எப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்?? !!!
நம் வாழ்க்கையின் ஓட்டம் நம் கையில் இல்லை. வருஷங்கள் நம்மைக் கடத்திக்கொண்டே போகின்றன. சற்று நின்று நிறுத்திப் பார்க்கக்கூட நம்மால் முடியாது. திரும்பிப் பார்க்காத ஓட்டம்தான் . தொடுகோட்டை தொடும்போது வெற்றியா தோல்வியா…என்பதை அறிந்துகொள்ள முடியாமல் நாம் காணாமல் போய்விடுகிறோம்….
பிரபஞ்சமே பிரும்மாண்டமான உயிர்களின் கொண்டாட்டம்தான்
இதில் மனிதன் தனக்குள் கர்வமாகப் பெருமைப்பட்டுக் கொள்வது அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.
நான் விடியவிடிய ஆறு மணிக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தேன். அதற்கு முன் நள்ளிரவில் என் அம்மாவுக்கு வலி எடுத்தபோது பாகக்காய் தின்னவேண்டுமென்று ஆசை வந்துவிட்டது….[வந்து விட்டதாம்]
கேள்விப்பட்ட என் பெரியம்மா மிகவும் கஷ்டப்பட்டு விட்டாள். அந்தச் சமயத்து ஆசையை எப்படி நிறைவேற்றுவதென்று மிகவும் பரபரப்பாகி விட்டாள்.
பக்கத்துத் தெருவில் ஒரு வீட்டில் பாகக்காய் கொடி இருப்பது ஞாபகம் வந்தது, அந்த நள்ளிரவில் பூச்சி பொட்டுகளுக்கு பயப்படாமல் அங்கே ஓடிப்போய் சுவற்றில் ஏறி பாகக்காயை பறித்துவந்து அவசரமாக வாணலியில் எண்ணையை ஊற்றிப் பொரித்து பிரசவ அறையில் வலியுடன் முனகிக் கொண்டிருந்த என் அம்மாவின் வாயில் சுடச்சுடப் பாகக்காயைப் போட்டிருக்கிறாள். போட்ட மறு நிமிடம் நான் பிறந்தேன்.
பின்னால் நான் சிறுவனானபோது என் பெரியம்மா நான் ஏதாவது அடம் பிடித்து அழுதால் ” ஏண்டா…..பாகக்காயைத் தின்னு பொறந்தவன் தானே! பின்னே நீ எப்படி சிரிச்ச முகமா இருப்பே! “ என்று சீண்டி விடுவாள்…..
பாகக்காய் தான் கசந்தாலும் அதைத் தின்றவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது…என்று பின் காலத்தில் நான் எனக்குள் சமாதனம் சொல்லிக் கொள்வேன்!…
என் பிறந்த தினம் 22 செப்டம்பர். இந்த உலகமே இனிமையுடன் ஆனந்தமாக வாழ வேண்டுமென்று ஒரு கவிதை மூலம் என் பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறேன்
விருத்த நினைவில்
—————————————
விழிதரும் பார்வையே!
விரிந்த வான்மலரே!
மலர்பெறும் வாசமே!
மறைந்து தழுவும் காற்றே!
கசிந்து பின் பெருக்கெடுக்கும்
கருணையெனும் வெள்ளமே!
கவியெனும் கரும்பே!
புவியினை ஒரு புள்ளியாக்கி
மனமெனும் கூட்டில்
மறைத்து வைத்த சூட்சுமமே!
நிகழ்வெனும் கூத்தை
நிஜம் போல் நடத்தும்
மாயக் கோலே!
இரண்டறக் கலந்த இனிப்பென
எனை மறந்த தருணம்
உளம் ததும்பும் மரண சுகமே!
நின்னடியில்
அகம் பொருள் ஆவிதனை வைத்துப்
பாடி நின்றேன்
ஆனந்தம்
அகிலமெல்லாம் பெறவே!
வைதீஸ்வரன்
கவிஞரே! பாகற்காய் தின்று பிறந்திருந்தாலும் உங்கள் கவிதைகள் இனிமையாகவே இருப்பதன் இரகசியம் என்னவோ? – இராய செல்லப்பா சென்னை
LikeLike