்தட்டி யாரையோ கூப்பிட்டான். அவன் அறைக்கு எதிர் சாரியில் ஒரு டீக்கடை இருந்தது. இவன் இரண்டு விரல் காட்டிவிட்டு அறையைத் திறந்தான்.
உள்ளே ரூம் மேட் தூங்கிக்கொண்டு இருந்தார். உள்ளே ஆளை வைத்துப் பூட்டிவிட்டுப் போவதா? வித்தியாசமாக இருந்தது. வாயைத் திறந்து கேட்பதற்குமுன் அவனே பதில் சொன்னான்.
“அவன் விழிப்பதற்குள் நான்தான் திரும்பி வந்து விடுவேனே? இல்லை என்றாலும் ஜன்னல் வழியா பலமாகக் கையைத் தட்டினால் டீக்கடைப் பையன் டீ கொண்டு வருவான். ஜன்னல் வழியாக அவனிடம் தன் சாவியைக் கொடுத்து திறக்கச் சொல்லிவிடுவான். ஒன்றும் பிராப்ளம் இல்லை.”
அண்ணன் இன்னமும் படித்துக்கொண்டுதான் இருந்தான். கடைசி வருஷம் பரிட்சையில் தவறியிருந்தான். ஒரு ‘தோற்றோர் இயல் கல்லுரி’ யில் (அதாவது tutorial institute) படித்துக்கொண்டு இருந்தான். இன்ஸ்டியூட் நகரின் மத்தியப் பகுதியில் இருந்தது. வாடகை குறைவாக இருக்கவேண்டும் என்பதால் இங்கே அறை எடுத்திருந்தான். இரயில் சீசன் டிக்கட் மிக மலிவு. பக்கத்தில் ஒரு சிறிய மெஸ். எப்படியோ சமாளித்து வந்தான்.
“என்னோடு நீ தங்கலாம். ஆனால் நீ போக வேண்டிய இடம் இரயில் நிலையம் அருகில் இல்லை. இங்கிருந்து நேரடி பஸ் இல்லை. நாளை நீ போகும்போது நானும் கூட வருகிறேன். என்ன ஏற்பாடு செய்யலாம் என்று பார்ப்போம்.” என்றான்.
குளித்து, மெஸ்ஸில் போய் இட்டிலி சாப்பிட்டு, கொஞ்சம் காலார நடந்து ஊர்க்கதைகள் பேசி … அறைக்குத் திரும்பும்போது ரூம் மேட் விழித்தெழுந்து விட்டார். டீக்கடைப் பையனைக் கைதட்டிக் கூப்பிடுவதற்குள் நாங்கள் வந்துவிட்டிருந்தோம்
அண்ணனும் அந்த நண்பரும் ஒருவரை ஒருவர் ரூம் மேட் என்றுதான் கூப்பிட்டுக் கொண்டார்கள். ஊரிலெல்லாம் பெயர் சொல்லி அழைத்துக் கொள்வதுதான் பழக்கம். இது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.
அந்த நண்பர் ஏதோ ஒரு சிறிய நிறுவனத்தில் எழுத்தராக இருந்தார். வீட்டிற்குப் பணம் அனுப்பவேண்டும். சிக்கனமான வாழ்க்கை. அவரது தமிழ் எனக்கு வித்தியாசமாகப் பட்டது. வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அவர் தன் மாவட்டப் பேச்சினை சென்னை தமிழோடு கலந்து பேசுவார். ‘பேஜார்’, ‘நாஷ்டா’ ,‘கலீஜ்’ , ‘குந்திகினு’ , ‘ரப்ச்சர்’ என்றெல்லாம் வார்த்தைகள் வரும். ஒரு மாதிரி புரிந்து கொள்வேன். அகராதி ஆறுமுகம் இருந்தாலும் பிரயோஜனமில்லை எந்த அகராதியிலும் இந்த வார்த்தைகள் கிடைக்காது. தெருவில் விற்றுக்கொண்டு போகும் வியாபாரிகள் என்ன விற்கிறாகள் என்று அவர்கள் கூவலிலிருந்து பழக்கப் பட்டவர்களால்தான் கண்டுபிடிக்க முடியும்.
எப்படியோ ஒரு மணிவரை பொழுது போயிற்று. பின்னர் சாப்பாடு. மாலையில் ஒரு சினிமா. நடுவில் ஏதோ கொறிக்க. குடிக்க .. அறையில் ஒரு மூலையில் ஒரு நோட்டுப் புத்தகம் தொங்கிக்கொண்டிருந்தது. என்ன பொதுச் செலவானாலும் எவ்வளவு செலவு, யார் செய்தார்கள் என்று குறித்துவிடுவார்கள். மாதா மாதம் செட்டில்மென்ட் . நான் வந்ததைப்போல யாரவது ‘கெஸ்ட் ‘ வந்திருந்தால் அதற்கும் ஒரு குறிப்பு.. பிரிப்பதற்கு வேறு ஒரு ஃபார்முலா.
‘மதியத் தூக்கம் விடுமுறை நாட்களில் மட்டுமே சாத்தியப்படும் ஒரு போனஸ்’ என்றார் ரூம் மேட். அறையில் இரண்டு கட்டில்கள் மட்டுமே. எனக்குக் கட்டிலைக் கொடுத்துவிட்டு அண்ணன் தரையில் படுத்துக் கொண்டான். எனக்கு மதியத் தூக்கம் பழக்கமில்லை. பயணக் களைப்பில் தூக்கம் வந்திருக்கவேண்டும். மூவரும் தூங்கி எழுந்தபோது மாலை ஆகிவிட்டிருந்தது.
புறநகர்ப் பகுதி என்பதால் சுற்றுப்புறம் சற்று பெரிய டவுன் – எங்கள் மாவட்டத் தலைநகர் போலத்தான் இருந்தது. பக்கத்தில் ஒரு தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு, இரவு உணவு முடித்து அறைக்குத் திரும்பினோம்.
“காலையில் கொஞ்சம் சீக்கிரம் போகலாம். இப்போ தூங்குவோம். நாளைய சங்கதி நாளைக்கு. பொழச்சுக் கிடந்தா பூனைக்கு .” என்றான் அண்ணன். மதியம் தூங்கியிருந்தும் விரைவிலேயே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.
அண்ணன் சொன்னதுபோல “நாளைய சங்கதி நாளைக்கு”
…. இன்னும் வரும்
.