ராகு காலம் படர்ந்த அந்த மூன்றே முக்கால் நாழிகைகளில் விளைவுகள் அவற்றின் போக்கிலே துரிதமாக நடைபெற்றன.
ஸந்த்யாவின் நிழலில் மறைந்து இருந்த ராகு அவள் விமானத்தில் வரும்போதும், சாந்துக் குளியல் அறைக்கு வரும்போதும் தப்பிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆயினும் ராகு தப்பிக்க இஷ்டப்படவில்லை. விஷ்வகர்மாவின் முகத்தில் ஏற்பட்ட கலவரத்தைக் கண்ட ராகு அவர் ஏதோ தீவிரமாகச் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டான். ‘ ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை , அவர் ஏன் இவர்கள் திருமணத்தை உடனே நடத்தக்கூடாது என்று சொல்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது அவனுடைய தலையே வெடித்துவிடும்போல் இருந்தது.
‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்பதுபோல அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சூரிய தேவனைப் பழி வாங்க முடியுமா என்ற பாணியிலேயே அவனுடைய எண்ணம் சென்றது. அதுமட்டுமல்லாமல் தன்னை யாரும் கொல்லமுடியாது என்ற அகம்பாவம் அவனுக்கு நிறைய உண்டு. அமுதம் குடித்தவனல்லவா அவன்.
விஷ்வகர்மா ஸந்த்யாவின் தாயிடம் ஏதோ ரகசியமாகக் கூறிவிட்டு சூரியதேவன் இருக்கும் அறைக்குச் செல்வதைப் பார்த்தான். அதுவரை ஸந்த்யாவின் நிழலில் மறைந்து இருந்தவன் யாரும் அறிமாமல் விஷ்வகர்மாவின் நிழலில் மறைந்து கொண்டான். அவர் சூரியதேவன் படுத்திருக்கும் இடம் சென்று காவலாளிகளை அப்புறப்படுத்திவிட்டுத் தன் கையிலுள்ள கோலால் சூரியதேவனை ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தி ஏதோ அவருடைய ஆணைக்குக் கட்டுப்படுத்தப்போகிறார் என்று புரிந்து கொண்டான்.
விஷ்வகர்மா ‘மகாருத்ரபிரும்மன்’ என்று மூன்றுமுறை கூறியதைக் கேட்டதும் ராகு திடுக்கிட்டுப் போனான். மகாருத்ரபிரும்மன்பற்றி அவனும் சுக்ராச்சார்யார் சொல்லக் கேட்டிருக்கிறான். தனுர் மாதத்திலிருந்து தை மாதம் என்று அழைக்கப்படும் மகர மாதத்திற்குப் போகும் ஸங்கராந்தித் திருநாள் தேவர்களின் இரவுப்பொழுது முடிந்து பகல்பொழுது ஆரம்பமாகும் புண்ணிய காலம். அந்தச் சமயத்தில் விஷ்ணு, சிவன், பிரும்மர் மூவர் ஆசியுடன் மணம் புரிந்து அன்று கரு உருவானால் அந்தக் கருவில் பிறக்கும் திருமகன் மகாருத்ரபிரும்மன் என்ற சக்தியுடன் இருப்பான். அப்படிப்பட்ட ஒருவன் உதித்தால் அவனை யாரும் வெல்லமுடியாது. அவன் அரக்கர் குலத்தை முற்றிலும் அழித்து ஒன்றுமில்லாதவராகச் செய்துவிடுவான். அப்படி ஏதாவது நடைபெறும் என்று தோன்றினால் அதை நடக்கவிடாமல் செய்வது அசுர குலத்தில் உதித்த ஒவ்வொருவரின் கடமை என்று அசுரகுரு ஆணித்தரமாகக் கூறியது அவன் மனதில் மீண்டும் ஒலித்தது.
இப்போது விஷ்வகர்மா என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய அவன் தன் பாம்புச் செவியைத் தீட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான்.
விஷ்வகர்மா தன் கருத்திலேயே தன் முழு கவனத்தைச் செலுத்தி இருந்ததால் ராகு தன் நிழலில் மறைந்து இருப்பதை உணரவே இல்லை. அவர் சூரியதேவனை மயக்க நிலையில் ஆழ்த்திவிட்டு அவர் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தார்.
” சூரியதேவரே ! நான் செய்யும் பணி பஞ்சமாபாதகம் என்பதை நான் அறிவேன். அதற்காக உங்களிடம் முன்கூட்டியே மன்னிப்பைக் கேட்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். சில நாழிகைக்கு முன்னால் உங்களால் தோற்றுவிக்கப்பட்ட உங்கள் வம்ச வித்துக்கள் மூன்றையும் நான் அழிக்கப்போகிறேன். என் பேரக் குழந்தைகளை நானே அழிக்கப் போகிறேன். இதைச் சொல்லும்போது என் இதயமே வெடித்துவிடும் போல உணருகிறேன்.
கோடானகோடி அண்டங்களின் நன்மையை முன்னிட்டு இதை நான் ரகசியமாகச் செய்யவேண்டியிருக்கிறது. மகாருத்ரபிரும்மமனைப்பற்றிச் சுக்ராச்சார்யார் மூலம்தான் தெரிந்து கொண்டேன். ஆனால் அப்படிபட்ட ஒரு சக்தி பிறப்பது தேவர்களுக்கும் பிடிக்கவில்லை அசுரர்களுக்கும் பிடிக்கவில்லை. தங்களுக்கு மேற்பட்ட ஒரு சக்தி வருவது யாருக்குப் பிடிக்கும்? ஆனால் அது இப்போது தேவைப்படுகிறது. அந்த சக்தி ஒரு புதிய பரிமாணத்தில் உலகைப் படைக்கும். அந்தப் படைப்பைச் செய்யவே தேவசிற்பியான நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
மகாருத்ரபிரும்மனை மூலப் பரம்பொருளாகக் கொண்டு நான் படைக்கும் அந்த புதிய உலகம் இப்போது இருக்கும் அனைத்து உலகங்களையும் அழித்துவிடும். உங்களுக்கு நன்கு தெரியும் மேல் ஏழு லோகங்களும் கீழ் ஏழு லோகங்களும் இருக்கின்றன என்று.
பிரும்மர் இருக்கும் ஸத்யலோகம், தேவதைகள் உறையும் தபோலோகம் , பித்ருக்கள் இருக்கும் ஜனோலோகம், இந்திராதி தேவர்கள் இருக்கும் சொர்க்கலோகம், முனிவர்கள் இருக்கும் மஹரலோகம், கிரகங்கள், நட்சத்திர தேவதைகள் வசிக்கும் புனர்லோகம், மனிதர்கள், விலங்குகள், வசிக்கும் பூலோகம் இவை மேல் லோகங்கள்.
அவற்றைப்போல அசுரர்கள் வசிக்கும் அதல லோகம், விதல லோகம் சுதல லோகம், தலாதல லோகம் , மகாதல லோகம் ,பாதாள லோகம், ரஸாதல லோகம் என்று ஏழு லோகங்களும் கீழ் லோகங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
மகா ருத்ர பிரும்மன் வந்தபிறகு அவனுக்காக நான் ஒரு தனி லோகத்தையே உண்டு பண்ணுவேன். இந்தப் பதினாலு லோகங்களும் அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அப்படிப்பட்ட லோகத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் எனக்கு நானே இட்டுக்கொண்ட மகத்தான பணி. அதற்காகத்தான் ஸந்த்யாவைப் பெற்றெடுத்தேன். உலகின் ஒளி நாயகனான உங்கள் மூலம்தான் அந்த சக்தி பிறக்கமுடியும். இதை நான் யாரிடமும் சொல்லமுடியாது. அப்படிச் சொன்னால் அந்தப் புதிய மகா லோகத்தை நிர்மாணிக்கும் சக்தி எனக்குக் கிட்டாமல் போகும்.
பின்னால் பிறக்கப் போகும் உங்கள் மகன் பெருமை மிகுந்தவனாக வருவது உங்களுக்குப் பெருமை அளிக்கும். நீங்கள் உங்கள் சாந்து குளியல் முடிந்தபிறகு உங்கள் பர்வதத்திற்கு ஸந்த்யாவின் ஸ்வரூபத்துடன் சென்று விடுங்கள்! ஸந்த்யாவை உங்கள் பிரபையுடன் இங்கே இருக்க வைக்கிறேன். சில மாதங்கள்தான் இருக்கின்றன – நான் எதிர்பார்க்கும் வேளை வருவதற்கு. அது வந்தவுடன் உங்கள் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.
அதனால் தற்சமயம் உங்கள் மூன்று குழந்தைகளையும் அழிப்பதற்கு எனக்கு அனுமதி கொடுங்கள்! இந்த சமயம் என் மனைவி அதற்கான மருந்தை ஸந்த்யாவிற்குக் கொடுத்திருப்பாள். அது அவள் வயிற்றில் இருக்கும் மூன்று குழந்தைகளையும் உருத் தெரியாமல் ஆக்கியிருக்கும்
மீண்டும் உங்களிடம் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்”
விஷ்வகர்மா கூறியதன் ஒவ்வொரு சொல்லையும் சூரியதேவனுடைய ஆழ்மனது கேட்டு அனுமதி அளித்தது.
ஆனால் அது மனிதர் காதில் கொதிக்கும் எண்ணை விட்டதுபோல ராகுவிற்கு இருந்தது.
இதை எப்படியும் தடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் விஷ்வகர்மாவிற்குத் தெரியாமல் கதவில் இருக்கும் சாவித்துவாரத்தின் வழியாக அந்த அறையிலிருந்து வெளியேறி ஸந்த்யா இருக்கும் அறைக்கும் அப்படியே சாவித்துவாரத்தின் வழியாக உள்ளே சென்றான்.
அங்கே ஸந்த்யாவின் தாய் மருந்தை புகட்டுவதற்காக ஸந்த்யாவின் அழகிய இதழ்களைத் தன் கையால் திறந்துகொண்டு தங்கக் கிண்ணத்தைச் சாய்க்கத் தலைப்பட்டாள்.
மூன்றே முக்கால் நாழிகை வரை அதீத பலம் இருக்கும் அந்த ராகுகாலம் முடிய இன்னும் சில நொடிகளே இருந்தன. அதற்குள் அவன் நினைத்த காரியத்தைச் செய்யவேண்டும். அதற்குப் பின்னால் அவனால் அந்தக் காரியம் செய்ய முடியாது.
தான் என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்தான் அதற்கான விபரீத செயலில் துணிச்சலுடன் இறங்கினான் ராகு.
விளைவுகள் அதி பயங்கரமாக இருந்தன.
(தொடரும்)

